(சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
அசுர குருவான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட வெளிப்படையான பேச்சும், உண்மை விளம்பியும், சுகந்த பரிமளப் பிரியரும், வினோதமான குணமுள்ளவருமான துலாராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.
துலா இராசிக்கு தைரிய, ருண பாவங்களுக்கு அதிபதியான குரு ஆவணி 27 இல் தங்கள் ஜன்ம இராசியில் சஞ்சரிக்கிறார். ‘ ஜென்ம இராமர் வனத்திலே சீதையைச் சிறை வைத்த்தும் ‘ – என வரும் பழம் பாடல் படி இராம பிரானுக்கே அந்த கதி என்றால் நமக்கு. அதனால் துவக்கத்தில் பதவி உத்தியோகத்தில் பிரச்சனைகள் எழலாம். காடு, மேடு பள்ளமென அலைந்து திரிய நேரும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். அளவுக்கு அதிகமான பொருள் வரவு வந்தாலும் செலவுகளும் அதிகமாகும். சிறுசிறு உபாதைகள் எழலாம். உயர்குலப் பெண்ணால் அவப் பெயர் ஏற்படலாம். தான தருமம் செய்வதால் கைப் பணம் கரையும். வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் ஏற்படும். இடமாற்றம், பதவி மாற்றம் ஆகியவை நிகழலாம். அனைத்திலும் இலாபமும், மகிழ்ச்சியும் குறையும். தேவையற்ற, ஆதாயமற்ற பயணங்கள் ஏற்படும். புகழ் மங்கும், பிறர் வழங்கும் மதிப்பு, மரியாதை எனத் துவங்கிய வாழ்வு இந்த வருடம் முன்னேற்றகரமாகவே இருக்கும். படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புக்கள் தாமதமாகவே கிடைக்கும். உறவுகளைப் பிரிய வேண்டிய நிலை ஏற்படும். எதிலும் ஒரு பிடிப்பும், ஆர்வமும் இருக்காது. உங்கள் செயல்பாடுகளில் எப்போதும் ஓர் அச்ச உணர்வு இருந்து கொண்டே இருக்கும். இராஜகோபமும், பொன், பொருள் இலாபமின்மை ஆகியவை ஏற்படும். தகவல் தொடர்பு ஐ. டி நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் ஏற்பட்டு, வெளிநாடு செல்வர். குழந்தை இல்லாதவர்கள் புதிதாக குழந்தை தத்தெடுக்க சரியான காலமாகும். சிலருக்குக் குழந்தைகளின் திறமையான செயல்பாடுகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்களாக அமையும். அடிக்கடி மன மாற்றங்கள் ஏற்பட்டு, குழப்பமான சூழ்நிலையே நிலவும். வீண் கற்பனைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள். அதன் காரணமாக உடல் சோர்வும், கோபமும் அடிக்கடி ஏற்படும். கணவன் மனைவி உறவுகளில் முகவும் இணக்கமான சூழல் நிலவும். சிலருக்கு வேலையில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். தெய்வ அனுகூலமும், தெய்வீக புருஷர்களை சந்தித்து, இவர்களின் அருளாசி பெறுவீர்கள். உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் கல்வித் திறன் மேம்படும்.
குரு தனது 5 ஆம் பார்வையாக புத்திர, பூர்வ புண்ணிய பாவங்களைப் பார்வை செய்வதால் மணமான தம்பதியர்க்கு மழலைச் செல்வம் ஏற்பட்டு மனம் மகிழ வைக்கும். தாய் வழியில், ஏதேனும் ஒரு வகையில் பணவரவு ஏற்படும். நோய் பாதிப்புகள் குறைந்து, சுகமான, சொகுசான வாழ்க்கை அமையும். தெய்வீக கைங்கரியங்கள் செய்து தெய்வ அனுக்கிரகத்தை பெறுவீர்கள். காதல் விவகாரங்களில் ஏற்பட்ட தடங்கல்கள் அனைத்தும் நிவர்த்தியாகும்.
குரு தனது 7 ஆம் பார்வையாகக் களத்திர பாவத்தைப் பார்வை செய்வதால், கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஓங்கும். கணவன், மனைவி இடையே இணக்கமான உறவு ஏற்படும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இன்பமான, இணக்கமான வாழ்க்கை வாழ்வார்கள். புதிய ஒப்பந்தங்கள் நிறைவேறும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். ஆராய்ச்சிக் கல்விக்கான பிறரின் உதவிகள் தடையின்றி கிடைக்கும். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் மேன்மை அடைவார்கள்.
குரு தனது 9 ஆம் பார்வையாக பாக்கிய பாவத்தைப் பார்ப்பதால் சமுதாயத்துக்கும், மக்களுக்குமான பொதுச் சேவைகளில் ஈடுபட்டுனுயர்வு அடைவார்கள். கோவில் திருப்பணுகள், தர்ம காரியங்களில் ஈடுபட்டு, புகழ் அடைவர். மதிப்பு, மரியாதை, கௌரவம் ஆகியவை உயரும். பூர்வீகத் தொழில்கள், விவசாயம் ஆகியவை மேம்பாடு அடையும். இலாபமும் கூடும்.
துலா இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி உலோக மூர்த்தியாக நான்காம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு இரும்பினாலான விவசாய, பொறியியல் உபகரண சேர்க்கை உண்டாகி குறைந்த அளவு நன்மை அளிக்கும். இரும்பினாலான்ன உபகரணங்கள், பொருட்களை உழவாரப் பணிக்கு, ஆலயங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவது நல்லது.
வேலை அல்லது உத்யோகம் (JOB)
வேலை என்றால் அரசு மற்றும் தனியார் துறை என இரண்டையும் குறிக்கும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்பட்டு ஒரு சிலர் வெளிநாடு செல்ல வாய்ப்பு ஏற்படும். வேலையில் உயர் அதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். விருப்ப ஓய்வு பெறுபவர்கள் வேலையை விட விண்ணப்பிக்கலாம். அடிக்கடி லீவு போட வேண்டியது வரும். எனவே வேலையில் கவனம் தேவை.
தொழில் (BUSINESS), வியாபாரம் (TRADE)
சனிபகவான் 5ம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் தொழில் எதிர் பார்த்த லாபம் வராது. கூட்டாளிகள் லாபம் அடைவர். புதிய தொழில் கூட்டாளிகளை சேர்த்தல் கூடாது. பங்குச்சந்தை சாதகமாக இராது. சிறுதொழில் சுயதொழில் சுமாராக இருக்கும். உற்பத்தி சார்ந்த துறை லாபகரமாக அமையும். போக்குவரத்து, தகவல்தொடர்பு, செய்தி, பத்திரிக்கை, சேவைத்துறை சற்று லாபகரமாகவும் இரும்பு எஃகு சிமெண்ட் கனிமவளம் சார்ந்தவை லாபம் குறைந்தும் காணப்படும். ரியல் எஸ்டேட் சற்று லாபம் குறந்தும் கமிஷன எஜென்ஸி, புரோக்கர் தொழில் ஏற்றமுடனும் தெருவோர வியாபாரம் ஏற்றுமதி இறக்குமதி சற்று சுமாராகவும் இருக்கும். ஆடை, ஆபரணம், ரசாயனம், பொறியியல், விஞ்ஞானம் ஏற்றமுடனும் இருக்கும். மருத்துவம், ஜோதிடம் ஏற்றமுடன் இருக்கும்.
விவசாயம்
சற்று மந்தமாகவே விவசாயம் இருக்கும். பனைத்தொழில், பயிர்த்தொழில், சற்று லாபகரமாகவும் காய்கறிகள், பழங்கள் சற்று லாபம் குறைந்தும் மலர்கள் லாபமுடனும் அமையும். புதிய நிலங்களை குத்தகைக்கு எடுக்க வாய்ப்புகள் அமையும்.
அரசியல்
புதிய நண்பர்களால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும், ஆரம்பத்தில் சற்று சுமாராக இருக்கும். அரசியல் ஜனவரிக்குப் பின் சூடு பிடிக்கும். அரசால் நன்மையும் தொண்டர்களின் ஒத்துழைப்பும் கிட்டும். எதிர்களால் மன அழுத்தங்களும் தொடர்ந்த வண்ணமிருக்கும்.
கலைஞர்கள்
கலைத்துறை சற்று சுமாராகவே இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணப்புழக்கம் நன்கு அமையும். அரசால் ஆபத்துக்கள் ஏற்படும். சினிமா, நாடகம், இசை, டி.வி துறைகள் சற்று பெயர் புகழைத்தரும். ஒரு சிலருக்கு விருதுகளையும் வெற்றிகளையும் தரும்.
மாணவர்கள்
நல்ல அறிவும் புத்திக் கூர்மையும் அதிகரிக்கும். விளையாட்டில் கவனம் செல்லும். எதிர்பார்த்த படிப்பு கிடைக்க வாய்ப்பு சற்று குறைவாகும். கல்விக்கடன் கிடைக்கும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்துதல் கூடாது.
பெண்கள்
சிறு சலசலப்புக்குபின் குடும்பத்தில் சுபகாரியம் நல்ல முறையில் நடந்தேறும். குழந்தைக்கான வாய்ப்புகள் கூடும். அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் வாய்க்கும். கணவன் மனைவி உறவு சந்தோஷகரமாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சரிவர அமையாது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலையில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். வேலையின் காரணமாக சிறு பிரயாணம் ஒரு சிலருக்கு அமையும். உயரதிகாரிகளால் மன உலைச்சல்கள் ஏற்படும். சக ஊழியர்களின் அன்பும் ஒத்துழைப்பும் சாதகமாக அமையும். எப்பொழுதும் ஏதாவது ஒன்றிற்காக கவலைப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டிவரும்.
உடல் ஆரோக்யம்
உடலில் இனம் காணமுடியாத நோய்கள் ஏற்பட்டு விலகும். மார்பு, வயிறு, முழங்கால் போன்ற உடல் உறுப்புகளில் பிரச்சனையும், சளித்தொல்லையும், தேமல், சொரி, சிரங்கு போன்ற நோய்களால் வேதனைகளும் ஏற்பட்டு வரும்.
துலாத்திற்கு - சுவர்ண மூர்த்தியாக சுமாரான பலன்கள் ஏற்படும். (1) 70%
|