LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் ஆய்வுக்கட்டுரைகள்

திருக்குறள் நெறி சார்ந்த அறிவியல் - குன்றக்குடி அடிகளார்

திருக்குறள் வாழ்வியல் சார்ந்த ஓர் அறிவியல் நூல். திருக்குறள் "கண்டது மட்டுமே உண்மை; அனுபவம் மட்டுமே உண்மை” என்று கூறும் அரை வேக்காட்டு நூல் அன்று. திருவள்ளுவரின் அறிவு, அறிவிற்கு அவர் கூறும் இலக்கணங்களுடன் நூற்றுக்கு நூறு பொருந்தும்: "நுண்ணறிவும் திருவள்ளுவருக்கே உரிமை உடையது. எந்த ஒரு கொள்கையையும் ஆழ்ந்து ஆய்வு செய்து ஐயத்திற் கிடமின்றித் தெரிவிக்கின்றார் திருவள்ளுவர்.

உயிர், உள்பொருள். உயிர் படைப்புப் பொருளன்று. மன்னுதல் என்றால் நிலை பெறுதல் என்பது பொருள். அதாவது அழியாமை. உயிர்கள் தோன்றியனவுமல்ல; அழிவனவுமல்ல. உயிர்கள் படைக்கப்பட்டனவுமல்ல; அழிக்கப்படக் கூடியனவுமல்ல. இதனைத் திருவள்ளுவர்,

"தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாம் தொழும்”(268)

என்பதால் அறியலாம். மன்னுயிர் - நிலையான உயிர் என்பது கருத்து. அடுத்து, நாம் இருப்பது மட்டும் உண்மையல்ல. மற்றவர்களும் வாழ்கிறார்கள் என்பதும் உண்மை. ஏன்? எண்ணற்ற உயிர்கள் வாழ்கின்றன. ஆதலால் உயிர் ஒன்றல்ல; ஒரு தன்மைத்து அல்ல. உயிர்கள் பலப்பல; பலவகைப்பட்டன. உயிர் உண்டு என்ற கொள்கையும், அவை ஒன்றல்ல, பலப்பல என்பதும் திருக்குறள் கருத்து.

"தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது".

(68)

இந்தக் குறளில் மன்னுயிர்க்கெல்லாம் இனிது என்பதை அறிக.

உயிர் உய்தல் வேண்டும்; அஃது உய்தலுக்குரியது என்பதும் திருக்குறள் கொள்கை உய்தலாவது வளர்தல். வளர்தலாவது துன்பத் தொடக்கிலிருந்து விடுதலை பெறுதல். "உய்வர்” என்ற சொல்லையும் திருவள்ளுவர் ஆள்கின்றார்.

"எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை

வியாது பின்சென் றடும்

(207)

என்பதறிக.

உயிர்க்கு உற்றது என்ன? எத்தகைய உய்தல் உயிரடைதல் வேண்டும்? உயிரியற்கை, செயல்-செயற்பாடுறுதல் என்பது. உயிர் செயற்பாடுறாது போனாலும் துன்பம் வரும். பயன்படுத்தப் பெறாத இரும்பு துருப்பிடித்து அழிவது போல, வினைப்பாடுறுதலில் - செயற்பாடுறுதலில் உயிர் ஈடுபடவில்லையானாலும் உயிர்க்கு நல்வாழ்வு அமையாது துன்புறும். அதுபோலவே, நல்லதன் நன்மையையும் தீயதன் தீமையையும் ஆய்ந்த்றிந்து செயற்பாடுறுதல் வேண்டும். தவறாகச் செயற்பாடுறுதலும் கூடத் துன்பந்தரும். உயிர்க்குரிய பகை, வினைப்பகை யென்பதேயாகும். வினைப் பகையினின்று உயிர் மீளுதலே உய்தல். வினைப் பகையினின்று உயிர் மீள உயிர் அறிவுபெறுதல் வேண்டும்.

உயிருக்கு அறிவு பிறப்பினாலமைவதன்று. உயிர் பிறந்து வளரும் பொழுது கற்றல், கேட்டல் மூலமும் பட்டறிவினாலும் அறிவு பெறுகிறது. அறிவுடையராதல் இயற்கையன்று. அறிவுடையராதல் முயற்சியின் பயன். "கற்றனைத் தூறும் அறிவு” என்றது திருக்குறள். அறிவு வாயில்களில் ஒன்று கற்றல். "கசடறக் கற்பவை கற்றால்" அறிவு பெறலாம். கற்பதனால்மட்டும் அறிவு வாய்ப்பதில்லை. கற்ற கருத்துக்கள் வாழ்க்கையில் இடம் பெறுதல் வேண்டும்.

      "உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்

      கல்லார் அறிவிலா தார்"

(140)

என்றும் திருக்குறள் கூறுகிறது: "எனைத்தானும் நல்லவை கேட்க” என்றும் கூறுகிறது. கேட்பனவெல்லாம் அறிவினைத் தாரா. கேட்பனவற்றில் மெய்ப்பொருள் தேர்ந்து தெளிதல் வேண்டும். காணப்படும் - நுகரப்படும் பொருள்களை நுகர்வின் மூலம் நுனித்தறிதல் வேண்டும். <poem>"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு";

(423)

"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு”

(355)

என்றும் திருக்குறள் கூறுகிறது. அறிவு, உயிர்க்குத் துன்பம் வராமல் பாதுகாக்கிறது. அறிவு எனும் கருவி பெற்று வினைப் பகையை வென்று விளங்க வேண்டுமாயின் உயிர்க்கு உயிரொழுக்கமாகிய அன்பு தேவை. உயிரின் இருப்பு அன்புக்காகவேயாம். உயிர், உடம்பாகிய ஒரு கருவியைப் போர்த்துக் கொண்டது அன்புடையராக வாழ்தலுக்கேயாம். "அன்பின் வழியது உயிர்நிலை" என்பது திருக்குறள்.

உயிர், அன்புநலம் செறிந்தால் நல்லறிவினை நாடும். நல்லறிவு பெற்றால் உயிர் செயற்பாடுறும். நல்லறிவின் துணையால் உயிர், தீவினை - தீய செயல்கள் செய்யாது; நன்னெறி சார்ந்த செயல்களைச் செய்யும். அதனால் உயிர் துன்புறாது. உயிர் வாழ்க்கை துன்புறாது; உயிர் உய்திநிலை அடையும். அன்பு, உயிர்க்குலத்தைத் தளிர்க்கச் செய்து வளர்த்து வாழவைக்கும் அற்புத ஆற்றலுடைய பண்பு. அன்பு, எப்போதும் உலகத்தைத் தழீஇயது; உலகையே உறவாகக் கொண்டது. தேனிர் அருந்துபவர்கள் "கப் - சாசர்" பார்த்திருப்பீர்கள். கப்பில் தேனீர் சூடாக இருக்கும். "சாச"ரில் ஊற்றினால் சூடு ஆறிவிடும். ஆதலால், சூடான தேனிரைச் “சாச"ரில் ஊற்றிக் குடிப்பது அன்றாடக் காட்சி. சுருங்கியனவெல்லாம் துன்புறும்; அழியும். விரிந்தன வெல்லாம் வளரும்.

"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு".

(72)

உயர்ந்த அன்புநெறியில் நிற்பதுவே வாழ்க்கை. உயிர் உய்திக்கு அன்பு தேவை. அன்பு உள்ள இடத்திலேயே வாழ்வு இருக்கும் வாழ்வு சிறக்கும். அன்பு உயிரையும் உடலையும் இணைத்து வாழ்விக்கிறது.

அன்பு, இயக்கத்தன்மை உடையது. அன்பு, ஆற்றலுடையது. 'ஆற்றல் மிக்க அன்பு' என்று அப்பரடிகள் கூறுவார். ஆதலால் அன்பு செயற்பாட்டிலும், தியாகத்திலும் இடம்பிடித்து வாழ்கிறது.

அன்புநெறியில் நிற்க விரும்புபவர்கள், தங்களை நேசித்துக் கொள்வதில் அளவற்ற அக்கறை காட்டக் கூடாது. அன்புடையவர்கள் தங்களைக் கடைசியாகவே நேசிக்கத் தொடங்குவர். அன்பு என்பது செயற்பாட்டுக்குரிய வாய்ப்புக் கருதிக் காத்துக் கொண்டிருக்காது. பள்ளந்தாழ் உறுபுனல்போல, அன்பு செயல்களைச் செய்ய வலியச் சென்று வாய்ப்புக்களை நாடும் தேடிப் பிடிக்கும். இதுவே உயிர் உய்யும் நெறி; திருக்குறள் நெறி.

திருக்குறள் நெறி, உயிர்நிலை போற்றும் நெறி. உயிர்நிலையின் களம் அன்பு: உயிரின் உயிர்ப்பு அன்பு. அன்புடையராதலின் பயன் நல்லறிவு பெறுதல்; நல்லதன் நன்மையும் தீயதன் தீமையும் தெளிந்து துணிதல் செயற்பாடுறுதல். இதுவே, திருக்குறள் நெறி சார்ந்த அறிவியல்.

by Swathi   on 21 May 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்த  6ஆவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு - பேரா. இல. சுந்தரம் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்த 6ஆவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு - பேரா. இல. சுந்தரம்
வள்ளுவர் கோட்டத்தில் ஓர் குறளங்காடி! வள்ளுவர் கோட்டத்தில் ஓர் குறளங்காடி!
வள்ளுவம் ஏன் வாழ்வியலாகவில்லை? தீர்வுகளை நோக்கி… வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி வள்ளுவம் ஏன் வாழ்வியலாகவில்லை? தீர்வுகளை நோக்கி… வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி
2025 ஆம் ஆண்டு உலகத் திருக்குறள் முற்றோதல் விருதுபெற்றவர்கள் 2025 ஆம் ஆண்டு உலகத் திருக்குறள் முற்றோதல் விருதுபெற்றவர்கள்
வள்ளுவத்தைப் வாழ்வியலாக்க ஐந்து திருக்குறள் கட்டமைப்புகள் வள்ளுவத்தைப் வாழ்வியலாக்க ஐந்து திருக்குறள் கட்டமைப்புகள்
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் நிறுவிய திருவள்ளுவர் சிலைகள் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் நிறுவிய திருவள்ளுவர் சிலைகள்
திருக்குறள் மற்றும் திருவாசகம் தொடர்பான ஆய்வாளர்களுக்கு விருது - விண்ணப்பிக்க அழைப்பு திருக்குறள் மற்றும் திருவாசகம் தொடர்பான ஆய்வாளர்களுக்கு விருது - விண்ணப்பிக்க அழைப்பு
“உலகப் பொதுமறை திருக்குறள்” கையடக்கப் பதிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின் “உலகப் பொதுமறை திருக்குறள்” கையடக்கப் பதிப்பை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.