|
|||||
அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை- தமிழ்ப் பல்கலைக் கழகம் நடத்திய 'தமிழ்க் கூடல்-2024' மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அமைச்சரிடம் ஒப்படைப்பு |
|||||
நவம்பர் 23, 24 நாட்களில் தஞ்சாவூரில் தமிழ்க்கூடல்-2024 மாநாடு நடந்தது. பல்வேறு தமிழ் ஆளுமைகள் பங்கேற்ற இம்மாநாட்டில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 17-12-2024 அன்று பேரவைத்தலைவர், ஆலோசகர் ஞானசேகரன் ஆகியோர் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனைச் சந்தித்து பேரவைத் தீர்மானங்களை அளித்துள்ளார்கள். மேலும் முதலமைச்சர் அலுவலகம், உயர்கல்வித்துறை அமைச்சரகம், அயலக நலத்துறை அமைச்சரகம் ஆகிய இடங்களிலும் தீர்மானங்களடங்கிய நகலை அளித்துள்ளார்கள்.
தமிழ்க்கூடல்-2024 மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1. உலகெங்கும் வாழும் தமிழ் மக்களிடம், குறிப்பாகத் தமிழ் நாட்டு மக்களிடையே தாய்மொழிப் பற்றும், தமிழ்மொழிப் பயன்பாடும் குறுகி வருகின்ற சூழலில், தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்வித்திட்டத்தின் கீழ் இயங்கி வருகின்ற அரசுப் பள்ளிகளில் தமிழ்வழி முதல் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்பு வரை கட்டாயக் கல்விமுறையாக அறிவிக்கப்பட வேண்டும், மேலும் தமிழ் வழிக் கல்வியின் மூலம் பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்விப் படிப்பிலும், வேலை வாய்ப்புகளிலும் முன்னுரிமை மற்றும் தேவையான இட ஒதுக்கீடு பெறும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்ற வேண்டும்.
2. இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் தமிழ் படித்த மாணவர்களுக்கும் தமிழ்நாடு கல்விக்கூடங்கள், கல்லூரிகள் ஆகியவற்றில் மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பத் துறைகளில் முன்னுரிமை மற்றும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்,
3. இந்தியாவில், தமிழ்நாடு உட்பட வெளிமாநிலங்களில் இயங்கி வரும் தமிழ்ச்
சங்கங்கள் மற்றும் தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு குடை அமைப்பாகச் செயல்பட்டு வரும் அனைத்திந்தியப் பேரவையின் விரிந்த செயல்பாடுகளுக்காகத் தமிழ் நாட்டின் தலைநகர் சென்னை அல்லது புறநகர்ப் பகுதியில் ஓர் அலுவலகம், கூட்டரங்கம் மற்றும் தங்கும் விடுதி அமைப்பதற்குத் தமிழ் நாடு அரசு உரிய நிலம் வழங்கி தமிழ்ச் சங்கங்களின் ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
4.வெளிமாநிலங்களில் செயல்பட்டு வரும் தமிழ்ச் சங்கங்கள், தமிழ் அமைப்புகள் சார்பில் நடத்தப்பெற்று வரும் கல்விக்கூடங்கள் போதிய கட்டமைப்பு, பராமரிப்பின்றி நலிந்து வருகின்ற சூழல் நிலவுகிறது. பிற மாநிலங்களில் தமிழ் மொழியை நேரடியாகவும் இணைய வழியிலும் கற்பிக்கும் பள்ளிகளுக்குத் துணை நிற்கும் வகையில் ஆண்டுதோறும் ரூ.10 லட்சம் நன்கொடையாக வழங்கி உதவிட வேண்டுமெனத் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறோம். எடுத்துக்காட்டாக கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரு தமிழ்ச்சங்கம் கடந்த 35 ஆண்டுகாலமாகத் தொடர்ந்து செயல்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் உயர்நிலைப்பள்ளிக்கு ஆண்டுக்குச் சற்றொப்ப ரூபாய் 15 லட்சம் மேற் செலவினமாக உள்ளது. இந்த நிதிச்சுமை குறைக்கப்பட வேண்டும்,
5. தமிழ்நாட்டிலும் வெளிமாநிலங்களிலும் இயங்கிவரும் தமிழ்ச்சங்கங்கள் செம்மையாகவும் விரிவாகவும் செயல்படுவதற்கு நிலம், கட்டடம் ஆகியவற்றிற்கும் கட்டிடப் பராமரிப்பு, நூலகம், ஆகியவற்றுக்காக ஒவ்வொரு ஆண்டும் உரிய நிதி உதவியைத் தமிழ்நாடு அரசு அழித்திட வேண்டும் என இம்மாநாடு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
6. தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சித்துறை, கலைத்துறை விருதுகள் வெளிமாநிலங்களில் வாழும் தமிழறிஞர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். விருதுகளுக்கான தேர்வுக்குழுவில் வெளிமாநில செயற்பாட்டாளர்களுக்கும் இடமளிக்க வேண்டும் என்று தமிழக அரசை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது,
7. உலகப்பொதுமறை தந்த பொய்யாப்புலவன் திருவள்ளுவருக்கு முக்கடலும் சங்கமிக்கும் குமரிமுனையில் முத்தமிழறிஞர் கலைஞரின் தலைமையில் வானளவு உயர்ந்த சில அமைக்கப்பெற்று வெள்ளிவிழா காணும் இவ்வாண்டில் திருக்குறள் நெறியினை உலகறியச் செய்யும் வகையில் சற்றொப்ப 400 முதல் 500 ஏக்கர் நிலப்பரப்பில் மாபெரும் திருக்குறள் பண்பாட்டுப்பூங்கா அமைத்திடல் வேண்டும். அதில் திருக்குறள் ஆய்வு மையம், இந்தியத் திருநாட்டின் 22 அலுவல் மொழிகளிலும் பன்னாட்டு ஆறு அலுவல் மொழிகளிலும் திருக்குறள் மொழிப்பெயர்த்துறை உறைவிடப் பயிற்சி, தங்கும் விடுதிகள் உள்பட அமைக்கப்பெற்று 1330 திருக்குறளும் கல்வெட்டுகளாகப் பதிக்கப்பெற்ற மாடங்கள், சுற்றுலாப்பயணிகளைக் கவரும் வண்ணம் பிற வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட வேண்டும். திருக்குறள் வெறும் அற இலக்கியம் என்று மட்டுமே பார்க்கப்படாமல் மாந்த இனம் திறம்படச் செயலாற்ற உதவும் வழிகாட்டி நூலாகவும் மேலாண்மை அறிவியல் நூலாகவும் இந்தியர் அறநிலை, பொருள் நிலை, அறிவு நிலை என மூன்றும் மேம்படப் பெரிதும் உதவும். இதன்மூலம் தமிழ்மொழி இனப் பெருமைகளை உலகறியும் நிலை உருவாக்கிட இயலும். அதற்கான திட்டங்களைத் தமிழ்நாடு அரசு இவ்வாண்டிலேயே முன்னெடுக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
8. தன் தாய்மொழிக்காப்புக்காக 1952-ம் ஆண்டு சில மாணவர்கள் உயிரிழந்த நிகழ்வைப் பயன்படுத்தி பன்னாட்டு அவை மூலமாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் நாளை உலகத் தாய்மொழி நாள் என அறிவிக்கச் செய்தது வங்களா தேசம். ஆனால் தமிழ்மொழியின் காப்புக்காக 1938-ம் ஆண்டு முதல் ஆயிரக்கணக்கான தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் தங்கள் உயிரையே ஈகமாக வழங்கியுள்ளனர். எனவே உலகத் தாய்மொழி என அறிவிக்கப்பட்டிருப்பது போல உலகத் தமிழ்மொழி நாள் என ஒரு நாள் அறிவிக்கப்பட்டு அந்த நாள் உலகத் தமிழர்களால் போற்றப்பட வேண்டும். அதற்குப் பொருத்தமான நாளாக புரட்சிப் பாவலர் பாரதிதாசன் பிறந்த ஏப்ரல் 29 என இம்மாநாடு பரிந்துரை செய்வதுடன் எதிர்வரும் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 29 உலகத்தமிழ்மொழி நாள் எனத் தமிழ்நாடு அரசு அரசாணை மூலம் அறிவிக்குமாறு இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.
9. உலகின் முதல் மொழியாகவும் மூத்த மொழியாகவும் விளங்கும் தமிழ்மொழிக்கு இந்தியாவின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமையப்பெற்று தமிழ் இலக்கண இலக்கியச் செம்மை, தொன்மை, பண்பாடு ஆகியவை பரவும் வகை செய்ய வேண்டும் என ஒன்றிய அரசை இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
10. இந்திய அரசமைப்புச் சட்டம் 8-ஆவது அட்டவணையில் உள்ள 22 தேசிய மொழிகளிலும் அந்தந்த மாநில ஆட்சி மொழியாகச் செயல்படுத்தப்பட வேண்டும். இதற்குரிய நாடாளுமன்றச் சட்ட நடவடிக்கைகளை இந்திய ஒன்றிய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
|
|||||
by hemavathi on 18 Dec 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|