பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று நவ திருப்பதிகளில் இது 7 வது திருப்பதி. நவகிரகங்களில் இது சனி பகவானுக்குரிய தலம். நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ க்ஷேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. சோழநாட்டில் அமைந்துள்ள நவகிரகங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவகிரகங்களாக போற்றப்படுகிறது.
இங்கு பெருமாளே நவகிரகங்களாக செயல்படுவதால் நவ கிரகங்களுக்கு என தனியே சந்நிதி அமைக்கப்படுவதில்லை. வேதாசரன் என்ற அந்தணருக்குப் பிறந்த கமலாவதி என்ற பெண் பகவானைக் குறித்து தவம் செய்ய, பகவான் காட்சி கொடுத்து விவாகம் செய்து கொண்டதாக ஸ்தல வரலாறு. பாலிகை தவம் செய்த இடம் என்பதால் பாலிகை வனம் என்றும் அழைக்கப்படுகிறது.
இங்கு அச்மஸாரன் என்னும் அசுரன் பகவானுடன் யுத்தம் செய்ததாகவும் பகவான் அவனை வீழ்த்தி அவன் மேல் நாட்டியமாடி அழித்ததாகவும் சொல்வார்கள். தேவர்கள் பிரார்த்தனைப்படி மாயக்கூத்தன் என்ற திருநாமம் பெற்றார். இத்தலத்தில் கருடன் பெருமாளுடன் உற்ஸவராக பக்கத்தில் எழுந்தருளியுள்ளார். |