LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- வைக்கம் முஹம்மது பஷீர்

பிறந்த நாள்

ஜனவரி 19-ஆம் தேதி. இன்று எனது பிறந்தநாள். என்றைக்கும் இல்லாதது மாதிரி இன்று அதிகாலை நேரத்திலேயே படுக்கையை விட்டு எழுந்து காலைக்கடன்களை முடித்தேன். இன்றைக்கு அணிய வேண்டும் என்று எடுத்து வைத்திருந்த வெள்ளை நிற கதர் சட்டையை யும், வெள்ளை நிற கதர் வேஷ்டியையும் வெள்ளைநிற கேன்வாஸ் ஷூ வையும் அணிந்து அறையில் என்னுடைய சாய்வு நாற்காலியில் வெந்து போன இதயத்துடன் நான் மல்லாக்க சாய்ந்திருந்தேன். என்னை இந்த அதிகாலை வேளையில் இப்படிப்பட்ட கோலத்தில் பார்த்த- என் அறைக்குப் பக்கத்தில் தங்கியிருக்கும் பணக்கார வீட்டுப் பையனான பி.ஏ. மாணவன் மேத்யூ உண்மையிலேயே ஆச்சரியப்பட்டுப் போனான். அவன் மகிழ்ச்சி பொங்க என்னிடம் காலை வணக்கம் சொன்னான்.""ஹலோ, குட்மார்னிங்.''

நான் சொன்னேன்: ""யெஸ்... குட்மார்னிங்!''

அவன் கேட்டான்:

""என்ன, என்னைக்கும் இல்லாதது மாதிரி அதிசயமா இன்னைக்கு இந்த அதிகாலை வேளையிலேயே எழுந்து ரெடியா இருக்கீங்க! எங்கேயாவது போறீங்களா என்ன?''

""அதெல்லாம் ஒண்ணுமில்லை...''- நான் சொன்னேன்: ""இன்னைக்கு என்னோட பிறந்த நாள்.''

""யுவர் பெர்த்டே?''

""யெஸ்...''

""ஓ... ஐ விஷ் யூ மெனி ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃப் தி டே!''

""தேங்க் யூ!''

மேத்யூ கையிலிருந்த டூத் பிரஷ்ஷால் பல் துலக்கியவாறு குளியலறைக் குள் நுழைந்தான். ஆங்காங்கே சில கூக்குரல்கள் கேட்டன. உரத்த சத்தங் களும் ஒலித்தன. சினிமா பாடல்களை யாரோ பாடினர். இங்கு தங்கி யிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்களும் க்ளார்க் குகளும்தான். மொத்தத்தில் இங்கிருக்கும் எல்லாருமே ஏதோ ஒருவிதத் தில் மகிழ்ச்சியாகவே இருந்தனர். இவர்களைப் பொறுத்தவரை வாழ்க்கை உல்லாசமயமான ஒன்றே. ஆனால், நானோ ஒரு தேநீர் குடிக்க என்ன வழி என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். மதிய உணவைப் பற்றிக் கவலையே இல்லை. அது ஏற்கெனவே ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது. நேற்று நான் பஜாரில் நடந்து போய்க் கொண்டிருந்தபோது, கொஞ்சமும் எதிர்பாராமல் என்னைப் பார்த்த என் நண்பர் ஹமீத் என்னை மதிய உணவு சாப்பிட தன் வீட்டிற்கு வரச் சொல்லி இருந்தார்.அவர் ஒரு கவிஞர்- அதே நேரத்தில் ஒரு பணக் காரரும்கூட. அதற்காக மதியம் வரை தேநீர்கூட அருந்தாமல் இருப்பது என்பது சாதாரணமான ஒரு விஷயமா என்ன? சூடாக ஒரு தேநீர் குடிக்க வேண்டும். இதற்கு என்ன வழி? மேத்யூவின் வயதான வேலைக் காரன் அவனுக்குத் தேநீர் உண்டாக்கித் தரும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறான் என்பதை என்னுடைய அறையில் உட்கார்ந்தவாறே என்னால் உணர முடிந்தது. இது எப்படிச் சாத்தியமாகிறது என்றால், நான் இருக்கும் அறைதான் மேத்யூவின் சமையலறையின் ஸ்டோர் ரூம் என்பதுதான்.

மாதமொன்றுக்கு எட்டு அணா (50 பைசா) வாடகைக்கு வீட்டு உரிமையாளர் எனக்கு வாடகைக்கு அந்த அறையை விட்டிருந்தார். கட்டிடத்திலேயே மிக மிக மோசமாக- தரம் தாழ்ந்த நிலையில் இருந்த அறை அதுதான். அதில் என்னுடைய சாய்வு நாற்காலி, மேஜை, அல மாரி, படுக்கை- இவற்றையெல்லாம் நீக்கிப் பார்த்தால் மூச்சுவிடக்கூட அங்கு இடம் கிடையாது. பெரிய சுவர்களுக்குள் அமைக்கப்பட்டிருந்த அந்த மூன்று மாடிக் கட்டிடத்தின் மேலேயும் கீழேயும் குடியிருப்பவர்கள் மாணவர்களும், அலுவலகங்களில் பணியாற்றும் க்ளார்க்குகளும்தான். வீட்டு உரிமையாளருக்குக் கொஞ்சம்கூட தேவையே படாத ஆள் நான் மட்டும்தான். என்னை அவருக்குப் பிடிக்காமல் போனதற்குக் காரணம்- சரியாக அவருக்கு நான் வாடகை தராமல் இருந்ததே.

என்னைக் கொஞ்சம்கூடப் பிடிக்காத வேறு இரண்டு ஆட்களும் இருக்கிறார்கள். அவர்கள் ஹோட்டல்காரனும், அரசாங்கமும். ஹோட்டல்காரனுக்கு நான் கொஞ்சம் பணம் பாக்கி தர வேண்டியதிருக்கிறது. அரசாங்கத்தைப் பொறுத்தவரை நான் தரவேண்டியது ஒன்றுமே இல்லை. இருந்தாலும், என்னைக் கண்டால் அதற்குப் பிடிக்காது. இருப்பிடம், உணவு, நாடு- இந்த மூன்றும் என் வாழ்க்கையில் எப்படிப்பட்ட நிலையில் இருக்கின்றன என்பதைக் கூறிவிட்டேன். இனி என்னுடைய ஆடைகளைப் பற்றியும், ஷூவைப் பற்றியும், விளக்கைப் பற்றியும் கூறப்போகிறேன். (எல்லா விஷயங்களையும் எழுதுவதற்கு முன்பு, ஒன்றைத் தெளிவாக விளக்கிவிட வேண்டும். இப்போது பாதி இரவு கழிந்திருக்கிறது. பேப்பரையும் பேனாவையும் எடுத்துக் கொண்டு நான் நகரத்தின் தெருக்களில் அலைந்து கொண்டிருக்கிறேன். எதற்காக அறையை விட்டு வெளியே வந்து இப்படி ஒவ்வொரு தெருவாக அலைந்து கொண்டிருக்கிறேன் தெரியுமா? ஒவ்வொரு நாளும் நான் டைரிக் குறிப்பு எழுதுவதைப் பழக்கமாகக் கொண்டிருக்கிறேன். இன்றைய தேதிக்கு நான் டைரியில் நடந்த சம்பவங்களை எழுதியாக வேண்டும். ஒரு நல்ல சிறுகதைக்கு தேவையான விஷயங்கள் இதில் இருக்கும். ஆனால், என் அறையில் இருக்கும் விளக்கில் எண்ணெய் இல்லை. எழுத வேண்டியதோ நிறைய. விளைவு- அறையை விட்டு வெளியேறி நகரத் தெருக்களில் எரிந்து கொண்டிருக்கும் மின் விளக்குகளின் காலில் சாய்ந்தவாறு அமர்ந்து டைரிக் குறிப்புகளை எழுதினேன்.) மழை பெய்யப்போகிற கார்மேகங்களைப்போல இன்றைய சம்பவங்கள் என் மனதில் நின்று என்னை அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றன. அப்படியொன்றும் பெரிய சம்பவங்கள் இல்லை. ஆனால், இன்று என் பிறந்தநாள் ஆயிற்றே! நான் என் சொந்த ஊரை விட்டு வந்து பல மைல் தூரத்தில் இருக்கும் சம்பந்தமில்லாத ஊரில் இப்போது இருக்கிறேன். கையில் காசு என்று எதுவும் இல்லை. கடன் வாங்கவும் வழியில்லை. அணிந்திருக்கும் ஆடைகள்கூட என்னுடையவை அல்ல. என் நண்பர்களுக்குச் சொந்தமானவை அவை. என்னுடையது என்று கூற- சொல்லப்போனால் ஒன்றுமே இல்லை. இந்த அவல நிலையில் நான் இருக்க- "இதேபோன்ற பிறந்தநாள் தொடர்ந்து உங்களுக்கு வந்து கொண்டே இருக்கட்டும்' என்று மேத்யூ என்னை வாழ்த்தியபோது மனதில் வேதனை உண்டாகாமல் என்ன செய்யும்?

மணி ஏழு: நான் சாய்வு நாற்காலியில் இலேசாகச் சாய்ந்தவாறு சிந்திக்கிறேன். இன்றைய நாளை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் ஓட்டிவிட வேண்டும். யாரிடமும் இன்று கடன் வாங்கக் கூடாது குழப்பமான சம்பவங்கள் எதுவும் இன்று நடக்கக் கூடாது. நல்ல ஒரு நாளாக இன்றைய நாள் முடிய வேண்டும். நேற்று வரை இருந்த இரவு- பகல்களில் நடைபெற்ற கருப்பும் வெளுப்புமான சம்பவங்கள் இன்று ஒருநாள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் நடக்கக் கூடாது. காரணம்- நேற்றைய நான் இல்லை இன்றைய நான். இன்று எனக்கு என்ன வயது? போன வருடம் இருந்ததைவிட ஒரு வயது இப்போது கூடியிருக்கிறது. அப்படியானால்... போன வருடம் என்னுடைய வயது என்ன?.... இருபத்தாறு... இல்லை... முப்பத்து இரண்டு... இல்லை... நாற்பத்து ஏழாக இருக்குமோ?

என் மனதில் தாங்க முடியாத அளவிற்குக் கவலை. எழுந்துபோய் கண்ணாடியை எடுத்து, அதில் என் முகம் எப்படி இருக்கிறதென்று பார்த்தேன். அப்படியொன்றும் மோசமில்லை. பார்ப்பதற்குப் பரவா யில்லை என்பது மாதிரி இருந்தது. நல்ல அகலமான நெற்றி, அசைவே இல்லாத கண்கள், வளைந்த வாள்போல மீசை- மொத்தத்தில் மோசமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இப்படி நினைத்துக் கொண்டிருந்தபோது ஒரு காட்சியைப் பார்த்து என் மனதில் உண்டான வேதனைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. ஒரு நரைமுடி! என் காதுக்கு மேலே கருப்பு முடிகளுக்கு மத்தியில் ஒரு வெள்ளை முடி தெரிந்தது. அதை நான் மிகவும் கஷ்டப்பட்டுப் பிடுங்கி ஏறிந்தேன். தலையைத் தடவிப் பார்த்தேன். தலையின் பின்பக்கம் முழுக்க வழுக்கை. அதை நான் கையால் தடவிக் கொண்டிருந்தபோது, தலைவலி வருவதுபோல் உணர்ந்தேன். சூடாக தேநீர் அருந்தினால்தான் சரியாக வருமோ!

மணி ஒன்பது: என்னைக் கண்டவுடன் "உம்'மென்று முகத்தை வைத்துக் கொண்டு ஹோட்டல்காரன் அறைக்குள் வந்தான். தேநீர் போடும் அழுக்கடைந்து போயிருக்கும் பையன் அவன். நான் கொடுக்க வேண்டிய பணத்தைக் கேட்டான்.

நான் சொன்னேன்: ""ஓ... அதை நாளைக்குத் தர்றேன்.''

அவன் அதை நம்பவில்லை. ""நேத்தும் இதைத்தான் சொன்னீங்க'' என்றான்.

""இன்னைக்குப் பணம் வரும்னு நினைச்சேன். ஆனா வரலியே!''

""பழைய காசைத் தராம, உங்களுக்கு தேநீர் தரக்கூடாதுன்னு சொல்லி இருக்காங்க...''

""அப்படியா?''

மணி பத்து: உதடு வறண்டு போய்விட்டது. வாய் உலர்ந்து போயிருந்தது. வெளியே வெயில் காய்ந்து கொண்டிருந்தது. அதன் உஷ்ணம் அறைக்குள்ளும் தெரிந்தது. உடல் மிகவும் களைத்துப் போனதுபோல் உணர்ந்தேன். அப்போது புதிய காலணி விற்கும் எட்டு, பத்து வயது மதிக்கக் கூடிய இரண்டு வெளுத்த- மெலிந்துபோய் காணப்படும் கிறிஸ்துவப் பையன்கள் என் அறை வாசலில் வந்து நின்றனர். நான் காலணி வாங்கத்தான் வேண்டும். ஒரு ஜோடி காலணி மூன்று அணா வாம். (ஒரு அணா- ஆறு பைசா. ஒரு ரூபாய்- பதினாறு அணா)- பையன்கள் சொன்னார்கள்.

""வேண்டாம்... பிள்ளைகளே!''

""சார்... உங்களைப்போல உள்ளவங்க வாங்கலைன்னா, பிறகு யார் வாங்குறது!''

""பிள்ளைகளே! எனக்கு வேண்டாம். என் கையில காசு இல்ல...''

""ஓ...''

நான் சொன்னதை அந்தப் பையன்களால் நம்பவே முடியவில்லை. பால் வடியும் முகத்தோடு என்னையே பார்த்தார்கள். ஒன்றையும் புரிந்து கொள்ள முடியாத சுத்தமான மனதைக் கொண்ட சிறுவர்கள்! பந்தாவாக ஆடையணிந்து சாய்வு நாற்காலியில் சாய்ந்தவாறு இருக்கும் என்னை நானே ஒரு நிமிடம் மேலிருந்து கீழ்வரை கண்களால் பார்த்தேன். உண்மையிலேயே நான் ஒரு "சார்' மாதிரி தெரிகிறேனா? சாய்வு நாற்காலி, சட்டை, வேஷ்டி, ஷூ எதுவுமே எனக்குச் சொந்தமா னது அல்ல. பிள்ளைகளே! சொல்லப்போனால் எனக்கென்று சொந்தமாக இந்த உலகத்தில் ஒன்று கூடக் கிடையாது. நிர்வாணமான நான்- அது எனக்குச் சொந்தமானதா? இந்தியாவின் ஒவ்வொரு நகரமாக எத்தனையோ வருடங்கள் தெருத் தெருவாக பல ஜாதிகளாக அலைந்து திரிந்து, தங்கி... நான் யாருக்குச் சொந்தம்? என்னுடைய ரத்தமும், சதையும், எலும்பும் இந்தியாவுக்குச் சொந்தமானது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை- கராச்சி முதல் கல்கத்தா வரை- இப்படி இந்தியாவின் எல்லா இடங்களிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். ஆண்களும், பெண்களுமாய் இருக்கின்ற அந்த என் நண்பர்களை இப்போது நான் நினைத்துப் பார்க்கிறேன். நினைவு...! ஒவ்வொருவரையும் மனதார கட்டித் தழுவி என்னுடைய அன்பை வெளிப்படுத்துகிறேன். என் அன்பு இந்தியா முழுக்க பரவட்டும்! இந்தியாவைத் தாண்டி... பூமியைத் தாண்டி... மணம் கொண்ட மலர்களைப்போல அது பரவட்டும்! அன்பு! என்மேல் உண்மையாகவே அன்பு கொண்டவர்கள் யாராவது இருக்கிறார்களா? அதாவது- என்னைப் புரிந்து கொண்டு அன்பு செலுத்தக் கூடியவர்கள்... புரிந்து கொண்டு என்றால் திரையை நீக்கிப் பார்த்தால் என்ற எண்ணத்தில் கூறுகிறேன். குறைகளையும், பலவீனங் களையும் நீக்கிப் பார்த்தால் மீதம் இருப்பது என்ன? நமக்குப் பிடித்த மாதிரி ஏதாவது இருக்க வேண்டும். அன்பு காட்டவும், அன்பு காட்டப் படுவதற்கும்... ஓ... காலம் எவ்வளவு வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது! தந்தையின் சுண்டுவிரலைப் பிடித்துக் கொண்டே கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்த நான்- "அம்மா பசிக்குது' என்று தாயின் புடவை நுனியைப் பிடித்துக் கொண்டு தொங்கிய நான்- இன்று...? ஓ... காலம்தான் எவ்வளவு வேகமாக ஓடிவிட்டிருக்கிறது! மனதில் வைத்திருந்த எத்தனை எத்தனை லட்சியங்கள் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கின்றன! சொல்லப்போனால் என் இதயத்தை ஒரு மிகப்பெரிய போர்க்களம் என்றுகூடக் கூறலாம். இன்று நான் யார்? புரட்சிக்காரன், தேசத்துரோகி, தெய்வத்துரோகி, கம்யூனிஸ்ட்- இன்னும் என்னென்னவோ நான். உண்மையிலேயே இதெல்லாம் நானா? அய்யோ... என்ன வலி! தலைக் குள்ளிருந்து ஒரே குத்தல். தேநீர் அருந்தாமல் இருப்பதால் இப்படித் தலைவலி உண்டாகிறதோ? நேராகத் தலையை வைக்க முடியவில்லை. போய் சாப்பிட வேறு செய்ய வேண்டும். தலைவலியோடு ஒரு மைல் தூரம் நடந்து செல்ல வேண்டியதுதான். வேறு வழி? இருந்தாலும், வயிறு நிறைய இன்று ஒரு நாளாவது சாப்பிடலாமே!

மணி பதினொன்று: ஹமீத் கடையில் இல்லை. வீட்டில் இருப்பாரோ? என்னையும், போகும்போது தன்னுடன் அழைத்துப் போயிருக்க வேண்டும். அதுதான் மரியாதை. ஒருவேளை அவர் மறந்து போயிருக்கலாம். நாமே வீட்டிற்குப் போனால் என்ன? அதுதான் சரி.

மணி பதினொன்றரை: ஹமீதின் பெரிய மாளிகையின் தகரத்தால் ஆன வெளிக்கதவு அடைக்கப்பட்டிருந்தது. நான் அதைத் தட்டினேன்.

""மிஸ்டர் ஹமீத்...''

பதில் இல்லை.

""மிஸ்டர் ஹமீத்...''

கோபம் கலந்த ஒரு பெண்ணின் குரல்:

""இங்க அவர் இல்ல...''

""எங்கே போயிருக்காரு?''

ஒரே அமைதி. மீண்டும் நான் கதவைத் தட்டினேன். மனம் மிகவும் தளர்ந்து போயிருந்தது. பேசாமல் திரும்பி நடக்கலாமா என்று நினைத் தேன். அப்போது யாரோ பக்கத்தில் வரும் காலடிச் சப்தம். தொடர்ந்து வளையல் ஓசை. வாசல் கதவு இலேசாகத் திறந்தது- ஒரு பெண்!

நான் கேட்டேன்: ""ஹமீது எங்கே போயிருக்கார்?''

""ஒரு முக்கியமான விஷயமா வெளியே போயிருக்கார்''- அமைதியான குரலில் அந்தப் பெண் பதில் சொன்னாள்.

""எப்போ அவர் வருவாரு?''

""சாயங்காலத்திற்குப் பிறகு...''

சாயங்காலம் கழிந்தா?

""அவர் வர்றப்போ நான் வந்தேன்னு சொல்லுங்க.''

""நீங்க யாரு?''

நான் யார்?

""நான்... ஓ... நான் யாருமில்ல... ஒண்ணும் சொல்ல வேண்டாம்!''

நான் திரும்ப நடந்தேன். நடந்து வந்த பாதையில் போட்டிருந்த மணல் பயங்கரமாகச் சுட்டது. உஷ்ணம் உடலைக் தகித்துக் கொண்டிருந் தது. கடுமையான வெயிலால் கண்கள் இருட்டிப்போன மாதிரி இருந் தன. உடலில் தாங்க முடியாத களைப்பு. நான்கைந்து பேர் அடித்துப் போட்ட மாதிரி உடம்பில் அப்படியொரு வலி. தாகம்! பசி! வெறி! உலகத்தையே வாய்க்குள் போட்டு விழுங்கினால் என்ன என்ற வெறி. எண்ணியது நடக்கவில்லை என்கிறபோது, உலகத்தின் மீதே ஒருவித வெறுப்பு வந்தது. நமக்குத் தேவையானது கிடைக்கவில்லை என்றால் இந்த உலகம் எதற்கு? இது இருந்தால் என்ன அழிந்தால் என்ன? யாருக்குக் கவலை? தாகத்தாலும் பசியாலும் மயங்கிக் கீழே விழுந்துவிடுவேன்போல இருந்தது. ஆனால், விழவில்லை... விழக்கூடாது... நடக்க வேண்டும்... நடந்தே ஆக வேண்டும்.

மணி பன்னிரண்டரை: எனக்கு நன்கு தெரிந்த மனிதர்கள் பலரும் சாலையில் நடந்து போய்க் கொண்டுதான் இருந்தார்கள். அவர்கள் யாருமே என்னைக் கண்டும் காணாதது மாதிரி நடந்து கொண்டார்கள். "நண்பர்களே, இன்னைக்கு என்னோட பிறந்தநாள். என்னைக் கொஞ்சம் வாழ்த்திட்டுப் போகக்கூடாதா?' என்று என் இதயம் ஏங்கியது. ஆனால், யார் காதிலாவது அது விழுந்தால்தானே! அவர்கள் தங்கள் போக்கில் போய்க் கொண்டே இருந்தார்கள். நண்பர்கள் ஏன் என்னைக் கண்டு கொள்ளவே இல்லை? எனக்கே புரியவில்லை.

எனக்குப் பின்னால் ஒரு சி.ஐ.டி.

மணி ஒன்று: முன்னாள் பத்திரிகை முதலாளியும் இப்போதைய வியாபாரியுமான மிஸ்டர் பி.யைத் தேடிப் போனேன். பசி மயக்கத்தால் கண்ணே சரியாகத் தெரியவில்லை.

பி. என்னைப் பார்த்துக் கேட்டார்: ""புரட்சி எந்த அளவுல இருக்கு?''

நான் சொன்னேன்: ""கிட்டத்தட்ட வந்த மாதிரிதான்!''

""என்ன... ஆளை ரொம்ப நாளா காணோம்?''

""ஆமா...''

""விசேஷம் ஏதாவது உண்டா?''

""ம்... அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை... சும்மா பார்க்கலாம்னு வந்தேன்!''

நான் அவருக்கு அருகில் இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தேன். நான் எழுதிய பல கட்டுரைகள் இவரின் பெயரில் பத்திரிகைகளில் பிரசுரமாகி இருக்கின்றன. இவரின் பழம் பெருமைகளைக் காட்டு வதற்காகப் பழைய பத்திரிகைகளை இவர் "பைண்ட்' செய்து வைத்திருந் தார். நான் அதை எடுத்து தலைவலியுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். "எனக்கு உடனடியாக சூடா ஒரு தேநீர் வேணும். நான் ரொம்ப களைச்சுப் போயிட்டேன்' என்று என் இதயம் அடித்துக் கொண்டிருந்தது. பி. என்னிடம் எதுவுமே பேசவில்லை. என் உடல் வருத்தத்தை இந்த மனிதர் உணரவில்லையா என்ன? பி. பணப்பெட்டிக்கு அருகில் கம்பீர மாக உட்கார்ந்திருந்தார். நான் மவுனமாகத் தெருவைப் பார்த்தேன். சாக்கடையில் கிடந்த ஒரு துண்டு தோசைக்காக இரண்டு பிச்சைக்கார சிறுவர்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்தார்கள். "ஒரு சூடான தேநீர்'- பி.யின் குரல். அவ்வளவுதான்- என் மவுனம் இருந்த இடம் தெரியாமல் கலைந்தது. மிஸ்டர் பி. பெட்டியைத் திறந்தார். ரூபாய் களுக்கும் சில்லறைகளுக்கும் மத்தியில் தேடிப்பிடித்து ஒரு அணாவை எடுத்து ஒரு பையன் கையில் கொடுத்தார்.

""தேநீர் கொண்டு வாடா.''

அடுத்த நிமிடம் பையன் ஓடினான். என் இதயம் குளிர்ந்தது. மிஸ்டர் பி. எவ்வளவு நல்ல மனிதர்?... பையன் கொண்டு வந்த தேநீரைக் கையில் வாங்கிய பி. அதைக் குடிக்க ஆரம்பித்தார். பின்னர் என்ன நினைத் தாரோ, என் பக்கம் திரும்பி என்னைப் பார்த்துக் கேட்டார்:

""உங்களுக்குத் தேநீர் வேணுமா?''

நான் சொன்னேன்: வேண்டாம்...''

ஷூவின் கயிறைச் சரி பண்ணுவது மாதிரி நான் நடித்தேன். என் முகத்தை அவர் எங்கே பார்த்து, அதில் தெரியும் கவலையின் ரேகை களையும், சோகம் கப்பிப் போயிருக்கும் அவலத்தையும் கண்டுபிடித்து விடுவாரோ என்ற எண்ணம் எனக்கு.

பி. வருத்தத்துடன் சொன்னார்: ""உங்களோட புத்தகங்கள் எதையும் எனக்கு நீங்க தரலியே!''

நான் சொன்னேன்: ""தர்றேன்!''

""அந்தப் புத்தகங்களைப் பற்றி பத்திரிகைகள் எழுதுற விமர்சனங் களை நான் படிக்கிறேன்.''

நான் சொன்னேன்: ""நல்லது...''

சொல்லிவிட்டு புன்னகைக்க முயன்றேன். இதயத்தில் ஒளியே இல்லாமல் முகத்தில் மட்டும் அது எப்படி வரும்?

நான் பி.யிடம் சொல்லிவிட்டு, தெருவில் இறங்கி நடந்தேன்.

எனக்குப் பின்னால் மீண்டும் அந்த சி.ஐ.டி.!

மணி இரண்டு: நான் மிகவும் களைத்துப்போய் அறையில் இருந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்து கிடந்தேன். நல்ல ஆடைகள் அணிந்து, வாசனைத் திரவியங்களை உடலில் பூசியிருக்கும் முன்பின் பழக்கமில்லாத ஒரு பெண் என் அறை வாசல் அருகில் வந்து நின்றாள். வெள்ளப் பெருக்கால் அவளின் ஊர் அழிந்துவிட்டது. ஏதாவது உதவி செய்ய வேண்டும்! புன்சிரிப்பு தவழ, அவள் என்னைப் பார்த்தாள். மார்பைக் கதவில் உரசியவாறு என்னையே உற்று நோக்கினாள். அவ்வளவுதான்- எனக்குள் இனம் புரியாத ஒரு உன்மத்த நிலை உண்டானது. அது சிறிது நேரத்தில் நாடி நரம்புகளில் எல்லாம் படர்ந்தது. என் இதயத் துடிப்பின் வேகம் அதிகரித்தது. அதன் துடிப்பை என்னால் உணர முடிந்தது. உண்மையிலேயே பயங்கரமான நிமிடங்கள்தாம் அவை!

""சகோதரி... என்கிட்ட பணம் ஒண்ணும் இல்ல... நீங்க வேற யாரையாவது பார்த்துக் கேளுங்க... என்கிட்ட எதுவுமே இல்லை...''

""ஒண்ணுமே இல்லியா?''

""இல்ல...''

அப்போதும் அவள் போகவில்லை. நின்று கொண்டே இருந்தாள். உரத்த குரலில் நான் சொன்னேன்: ""போங்க. என்கிட்ட காசு எதுவும் இல்ல...''

""ஓ...'' அவள் கவலை தோய்ந்த முகத்துடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். அவள் போன பிறகுகூட அவள் அங்கு விட்டுச் சென்ற நறுமணம் கமழ்ந்து கொண்டே இருந்தது!

மணி மூன்று: யாரிடமாவது கடன் கேட்டுப் பார்த்தால் என்ன? பயங்கரக் களைப்பு. உடலில் தெம்பே இல்லை. யாரிடம் கேட்பது? பல பேர் என் மனதில் வந்தார்கள். ஆனால், கடன் வாங்குவது என்பது நட்பின் மரியாதையைக் குறைக்க கூடிய ஒரு செயல் என்பது என் எண்ணம். பேசாமல் இறந்துவிட்டால் என்ன என்றுகூட நினைத்தேன். மரணம்! எப்படி மரணத்தை வரவழைப்பது?

மணி மூன்றரை: நாக்கு வறண்டு போய்விட்டது. என்னால் ஒன்றுமே முடியவில்லை. குளிர் நீரில் கொஞ்ச நேரம் மூழ்கி எழுந்தால் என்ன? உடம்பில் சிறிது குளிர்ச்சி பரவினது மாதிரி இருக்குமே!... இப்படி நினைத்தவாறு நான் சாய்வு நாற்காலியில் கிடக்க, சில பத்திரிகை அதிபர் கள் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்கள். கதைகள் உடனே அவர்களுக்கு வேண்டுமாம். உடனே எழுதி அனுப்பச் சொல்லியிருக்கிறார்கள். கடிதங்களைப் பக்கத்தில் வைத்துவிட்டு, என்ன செய்வதென்று தெரியாமல் படுத்துக் கிடந்தேன். வங்கியில் க்ளார்க்காக வேலை பார்க்கும் கிருஷ்ண பிள்ளையின் வேலைக்காரச் சிறுவன் ஒரு தீக்குச்சி கேட்டு என்னிடம் வந்தான். அவனை ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி பருகினேன்.

""என்ன சார், உங்களுக்கு உடம்புக்கு ஏதாவது பிரச்சினையா?'' பதினொரு வயது நடக்கும் அந்தப் பையன் கேட்டான்.

நான் சொன்னேன்: ""அதெல்லாம் ஒண்ணுமில்ல!''

""பிறகு... சார்... நீங்க சாப்பிடலியா?''

""இல்ல...''

""என்ன சார்... இவ்வளவு நேரமாச்சு! இன்னுமா சாப்பிடாம இருக்கீங்க?''

சின்ன முகம். கறுத்த விழிகள். கரி அப்பியிருக்கும் வேஷ்டி. அவன் என்னையே பார்த்தான். நான் கண்களை மூடிக் கொண்டேன்.

மெதுவான குரலில் அவன் அழைத்தான்: ""சார்...''

""ம்...''

நான் விழிகளைத் திறந்தேன்.

அவன் சொன்னான்: ""என்கிட்ட ரெண்டணா இருக்கு.''

""அதுனால?''

அவன் தயங்கியவாறு சொன்னான்: ""நான் அடுத்த மாசம் வீட்டுக்குப் போறதா இருக்கேன். சார்... அப்ப நீங்க எனக்கு இந்தக் காசைத் திருப்பித் தந்தாப் போதும்!''

என் இதயம் அழுதது: அல்லாஹுவே!

""கொண்டு வா!''

அதைக் கேட்காத மாதிரி, அவன் ஓடினான்.

அப்போது தோழர் கங்காதரன் வந்தார். வெள்ளை கதர் வேஷ்டி. வெள்ளை கதர்ஜிப்பா. மேலே போட்டிருக்கும் நீலச் சால்வை. கறுத்த முகம். காரியத்தோடு பார்க்கும் பார்வை.

சாய்வு நாற்காலியில் சாய்ந்து படுத்திருந்த என்னைப் பார்த்த அந்தத் தலைவர் சொன்னார்: ""அடடா... நீ வர வர பெரிய பூர்ஷ்வாவே ஆயிட்டே!''

எனக்குத் தலை சுற்றுவது மாதிரி இருந்தது. இருந்தாலும், இதையெல் லாம் மீறி எனக்குச் சிரிப்பு வந்தது. என்னருகில் அமர்ந்திருந்த தலைவர் அணிந்திருந்த ஆடைகள் யாருடையதாக இருக்கும் என்று நான் சிந்திக்கத் தொடங்கினேன். எனக்குப் பழக்கமான ஒவ்வொரு அரசியல் தலைவரையும், தொண்டனையும் மனக்கண்முன் கொண்டு வந்து பார்த்தேன். இவர்கள் கடைசியில் அடையப்போவது என்ன?

கங்காதரன் கேட்டார்: ""நீ என்ன சிந்திச்சுக்கிட்டு இருக்கே?''

நான் சொன்னேன்: ""ஒண்ணுமில்ல... நம்மளோட ஆடைகளைப் பற்றி நினைச்சுப் பார்த்தேன்.''

""தமாஷ் பண்றதை விட்டுட்டு நான் சொல்றதைக் கேளு. பெரிய கலாட்டாவே நடந்துக்கிட்டு இருக்கு. லத்தி சார்ஜ், கண்ணீர்ப் புகை, துப்பாக்கிச் சூடு- எல்லாமே நடக்கப்போகுது. கிட்டத்தட்ட மூவாயிரம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்துல ஈடுபட்டிருக்காங்க. ஒண்ணரை வாரமா அவங்க பட்டினி கிடக்கிறாங்க. பெரிய அளவுல விஷயம் போகப்போகுது. மனிதர்கள் பட்டினி கிடக்கிறப்போ எது வேணும் னாலும் நடக்கும்!''

""நான் இந்த விஷயங்களை எந்தப் பத்திரிகையிலயும் படிக்கலியே!''

""பத்திரிகைகளுக்குச் செய்தி தரக்கூடாதுன்னு உத்தரவு!''

""அது சரி... நான் இதுல என்ன பண்ண முடியும்?''

""அவங்க பொதுக்கூட்டம் போடுறாங்க. நான்தான் தலைமை தாங்குறேன். அங்கே போகணும்னா படகுல போறதுக்கு படகோட்டிக்கு ஒரு அணா கூலி தரணும். பிறகு... நான் இதுவரை ஒண்ணும் சாப்பிடல... நீயும் என் கூட கூட்டத்துக்கு வா!''

""நீங்க சொல்றது சரிதான். ஆனா, என்கிட்ட காசு எதுவும் கிடையாது. நான் சாப்பிட்டே ரொம்ப நாளாச்சு. காலையில் விடிஞ்சதுல இருந்து இதுவரை நான் ஒண்ணுமே சாப்பிடல. போதாதற்கு இன்னைக்கு என்னோட பிறந்தநாள் வேறு.''

""பிறந்தநாள்... நமக்கென்ன பிறந்த நாள் வேண்டிக் கெடக்கு?''

""இந்தப் பிரபஞ்சத்துல இருக்குற எல்லாருக்குமே பிறந்தநாள்னு ஒண்ணு இருக்கே!''

இருவரும் பல விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டே இருந் தோம். கங்காதரன் தொழிலாளிகளைப் பற்றியும், அரசியல் தொண்டர் களைப் பற்றியும், அரசியல் தலைவர்களைப் பற்றியும், அரசாங்கத்தைப் பற்றியும் பேசினார். நான் வாழ்க்கையைப் பற்றியும், பத்திரிகை முதலாளி களைப் பற்றியும், இலக்கியவாதிகளைப் பற்றியும் பேசினேன். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது பையன் வந்தான். ஒரு அணாவை நான் கையில் வாங்கினேன். மீதி இருந்த ஒரு அணாவுக்கு தேநீரும், பீடியும், தோசையும் வாங்கி வரச்சொன்னேன். தேநீர் காலணா, தோசை அரை யணா, பீடி காலணா.

தோசை கட்டப்பட்டு கொண்டு வரப்பட்ட அமெரிக்கப் பேப்பர் துண்டில் ஒரு படம் இருந்தது. அதை எனக்கு மிகவும் பிடித்தது. நானும் கங்காதரனும் தோசையைச் சாப்பிட்டோம். ஆளுக்கொரு டம்ளர் தண்ணீர் குடித்தோம். பிறகு கொஞ்சம் தேநீர் அருந்தினோம். எல்லாம் முடிந்து பீடியை உதட்டில் வைத்து புகைத்தோம். புகையை வெளியே விட்டவாறு கங்காதரன் கையில் ஒரு அணாவைக் கொடுத்தேன். புறப் படும் நேரத்தில் தாமாஷுக்காக கங்காதரன் கேட்டார்: ""இன்னைக்கு உன்னோட பிறந்தநாள். உலக மக்களுக்கு ஏதாவது பிறந்தநாள் செய்தி சொல்லுறியா?''

நான் சொன்னேன்: ""நிச்சயமா... புரட்சி சம்பந்தமா ஒரு செய்தி.''

""எங்கே சொல்லு பார்ப்போம்!''

""புரட்சியோட நெருப்பு ஜுவாலைகள் எல்லா இடங்களுக்கும் பரவட்டும். இன்றைய சமூக அமைப்பு முழுமையாக அழிந்து, சமத்துவம், அழகு, ஆரோக்கியம் கொண்ட புதிய உலகம் இங்கு உருவாகட்டும்!''

""பேஷ்... இன்னைக்கு நடக்குற தொழிலாளிகள் கூட்டத்துல இதை நான் சொல்லிடுறேன்''னு சொன்ன கங்காதரன் வேகமாக நடந்து சென் றார். நான் அரசியல்வாதிகளைப் பற்றி நினைத்துப் பார்த்தேன். எழுத்தா ளர்களைப் பற்றி எண்ணிப் பார்த்தேன். உலகில் உள்ள ஆண்கள்- பெண்கள் எல்லாரைப் பற்றியும் நினைத்துப் பார்த்தேன். இவர்கள் எல்லாம் எப்படி வாழ்கிறார்கள்? படுத்தவாறே தோசை கட்டிக் கொண்டு வரப்பட்ட அமெரிக்க செய்தித்தாள் துண்டை எடுத்தேன். அப்போது படியைக் கடந்து வீட்டு உரிமையாளர் "கடுகடு'வென்ற முகத் துடன் வருவதை நான் பார்த்தேன். படத்தை மீண்டும் பார்த்தேன். ஆகாயத்தை முட்டிக் கொண்டிருக்கும் உயர்ந்த கட்டிடங்கள் நிறைந்த பெரும் நகரம். அதன் நடுவில் தலையை மேல் நோக்கி உயர்த்தியவாறு நின்றிருக்கிறான் ஒரு மனிதன். இரும்பு சங்கிலியால் அவன் கால்கள் பூமியோடு சேர்த்துக் கட்டப்பட்டிருந்தன. இருந்தாலும், அவனின் பார்வை கட்டப்பட்டிருக்கும் சங்கிலிலோ பூமியின்மீதோ இல்லை. தூரத்தில்... பல கோடி மைல்களுக்கப்பால்... முடிவே இல்லாத தூரத்தில் கதிர்களை வீசிக் கொண்டிருக்கும் ஒளிமயமான சக்தியை நோக்கி... அந்த மனிதனின் கால்களுக்குப் பக்கத்தில் ஒரு புத்தகம் திறந்திருக்கிறது. அதன் இரண்டு பக்கங்களில் அந்த மனிதனின் என்றல்ல எல்லா மனிதர் களின் சரித்திரமும் எழுதப்பட்டிருக்கிறது இப்படி...

சங்கிலியால் அவனை மண்ணோடு சேர்த்து கட்டிப் போட்டாலும், அவன் பார்வை வேறு எங்கோதான். காலங்களைக் கடந்து அவன் பார்வை நாளையை நோக்கி!

அந்த "நாளை' எப்போது வரும்?

""என்ன மிஸ்டர்?'' வீட்டு உரிமையாளரின் குரல்: "இன்னைக்காவது கிடைக்குமா?''

நான் சொன்னேன்: ""பணம் இன்னும் கைக்கு வரல. கூடிய சீக்கிரம் தர்றேன்.''

ஆனால், நான் சொன்னதைக் கேட்கிற அளவிற்கு அந்த ஆளிடம் பொறுமை இல்லை.

""நீங்கள்லாம் ஏன் வாழணும்?'' அந்த ஆள் கேட்டார். அவர் கேட்டதில் தப்பே இல்லை. இப்படி எதற்காக வாழ வேண்டும்? நான் இந்தக் கட்டிடத் திற்கு வந்து மூன்று வருடங்கள் முடிந்துவிட்டன. மூன்று அடுக்களைகளை நான்தான் நல்லதாக மாற்றினேன். அதற்கு இப்போது நல்ல வாடகை கிடைத்துக் கொண்டிருக்கிறது. இப்போது நான் இருப்பது ஒரு ஸ்டோர் ரூமாக இருந்தது. என்னை விட்டு வேறு யாராவது இந்த அறைக்கு வந்தால், வாடகை நிச்சயம் அதிகமாகக் கிடைக்கும். வாடகையைக் கூட்டி நானே தந்துவிடுறேன் என்று சொல்லலாம்- இல்லாவிட்டால் அறையைக் காலி செய்துவிட்டு வெளியேறலாம்.

வாடகை அதிகமாகக் கொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அறையைக் காலி செய்யவும் தயாராக இல்லை. பிறகு என்னதான் செய்வது?

மணி நான்கு: எனக்கு இந்த ஊரே வெறுத்துப் போய்விட்டது. எனக்குப் பிடித்தது மாதிரி இந்த நகரத்தில் ஒன்றுமே இல்லை. தினமும் நடக்கிற- பயணம் செய்கிற சாலைகள், தெருக்கள்- தினமும் பார்க் கிற கடைகளும், முகங்களும். பார்த்ததையே மீண்டும் மீண்டும் பார்ப் பது. கேட்டதையே மீண்டும் மீண்டும் கேட்பது. மனம் மிகவும் வெறுத் துப் போய்விட்டது. எதையும் எழுதக்கூடத் தோன்றவில்லை. அப்படியே எழுதினாலும் எதை எழுதுவது?

மணி ஆறு: மயங்கி நிற்கும் மாலை நேரம். சூரியனை கடல் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக் கொண்டிருக்கிறது. இரத்தச் சிவப்பில் சூரியன் சிரிக்கிறான். வானத்தில் ஆங்காங்கே திட்டுத் திட்டாக மேகங்கள். கரையே கண்ணில் தென்படாத அளவிற்கு கடல் மட்டுமே பரந்து கிடக்கிறது. அலைகள் புரண்டு புரண்டு கண்ணாமூச்சி ஆடிக் கொண் டிருக்கின்றன. கடற்கரையில் சிகரெட் புகைத்தவாறு நடந்து செல்லும் இளைஞர்கள். காண்போரைச் சுண்டி இழுக்கக்கூடிய காந்தக் கண்களு டன் பல வண்ணங்களில் புடவை அணிந்து வானத்து தேவதைகளென ஒய்யாரமாக நடந்து செல்லும் இளம் பெண்கள். காதல் நாடகங்களுக்குப் பின்புல இசைபோல இதயத்தைக் குளிர்வித்துக் கொண்டிருக்கும் பூங்காவின் வானொலிப் பாட்டு. பூக்களின் மேல் மோதி இனிய நறு மணத்தை அந்தப் பகுதியெங்கும் பரப்பி ஆனந்தக் கிளர்ச்சியூட்டும் இளம் காற்று... ஆனால், நான் தளர்ந்து கீழே விழப்போகிறேன்.

மணி ஏழு: ஒரு போலீஸ்காரன் நான் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்து இன்றும் என்னை அழைத்துக் கொண்டு போனான். கண்களைக் கூச வைக்கும் பெட்ரோமாக்ஸ் விளக்கொளியில் என்னை உட்கார வைத்தார்கள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதில்களை நான் சொல்லும்போது என் முக பாவங்கள் எப்படி இருக்கின்றன என்று எனக்குப் பக்கத்தில் கையைக் கட்டி இங்குமங்குமாய் நடந்து கொண்டிருந்தார் போலீஸ் டெபுட்டி கமிஷனர். அவரின் பார்வை எப்போதும் என் முகத்தில்தான். அவரின் பார்வையையும், அவரின் நடையையும் பார்க்க வேண்டுமே! நான் ஏதோ பயங்கரக் குற்றத்தைச் செய்த மனிதன் என்பது மாதிரியும், இதுவரை யார் கையிலும் பிடிப டாத ஒரு மனிதனைப் பிடித்து உள்ளே வைத்திருக்கிறோம் என்பது மாதிரியும் இருந்தது. அவரின் பார்வை. ஒருமணி நேரம் என்னிடம் கேள்விமேல் கேள்வி கேட்டார்கள். என் நண்பர்கள் யார் யார்? எங்கிருந்தெல்லாம் எனக்குக் கடிதங்கள் வருகின்றன? அரசாங்கத்தையே ஆட்டுவிக்கும் ஒரு மிகப்பெரிய தீவிரவாதக் கும்பலில் நானும் ஒருவன் என்ற நினைப்பு இவர்களுக்கு. இப்போது புதிதாக நான் என்னவெல்லாம் எழுதுகிறேன்? எல்லா விஷயங்களையும் கொஞ்சம்கூட மறைக்காமல் இவர்களிடம் சொல்ல வேண்டும். அதற்குப் பிறகு...

""உங்களுக்குத் தெரியுமா இந்த இடத்தை விட்டே வேற எங்கேயாவது உங்களை என்னால கடத்திப்போக முடியும்னு...?''

""நல்லாவே தெரியும். நான் ஒரு அப்பாவி சார்... சாதாரண ஒரு போலீஸ்காரன் நினைச்சாலே போதும், என்னைக் கைது பண்ணி லாக்-அப்ல போட்டு அடைச்சிட முடியும்.''

மணி ஏழரை: நான் மீண்டும் என்னுடைய அறைக்கு வந்தேன். நல்ல இருட்டு. உடம்பு நன்றாக வியர்த்தது . பிறந்தநாள்! இன்று நான் தங்கி இருக்கும் இடத்தில் வெளிச்சத்திற்கே வழி இல்லை. மண்ணெண்ணெய்க்கு என்ன பண்ணுவது? பசி அடங்க வேண்டுமென்றால் ஏதாவது தின்றே ஆகவேண்டும். தெய்வமே, யார் தின்னுவதற்குத் தருவார்கள்? யாரிடமும் கடன் வாங்கவும் முடியாது. ஆனால்... மேத்யூவிடம் கேட்டுப் பார்த்தால் என்ன? வேண்டாம்... பக்கத்துக் கட்டிடத்தில் தங்கியிருக்கும் கண்ணாடிக்கார மாணவனிடம் ஒரு ரூபாய் கடன் கேட்டால் என்ன என்று தோன்றியது. அவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு, அது சரியாவ தற்காக ஊசிக்கே ஏகப்பட்ட பணத்தைச் செலவு செய்தான் இதற்கெல்லாம் குணமாகாமல் நான் கொடுத்த நாலணா மருந்தில்தான் அவன் குணமே ஆனான். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் என்னை ஒருமுறை திரைப்படம் பார்க்க அழைத்துச் சென்றான். அவனிடம் போய் ஒரு ரூபாய் கடன் கேட்டால் தராமலா இருப்பான்?

மணி எட்டே முக்கால்: வழியில் மேத்யூவைப் பற்றி விசாரித்தேன். அவன் சினிமா பார்க்கப் போயிருக்கிறான். உரத்த பேச்சு சத்தத்தையும், சிரிப்பொலியையும் கேட்டவாறே நான் பக்கத்து கட்டிடத்தின் மேல் மாடிக்குச் சென்றேன். ஒரே சிகரெட் நெடி. மேஜை மேல் பிரகாசித்துக் கொண்டிருக்கும் விளக்கு. விளக்கொளியில் "பளிச்' எனத் தெரியும் கைக்கடிகாரங்கள், தங்கச்சங்கிலிகள்.

அமைதியாகப் போய் நான் அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தேன். அவர்கள் என்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள். அரசியல், சினிமா, கல்லூரி மாணவிகளின் அங்க வர்ணனை, ஒரே நாளில் இரண்டு முறை புடவை மாற்றி வரும் மாணவிகளின் பெயர்கள்- இப்படிப் பல்வேறு விஷயங்களைப் பற்றியும் அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் பேச்சுக்கிடையே அவ்வப்போது நானும் புகுந்து ஏதாவது சொல்வேன். இடையில் ஒரு சிறு பேப்பர் அவசரமாகத் தேவைப்படுகிறது. இரண்டு மூன்று நாட்களில் திருப்பித் தந்துவிடுகிறேன்' என்று.

அப்போது கண்ணாடிக்காரன் சிரித்தான்:

""என்ன ஏதாவது சிறுகதை எழுத குறிப்பு எடுத்து வைக்கிறீங்களா?''

""இல்ல...''

அதைத் தொடர்ந்து அவர்களின் பேச்சு சிறுகதைகளைப் பற்றித் திரும்பியது.

அரும்பு மீசை வைத்திருந்த இளைஞன் மிகவும் குறைப்பட்டான்:

""நம்ம மொழியில நல்ல சிறுகதைகளே கிடையாது!''

மொழியிலும் நாட்டிலும் நல்லது ஏதாவது இருக்கிறதா என்ன?

நல்ல ஆண்களும் நல்ல பெண்களும் கடலைத் தாண்டித்தானே இருக்கிறார்கள்!

நான் கேட்டேன்:

""நீங்க யாரோட சிறுகதைகளை எல்லாம் படிச்சிருக்கீங்க?''

""அப்படியொண்ணும் அதிகமா வாசிச்சது இல்ல... இன்னொரு விஷயம்- தாய்மொழியில ஏதாவது வாசிச்சா அது ஒரு அந்தஸ்துக் குறைவான விஷயம்னு பலரும் நினைக்கிறாங்க!''

நான் நம்முடைய சில சிறுகதை எழுத்தாளர்களின் பெயர்களைச் சொன்னேன். அவர்களில் பெரும்பாலானவர்களின் பெயர்களைக் கூட இவர்கள் கேட்டதில்லை.

நான் சொன்னேன்:

""ஆங்கிலத்தில் மட்டுமல்ல. உலகத்தில் உள்ள எல்லா மொழிகளின் சிறுகதைகளோடும் போட்டி போடுற அளவுக்குத் தகுதியான நல்ல சிறுகதைகள் நம்ம மொழியில இருக்கு. நீங்க ஏன் இவற்றையெல்லாம் படிக்கிறது இல்ல?''

""ஓ... கொஞ்சம் படிச்சிருக்கேன். இன்னொரு விஷயம் நம்ம மொழியில இருக்கிற கதைகள்ல பெரும்பாலானவை வறுமையைப் பற்றி எழுதப்பட்டவை. இதைத் தவிர வேற எதையும் எழுதவே தெரியாதா?''

நான் அதற்குப் பதில் ஒன்றும் கூறவில்லை.

""உங்களோட கதைகளைப் படிச்சால்...'' தங்கக் கண்ணாடிக்காரன் சொன்னான்: "" உலகத்தில் என்னவோ பெரிய குழப்பம் இருக்குறது மாதிரி தெரியும்.''

உலகத்தில் என்ன குழப்பம்? பெற்றோர்கள் கஷ்டப்பட்டு ஒவ்வொரு மாதமும் பணம் அனுப்பி வைக்கிறார்கள். அதை நன்றாகச் செலவு செய்து இவர்கள் படிக்கிறார்கள். சிகரெட், தேநீர், காபி, ஐஸ்கிரீம், திரைப்படம், குட்டிக்குரா பவுடர், வாஸ்லெய்ன், ஸ்ப்ரே, விலை உயர்ந்த ஆடைகள், விலை உயர்ந்த உணவு, மது, போதை மருந்து, ஸிபிலிஸ், குனோரியா... இவர்களின் விஷயம் இப்படிப் போகிறது. எதிர்கால ராஜாக்கள்! நாட்டை ஆளப்போகிறார்கள்... சட்டத்தைச் செயல்படுத்தப் போகிறவர்கள். அறிவுஜீவிகள், பண்பாட்டுக் காவலர்கள், மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், தத்துவவாதிகள்... உலகத்தில் என்ன குழப்பம்?

எனக்கு ஒரு பெரிய சொற்பொழிவு ஆற்ற வேண்டும்போல் இருந்தது.

""இன்றைய உலகம்...'' நான் ஆரம்பித்தேன். அப்போது கீழே இருந்து சிறு பையன்களின் சப்தம்:

""காலணி வாங்கலியா, காலணி?''

""கொண்டு வா'' கண்ணாடிக்காரன் கட்டளையிட்டான். அவ்வளவு தான். விஷயம் மாறியது. மேலே ஏறி வந்தது நான் காலையில் பார்த்த சிறுவர்கள். அவர்கள் மிகவும் களைத்துப் போயிருந்தனர். அவர்கள் கண்கள் உள்ளே போயிருந்தன. முகம் வாடிப் போயிருந்தது. உதடுகள் வறண்டு போயிருந்தன. பையன்களில் மூத்தவன் சொன்னான்:

""சாருக்கு வேணும்னா ஒரு ஜோடி ரெண்டரை அணா.''

காலையில் அதன் விலை மூன்று அணாவாக இருந்தது.

""ரெண்டரை அணாவா?'' கண்ணாடிக்காரன் காலணியையே இப்படியும் அப்படியுமாய்த் திருப்பிப் பார்த்தான்.

""பிள்ளைகளே... உங்க வீடு எங்கே இருக்கிறது?'' நான் கேட்ட கேள்விக்கு மூத்த பையன் பதில் சொன்னான்- இங்கிருந்து மூன்று மைல் தூரத்தில் உள்ள ஒரு இடத்தில் இருக்கிறது இவர்களின் வீடு.

""ரெண்டு அணாவுக்குத் தர முடியுமா?'' கண்ணாடிக்காரன் கேட்டான்.

""சார்... ரெண்டே கால் அணா.''

""அப்படின்னா வேண்டாம்...''

""ஓ...''

கவலையுடன் பையன்கள் கீழே இறங்கினார்கள். தங்கக் கண்ணாடிக்காரன் அவர்களை மீண்டும் அழைத்தான்:

""கொண்டு வாடா.''

அவர்கள் மீண்டும் மேலே வந்தார்கள். நல்ல காலணியாக ஒரு ஜோடி யைத் தேர்ந்தெடுத்து பத்து ரூபாய் நோட்டு ஒன்றை மூத்த பையன் கையில் அவன் தந்தான். அந்தச் சிறுவர்கள் கையில் காசே இல்லை. அவர்கள் காலையில் இருந்து ஒரு ஜோடி காலணி கூட விற்கவில்லை. பொழுது புலர்ந்தது முதல் வெறுமனே தெருத் தெருவாக அலைந்து திரிந்ததுதான் மிச்சம். மூன்று மைல் தூரத்தில் உள்ள ஏதோ ஒரு குடிசையில் அடுப்பில் உலை வைத்துவிட்டு, தங்களின் மகன்களின் வரவிற்காகத் காத்திருக்கும் தாய் தந்தையின் உருவங்கள் என் ஞாபகத்தில் வந்தன.

தங்கக் கண்ணாடிக்காரன் எங்கிருந்தோ இரண்டணாவைத் தேடிப்பிடித்துத் தந்தான்.

""காலணா சார்?''

""இருக்குறதே இவ்வளவுதான். இல்லைன்னா இந்தா, காலணியை எடுத்துக்கோ.''

சிறுவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அடுத்த நிமிடம் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்த னர். எலக்ட்ரிக் விளக்குக்குக் கீழே சாலையில் நடந்து போகும் அந்த பாலகர்களைப் பார்த்தவாறு தங்கக் கண்ணாடிக்காரன் சிரித்தான்.

""நான் ஒரு வேலை பண்ணினேன். என்ன தெரியுமா? நான் கொடுத்ததுல ஒண்ணு செல்லாத காசு.''

""ஹா... ஹா... ஹா...'' -எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். நான் மனதிற்குள் நினைத்தேன் என்ன இருந்தாலும் மாணவர்களாயிற்றே! நாம் என்ன சொல்வது? வறுமையையும், கஷ்டங்களையும் பற்றி இவர் களுக்கு என்ன தெரியும்? நான் எழுதி வைத்திருந்த சிறு குறிப்பை வேறு யாரும் பார்த்திராதபடி ரகசியமாக தங்கக் கண்ணாடிக்காரனிடம் கொடுத்தேன். அவன் அதைப் படிக்கும்போது என் சிந்தனை ஹோட்ட லைச் சுற்றி இருந்தது. ஆவி பறக்கும் சாதத்துக்கு முன்னால் நான் உட்கார்ந்திருப்பது மாதிரி நினைத்துப் பார்த்தேன். ஆனால், அந்தக் குறிப்பைப் படித்த கண்ணாடிக்காரன் எல்லாரும் கேட்கிற மாதிரி உரத்த குரலில் சொன்னான்:

""ஸாரி... என்கிட்ட காசு எதுவும் இல்லை...''

அதைக் கேட்டதும் என் உடம்பு நெருப்பு பட்டது மாதிரி தகித்தது. "குப்'பென வியர்க்க ஆரம்பித்தது. வியர்வையைத் துடைத்தவாறு, நான் கீழே இறங்கி என்னுடைய அறைக்கு வந்தேன்.

மணி ஒன்பது: நான் பாயைத் தரையில் விரித்துப் படுத்தேன். ஆனால், கண்கள் மூட மறுத்தன. தலையில் ஒரே வேதனை. இருந்தாலும் நான் வற்புறுத்தி படுத்துக் கிடந்தேன். உலகத்தில் இருக்கும் ஏழைகளைப் பற்றி நான் நினைத்துப் பார்த்திருக்கிறேனா? எங்கெங்கெல்லாமோ எத் தனையோ கோடி ஆண்களும் பெண்களும் இந்த அழகான பூமியில் நித்தமும் பட்டினி கிடந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் நானும் ஒருவன். எனக்கு மட்டும் என்ன தனியான ஒரு விசேஷம் இருக்கிறதா என்ன? நான் மற்றவர்களைப்போல் ஒரு தரித்திரத்தில் உழன்று கொண்டிருக்கும் மனிதன். அவ்வளவுதான். இப்படி நான் பல விஷயங் களையும் அசை போட்டுக் கொண்டு படுத்திருந்தபோது... என் வாயில் எச்சில் ஊறியது. மேத்யூவின் சமையலறையில் கடுகு தாளிக்கின்ற ஓசை கேட்டது. அதோடு வெந்த சாதத்தின் மணமும்...

மணி ஒன்பதரை: நான் வெளியே வந்தேன். இதயம் வெடித்து விடும்போல் இருந்தது. யாராவது பார்த்து விடுவார்களோ? வியர்வை யால் என் உடல் தெப்பமென நனைந்துவிட்டிருந்தது. நான் முற்றத்தில் சில வினாடிகள் நின்றேன். பாக்யம் என்றுதான் சொல்ல வேண்டும்! கிழவன் விளக்கை எடுத்துக் கொண்டு குடம் சகிதமாக வெளியே புறப் பட்டான். போவதற்கு முன் சமையலறையின் கதவை மெல்லச் சாத்தி விட்டு, தண்ணீர்க் குழாயைத் தேடிப்போனான் அந்த ஆள். எப்படியும் அந்த ஆள் திரும்பி வர பத்து நிமிடங்களாவது ஆகும். ஓசை எழுப்பாமல் இதயம் "பட் பட்'டென்று அடிக்க, மெதுவாகக் கதவைத் திறந்து சமையலறைக்குள் நான் நுழைந்தேன்.

மணி பத்து: திருப்தியாகச் சாப்பிட்டுவிட்டு வியர்வையில் குளித்த உடம்புடன் நான் சமையலறையைவிட்டு வெளியே வந்தேன். கிழவன் திரும்பி வந்தபோது நான் குழாயின் அருகில் சென்று தண்ணீர் குடித்து முடித்து, கை, கால், முகம் ஆகியவற்றைக் கழுவி, திரும்பவும் என் அறைக்கு வந்து ஒரு பீடியை உதட்டில் வைத்து புகைத்தேன். மிகமிக ஆனந்தமான அனுபவம். இருந்தாலும் ஒருவித களைப்பை உடலில் உணர முடிந்தது. அப்படியே போய்ப் படுத்தேன். தூக்கம் வரவில்லை. பலவித சிந்தனைகளும் மனதில் உண்டாயின. கிழவன் நான் சாப்பிட்ட தைக் கண்டுபிடித்திருப்பானா? அவனுக்குத் தெரிந்தால், அடுத்து இந்த விஷயம் மேத்யூவின் காதுகளுக்குப் போகும். பிறகு... இதே விஷயம் மாணவர்களுக்கும், க்ளார்க்குகளுக்கும் தெரியவரும். எல்லாரும் கேவல மாக நினைப்பார்கள். என்ன ஆனாலும் சரி... நடப்பது நடக்கட்டும். பிறந்தநாள்! மகிழ்ச்சியாக உறங்கலாம். எல்லாருடைய எல்லா பிறந்த நாட்களும்... மனிதன்... அப்பாவி மனிதன்... வறுமையின் பிடியில் சிக்கிக்கிடக்கும் ஏழை மனிதன் சிறிது நேரத்தில் நான் என்னை மறந்து அப்படியே மயங்கிப் போனேன். அப்போது என்னுடைய அறையை நோக்கி யாரோ நடந்துவரும் சத்தம்!

""ஹலோ மிஸ்டர்...'' மேத்யூவின் குரல்! அவ்வளவுதான். எனக்கு உடம்பு "குப்'பென வியர்த்து விட்டது. உறக்கம் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிட்டது. சாப்பிட்ட உணவு ஜீரணமாகி விட்டதுபோல் இருந்தது. எனக்குப் புரிந்துவிட்டது யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக சமையலறைக்குள் நான் போய் சாப்பிட்ட விஷயம் எப்படியோ மேத்யூ விற்குத் தெரிந்து விட்டது. கிழவன் கண்டுபிடித்திருப்பான். நான் கதவைத் திறந்தேன். இருட்டின் இதயத்தில் இருந்து என்பது மாதிரி ஒரு டார்ச் விளக்கு! அதன் பிரகாசமான வெளிச்சத்தில் நான்! மேத்யூ என்னிடம் என்ன கேட்கப் போகிறான்? இதயம் பயத்தால் நூறு துண்டு களாகச் சிதறிவிடும்போல் இருந்தது.

மேத்யூ சொன்னான்:

""படம் பார்க்கப் போயிருந்தேன். விக்டர் ஹ்யூகோவின் "பாவங்கள்'. நீங்க கட்டாயம் பார்க்க வேண்டிய அருமையான படம்!''

""அப்படியா?''

""சரி... நீங்க சாப்பிட்டுட்டீங்களா? எனக்குப் பசியே இல்ல. சாதம் வீணாயிடும். வந்து சாப்பிடுங்க வர்ற வழியில "மாடர்ன் ஹோட்டல்'ல நாங்க சாப்பிட்டுட்டோம்.''

""தேங்க்ஸ்... நான் ஏற்கெனவே சாப்பிட்டாச்சு.''

""ஓஹோ... அப்படின்னா... படுத்துத் தூங்குங்கோ... குட்நைட்...''

""குட் நைட்...!''

by Swathi   on 27 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
யானையும் மூப்பனும் யானையும் மூப்பனும்
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.