LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் வளர்ச்சிக் கோரிக்கைகள் Print Friendly and PDF

உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் நடத்தும் மாணவர் எழுச்சித்தமிழ் மாநாட்டுத் தீர்மானங்கள்

உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் நடத்தும் மாணவர் எழுச்சித்தமிழ் மாநாடு
கரிகாற்சோழன் கலையரங்கம் தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், 09.09.2023

மாநாட்டுத் தீர்மானங்கள்:

1. உலகத்தில் பல நாடுகளில் இருப்பது போலவும் இந்தியாவில் சில மாநிலங்களில் இருப்பது போலவும் பள்ளிக் கல்வி முழுவதும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் தாய் மொழியாகிய தமிழ் மொழி வாயிலாகவே கற்பிக்கப்படவேண்டும். மாநிலப் பாடத்திட்டம், பன்னாட்டுப் பாடத்திட்டம் உட்பட தமிழ்நாட்டில் இயங்கிவரும் அனைத்துப் பாடத்திட்டப் பள்ளிகளிலும் தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு அண்மையில் வெளியிட்ட அரசாணையின்படி அரசு,அரசு உதவி பெறும் பள்ளிகள் தவிர்த்து அனைத்து நிலைப் பள்ளிகளிலும் தமிழ் ஒரு பாடமாக வைக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது. இவ்வாணையைப் பிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கட்கு இம்மாநாடு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது. ஆனால் அரசுத் தேர்வுக்குக் கட்டாயப்பாடமாக அது ஆக்கப் படவில்லை. எனவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைப் போலவே அனைத்து நிலைப் பள்ளிகளிலும் தமிழைப் பகுதி ஒன்று பாடமாக வைப்பதற்கு அடுத்த கட்டமாக ஆணையிடுமாறு கேட்டுக்கொள்ள இம்மாநாடு ஒருமனதாகத் தீர்மானிக்கிறது. தமிழ்நாடு அரசைக்

2. சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் மாண்புமிகு நீதியரசர் திரு.ந.கிருபாகரன் மற்றும் மாண்புமிகு நீதியரசர் திரு. பி.புகழேந்தி ஆகியோர் அமர்வு 19.08.2021 ஆம்நாள் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் அனைத்துக் கோயில்களிலும் தமிழிலேயே குடமுழுக்குச் செய்வதற்கான வழிமுறைகளை வகுத்தளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவின் பரிந்துரைகளை விரைவில் பெற்றுச் சட்டமியற்றவோ / அரசாணை வெளியிடவோ வேண்டுமெனத் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்வதென ஒருமனதாக இம்மாநாடு தீர்மானிக்கிறது. குழுக் கூட்டத்தை மீண்டும் கூட்டிக் குழுவின் அறிக்கையைப் பெற இந்துசமய அறநிலையத் துறை விரைவான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென இம்மாநாடு முடிவாற்றுகின்றது.

3. கோயில் கட்டியவன் எந்தமிழன். கற்சிலை செய்தவன் எந்தமிழன், வாயில் காப்பவன் எந்தமிழன் ஆனால் வழிபாட்டுமொழியாய்த் தமிழ் இல்லை. அனைத்துநிலைத் திருக்கோயில்களிலும் வழிபாட்டுச் சடங்குகள் அனைத்தும் தமிழிலேயே நடைபெற வேண்டுமென அரசாணை வெளியிட அரசைக் கேட்டுக்கொள்ள இம்மாநாடு ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

4 கலைக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து நிலைக் கல்லூரிகளிலும் முதற்கட்டமாக அனைத்து வகுப்புகளுக்கும் தமிழ் ஒரு பாடமாக வைக்கப் படவேண்டும். அதே வேளையில் போதுமான கலைச் சொற்கள் இருக்கிற துறைகளில் தமிழ்வழியில் கல்வி கற்பிக்கப் பாடத்திட்டங்களை உருவாக்கவேண்டும் என இம்மாநாடு ஒரு மனதாகக் கேட்டுக் கொள்கிறது.தொடர்ச்சியாகக் கலைச் சொல்லாக்கப் பணி நடைபெற்று அனைத்து வகைக் கல்லூரிகளிலும் தமிழே பயிற்றுமொழியாக ஆக்கப்பட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்ள இம்மாநாடு ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

5. அரசு அலுவலகங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், பல்வேறு துறைசார்ந்த அரசு ஆணைகள், திட்டங்கள், தீர்மானங்கள், செயல்முறைகள் அனைத்தும் தமிழிலேயே இருக்க வேண்டுமென்ற கொள்கைமுடிவை எடுத்து கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்ள இம்மாநாடு ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

6. வழக்குத் தொடுப்பவன் செந்தமிழன்: தொடுக்கப்படுபவன் செந்தமிழன்,
வழக்கை நடத்தும் வழக்கறிஞர் அத்தனைபேரும் எந்தமிழர். என்ன கொடுமை வழக்காடு மொழியாய்த் தமிழ் இல்லை. எனவே, ஒருசில மாநிலங்களில் இருப்பது போல தமிழே வழக்காடு மொழியாக அறிவிக்கப்பட வேண்டுமென ஒன்றிய, தமிழ்நாடு அரசுகளை இம்மாநாடு ஒருமனதாகக் கேட்டுக்கொள்ளத் தீர்மானிக்கிறது.

7. எட்டாவது அட்டவணையிலுள்ள 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாக அறிவிக்குமாறு ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்ள இம்மாநாடு ஒருமனதாகக் கேட்டுக் கொள்ளத் தீர்மானிக்கிறது.

8. திருமணவிழா, கால்கோள் விழா, புதுமனை புகுவிழா, நிறுவனத் திறப்பு விழா, திருக்குடமுழுக்கு விழா, பூப்புனித நன்னீராட்டு விழா, திருமண உறுதி ஏற்பு விழா, வளைகாப்பு விழா, பெயர் சூட்டுவிழா, பிறந்த நாள் விழா, காதணி விழா. எழுத்தாணிப்பால் விழா, ஆண்டு விழா, வெள்ளி விழா, பொன் விழா, மணி விழா, பவள விழா, முத்துவிழா. நூற்றாண்டு விழா, இயற்கை எய்தல், நினைவேந்தல், படத்திறப்பு. நீத்தார் நினைவு என அனைத்து வாழ்வியல் சடங்குகளையும் தமிழிலேயே செய்ய வேண்டுமென்று மாநில அரசையும், மக்களையும் கேட்டுக்கொள்வதெனத் தீர்மானிக்கிறது.

9. வணிக நிறுவனங்களின் முகப்புப் பலகைகளில் தமிழ்தான் முதலிடம் பெற வேண்டுமென அரசாணை இருந்தும் கூட நடைமுறைப்படுத்தாத நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கடுமையான அறிவிப்பை வெளியிட்டு அதைக் கண்காணிக்கும் பொறுப்பைத் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பும், தமிழ் வளர்ச்சி இயக்கமும் இணைந்து செயலாற்றுமாறு அரசாணை வெளியிட்டு வேகப்படுத்துமாறு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்ள ஒருமனதாகத் தீர்மானிக்கிறது. அண்மையில் ஒறுப்புக்கட்டணமாக ரூ.2000/- கட்ட வேண்டுமென்ற அரசாணை வெளியிட்ட மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு தமிழ்வளர்ச்சி, செய்தி விளம்பரத்துறை அமைச்சர் அவர்களை இம்மாநாடு பாராட்டுகிறது.

10. திருக்குறளை உலகப் பொதுமறையாக அறிவிக்குமாறு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பை (UNESCO) கேட்டுக்கொள்ள இம்மாநாடு ஒருமனதாகத் தீர்மானிக்கிறது. அதற்கான அழுத்தத்தை ஒன்றிய அரசும். தமிழ்நாட்டு அரசும் தரவேண்டுமெனவும் கேட்டுக் கொள்ள ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

11. திருக்குறளைத் தேசீய நூலாக அறிவிக்குமாறு ஒன்றிய அரசைக் கேட்டுக் கொள்ள ஒருமனதாக முடிவாற்றப்பட்டது.

12. 1330 திருக்குறளையும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சங்ககிரி மலையில் தனித்தனியாகக் கல்வெட்டாகப் பதிவு செய்ய ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்ள இம்மாநாடு ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

13. பல தமிழ்க்கவிஞர்களுக்கு ஒன்றிய அரசு அஞ்சல்தலை வெளியிட்டுள்ளது. எடுத்துக்காட்டாக திருவள்ளுவர், கம்பர், அருணகிரிநாதர், குமரகுருபரர், வள்ளலார். வேதாந்த தேசிகள், வ.உ.சி., கவிமணி, செய்குதம்பிப் பாவலர், நாமக்கல் கவிஞர், பாரதியார், மறைமலை அடிகள், பாரதிதாசன், வாரியார், கண்ணதாசன், உடுமலை நாராயணகவி, பாவாணர் ஆகியோர் ஆவர். வடமொழி பாணினிக்கும் அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, ஒல்காப்புகழ் தொல்காப்பியருக்கும் ஒன்றிய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பிக்க வேண்டுமென்றும் ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்ள இம்மாநாடு ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

14. சித்திரை முழுமதி நாளில் தொல்காப்பியர் சிலைக்கு மாலையிடவேண்டும் என அரசாணை இருக்கிறது. சித்திரை மாதத்தில் பிறந்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாளை கவிஞர்கள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுவதற்கான அரசாணை 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சித்திரை மாதத்தை தொல்காப்பியர் மாதமாக அறிவிக்குமாறு ஒன்றிய அரசையும் தமிழ்நாடு அரசையும் கேட்டுக் கொள்ள இம்மாநாடு ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

15.தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்புகளில் தமிழ்வழியில் கல்வி கற்றோருக்கு அதிக விழுக்காடு தனி ஒதுக்கீடு செய்ய அரசாணை வெளியிடுமாறு தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்ள இம்மாநாடு ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

16.ஊடகங்களில் கலப்பற்ற தமிழ் பேசப்படுவதற்கு மலேயா, சிங்கப்பூர் நாடுகளில் இருப்பதுபோல ஒரு தரக்கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்க ஒன்றிய மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்ள இம்மாநாடு ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

17.தமிழில் பெயர் சூட்டுதல், பெயரின் முன் எழுத்தைத் தமிழிலேயே வைப்பது போன்றவற்றை அரசும் மக்களும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். தமிழ்ப் பெயர் தாங்கிப் பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கலாமெனவும், இம்மாநாடு அரசுக்குப் பரிந்துரை செய்ய ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

18. வெளிநாட்டிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் தமிழ்நாட்டுக்கும், தமிழ் - நாட்டின் ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்துக்கும் செல்லும் அனைத்து - வானூர்திகளிலும் தமிழிலேயே அறிவிப்புச் செய்ய வேண்டுமென அரசைக் கேட்டுக்கொள்ள இம்மாநாடு ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

19. ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுகளுக்குமான கடிதத் தொடர்புகள் அனைத்தும் அந்தந்த மாநில மொழிகளிலேயே இருக்க வேண்டுமென ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்வதென இம்மாநாடு ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

20. உலகத்திலேயே தமிழ் மொழிக்காக இயங்கி வருகிற ஒரே பல்கலைக்கழகமாகிய தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அனைத்துச் சிக்கல்களையும் தீர்த்துவைக்க ஒரு உயர்நிலைக்குழுவை அமைத்து விரைவில் தீர்வு காணுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும், மாண்புமிகு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களையும் கேட்டுக் கொள்ள இம்மாநாடு ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

21. ஒட்டுமொத்தமாக எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலை முழுவதுமாக நடைமுறைப்படுத்தும் வரை இம்மாநாட்டில் கலந்து கொண்ட மாணவர்கள் உட்பட உலகத் தமிழர் அனைவரும் தன்னை இழந்தாவது தமிழைக் காப்பதென இம்மாநாடு ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

 

முனைவர். சி. சுப்பிரமணியம்
தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்
ஒருங்கிணைப்பாளர் உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம்

செ.துரைசாமி
தலைவர், அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை,
கோயமுத்தூர்த் தமிழ்ச் சங்கமம்

புலவர்.கா.ச.அப்பாவு
தலைவர்,
தமிழ்க்காப்புக் கூட்டியக்கம்,கோவை

by Swathi   on 20 Jan 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்நாட்டில் நூறு விழுக்காடு ஆட்சித்தமிழை நிலைநிறுத்துவோம்! தமிழ்நாட்டில் நூறு விழுக்காடு ஆட்சித்தமிழை நிலைநிறுத்துவோம்!
செந்தமிழ்த் திருத்தேர் தூயதமிழ் மாணவர் இயக்கம் பன்னாட்டுத் தூயதமிழ் மாணவர் மாநாடு - 2025 -மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செந்தமிழ்த் திருத்தேர் தூயதமிழ் மாணவர் இயக்கம் பன்னாட்டுத் தூயதமிழ் மாணவர் மாநாடு - 2025 -மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
முதலாவது உலகத் தமிழிசை மாநாடு -2019 தீர்மானங்கள் முதலாவது உலகத் தமிழிசை மாநாடு -2019 தீர்மானங்கள்
அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை- தமிழ்ப் பல்கலைக் கழகம் நடத்திய 'தமிழ்க் கூடல்-2024' மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள்  அமைச்சரிடம் ஒப்படைப்பு அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை- தமிழ்ப் பல்கலைக் கழகம் நடத்திய 'தமிழ்க் கூடல்-2024' மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அமைச்சரிடம் ஒப்படைப்பு
தமிழர்கள் தமிழ்ச் சங்கத்தினர் ஆற்ற வேண்டிய சில  குறள் சார்ந்த பணிகள்.... தமிழர்கள் தமிழ்ச் சங்கத்தினர் ஆற்ற வேண்டிய சில குறள் சார்ந்த பணிகள்....
தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சருக்கு மே  2024 ல் வழங்கப்பட்ட கோரிக்கை மனு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சருக்கு மே 2024 ல் வழங்கப்பட்ட கோரிக்கை மனு
இளையராசாவிடம்  எனக்குள்ள கிடுக்கங்களும் வேண்டுகோள்களும்-நாக.இளங்கோவன் இளையராசாவிடம் எனக்குள்ள கிடுக்கங்களும் வேண்டுகோள்களும்-நாக.இளங்கோவன்
பெயர் பலகைகள் அன்னை தமிழ் மொழியில் பெயர் பலகைகள் அன்னை தமிழ் மொழியில்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.