|
|||||
தமிழ் - தாய்மொழியா? வாய்மொழியா? |
|||||
![]() பகுதி - 1 இன்றைய உலகமயமாக்கல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த சூழலில், தமிழ் சமுதாயத்தில் குறிப்பாக, இளைய சமுதாயத்திற்கும் , பெற்றோர்களுக்கும் பல்வேறு வாழ்வியல் சார்ந்த அடிப்படை கேள்விகள் மற்றும் குழப்பங்கள் எழுந்துள்ளதை அறியமுடிகிறது. அதில் முக்கியமானது நம் மொழி சார்ந்ததாகும். உலகமயமாக்கலால் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ள ஆங்கிலம் , நாம் வீட்டில் பேசும் தாய்மொழி என ஒன்றிற்கு மேற்பட்ட மொழிகள் கற்கும்பொழுது, அதில் எதை எவ்வாறு கையாள்வது என்ற குழப்பம் எழுகிறது. நான் அறிந்தவரையில், பல்வேறு பெற்றோர்களுக்கு எழும் முக்கியமான கேள்வி என்பது, என் மகனோ, மகளோ தமிழ் பேசத்தெரிந்து, எழுதத்தெரிந்து என்ன செய்யப்போகிறார்கள்? தாய்மொழி கற்று என்ன பயன்? கல்வி சூழலும் ,வேலைச் சுழலும் ஆங்கிலத்தில் இருக்கும்பொழுது தாய்மொழியின் அவசியம் என்ன? என்பதாகும். இந்த குழப்பம் ஒரு தெலுங்கு , கன்னடம், மலையாளம் பேசும் மக்களுக்கு கண்டிப்பாக வருவதில்லை என்றே சொல்லலாம். ஏன், ஹிந்தி பேசும் வட மாநிலத்தவர்க்கும், சீனர்களுக்கும், பாகிஸ்தானிக்கும் கூட இந்த கேள்வி எழவில்லை. இன்று அமெரிக்கா முழுவதும் தெலுங்கு பேசுபவர்கள் எவ்வித தயக்கமுமின்றி, குழப்பமுமின்றி, அமெரிக்கரை தவிர்த்து அனைவரிடமும் தெலுங்கிலேயே பேசுவதை பார்க்கிறோம். இந்தியராக இருந்தால், தெலுங்கில் பேச ஆரம்பித்துவிடுகிறார்கள், பிறகு நமக்கு தெலுங்கு தெரியாது என்று சொல்லி ஆங்கிலத்தில் உரையாடலை தொடர வற்புறுத்த வேண்டியுள்ளது. இரண்டு மலையாளிகள் சந்திக்கும்பொழுது மலையாளத்தில் பேசுகிறார்கள். இரண்டு கன்னடர்கள் சந்திக்கும்பொழுது கன்னடத்திலும், ஹிந்தி பேசுபவர்கள் ஹிந்தியிலும் பேசுகிறார்கள். ஆனால், இரண்டு தமிழர்கள் சந்திக்கும்பொழுது பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் பேசுகிறோம். இதற்கு என்ன காரணம்? இதை ஆராய்ந்து நம்மை சரிசெய்துகொள்வது அவசியம் என்றே கருதுகிறேன். இதற்கான காரணத்தை ஆராயும்பொழுது நம் கலாச்சார சூழல் காரணமாக இருக்குமா? ஆங்கிலம் பேசுபவர்கள் படித்தவர்கள், உயர்ந்தவர்கள் என்ற மனநிலை காரணமாக இருக்குமா? அப்படியானால் இந்த எண்ண விதை எப்போது நம்மில் விழுந்தது? ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்டபொழுதா? யோசிக்கவேண்டிய விஷயம். இதனால் நாம் ஆங்கிலத்தையோ, மற்ற மொழிகளையோ தெரிந்துகொள்ளவேண்டாம் என அர்த்தமில்லை. எத்துனை மொழிகள் கற்க முடியுமோ அவைகளை கற்று, தமிழர்கள் எட்டுத்திக்கும் செல்லும் அதே நேரத்தில், தாய்மொழியை வாய்மொழியாகக் கருதிவிடாமல், அதை பேசவும், படிக்கவும், எழுதவும் தெரிந்துகொள்ளவும் அதன் முக்கியத்துவத்தை உணரவும் செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
|
|||||
by Swathi on 22 Nov 2011 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|