நவதிருப்பதி தலங்களில் முதலாவதான இத்தலம் சூரியனுக்குரியது.மகாவிஷ்ணுவின் இருப்பிடம் வைகுண்டம். சிவபெருமானுக்குரியது கயிலாயம். பக்தர்கள் பிறவாநிலை கிடைக்க, இந்த இரு உலகங்களிலும் இடம் கேட்டு சுவாமியை வணங்குகின்றனர். இத்தலத்தில் சுவாமியே, வைகுண்டநாதராக அருளுவதால், இங்கு வேண்டிக்கொள்பவர்களுக்கு வைகுண்டத்தில் இடம் கிடைப்பதாக நம்பிக்கை.
தவிர, இந்த ஊரிலேயே கயிலாசநாதர் கோயிலும் உள்ளது. இந்தக் கோயிலில் வேண்டிக்கொள்பவர்களுக்கு கயிலாயத்தில் இடம் கிடைக்கும். இவ்வாறு, ஒரே ஊரில் வைகுண்டம், கயிலாயம் என இரண்டையும் தரிசிக்கலாம் என்பது விசேஷம். மணித்துளி தரிசனம் வைகுண்ட ஏகாதசியன்று உற்சவர் கள்ளபிரானை அர்த்த மண்டபத்திற்குள் கொண்டு செல்வர். இவ்வேளையில் சன்னதியை அடைத்துவிடுவர்.
பின் கண் இமைக்கும் நேரத்திற்குள் நடை திறந்து, சுவாமிக்கு தீபாராதனை காட்டி உடனே அடைத்து விடுவர். ஒருசில மணித்துளிகளுக்குள் இந்த வைபவம் நடந்து முடிந்து விடும். இவ்வேளையில் சுவாமியை தரிசித்தால் பிறப்பில்லா நிலை கிடைப்பதாக நம்பிக்கை. |