|
||||||||
மேற்கத்திய தமிழறிஞர் பேராசிரியர் ஹெரால்ட் எஃப் ஷிஃப்மன் |
||||||||
![]()
ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ரஷ்ய மொழி, தமிழ் ஆகிய மொழிகளில் புலமைத்துவம் பெற்ற மொழியியல் அறிஞர். தமிழ் உள்ளிட்ட மொழிகள் குறித்த ஆய்வு நூல்களையும் மிக முக்கியமான ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ள பேராசிரியர் ஷிஃப்மன் தமிழியல் துறையில் பல ஆண்டுகள் செயலாற்றியவர். பேச்சுத் தமிழுக்கு ஆங்கிலத்தில் இவர் எழுதியுள்ள இலக்கண நூல், (A Reference Grammar of Spoken Tamil)தமிழுக்கு மிக முக்கிய பங்களிப்பாகும். அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், வாஷிங்டன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழங்களில் பணிபுரிந்துள்ள பேராசிரியர் ஷிஃப்மன், 1995 முதல் பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். அங்கு பல பணிகளை ஆற்றிய அவர், அங்கு திராவிட மொழிகள், கலாசாரப் பிரிவின் வாழ்நாள் பேராசிரியராக இருந்துள்ளார். இவர் 1994இன் தொடக்கத்திலும் பின்னர் 2003-2004 காலகட்டத்திலும் சிங்கப்பூருக்கு மேற்கொண்ட வருகைகளின்போது தேசியக் கல்விக்கழகக் கல்வியாளர்களையும் கல்வி அமைச்சின் அதிகாரிகளையும் சந்தித்திருப்பதுடன் தரமான பேச்சுத்தமிழ் குறித்த ஆய்வுத் திட்டங்களுக்கும் கல்வி அமைச்சின் தமிழ் மொழி குறித்த பாடத்திட்ட ஆய்வுக்கும் மதியுரைஞராக விளங்கியுள்ளார். சிங்கப்பூரில் அவர் பெற்ற அனுபவங்கள் செறிவுமிக்கதோர் ஆய்வுக்கட்டுரையை எழுத வழி செய்தன. தரமான பேச்சுத்தமிழ் என்ற தமது தனித்துவமான ஆய்வின்வழியே, பேச்சுத் தமிழின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் மெய்ப்பித்துள்ளார். தமிழகம், சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் பிற நாடுகளிலும் மேற்கொண்ட நீண்ட நெடியதோர் ஆய்வின் காரணமாக அவர் தந்த இந்த ஆய்வுக்கொடை பல வகைகளில் சிங்கப்பூருக்குப் பயனளித்துள்ளது என்பதுடன் தொடர்ந்து பயனளித்து வருகிறது. அவரது அறிவுறுத்தலின் பேரிலேயே பேச்சுத் தமிழ் சிங்கப்பூர் பள்ளிகளில் அறிமுகமானது என்பதைக் குறிப்பிட்டார் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் இயக்குநர் திரு அருண் மகிழ்நன். வேறொரு மொழியை முதன் மொழியாகக் கொண்டிருக்கும் சூழலில், தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழை அறிமுகப்படுத்த பேச்சுத் தமிழிலில் கல்வியைத் தொடங்கலாம் என்று மொழி கற்றலை விருப்பமான ஒன்றாக்குவதில் இவரது ஆய்வும் பரிந்துரையும் பெரும் தாக்கமாக அமைந்தது என்றார் அவர். “பேராசிரியர் ஷிஃப்மனை பென்சில்வேனியாவில் சந்தித்துச் சிங்கப்பூருக்கு வருமாறு கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, 1990களில் அவர் சிங்கப்பூருக்கு வந்தார். அப்போது தேசியக் கல்விக்கழகத்திலும் கல்வி அமைச்சிலும் பள்ளிகளிலும் அவர் மேற்கொண்ட ஆய்வுகள் வழி, தரமான பேச்சுத்தமிழ் சிங்கப்பூரில் புழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்,” என முனைவர் சுப திண்ணப்பன் குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூரின் பேச்சுத் தமிழ், கற்றவர்கள் பேசும் வகை என்பதுடன் தமிழை அன்றாடம் புழக்கத்துக்குப் பயன்படுத்தி மகிழவும் தமிழ் பயிலும் மாணவர்கள் தமிழை நீண்டகாலத்துக்குத் தொடர்ந்து புழங்கவும் வழிசெய்யும் என்றும் பேராசிரியர் ஷிஃப்மன் குறிப்பிட்டுள்ளார். பேராசிரியர் ஹெரால்ட் எஃப் ஷிஃப்மன் மனைவி திருமதி மெரிலின் ஷிஃப்மன், மகன் திரு திமோதி ஷிஃப்மன் ஆகியோருடன் வாழ்ந்தார். இவர் டிசம்பர் 21, 2022 அன்று 84 வயதில் அமெரிக்காவில் காலமானார். |
||||||||
![]() |
||||||||
by Swathi on 25 Dec 2022 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|