LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் அறிஞர்கள்

தமிழ்ப் பேராசிரியர் -தமிழினப் போராளி - பகுத்தறிவுச் சிந்தனையாளர் -ஆய்வாளர்-முனைவர் க. நெடுஞ்செழியன்

தமிழ்ப் பேராசிரியர் , தமிழினப் போராளி , பகுத்தறிவுச் சிந்தனையாளர்,ஆய்வாளர்  முனைவர் க. நெடுஞ்செழியன்

க. நெடுஞ்செழியன் (K. Nedunchezhiyan, 15 சூன் 1944 – 4 நவம்பர் 2022) ஒரு தமிழ்நாட்டுத் தமிழறிஞர், மெய்யியலாளர் மற்றும் ஆய்வாளர் ஆவார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத் துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி வந்தவர். விரிவான ஆய்வுப் பணிகளிலும் ஈடுபட்டுத் தமிழ், திராவிட இயக்கச் சிந்தனைகளையொட்டி “இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும்”, “தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம்” “தமிழ் எழுத்தியல் வரலாறு” உள்ளிட்ட 25 நூல்களை எழுதினார். இவற்றுள் ஆசீவகமும், அய்யனார் வரலாறும் என்ற ஆய்வு நூல் கூடுதல் பதிப்புகளைக் கண்டுள்ளது. இவர் ஆய்வுகள் மொழியியல் ஆய்வாளர்கள் நடுவே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.[4] தமிழரின் பழங்கால சமயமும், ஏறக்குறைய தமிழர்களால் மறக்கடிக்கப்பட்டதுமான ஆசீவகம் குறித்து ஆராய்ந்து எழுதி அந்நெறி குறித்த கருத்துகளை மீண்டும் பொதுவெளியில் கொண்டுவந்தார்.

மறைமலை அடிகள், தேவநேயப் பாவாணர் ஆகியோருக்குப் பிறகு தமிழ்ச் சமூகத்தின் மிக முக்கியமான ஆய்வாளராக, அறிஞராக நெடுஞ்செழியன் பார்க்கப்படுகிறார். 

தொடக்க வாழ்க்கை
திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள அன்பில் படுகை எனும் சிற்றூரில் வேளாண்மைத் தொழில் செய்துவந்த மீனாட்சி-கந்தசாமி இணையருக்கு 15 சூன் 1944 அன்று பிறந்தார் நெடுஞ்செழியன். இவர் பிறப்பதற்கு முன்பே இவர் குடும்பத்தினர் (குறிப்பாக இவர் தந்தையும் சிற்றப்பாவும்) திராவிட இயக்கத்துடனும் "பெரியார்" ஈ. வெ. இராமசாமியுடனும் தொடர்பில் இருந்தனர். அந்நாட்களில் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் முன்னணிப் பேச்சாளராக இருந்த "நாவலர்" இரா. நெடுஞ்செழியனின் புகழ் கருதி அவர் பெயரை இவருக்குச் சூட்டினர்.  இவருக்கு ஒரு தம்பியும் மூன்று சகோதரிகளும் உண்டு.

நெடுஞ்செழியனின் தாயார் மீனாட்சி, 20 மார்ச் 2018 அன்று திருச்சியில் காலமானார்.

கல்வி
உள்ளூரில் பள்ளிக்கல்வியை முடித்த நெடுஞ்செழியன், உயர்கல்வியைக் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியிலும் சென்னை மாநிலக் கல்லூரியிலும் (முதுகலை தமிழ்; 1967-69) நிறைவு செய்தார்.[5] 1968-இல் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டையொட்டி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் பங்கேற்று முதல் பரிசை அன்றைய சென்னை மாநில முதல்வராக இருந்த "பேரறிஞர்" கா. ந. அண்ணாதுரையிடம் பெற்றார்.

மெய்க்கீர்த்திகள் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். 1977-ஆம் ஆண்டு முனைவர் பட்ட ஆய்வை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டிருந்தபோது தன் நெறியாளரான பேராசிரியர் முருகரத்தினம் என்பாரின் ஊக்கத்தால் வங்காளத்தைச் சேர்ந்த மார்க்சிய அறிஞர் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயாவின் Lokayata: A Study in Ancient Indian Materialism என்ற நூலை வாசித்தார். அந்நூலைத் துணைச்சான்றாகக் கொண்டு தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார்.

ஆசிரியப்பணி
1969-ஆம் ஆண்டில் திருச்சியிலுள்ள தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரியில் தன் ஆசிரியப்பணியைத் தொடங்கினார் நெடுஞ்செழியன்.  அதனைத் தொடர்ந்து தான் பயின்ற கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியிலும் பிறகு முசிறியில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரியிலும் பணியாற்றினார். பின்னர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பெரியார் உயராய்வு மையத் தலைவராகவும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

கல்லூரி, பல்கலைக்கழகப் பணியின்போதும் சொந்த ஊருக்குச் சென்று வேளாண்மை செய்வதைத் தன்னுடைய இணைப் பணியாக மேற்கொண்டார்.

ஆய்வுகள்
கருத்துமுதல்வாதமே இந்தியச் சிந்தனை மரபு என முன்மொழியப்பட்ட சூழலில், தேவிபிரசாத் சட்டோபாத்தியாயாவின் மரபை அடியொற்றிப்பொருள்முதல் வாதம் தமிழகத்தில் தோன்றிய தத்துவம் என எடுத்துரைக்க முயன்றார் நெடுஞ்செழியன். பெளத்தம் மற்றும் சமணம் போல ஆசீவகமும் வட இந்திய மதம் என்ற கருத்தை மறுத்து அதன் தமிழ் வேர்களைக் கண்டறிய முனைந்தார். இதற்கென இந்தியவியல் அறிஞர் ஏ. எல். பசாமின் ஆய்வுகளைச் சான்றாகக் கொண்டார். ஆசீவகத்தைத் தோற்றுவித்த மற்கலி கோசாலர் தமிழகத்தைச் சேர்ந்தவர் எனவும் ஐயனார், சாத்தன் என்ற பெயர்களில் வணங்கப்படுபவர் அவர்தான் எனவும் மொழிந்தார். அவரது ஆய்வுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்ற விமர்சனத்துக்கும் ஆளாயின.

தொடர்ந்து ஆசீவகம் குறித்து உரைகளை நிகழ்த்தினார். தமிழ்நாட்டின் இளம் ஆய்வாளர்கள் பலரையும் திருச்சிக்கு வரவழைத்துத் திருப்பட்டூர், சித்தன்னவாசல் போன்ற இடகளுக்கு நேரில் அழைத்துச் சென்று, களப்பயணமாக அவற்றைக் கற்றுத் தந்தார்.

திருப்பட்டூரிலுள்ள அரங்கேற்ற அய்யனார் கோயில், பிரம்மபுரீஸ்வரர் கோயில், திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் குடைவரைக் கோயில் ஆகிய இடங்களில் 17 செப்டம்பர் 2017 அன்று நடைபெற்ற வரலாற்று ஆய்வியல் அறிஞர்களின் கள ஆய்வுக்குத் தலைமை தாங்கினார் நெடுஞ்செழியன். அப்போது அவர் "அறிவார்ந்த சமூகமாக வாழ்ந்த தமிழர்களின் வரலாறு மீட்கப்பட்டுப் புதுப்பிக்கப்பட வேண்டும். அதற்கான ஒரு முயற்சியே இந்தக் கள ஆய்வு. தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட 'கீழடி'கள் உள்ள நிலையில், அதில் முதன்மையானதாக திருப்பட்டூர் விளங்குகிறது. இங்கு அகழாய்வு உள்ளிட்ட பல ஆய்வுகள் நடத்தினால், தமிழர்களின் அறிவார்ந்த பல விடயங்கள் வெளியுலகுக்குத் தெரியவரும்" என்றார்.


2007-ஆம் ஆண்டுவாக்கில் நெடுஞ்செழியன் உலகத் தமிழ் மொழி மெய்யியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனம் என்ற அமைப்பைத் தொடங்கி பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுடன் இணைந்து கருத்தரகுகளையும் நடத்தினார்.

குடும்ப வாழ்க்கை
சென்னை மாநிலக் கல்லூரியில் தன்னோடு பயின்று தன் இந்தி எதிர்ப்புக் கவிதைகளால் ஈர்க்கப்பட்ட இரா. சக்குபாய் என்பாரை 11 ஏப்ரல் 1971 அன்று சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார் நெடுஞ்செழியன். சக்குபாய் பின்னாளில் மற்றொரு தமிழ்ப்பேராசிரியராகவும் தமிழறிஞராகவும் பெண்ணியச் செயற்பாட்டாளராகவும் உருப்பெற்றார். இவ்விணையருக்கு நகைமுத்து, குறிஞ்சி எனும் மகள்களும் பண்ணன் என்ற மகனும் பிறந்தனர்.

அரசியல் ஈடுபாடு
திராவிட இயக்கங்களிலும் தமிழ் அரசியலும் ஈடுபாடு கொண்டவர் நெடுஞ்செழியன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முன்னாள் தலைவர் மு. கருணாநிதி, திமுகவினரிடம் திராவிட-பெரியாரியல் கருத்துகளைக் கொண்டுசேர்க்கும் நோக்கில் 'அறிவாலயம்' என்னும் அஞ்சல்வழிப் படிப்பைத் தொடங்கியபோது, அதன் பாடத்திட்ட உருவாக்கக் குழுவில் மா. நன்னன், மு.க.சுப்பிரமணியன் ஆகியோருடன் நெடுஞ்செழியனும் இடம் பெற்றிருந்தார். திமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் க. அன்பழகனுடன் நெருக்கமாக இருந்த நெடுஞ்செழியன், அன்பழகனின் 80-ஆம் ஆண்டு மணிவிழாவை நடத்தி, விழா மலரையும் வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்த அனைத்துத் தமிழ் இயக்கங்களோடும் இணைந்து பணியாற்றினார்[3] அவர் எழுதிய பல கவிதைகள் விடுதலைப்புலிகளின் இதழான ‘எரிமலை’யில் வெளியாகின.

வழக்குகளும் சிறையிருப்பும்

1994-95 காலகட்டத்தில் நாள்தோறும் மாலை நேரங்களில் இளைஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்களிடையே திராவிட இயக்கப் பார்வையில் இலக்கியம் குறித்துப் பேசுவதையும் பயிற்சி வகுப்புகள் எடுப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார் நெடுஞ்செழியன். திருச்சியில் அப்படி நடந்த ஒரு கூட்டத்தில் பிரிவினைக்கு ஆதரவாகப் பேசினார் எனக் குற்றம் சாட்டி அவரை பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (தடா) கீழ் கைது செய்தது தமிழ்நாட்டுக் காவல்துறை. அவருடன் திராவிடர் கழகத்தின் அன்றைய சேலம் மண்டல அமைப்புச் செயலாளரும் பின்னாளைய திராவிடர் விடுதலை கழகத் தலைவருமான கொளத்தூர் மணியும் சிறையில் இருந்தார். நெடுஞ்செழியன் அதன்பின் பிணை ஆணை பெற்று வெளிவந்தார்.

 

by Swathi   on 19 Dec 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.