பாஸ்போர்ட்(கடவுச்சீட்டு) பெற விண்ணப்பிப்போர், இருப்பிட சான்றுக்காக, இனி தனியார் வங்கி கணக்கு புத்தகத்தை பயன்படுத்த முடியாது என மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் விரிவாக கூறியதாவது, கடந்த ஜனவரி 1ம் தேதி முதல், மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களில், பொது துறை வங்கிகள் வழங்கும் முகவரி சான்று மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அதாவது, பொது துறை வங்கி வாடிக்கையாளர் மட்டுமே, தன் வங்கி கணக்கு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள முகவரி அல்லது பணப் பரிவர்த்தனை விவரத்தை, பாஸ்போர்ட் பெறுவதற்கான வசிப்பிட சான்றாக பயன்படுத்தலாம். ஒரு சில தனியார் வங்கிகள், வாடிக்கையாளர்களின் வசிப்பிடத்தை உறுதி செய்யாமல், 'லெட்டர் பேடில்', முகவரி சான்று அளித்துள்ளதை, பாதுகாப்பு ஏஜென்சிகள் கண்டுபிடித்துள்ளன. இதையடுத்து, பொது துறை வங்கிகள் வழங்கும், கணக்கு அறிக்கை அல்லது முகவரி சான்றை மட்டுமே ஏற்பது என, மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் முடிவு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
|