LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- ரெ.கார்த்திகேசு

நல்லவராவதும் தீயவராவதும்

 

ஏலக்காய் போட்டதனால் இறைச்சிக் குழம்பிலிருந்து கும்மென்று மணம் வந்தது. அடுப்பினடியில் உட்கார்ந்திருந்த பார்வதிக்கு வியர்த்துக் கொட்டியது. இருந்தாலும் இன்று இப்படி உட்கார்ந்து பிள்ளைகளுக்குச் சமைப்பதில் மகிழ்ச்சி இருந்தது. இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து அதிகாலை ஷி·ப்டும் ஓவர் டைமுமாக சனி ஞாயிறு உட்பட உழைத்ததில் வீட்டில் சமைக்க முடியவில்லை. பிள்ளைகள் ரொட்டியும் கடையில் வாங்கிய குழம்புமாக கிடைத்ததைத் தின்றுவிட்டுப் பள்ளிக்கூடம் போவதைத் தொழிற்சாலையில் இருந்த நேரத்திலெல்லாம் நினைத்துக் கவலைப் படுவாள் பார்வதி.
இன்றையிலிருந்து ஒரு வாரத்துக்கு மத்தியான ஷி·ப்ட். காலையில் மார்க்கெட் போய் பிள்ளைகளுக்குச் சமைத்து வைத்து விட்டுத் தானும் சாப்பிட்டுப் போகலாம். ஐந்தாம் வகுப்பில் படிக்கும் சின்னவள் லட்சுமிக்குக் காலைப் பள்ளிக் கூடம். பஸ் ஸ்கோலாவில் போய் வந்து தானாகப் போட்டுச் சாப்பிடுவாள். பெரியவன் முத்தையா இரண்டாம் பாரம் படிக்கிறான். மத்தியானப் பள்ளிக் கூடம். சைக்கிளில் போவான். அவனை உட்கார வைத்து சாப்பாடு போட்டு அனுப்பலாம்.
கறி அடுப்பில் பாதி கொதித்துக் கொண்டிருக்க வியர்வையை வழித்தவாறு அவள் திரும்பிய போது முத்தையா பள்ளிச்சீருடையெல்லாம் போட்டுக் கொண்டு தயாராக நின்றான். அவளுக்கு வியப்பாக இருந்தது. இப்போதுதானே மணி பதினொன்று! அதற்குள் ஏன் இவன்…?
“என்ன முத்தையா, அதுக்குள்ள கிளம்பிட்டே?” என்றாள்.
“இன்னைக்கு டெஸ்ட் இருக்கும்மா. அதினால நானும் ·பிரன்டும் அவன் வீட்டில வெள்ளன உக்காந்து கொஞ்ச நேரம் படிக்கப் போறோம்” என்றான்.
அவளுக்கு சந்தோஷமாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது. முன்பெல்லாம் நன்றாகப் படிக்கிற பிள்ளைதான். ஆனால் போன வருஷத்திலிருந்து அவனுக்கு மார்க்கெல்லாம் குறைந்து விட்டது. தான் வீட்டிலிருந்து அவனைப் படிக்கச் சொல்லி ஒழுங்காகக் கவனிக்க முடியாததுதான் காரணம் என்ற குற்ற உணர்ச்சி அவளுக்கு அதிகமாக இருந்தது. ஆகவே பிள்ளை தானாகவே டெஸ்டுக்குப் படிக்கப் போகிறேன் என்று கிளம்பியது அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. ஆனால் இன்றைக்கென்று சாப்பிடாமல்…
“கொஞ்சம் இருந்து ஒரேயடியா சாப்பிட்டுட்டு போயேம்பா. இன்னைக்குன்னு அம்மா ஒனக்காகத்தான நல்ல கறி ஆக்கிக்கிட்டு இருக்கேன்…!”
“நேரம் இல்லம்மா. சாப்பிட்டுப் போக நேரம் ஆயிடும். ராத்திரி வந்து சாப்பிட்டுக்கிறேன்” அவன் சைக்கிளில் ஏறிப் போவதை அவள் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
இந்த பிள்ளைதான் படித்துக் குடும்பத்தைக் கரையேற்ற வேண்டும். நல்லவன்தான். குடும்பத்தின் மீது பாசம் உள்ளவன்தான். ஆனால் பள்ளிக்கூடத்தில் எப்படியோ அவனுக்கு வாய்த்த நண்பர்கள் சரியில்லை.
போன வருஷம் அவன் தமிழ்ப் பள்ளியில் படிப்பை முடித்துக் கொண்டு முதல் பாரத்தில் படிக்க தேசியப் பள்ளியில் சேர்ந்தபோது கேசவன் என்ற ஒரு பையனோடு விடாமல் சுற்றிக் கொண்டிருந்தான். அவன் படிப்பில் அக்கறை குறைந்தது. மார்க்குகள் குறைந்தன. பள்ளிக்கூடத்திற்கு அவன் முறையாக வருவதில்லை என்று அங்கிருந்து கடிதம் வந்தது.
கேசவன் நல்ல பிள்ளையில்லை என்று பார்வதி கேள்விப்பட்டிருந்தாள். அவன் குடும்பம் சிதைந்த குடும்பம். தலைவன் இல்லாத குடும்பம். ஏறக்குறைய பார்வதியின் குடும்பத்தைப் போலத்தான். ஆனல் பார்வதிக்குக் குடும்பத்தின் மேல் உள்ள அக்கறை கேசவனின் தாய்க்கு இருக்கவில்லை. அவள் மிகச் சுதந்திரமாகக் கெட்டுத் திரிந்து அவன் தலையிலும் தண்ணீர் தெளித்துச் சுதந்திரமாகக் கெட்டுத் திரியவிட்ட மாதிரிதான் இருந்தது.
“ஏம்பா, அந்தக் கேசவனோட உனக்கென்ன அவ்வளவு நெருக்கம்? அவன் நல்லவன் இல்லன்னு எல்லாரும் சொல்றாங்களே!” என்று பார்வதி ஒருநாள் விசாரித்துப் பார்த்தாள்.
“சும்மாதாம்மா! அவன்தான் அடிக்கடி கூப்பிட்றான். நான் அவ்வளவு வச்சிக்கிறதில்ல!” என்றான் முத்தையா.
“ஜாக்கிரதப்பா! அப்பனில்லாத பிள்ளைகளா நாந்தான் உங்கள வளக்க வேண்டியிருக்கு. நீதான் படிச்சி முன்னுக்கு வந்து குடும்பத்த காப்பாத்தணும். என் நம்பிக்கைய வீணாக்கிடாத!”
“சரிம்மா, எனக்குத் தெரியும்மா. நீங்க கவலப்படாதீங்க” என்றான் முத்தையா.
ஆனால் அப்புறமும் ஒரு நாள் அந்தக் கேசவனோடுதான் இவன் சுற்றுகிறான் என்று செய்தி வந்தது. பள்ளிக்கூட நேரத்தில் இருவரையும் கடைத்தெருவில் பார்த்ததாகச் சொன்னார்கள். பார்வதிக்கு வெறி வந்து விட்டது.
வீட்டுக்குத் திரும்பியவுடன் கேட்டுப் பார்த்தாள். இல்லை இல்லையென்று வழுக்கி வழுக்கி பதில் சொன்னான். பள்ளிக்கூட நேரத்தில் கடைத்தெருவில் இருந்ததற்கு ஏதோ பொய்யான காரணங்களைக் கற்பித்துச் சொன்னான். அவன் பொய்களை அவளால் ஊடுருவிப் பார்க்க முடிந்தது.
விறகுக் கட்டையை எடுத்தாள். அவன் முதுகிலும் கால்களிலும் தோள்பட்டையிலும் அடித்தாள். அவன் “வேணாம்மா, வேணாம்மா, இனிமே அவங்கூட சேர மாட்டேம்மா, விட்டும்மா!” என்று கெஞ்சக் கெஞ்ச அடித்தாள். அவன் கால்களிலிருந்து ரத்தம் கசியத் தொடங்கியபோதுதான் அவள் கோபம் அடங்கியது.
அப்புறம் அவனைக் கட்டிப் பிடித்து அழுது காயங்களுக்கு மருந்து தடவி ஒரு மணி நேரம் அவனோடு பேசினாள். ஒருவேளை தன் பழைய கதையைச் சொன்னால் வயது வந்த பிள்ளைக்கு வாழ்க்கையின் வக்கிரங்கள் விளங்கலாம் என்று அதைச் சொன்னாள். தான் படிக்க வேண்டிய வயதில் அவனுடைய அப்பனின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி படிப்பையும் குடும்பத்தையும் உதறிவிட்டு அவனோடு வீட்டை விட்டு ஓடிவந்த கதையைச் சொன்னாள். பின்னால் அவன் அவளுக்கு வாழ்க்கையில் ஒரு பொருளாதாரச் சுகத்தையும் தராமல் இந்த இரண்டு பிள்ளைகளை மட்டும் பெற்றுத் தந்து விட்டு, இன்னொரு இளம்பெண்ணை இழுத்துக் கொண்டு எங்கோ ஓடிவிட்ட கதையைச் சொன்னாள்.
“முத்தையா! அந்த ஓடுகாலித் தகப்பன் மாதிரி நீ ஆயிடக் கூடாதுன்னுதாம்பா நான் கவலப் பட்றேன். ஆத்திரப் பட்றேன். நீ படி. முன்னுக்கு வா. அதுக்குத்தான நான் ராத்திரியும் பகலுமா ஒழைக்கிறேன். நீ பெரிய மனுஷனா வா. அப்புறம் என்னைக்காவது உங்கப்பன் ஒன்னத் தேடி வந்தா அவனுக்கு நல்லா புத்தி சொல்லிக்குடு. அத நான் பாக்கணும்பா” என்று அழுதழுது சொன்னாள்.
அவனும் அழுதான். “சரிம்மா! நீ அழுவாதம்மா!” என்று அவள் கண்களைத் துடைத்தான். “நான் நல்லவனா இருக்கிறேம்மா. இனிமே அந்த கேசவனோட சேரமாட்டேம்மா! இது சத்தியம்மா!”
அவனை மார்போடு அணைத்துக் கொண்டாள்.
இந்த வருஷம் பிள்ளை அக்கறையாகப் படிப்பதைப் போலத்தான் தோன்றுகிறது. அமைதியாக இருக்கிறான். மற்ற நண்பர்களோடு சேர்ந்து படிக்கிறான். பாடங்களில் சுமாரான மார்க்குகள் வாங்குகிறான்.
அவன் சைக்கிள் மறையும் வரை அவனைப் பாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் பார்வதி.
*** *** ***
முத்தையா சைக்கிளைக் கீழே நிறுத்திவிட்டு அந்த நான்கு மாடி மலிவு விலை அடுக்கு மாடிக் கட்டிடத்தின் இருண்ட படிக்கட்டுகளில் ஆவலோடு ஏறி வந்தான். குப்பை கூளம் மிக்க வராந்தா வழியாக நடந்து அந்த வீட்டின் கதவைத் தட்டிய போது அது தானே திறந்து கொண்டது. வீடு “ஓ”வென்று கிடந்தது. கேசவன் வீட்டில் இல்லை. வழக்கம் போல் வீட்டில் வேறு யாரும் இல்லை.
கேசவனின் அப்பாவைப்பற்றி முத்தையாவுக்கு ஒன்றும் தெரியாது. கேசவனும் பேசுவதில்லை. அவன் அண்ணன் கோலாலும்பூரில் ஏதோ ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறான். எப்போதாவது இந்த பினாங்குக்கு அம்மாவையும் தம்பியையும் பார்க்க வீட்டுக்கு வருவதோடு சரி. அப்படி வீட்டுக்கு வரும் போதெல்லாம் கேசவனுக்கு நிறையப் பணம் கொடுத்துப் போவான். அந்த நாட்களில் எல்லாம் கேசவனின் அனுசரணையில் முத்தையாவுக்கும் ரொம்ப விருந்துதான். படம், வீடியோ கேம், சாப்பாடு என்று அலுக்காது. கேசவனின் அம்மா இதை ஒன்றையும் கண்டு கொள்வதில்லை. காலையில் மிகத் தாமதமாக எழுந்து அலங்கரித்துக் கொண்டு வெளியே போனால் திரும்ப வருவது நள்ளிரவோ அதற்குப் பிறகோ…!
எங்கே போயிருப்பான் கேசவன்? “நாளைக்குப் பள்ளிக்கூடத்துக்கு போறதுக்கு முன்னால வா! புது வீடியோவுக்கு சொல்லி வச்சிருக்கேன். பாத்திட்டுப் போலாம்” என்றான்.
“என்ன படண்டா? படையப்பாவா?” ஆவலோடு கேட்டான் முத்தையா.
“போடா உன் படையப்பாவும் –ரப்பாவும்!” அவன் அப்படித்தான் பேசுவான். கொச்சை வார்த்தைகள் சரளமாக வந்து விழும் பேச்சு. அது ஆண்மையும் தைரியமும் கலந்த உலகத்தைப் புறந்தள்ளி தன்னை ஏற்றி வைத்துக் கொண்ட வீரப் பேச்சாகவும் முத்தையாவுக்குத் தெரியும்.
அதுதான் இந்த கேசவனிடமிருந்த கவர்ச்சி. அவன் இந்த உலகத்தைத் தலைகீழாகப் படித்திருக்கிறான். படித்து இதைப் புறக்கணிக்கவும் இகழவும் உமிழவும் கற்றுக் கொண்டிருக்கிறான். பள்ளிக்கூடம், படிப்பு அவனுக்குக் கால் தூசு. “படிச்சி என்ன –ரப் –ங்கப் போறோம்? ஒரு நாளைக்கு இருவது முப்பதும் சம்பாரிக்கவா? இப்பவே நான் முப்பது நாப்பது சம்பாரிக்கிறேன் தெரியுமா?”
யார் யாருக்கோ ஏதேதோ டெலிவரி வேலை செய்தான். ஒவ்வொரு டெலிவரிக்கும் கை மேல் பணம். அவன் அண்ணன் வீட்டில் விட்டுப் போயிருந்த மோட்டார் சைக்கிளில் லைசன்ஸ் இல்லாமலேயே சுற்றுவான். போலிஸ்காரன் எங்கு மறைந்திருப்பான், அவனை எப்படி ஏய்த்து வேறு குறுக்கு வழிகளில் போகலாம் எல்லாம் அவனுக்குத் தெரியும். அப்படியே பிடிபட்டுவிட்டால் எப்படிக் குழைவது, எத்தனை தருவது எல்லாம் தெரிந்து தயாராக இருப்பான்.
பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போட அவன் அஞ்சுவதில்லை. அவன் பள்ளிக்கூடம் வரவில்லை என்று அறிவிக்கும் கடிதங்கள் வீட்டு முகவரிக்கு வந்தால் தானே பிரித்து கள்ளக் கையெழுத்துப் போட்டு கொண்டு வந்து கொடுத்துவிடுவான். முத்தையாவிடம் எல்லாம் சொல்லியிருக்கிறான். முத்தையா ஏதேதெல்லாம் செய்ய முடியாமல் தயங்குகிறானோ அத்தனையும் கேசவன் செய்வான். கேசவன் முத்தையாவின் ஹீரோ. அவன்தான் படையப்பா, அருணாச்சலம், பாட்சா!
“அப்புறம் என்ன படண்டா?”
“வேற படம் சொல்லி வச்சிருக்கேன். புளூ ·பிலிம். இந்தியாவிலிருந்து வந்தது. ·பிலிம் ஸ்டார்ஸ். எல்லாம் தமிழ்ப் பொம்பிளங்க!”
“கிர்”ரென்று ஒரு காம உணர்ச்சி ஏறியது. “தமிழ்ப் பொம்பிளங்களா? நெசமாவா? இது வரைக்கும் சீனத்திங்க வெள்ளக்காரிச்சிங்கதான…”
“அதெல்லாம் பழசு. ஆனா ரொம்ப பத்திரமா இருக்கணும். போலிஸ்காரங்க தேடிக்கிட்டிருக்காங்களாம். ஒரு காப்பி மூணு மணிநேரம் வாடகைக்கு எடுக்க அம்பது வெள்ளி”
“அம்பது வெள்ளியா?”
“போடா —! “அம்பது வெள்ளியா”ன்னு வாயப் பொளக்கிறான். ஒங்கிட்ட இப்ப காசு கேட்டனா? படத்துக்கு நாந்தான் டெலிவரி போய்! நீ எனக்கு பெஸ்ட் ·பிரன்ட் இல்லியா! நாளைக்கு வா. ஒனக்கு ·ப்ரீ ஷோ!”
இரவு முழுவதும் தூக்கம் பிடிக்கவில்லை. அவனுடைய அபிமான நடிகைகள் நிர்வாணமாக மனதில் உலா வந்தார்கள். கேசவனின் வீரத்தோற்றம் முத்தையாவின் எண்ணத்தில் இன்னும் உயர்ந்தது. என்ன அபூர்வமான விஷயங்களெல்லாம் வைத்திருக்கிறான்! எப்படியெல்லாம் பூந்து விளையாடுகிறான்! எத்தனை தைரியம், தன்னம்பிக்கை! அவனை நெருங்கிய நண்பனாக அடைந்திருப்பதில் அவன் வகுப்பு மாணவர்கள் மத்தியில் அவனுக்கு ஒரு தனிப் பெருமை இருந்ததாக நினைத்துக் கொண்டான்.
நாளைக்குப் பள்ளிக்கூடம் போகும் வேளையில் அம்மா வீட்டில் இருப்பாள். ஆனால் ஏதாகிலும் சமாதானம் சொல்லிவிட்டுப் புறப்படலாம். தெரிந்தால் தொலைத்து விடுவாள். கேசவன் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறான்! எந்தப் பிச்சுப் பிடுங்கலும் இல்லை. இந்த வீட்டில் எந்த நேரமும் நச்சு நச்சென்று…!
ஆனால் அம்மா சொல்வதும் சரிதான். கேசவனைப் போலத் தான் ஆக முடியாது. அவனைப் போல பொறுப்புகள் இல்லாமல் சுற்ற முடியாது. அம்மா தன்னைத்தான் நம்பியிருக்கிறாள். தன்னை உழைத்துக் காப்பாற்ற வேண்டிய அப்பா இல்லாத குறைக்குத் தொழிற்சாலையில் இரண்டிரண்டு ஷி·ப்டாக வேலை செய்கிறாள். கண்களெல்லாம் சிவந்து போய் வீடு வருகிறாள். வீட்டிலிருக்கும் நேரத்திலெல்லாம் முதுகிலும் தோளிலும் வலி நிவாரணித் தைலங்களைத் தேய்த்துக் கொண்டு அந்த நாற்றத்தோடே சுற்றிக் கொண்டிருக்கிறாள். பாவமாக இருக்கிறது. அவளைக் காப்பாற்ற வேண்டும்.
ஆனால் இன்று ஒரு நாள்… இந்த வாய்ப்பை விட முடியாது. தமிழ் நடிகைகளாமே…! குஷ்புவா, ரம்பாவா? ஆ…!
இரவு முழுவதும் நாளைக்கு நண்பனுடன் ரகசிய கூட்டில் ஈடுபடும் கிளர்ச்சி, காமக் கிளுகிளுப்பு, அம்மா நினைவுக்கு வந்த மாத்திரத்தில் குற்ற உணர்ச்சி, நாளைக்குப் பிறகு நல்லவனாக மாறிவிடலாம் என்ற சமாதானம் எல்லாம் வந்து அவனைத் தூங்க விடாமல் அடித்திருந்தன.
இத்தனைக்கும் மத்தியில் இத்தனை எதிர்பார்ப்புக்களுடன் இங்கே வந்து… எங்கே போனான் கேசவன்?
முத்தையா கேசவனின் வீட்டுக்கு வெளியிலேயே வராந்தாவில் உட்கார்ந்து காத்திருந்தான். இன்னும் ஒரு மணி நேரத்தில் பள்ளிக் கூடம் போயாக வேண்டும். படம் பார்க்க அரை மணி நேரமாவது ஆகும். கேசவன் துரோகம் பண்ணி விட்டான். இனிமேல் இவனை நம்பக் கூடாது. இவனுடன் என்ன தோழமை வேண்டிக் கிடக்கிறது? ஒழித்துத் தொலைக்க வேண்டும். அயோக்கியன்.
இருந்தாலும் கொஞ்ச நேரம் இருந்து பார்க்கலாம். இல்லாவிட்டால் “என்ன –ரு அவசரம் ஒனக்கு? அஞ்சு நிமிஷம் காத்திருக்கக் கூடாதா?” என்று திட்டுவான்.
வராந்தா வழியே ஒரு தமிழ்ப் பெண் போனாள். அவனைப் பார்த்து லேசாகச் சிரித்தது போல் இருந்தது. முத்தையா தெரியாதது மாதிரி தலையைத் திருப்பிக் கொண்டான். யார் எங்கேயோ பார்த்தது போல….! அம்மாவை ஒரு நாள் பார்க்க வந்தாளோ? அம்மாவோடு வேலை செய்யும் பெண்ணோ? மனம் திடுக்கிட்டது. தெரிந்து கொண்டிருப்பாளா? அம்மாவிடம் சொல்வாளோ? ஒரு மாதிரி பயம் வந்து கவிந்தது.
சீச்சி! தெரிந்திருக்காது. வீட்டுக்கு வந்தபோது என்னைப் பார்த்தது கூட நினைவிருக்காது. எப்பவோ ஒரு நாள். மறந்து போயிருக்கும். மனம் சமாதானப் பட்டது.
காத்திருந்தான். இன்னும் ஐந்து நிமிடங்கள். பள்ளிக்கூடத்துக்கு லேட்டாகிவிடும். பரவாயில்லை. கொஞ்சம் லேட்டானால் சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். “பைசிக்களில் காத்துப் போய்விட்டது சார், அம்மாவுக்கு ஒடம்பு சரியில்லை சார், வயித்து வலி சார்” எத்தனையோ மாதிரி சொல்லலாம்.
மோட்டார் சைக்கிள் சத்தம் கீழே கேட்டு எட்டிப் பார்த்த போது கேசவன்தான். மோட்டார் சைக்கிளைக் கீழே வைத்துப் பூட்டிவிட்டு மேலே வந்தான்.
“என்னடா லேட் பண்ணிட்ட?” என்று ஆவலோடு கேட்டான் முத்தையா.
“போடா. பெரிய சிக்கலாப் போச்சி. வேற ஆளுங்க வாடகைக்கு வாங்கிட்டுப் போயிட்டாங்க. இன்னுங் கொஞ்ச நேரத்தில கெடைச்சிரும்”
கேசவன் கவலைப்பட்டான். “கொஞ்ச நேரன்னா?”
“இன்னும் அரை மணி நேரத்தில…”
“இன்னும் அரை மணியா? கேசவா, பள்ளிக்கூடத்துக்கு நேரமாயிடுண்டா. நாளைக்குப் பாத்துக்கலாமா?”
“போடா பெரிய பள்ளிக்கூடம். நீ போறதுன்னா போ! நான் இன்னைக்குப் போகல! நாளைக்கு இந்த வீடியோ கிடைக்காது. இன்னைக்கு திரும்ப குடுத்திறனும். அத வேற எடத்துக்கு அனுப்பப் போறாங்களாம்.”
மனம் தவித்தது. “அப்படின்னா?”
“வேணுமின்னா இருந்து பாத்துட்டுப் போ. இல்லன்னா ஒன் இஷ்டம்!”
“பள்ளிக்கூடம்?”
“–ர் பள்ளிக்கூடம்”
கேசவனின் அந்தத் துணிவும் அலட்சியமும் கருத்தில் கொண்ட காரியத்தில் உறுதியாக நிற்பதும் தனக்கு ஏன் வரமாட்டேனென்கிறது? ஏன் பயமும் கோழைத் தன்மையுமே முன்னால் நிற்கின்றன? இந்த விஷயத்தில் பின்வாங்கிக் கேசவனின் முன்னால் தலைகுனிந்து வாலைச் சுருட்டிக்கொண்டு பள்ளிக்கூடத்துக்கு ஓட மனம் ஒப்பவில்லை. போனாலும் மனசு தவறிப் போன வீடியோவின் ஏக்கத்திலேயே இருக்கும்.
இருந்து பார்த்துவிட்டுப் போய்விடுவது என முடிவு செய்தான் முத்தையா. “சரிடா!” என்றான்.
“அப்ப நீயும் வா! மோட்டார் சைக்கிள்ளியே போயி கையோட வாங்கிட்டு வந்திரலாம்!” என்றான் கேசவன்.
“ரெண்டு பேருமா? ஒனக்கே லைசன்ஸ் இல்லையே…!” என்று தயங்கினான் முத்தையா.
“நீ இப்படித்தாண்டா, பொட்டப் பயந்தாங்கொள்ளி!”
“சரி, வா போலாம்” என்றான் முத்தையா.
*** *** ***
“நிச்சயமா தெரியுமா கமலா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் பார்வதி.
“நிச்சயமா ஒம் மகன்தான். அப்படியா எனக்குத் தெரியாமப் போகும்?” என்றாள் கமலா.
பார்வதி கமலாவின் முகத்தைப் பார்த்தவாறு அதிர்ந்து நின்றாள்.
“அந்த கேசவன் ரொம்ப கெட்டவன் பார்வதி. பொய், திருட்டு எல்லாம் இருக்கு. ஆபாச வீடியோ வியாபாரம் பண்றவங்களோட சேந்து இவனும் வியாபாரம் பண்றானாம். என் மகன்கிட்ட கூட வாங்கிப் பாக்கிறியான்னு கேட்டானாம்!”
பார்வதிக்கு மனசு ஆடிப் போனது. உடம்பும் கூட ஆடியது. செய்யும் வேலை மறந்து விட்டது. அப்படியே நின்றாள்.
“என்ன பார்வதி?” என்று அருகே வந்தாள் கமலா.
கண்ணீர் பொலபொலவென கொட்டியது. துடைத்துக் கொண்டே சொன்னாள்: “அவங்கிட்ட கெஞ்சி பாத்திட்டேன் கமலா. அடிச்சி பாத்திட்டேன். அடிச்ச பிறகு கொஞ்சியும் பாத்திட்டேன். இனிமே அவனோட சேரமாட்டேன்னு இல்லாத சத்தியமெல்லாம் பண்ணிட்டான். அப்படி பண்ணிட்டு இப்படி ஏய்ச்சிட்டானே…. நான் என்னதான் பண்ணுவேன்?”
அவளுக்கு ஆறுதல் கூற முடியாமல் கமலாவும் அயர்ந்து நின்றாள்.
*** *** ***
வீடு திரும்பும் போது முத்தையாவுக்கு குற்ற உணர்ச்சிதான் அதிகமாக இருந்தது. வீடியோ பார்க்கும் போது இருந்த கிளர்ச்சிகள் எல்லாம் குறைந்து விட்டிருந்தன.
வீடியோவைத் தேடி ஓடி காத்திருந்து வாங்கி கேசவனின் வீட்டில் ஜன்னல்களையெல்லாம் அடைத்துவிட்டு போட்டுப் பார்த்து முடித்ததில் நேரம் போய்விட்டது. இனி பள்ளிக்கூடம் போவதில் அர்த்தமில்லை என்று தோன்றியவுடன் கண்ட இடத்தில் அலைந்து விட்டு வீட்டுக்குத் திரும்பும் சரியான நேரத்திற்குத் திரும்பினான்.
வீடு திரும்பும் வேளையில் அம்மா வீட்டில் இருக்க மாட்டாள் என்பது ஆறுதலாக இருந்தது. இருந்தாலும் அக்கம் பக்கத்தார் பார்க்கக்கூடும் என்பதற்காக இந்த நடிப்பு தேவையாக இருந்தது.
வீட்டில் தங்கை மீனா மட்டும் தனியாக இருந்தாள். முத்தையா குளித்துவிட்டு டிவி பார்த்துவிட்டு அம்மா வீடு வரும் நேரத்துக்கு புத்தகத்தைத் திறந்து வைத்துப் படிப்பதாகப் பாவனை செய்து கொண்டிருந்தான். அம்மா வரும் நேரம் நெருங்க நெருங்க அம்மாவின் சகதொழிலாளி தன்னைக் கேசவன் வீட்டில் பார்த்த நினைவு அடிக்கடி வந்தவாறிருந்தது. அம்மாவுக்குத் தெரிந்து விட்டிருக்குமா? பயம் கவிந்தது.
சனியன், ஏன் இந்தப் படத்தைப் போய்ப் பார்த்தோம்? பார்த்தால் எல்லாம் பம்மாத்து வேலை. சில சினிமா காட்சிகளைக் காட்டி அப்புறம் தலையில்லாத முகந்தெரியாத முண்டமான பெண்களை வெட்டி ஒட்டி… எல்லாம் சுத்த ஏமாற்று வேலை. இதற்காகப் பள்ளிக்கூடத்திற்கு மட்டம் போட்டு, அம்மாவிடம் பொய் சொல்லி, நாளைக்குப் பள்ளிக்கூடத்திலும் பொய் சொல்லி…. சீச்சீ!
அம்மா ஏழு மணிக்கு வந்தாள். அவள் முகத்தில் தன் குட்டு உடைந்துவிட்ட அறிகுறிகள் தெரிகின்றனவா என்று முத்தையா ரகசியமாகப் பார்த்தான். ஒன்றும் தெரியவில்லை. அம்மாவின் முகத்தில் நீண்ட நேர உழைப்புக்குப் பின் தெரியும் வழக்கமான களைப்பும் இறுக்கமும்தான் இருந்தன போலத் தெரிந்தது. ஒன்றும் பேசாமல் குளிக்கப் போனாள். அவனுக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது. ஒன்றும் அம்பலமாகவில்லை.
அம்மா பகல் ஷி·ப்ட் செய்யும் போதெல்லாம் இரவில் அவர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதுதான் வழக்கம். முத்தையாவுக்கு பயங்கள் தெளிந்தவுடன் காலையில் அம்மா சமைத்த ஆட்டுக் கறியின் நினைவு வந்தது. நாக்குச் சப்புக்கொட்டிக் காத்திருந்தான்.
அம்மா குளித்து வந்ததும் ஒன்றும் பேசாமல் கறியைச் சுடப் பண்ணி சாப்பாடு எடுத்து வைத்தாள். குழந்தைகள் சாப்பிட ஆரம்பித்ததும் அவள் டிவி முன்னால் போய் உட்கார்ந்து விட்டாள்.
“ஏன் அம்மா, நீங்க சாப்பிடலயா?” என்று மீனா கேட்டாள்.
“நீங்க சாப்பிடுங்க! எனக்குப் பசியில்ல!” என்றாள் பார்வதி.
*** *** ***
மறுநாள் பள்ளிக்கூடம் போய் வகுப்பு ஆசிரியரிடம் மழுப்பி மழுப்பிக் காரணம் கூறித் தப்பித்தாகிவிட்டது. ஆனால் நேற்று எதிர்பாராமல் கணக்கு ஆசிரியர் திடீர் கணக்குப் பரிசோதனை வைத்தார் என்றும் அதில் கலந்து கொள்ளாததால் அது ஆண்டு ரிப்போர்ட் கார்டில் “வரவில்லை” என்று எழுதப்படும் என்றும் கேள்விப்பட்டபோது அவனுக்கு வயிற்றைக் கலக்கியது.
கேசவனும்தான் கலந்து கொள்ளவில்லை. ஆனால் இது அவனுக்குப் பொருட்டல்ல. அவன் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை. அவன் ரிப்போர்ட் கார்டைக் கேட்டுப் பார்க்க ஆளில்லை. கள்ளக் கையெழுத்தும் அவனே போட்டுக் கொள்வான். ஆனால் முத்தையாவின் அம்மா தவறாமல் கேட்டு வாங்கிப் பார்ப்பாள். அந்தப் பரிட்சையில் கலந்து கொள்ளாமல் போனதை ரிப்போர்ட் கார்டில் கையெழுத்து வாங்கும்போது அம்மாவுக்கு விளக்கியாக வேண்டுமே! இப்போதே மனம் பொய்ச் சமாதானங்களைத் தயாரிக்கத் தொடங்கியிருந்தது.
அன்று இரவும் சாப்பிட உட்கார்ந்த போது அம்மா சாப்பாட்டுக்கு வரவில்லை. அதிகம் பேசவும் இல்லை. ஆளும் மிகச் சோர்ந்து இருந்ததுபோல் காணப் பட்டாள். மீனாவைக் கூப்பிட்டு “நீயே எடுத்துப் போட்டுச் சாப்பிடு மீனா! அண்ணனுக்கும் போட்டுக்குடு!” என்றாள்.
சாப்பிடும் போது முத்தையா மீனாவிடம் ரகசியமாகக் கேட்டான்: “ஏன் மீனா, அம்மாவுக்கு என்ன, ஒடம்பு சரியில்லியா?”
“எனக்குத் தெரியாது!” என்று வெடுக்கென்று சொன்னாள் மீனா.
மறுநாள் பகல் பார்வதி படுக்கையிலேயே இருந்தாள். முத்தையா பள்ளிக்கூடத்திற்குத் தயாராகிய போது சாப்பாடு ஒன்றும் தயாராகியிருக்கவில்லை.
அவன் அவள் படுக்கையை எட்டிப்பார்த்து “ஏம்மா இன்னைக்கு சமைக்கிலியா?” என்றான்.
அவள் தலைமாட்டிலிருந்து ஐந்து வெள்ளியை எடுத்துக் கொடுத்து “ஏதாச்சும் கடையில வாங்கிச் சாப்பிட்டுட்டு, ராத்திரிக்கு வரும்போதும் ஏதாச்சும் வாங்கிட்டு வந்திரு!” என்றாள்.
காசை வாங்கிக் கொண்டு “ஏம்மா, ஒடம்பு சரியில்லையா?” என்று கேட்டான்.
ஒன்றும் பேசாமல் திரும்பிப் படுத்துக் கொண்டாள். கொஞ்ச நேரம் நின்றுவிட்டு பேசாமல் போனான்.
பள்ளிக்கூடத்தில் இருந்த போதும் அம்மா நினைவு அதிகமாக இருந்தது. ஏதோ சரியில்லை என்று தோன்றியது. அம்மா உடல் தளர்ந்திருக்கிறாள். இப்படி அவள் படுத்து அவன் பார்த்ததே இல்லை. இப்படி இருந்தால் எப்படி வேலைக்குப் போவாள்?
ஒரு வேளை தான் செய்தது தெரிந்து விட்டதா? தெரிந்தால் ஏன் கேட்கவில்லை? ஏன் கத்தவில்லை? ஏன் அடிக்கவில்லை? தெரிந்திருக்காது. வேறு காரணமாக இருக்கலாம்.
அன்று மாலை வீட்டுக்கு கொஞ்சம் அவசரமாகவே வந்தான். வரும் வழியில் மறக்காமல் எல்லாருக்கும் ரொட்டிச் சாணாய் வாங்கிக் கொண்டு வந்தான்.
அவன் சந்தேகப் பட்டதைப் போலவே அம்மா வேலைக்குப் போகாமல் படுத்தபடிதான் இருந்தாள். தலை கலைந்து முகம் ஒடுக்கு விழுந்து கண்மூடிப் படுத்திருந்தாள். மீனாவின் குழந்தை முகத்திலும் சோகம் படர்ந்திருந்தது. வீடு முழுவதும் இருள் கவிந்திருந்தது.
“என்ன மீனா, அம்மா ஏன் இப்படி இருக்காங்க?” என்று கவலையுடன் தங்கையைக் கேட்டான்.
“தெரிலிய! ஒடம்பு சரியில்லன்னுதான் சொல்றாங்க. எங்கிட்டயும் சரியா பேசமாட்டேங்கிறாங்க! மூணு நாளா சாப்பாட்டையே தொடல. தண்ணி மாத்திரம்தான் குடிக்கிறாங்க. அடுத்தவீட்டு அம்மா வந்து பாத்திட்டுப் போனாங்க. “ஆஸ்பத்திரிக்குக் கொண்டுட்டுப் போகவா”ன்னு கேட்டாங்க. அம்மா வேணான்ட்டாங்க!” என்றாள்.
முத்தையாவின் தொண்டைக் குழிக்குள் ஏதோ ஒன்று அடைத்துக் கொண்டது. கண்களில் அழுகை முட்டினாலும் அடக்கிக் கொண்டான். அம்மாவிடம் போய்ப் பேச பயமும் தயக்கமும் இருந்தது. ஆனால் இங்கு நிலைமை கைமீறிப் போய்க் கொண்டிருந்தது. பயமும் தயக்கமும் இருந்து பயனில்லை.
அம்மாவின் படுக்கையை நோக்கிப் போனான். திரும்பிப் படுத்திருந்தாள். அவளுடைய கலைந்த, அழுக்கடைந்த கூந்தல் தாறுமாறாகக் கிடந்தது. அவளுடைய கைலி கலைந்து தளர்ந்து கிடந்தது.
அவள் முதுகைத் தொட்டு “அம்மா!” என்றான்.
மெதுவாகத் திரும்பி அவனைப் பார்த்தாள். கைலியைச் சரி செய்து கொண்டாள்.
“உடம்புக்கு என்ன செய்யிது?” அழுகை மீண்டும் முட்டிக் கொண்டு வந்தது.
பேசாமல் இருந்தாள். வெறுமையான விழிகளால் அவனைப் பார்த்தாள்.
“சொல்லும்மா! நான் வேணா காடி பிடிச்சி ஒன்ன ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகட்டா?” என்று கேட்டான்.
சிரமத்துடன் வாய் திறந்தாள்: “வேண்டாம் முத்தையா! என் ஒடம்புக்கு ஒண்ணும் இல்ல!”
“அப்படின்னா ஏன் இப்படி இருக்கிற? ஏன் சாப்பிடாம இருக்கிற?”
மீண்டும் பேச்சில்லை.
“சொல்லும்மா!” என்றான்.
“சாப்பிட்டு இந்த ஒடம்ப வளத்து என்ன பிரயோசனம் முத்தையா? நம்ப மாதிரி ஏழைங்களுக்கு என்ன எதிர்காலம் இருக்குது?”
அவனுக்கு இதில் ஏதோ ஒரு வகையில் தான் சம்பந்தப்பட்டிருப்பது போலத் தெரிந்தது.
“ஏம்மா இப்படியெல்லாம் பேசிற?” என்றான்.
“ஆமாப்பா! நான் எவ்வளவுதான் கஷ்டப்பட்டு சீரளிஞ்சி போனாலும் நீ நல்லா படிச்சி இந்தக் குடும்பத்த முன்னுக்குக் கொண்டு வருவேன்னு நெனச்சேன். அது நடக்கப் போறதில்லன்னு நீ காட்டிட்ட! நீ உங்கப்பனப் போலத்தான் இருக்கப் போற! படிப்ப குட்டிச் சுவராக்கப் போற! ஒரு வயசு வந்ததும் ஒருத்திய ஏமாத்தி இழுத்து ஓடி இப்படி நம்ப குடும்பம் மாதிரி இன்னொரு லட்சியமே இல்லாத ஏழைக் குடும்பத்த ஆரம்பிக்கப் போற! குழந்தைகளப் பெத்துப் பாழாக்கப் போற! அதையெல்லாம் நான் உயிரோட இருந்து இன்னொரு தடவ பாக்கணுமா?”
அவள் ஒரு மரக்கட்டையை எடுத்து அவன் முதுகில் அடி அடியென்று அடித்திருக்கலாம். முன்பு அப்படி அடித்து அவன் தாங்கியிருக்கிறான். ஆனால் இந்தச் சொற்களின் அடி அவன் மனத்தில் வெட்டு வெட்டாகக விழுந்தன. மனத் தசைகளை இரத்தம் வழியக் கிழித்தன.
“ஏம்மா இப்படியெல்லாம் பேசிற? நான் என்ன செஞ்சிட்டேன் இப்ப?” அழுகையோடு கேட்டான்.
“ஒனக்குத் தெரியாதா முத்தையா? தெரியலன்னா நான் சொல்லிப் பிரயோஜனம் இல்ல! தெரியாத மாதிரி நடிக்கிறேன்னுதான் அர்த்தம். எத்தனையோ பொய்யோட இன்னும் ஒரு பொய்ய சொல்லப் போற அவ்வளவுதானே!” மெதுவாக முகத்தைத் திரும்பிக் கொண்டாள்.
பேசாமல் உட்கார்ந்து கண்ணீரை வழியவிட்டுக் கொண்டிருந்தான். இனி மறைக்க முடியாது. இது முன்பு போல இல்லை. அம்மா முன்பு போல அடிக்காமல் ஏசாமல் தானாக தன் கழுத்தில் இறுக்கு முடிச்சுப் போட்டுக்கொண்டு அதன் ஒரு முனையை அவன் கையில் தந்திருக்கிறாள்.
மனதைத் திடப்படுத்திக் கொண்டு சொன்னான். “சரி அம்மா, நான் செஞ்சது தப்புத்தான். பள்ளிக்கூடம் போகாம கேசவனோட சேர்ந்து படம் பார்த்தேன். நெசந்தான். இனிமே சத்தியமா அப்படி செய்ய மாட்டேம்மா! என்ன மன்னிச்சிரும்மா!”
திரும்பி அவன் முகத்தைப் பார்த்தாள். “பிரயோஜனம் இல்ல முத்தையா! உன்னோட சத்தியம், என்னோட மன்னிப்பு இதுக்கெல்லாம் ஒரு மதிப்பும் கெடையாது. நீ சத்தியம் பண்ணிட்டியேன்னு நான் ஒன்ன அணைச்சிக்கிட்டு அழுது சமாதானம் ஆயிடலாம். ஆனா ஒரு வாரம் போனா எல்லாம் சகஜமா போயிடும். ஒனக்குக் கூட்டாளிங்க வந்திருவாங்க. பழைய ஆசைங்க எல்லாம் வந்திரும். அம்மாவ ஏமாத்திறது எவ்வளவு சுலபம்னு ஒனக்குந் தெரியும். ஒனக்கு கைவந்த கலைதான. ஆகவே எல்லாம் மிந்தியப் போலத்தான் நடக்கும். பிரயோஜனமில்லப்பா!”
அதிர்ச்சியடைந்து அவளைப் பார்த்தான். “இல்லம்மா! நான் உண்மையிலேயே திருந்திட்டேன்!”
“அப்படியா? எவ்வளவு நேரமா திருந்தியிருக்க? இதோ அம்மாவுக்கு உண்மை தெரிஞ்சு போச்சின்னு நெனச்சவுடனே பல வருஷங்களா இருந்த கெட்ட பழக்கத்த உட்டு ஒரு நிமிஷத்தில திருந்திட்டியா? அவ்வளவு சீக்கிரம் திருந்தினவன் மறுபடி கெட்டுப் போறதுக்கு எவ்வளவு நேரம்பா வேணும்?”
அம்மா குரல் அடைக்க அடைக்க மிக மெதுவாகப் பேசினாள். அவளால் உரத்துப் பேச முடியவில்லை. கோபத்தைக்கூடக் காட்ட முடியவில்லை. பலவீனமான தொனியில் அளந்து அளந்து பேசினாள். ஆனால் அவன் இதயத்தைக் குறி வைத்து குறி வைத்து அடித்தாள்.
“என்ன என்னதாம்மா பண்ணச் சொல்ற?” அழுதான்.
“ஒண்ணும் பண்ண வேணாம் முத்தையா. எதுவும் பண்ணிப் பிரயோஜனமில்ல! நீ விரும்பின வழியில நீ போகலாம். என்ன என் வழிக்குப் போக விடு!” மீண்டும் திரும்பிக் கொண்டாள்.
“ஹீம்” என்று குரல் விட்டுக் கேவி அழுதான். “வேணாம்மா! அப்படிப் பேசாத. நீ போயிட்டா எனக்கும் தங்கச்சிக்கும் என்ன கதி?”
அவனைப் பார்த்தாள். “உனக்கும் தங்கச்சிக்கும் என்ன கதிங்கிறத நீதான் தீர்மானிச்சிட்டியே தம்பி! உங்கப்பா காட்டின வழிதான் உனக்கு வாய்ச்சிருக்கு. நீ இப்படியே போனா இந்தக் குடும்பம் முன்னேற முடியாம பாழாத்தான் போகும். நான் உயிரோட இருந்தாலும் இல்லைன்னாலும் இப்படித்தான் நடக்கும். ஆகவே இதையெல்லாம் பாக்காம நான் சீக்கிரமே போயிடலான்னு முடிவுக்கு வந்திட்டேன். ஒங்க தலைவிதிப்படி ஒங்க விருப்பப்படி நடக்கட்டும். நீ என்னுடைய கட்டுப்பாட்டில இல்ல. முழுக்க முழுக்க உன் நண்பனோட கட்டுப் பாட்டில இருக்க! அவன்தான் உனக்கு எதிர்காலத்துக்கு வழி சொல்லிக் குடுப்பான்!”
“இல்லம்மா, அப்படிச் சொல்லாதம்மா! இன்னையோட அவனை விட்டுட்றம்மா! இனிமே அவனோட சேரமாட்டேம்மா. சத்தியம்மா, சத்தியம், சத்தியம்!” அவள் கையைப் பிடித்து உள்ளங்கையில் அடித்தான்.
“மூணு சத்தியமாப்பா? காப்பாத்த அவசியமில்லாதபோது மூணு என்ன, நூறு கூடப் பண்ணலாம். எனக்கு நம்பிக்கையில்லப்பா!” என்றாள்.
என்ன செய்ய நினைத்துவிட்டாள் இந்த அம்மா! செத்தே போவது என்று முடிவு செய்து விட்டாளா? தன்னையும் தன் தங்கையையும் அநாதைகள் ஆக்கிவிடுவதென்று முடிவு செய்து விட்டாளா? அந்த அளவுக்கா என் செயல் அவளைத் தைத்து விட்டது?
முத்தையாவுக்கு மனம் முற்றாக உடைந்து போனது. கதறினான். “வேணாம்மா? இப்படிச் செய்யாத! எங்கள விட்டுப் போகாத. நான் என்ன செய்யணும் சொல்லு? வேணுன்னா என்ன கட்டி வச்சி அடி! எனக்குச் சூடு வை. நான் பண்ணின குத்தத்துக்கு நீ ஏன் இப்படி தண்டனை அனுபவிக்கிற?”
“ஏன்னா ஒனக்கு எந்தத் தண்டனை கொடுத்தாலும் பிரயோஜனம் இல்லாமப் போகுது. அதினால ஒன்ன சரியா திருத்தி வளக்க முடியாததுக்கு எனக்கே நான் தண்டனை கொடுத்துக்கிறேன். அவ்வளவுதான்!”
“வேணாம்மா! நான் எல்லத்தையும் இன்னைக்கோட விட்டிட்றேன். நீ எந்திரிம்மா. சாப்பிடும்மா!” அழுதழுது சொன்னான்.
அவள் லேசாக எழுந்து உட்கார்ந்தாள். முத்தையா அவள் எழுந்து சாய்ந்து கொள்ளத் தலையணையை முட்டுக் கொடுத்தான்.
“இனிமே அந்த கேசவனோட சேராம இருப்பியா?”
“சேரமாட்டேன். சத்தியம்மா!” கண்களைத் துடைத்துக் கொண்டான்.
“அப்படின்னா அந்தக் கேசவனையே இங்க கொண்டாந்து எனக்குச் சத்தியம் பண்ணிக் கொடுக்கச் சொல்லு!”
அதிர்ச்சியடைந்தான். கேசவனா? அவன் வருவானா? எப்படி வருவான்?
“என்னப்பா அப்படிப் பாக்கிற? வருவானா?”
“அம்மா! அவன் வருவானா இல்லையான்னு தெரிலம்மா! அவன் எதுக்கு? ஆனா நான் இனிமே அவன் கிட்டயே போக மாட்டேம்மா!”
“முடியாது முத்தையா! நீ போக மாட்டே! ஆனா அவன் வந்தான்னா ஒட்டிக்குவ. ஒன்னால அவன எதிர்த்து நிக்க முடியாது. அவன வரச்சொல்லு. எங்கிட்ட சத்தியம் பண்ணிக் கொடுக்கச் சொல்லு!”
“அம்மா!”
“அதுவரைக்கும் நான் சாப்பிட மாட்டேன். இதே கட்டில்! இங்கேயேதான் என் உயிர் போகும்!”
*** *** ***
சைக்கிளை எடுத்துக் கொண்டு தலை தெறிக்கும் வேகத்தில் வந்து கேசவனின் அடுக்குமாடி வீட்டை அடைந்த போது இரவு மணி ஒன்பதாகி விட்டது. கேசவன் இருக்கிறானோ இல்லையோ தெரியவில்லை. கீழே அவன் மோட்டார் சைக்கிளைப் பார்க்க முடியவில்லை. தயக்கத்தோடு கதவைத் தட்டினான்.
திறந்தது கேசவனின் அம்மா. அலங்காரம் ஒன்றுமில்லாமல் சூம்பிப் போன முகத்துடன் தலை முடி விரிந்து கிடந்தாள். “என்னா வேணும்?” என்று கேட்டாள். அவள் குரல் முரட்டுத் தனமாக இருந்தது.
“கேசவனப் பாக்கணும் அண்டி” என்றான்.
“நீ யாரு?”
“நான் அவனோட ஸ்கூல் ·பிரண்ட். அவன அவசரமாப் பாக்கணும்!”
“அது ஊட்டில எங்க இருக்கு?”
“எங்க போயிருக்கான்? எப்ப வருவான்?”
“ஆமா, எங்கிட்ட சொல்லிக்கிட்டுத்தான் போவுது. யாருக்குத் தெரியும்? நாய் மாதிரி ஊரெல்லாம் சுத்தும். ஆமா நீ ஏன் இந்த ராத்திரி நேரத்தில அதத் தேட்ற?”
“பேச வேண்டியிருக்கு அண்டி”
“ஆமா, நீங்க ராத்திரி ராத்திரியாதான் கூடிப் பேசிறதா? ஒன்னப்போல ·பிரன்ட்ஸ் சேந்துதான் அதையும் இப்படித் தறுதலையா ஆக்கிட்டிங்க!” கோபத்தோடு பேசினாள்.
“அண்டி! வந்தா என் வீட்டுக்கு வரச் சொல்லுங்க அண்டி. அவசரம். என் பேரு முத்தையா. அவனுக்கு வீடு தெரியும்!”
ஒன்றும் சொல்லாமல் கதவை பட்டென்று சாத்தினாள்.
என்ன செய்வது என முத்தையா யோசித்தான். வீட்டுக்குப் போய் அம்மாவின் கையைப் பிடித்து அழலாம் என்று தோன்றினாலும் கேசவன் இல்லாமல் அம்மாவைப் பார்த்துப் பயனில்லை எனத் தோன்றியது. அம்மா அவனை ஏறெடுத்தும் பார்க்கமாட்டாள். முகத்தைத் திருப்பிப் படுத்துக் கொண்டு சொன்னது போலவே செத்துப் போய்விடுவாள்.
கீழே போய் ஏறிவரும் படியில் உட்கார்ந்தான். முத்தையா வர என்னேரமானாலும் உட்கார்ந்து அவன் கையைப் பிடித்து அழைத்துப் போகாமல் விடுவதில்லை.
அந்த மலிவு விலை அடுக்குமாடிக் கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் எங்கோ மூலையிலிருந்து மூத்திர மணம் வந்தது. கொஞ்சம் தூரத்தில் சீனர் அங்காடிக் கடைகளில் கொய்த்தியோவும் மீயும் பிரட்டுகின்ற மணமும் சத்தங்களும் வந்தன. தொடைகளில் முழங்கைகளை முட்டுக் கொடுத்துக் கொண்டு முத்தையா காத்திருந்தான். மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்படும் இடத்தில் அவன் பார்வை நிலைத்திருந்தது. கேசவன் வந்தால் அங்குதான் வந்து நிற்பான். பிடித்துவிடலாம்.
அம்மா எப்படி இருப்பாள் என்ற நினைவே புரண்டு புரண்டு வந்ததது. அவள் படுக்கையில் ஒரு கந்தல் துணி போல நைந்து போய்க் கிடந்தது ஞாபகத்திற்கு வந்தது. “அம்மா! எங்களை விட்டுப் போய்விடாதே! நான் திருந்தி விட்டேன்! நான் குடும்பத்தைக் காப்பாற்றுவேன்! எனக்காகக் காத்திரு!” மனம் நடுங்கியது.
ஒன்பது மணியளவில் கேசவன் மோட்டார் சைக்கிளோடு வந்தான். அவன் நிறுத்து முன் அவனை நோக்கி ஓடினான் முத்தையா.
“என்னடா முத்தையா, இந்த நேரத்தில!”
“கேசவா. நீ இப்பவே என்னோட எங்க வீட்டுக்கு வரணும்”
“உங்க வீட்டுக்கா? ஏன்? என்ன விஷயம்?”
எப்படிச் சொல்வது என்று யோசித்தான். “கேசவா எங்க அம்மா சாகப் பிழைக்க கெடக்கிறாங்க!”
“ஏன்? என்ன சீக்கு?”
“சீக்கு இல்லடா. அன்னைக்கு நாம ரெண்டு பேரும் பள்ளிக் கூடம் போகாம இங்க வீடியோ பாத்தது அம்மாவுக்குத் தெரிஞ்சி போச்சி! அதினால இனிமே நான் அப்படியெல்லாம் செய்யக் கூடாதுன்னு மூணு நாளா சாப்பிடாம இருக்காங்க!”
கேசவன் அவனை மேலும் கீழும் பார்த்தான். “போடா –ரு! இதுதாண்டா ஒன்ன சேத்துக்கிறதில உள்ள தொல்லை. ஏன் உங்கம்மாவுக்கு சொல்லித் தொலைச்ச?”
“நான் சொல்லலடா!” அம்மாவுக்கு எப்படித் தெரிந்திருக்கலாம் என்பதைச் சுருக்கமாகச் சொன்னான்.
“நீயும் உங்கம்மாவும் எப்படியாவது போங்க! என்ன எதுக்கு இதில இழுக்கிற?” என்றான் கேசவன் எரிச்சலோடு.
“இல்லடா! நான் இனிமே இப்படியெல்லாம் செய்ய மாட்டேன்னு சொன்னாலும் எங்கம்மா ஏத்துக்க மாட்டேங்கிறாங்க. நீ வந்து சொல்லணுமாம். வாடா. ஒன்னக் கெஞ்சிக் கேட்டிக்கிறண்டா!”
கேசவன் மருண்டிருந்தான். கண்களில் கோபமும் பயமும் இருந்தன. “போடா போடா!” என்று மிகக் கொச்சை வார்த்தைகளில் முத்தையாவைத் திட்டினான்.
“என்ன என்ன வேணுன்னாலும் சொல்லு. நான் கேட்டுக்கிறேன். ஆனா என்னோட வந்து எங்கம்மாவுக்கு ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போடா!”
“போடா! எதுக்கு நான் வரணும்? அங்க வந்து நாந்தான் புளூ ·பிலிம் காமிச்சேன்னு ஒத்துக்கிட்டு அப்புறம் உங்கம்மா போலிசைக் கூப்பிட்டு பிடிச்சிக் குடுக்கவா? முடியாது. நீ போய் என்ன வேணுன்னாலும் பண்ணிக்க. நான் வரமுடியாது.”
“கேசவா! நீ வரலின்னா எங்கம்மா செத்துப் போயிடுவாங்கடா!” முத்தையா அழுதான்.
“செத்துத் தொலைக்கிட்டுமே! சாவமாட்டாளான்னுதான் நான் காத்துக்கிட்டு இருக்கேன்!” அலட்சியமாகச் சொன்னான் கேசவன்.
“என்னடா சொன்ன?” முத்தையா பாய்ந்து அவன் சட்டையைப் பிடித்தான். “எங்கம்மாவையா செத்துத் தொலையச் சொன்ன? எங்கம்மாதாண்டா எனக்கும் உசிரு! அவங்க உயிர் போச்சின்னா ஒன்னயும் கொன்னுட்டு நானும் செத்துப் போவேண்டா!”
கேசவன் அவனைப் பிடித்துத் தள்ளினான். முத்தையா சட்டையை விடவில்லை. இருவரும் தார் ரோட்டில் விழுந்து புரண்டார்கள். முத்தையா கேசவனின் முகத்தில் குத்தினான். கேசவன் திருப்பிக் குத்தினான். முத்தையா விழுந்த இடத்தில் தலையில் பட்டு கொஞ்சமாக ரத்தம் வழிந்தது.
சீனர்கள் அங்காடிக் கடையிலிருந்து ஒரு கூட்டம் வேடிக்கை பார்க்க ஓடிவந்தது. கேசவன் முத்தையாவை ஓர் ஓரமாகத் தள்ளினான். அங்கிருந்து ஓடி தன் மோட்டார் சைக்கிளை உதைத்துக் கிளப்பினான். ஏதோ ஒரு பக்கம் தலை தெறிக்க ஓட்டி மறைந்து போனான்.
முத்தையா மெதுவாக எழுந்தான். கூடியிருந்த சிறிய கூட்டத்தைப் பார்த்தான். தலையில் கை வைத்து ரத்தத்தைப் பார்த்தான். தலையும் குத்துப் பட்ட முகமும் “விண்விண்”னென்று வலித்தன. ஆனால் அதைவிட மனம்தான் அதிகமாக ரணப்பட்டுக் கசிந்திருந்தது. இந்த அயோக்கிய நண்பனின் உறவால் அம்மாவையே இழந்து விடுவோமோ என்ற திகில் வந்து படர்ந்தது. அவமானமும் ஏமாற்றமும் மனதை அழுத்த குனிந்தவாறே சோர்ந்து போய் தன் சைக்கிளை நோக்கி நடந்தான்.
*** *** ***
தன்னைக் கட்டிப்பிடித்துத் தேம்பித் தேம்பி அழுகின்ற மகனைப் பஞ்சடைந்த கண்களுக்கூடே பார்த்தாள் பார்வதி. அவன் தலையைத் தடவியபோது அந்த ரத்தம் கையில் பிசுக்கென்று ஒட்டியது.
“ஐயோ, இது என்ன ஐயா?” என்று கேட்டாள்.
“அம்மா! அவன் ரொம்ப கெட்ட ராஸ்கலும்மா! அயோக்கியன். நான் எவ்வளவு கெஞ்சிக் கேட்டும் வர முடியாதுன்னு சொல்லிட்டாம்மா! என்னப் பிடிச்சி தள்ளிட்டு ஓடிட்டாம்மா! அம்மா! அவன் வேணாம்மா! நான் ஒன் மகன் இல்லியா? நான் சொல்றதக் கேளு! இனி ஜென்மத்துக்கும் நான் அவனோட சேரமாட்டேன். இதுக்கு மேல நான் என்ன பண்ண முடியும்மா? சொல்லும்மா?”
பார்வதி நீண்ட நேரம் அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். சோகம் கப்பியிருந்த கண்களில் இரக்க நீர் சுரக்க ஆரம்பித்திருந்தது. அப்புறம் தலையைத் திருப்பி பக்கத்தில் அழுதவாறே நின்றிருந்த மகளைக் கூப்பிட்டாள். மீனா அருகில் வந்ததும் “சாப்பிட ஏதாச்சும் இருக்கா மீனா?” என்று கேட்டாள்.
“அடுத்த ஊட்டு அம்மா கொஞ்சம் கஞ்சி வச்சிக் குடுத்திருக்காங்க!” என்றாள் மீனா.
“அதக் கொஞ்சம் எடுத்திட்டு வா!”
மீனா ஓடி ஒரு சிறிய பாத்திரத்தில் கஞ்சி ஊற்றி அதில் ஒரு கரண்டியையும் போட்டுக் கொண்டு வந்தாள்.
“முத்தையா! கொஞ்சம் எடுத்து வாயில ஊட்டுப்பா!” என்றாள்.
முத்தையாவின் கரங்கள் வெடவெடவென்று நடுங்கின. கரண்டியிலிருந்து கொஞ்சம் கஞ்சி அம்மாவின் மார்பில் ரவிக்கை மேல் விழுந்தது. துடைக்க முயன்றான்.
“பரவால்ல! அப்புறம் தொடச்சிக்கலாம்!” என்றாள். அவள் வாயைத் திறந்து முத்தையா ஊற்றிய கஞ்சியைக் கொஞ்சமாகக் குடித்தாள். “போதும்!” என்றாள். சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்தாள். கைலியைச் சரிப்படுத்தினாள்.
“முத்தையா, நான் மெதுவா குடிச்சிக்கிறேன். நீ மீனாவையும் கூட்டிக்கிட்டு கிளினிக் போய் காயத்தக் காமிச்சிட்டு வாப்பா” என்றாள். தலைமாட்டிலிருந்து 20 ரிங்கிட்டை எடுத்துக் கொடுத்தாள்.
அவன் முகத்தில் தெளிவு வந்திருந்தது. மலர்ச்சி வந்திருந்தது! “நீ மொதல்ல சாப்பிட்டு முடிம்மா. நான் மெதுவா போறேன். மீனாவையும் கூட்டிட்டுப் போனா உன்ன யார் பாத்துக்குவாங்க?” என்றான்.
“நான் கூட்டிட்டுப் போறேன்!”
யார்? குரல் வந்த பக்கம் திரும்பினான். கேசவன்.
முத்தையாவில் முகத்தில் அனல் பறந்தது. “நீ ஏண்டா இங்க வந்த? எங்கம்மாவ செத்துத் தொலையிட்டும்னு சொன்னேல்ல!”
கேசவன் தலை குனிந்து தரையைப் பார்த்தவாறிருந்தான். அப்புறம் நிமிர்ந்து பார்வதியின் முகத்தைப் பார்த்துப் பேசினான்.
“எங்கம்மாவ நெனச்சி சொன்னேன். இந்த அம்மாவை இல்ல…!” என்றான் கேசவன்.
பார்வதி அவனைப் பரிவுடன் பார்த்தாள்.
“போடா! ஒன்னோட சேந்ததுனாலதான் இத்தனையும் நடந்திச்சி. இனி நீயும் நானும் கூட்டாளி இல்ல. எங்கம்மா சாப்பிட்றேன்னு சொல்லிட்டாங்க! இனி நீ தேவையில்ல! வெளியே போ!”
“இரு முத்தையா!” பார்வதி தடுத்தாள். கேசவனைப் பார்த்துச் சொன்னாள். “தம்பி! அழச்சிட்டுப் போப்பா! முத்தையாவுக்குத் துணையா போய் அவன பத்திரமா திருப்பிக் கொண்டாந்து விட்டிரு!” என்றாள்.
“வேணாம்மா! நான் தனியா போய்க்கிறேன்! இவன் வேணாம்! இவனோட சேந்தா இன்னும் கெட்டுத்தான் போவேன்!” என்றான் முத்தையா.
“இல்ல முத்தையா! கூடப் போ! இனிமே இந்தத் தம்பியால நீ கெட்டுப் போக மாட்ட! அதுதான் ஒன்னால திருந்தப் போகுதுன்னு நெனைக்கிறேன்!”
அம்மா மெதுவாகக் கஞ்சியை உறிஞ்சியவாறு அவர்கள் இருவரும் வெளியே போவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு மாங்காய்க்கு வைத்த குறியில் இரு மாங்காய்கள் கனிந்து விழுந்திருப்பது சந்தோஷமாய்த்தானிருந்தது. கஞ்சியைக் கீழே வைத்துவிட்டு மீனாவைப் பக்கத்தில் கூப்பிட்டு இறுக அணைத்துக் கொண்டாள்.

           ஏலக்காய் போட்டதனால் இறைச்சிக் குழம்பிலிருந்து கும்மென்று மணம் வந்தது. அடுப்பினடியில் உட்கார்ந்திருந்த பார்வதிக்கு வியர்த்துக் கொட்டியது. இருந்தாலும் இன்று இப்படி உட்கார்ந்து பிள்ளைகளுக்குச் சமைப்பதில் மகிழ்ச்சி இருந்தது. இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து அதிகாலை ஷி·ப்டும் ஓவர் டைமுமாக சனி ஞாயிறு உட்பட உழைத்ததில் வீட்டில் சமைக்க முடியவில்லை. பிள்ளைகள் ரொட்டியும் கடையில் வாங்கிய குழம்புமாக கிடைத்ததைத் தின்றுவிட்டுப் பள்ளிக்கூடம் போவதைத் தொழிற்சாலையில் இருந்த நேரத்திலெல்லாம் நினைத்துக் கவலைப் படுவாள் பார்வதி.இன்றையிலிருந்து ஒரு வாரத்துக்கு மத்தியான ஷி·ப்ட்.

 

          காலையில் மார்க்கெட் போய் பிள்ளைகளுக்குச் சமைத்து வைத்து விட்டுத் தானும் சாப்பிட்டுப் போகலாம். ஐந்தாம் வகுப்பில் படிக்கும் சின்னவள் லட்சுமிக்குக் காலைப் பள்ளிக் கூடம். பஸ் ஸ்கோலாவில் போய் வந்து தானாகப் போட்டுச் சாப்பிடுவாள். பெரியவன் முத்தையா இரண்டாம் பாரம் படிக்கிறான். மத்தியானப் பள்ளிக் கூடம். சைக்கிளில் போவான். அவனை உட்கார வைத்து சாப்பாடு போட்டு அனுப்பலாம்.கறி அடுப்பில் பாதி கொதித்துக் கொண்டிருக்க வியர்வையை வழித்தவாறு அவள் திரும்பிய போது முத்தையா பள்ளிச்சீருடையெல்லாம் போட்டுக் கொண்டு தயாராக நின்றான். அவளுக்கு வியப்பாக இருந்தது. இப்போதுதானே மணி பதினொன்று! அதற்குள் ஏன் இவன்…?“என்ன முத்தையா, அதுக்குள்ள கிளம்பிட்டே?” என்றாள்.“இன்னைக்கு டெஸ்ட் இருக்கும்மா. அதினால நானும் ·பிரன்டும் அவன் வீட்டில வெள்ளன உக்காந்து கொஞ்ச நேரம் படிக்கப் போறோம்” என்றான்.அவளுக்கு சந்தோஷமாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது. முன்பெல்லாம் நன்றாகப் படிக்கிற பிள்ளைதான். ஆனால் போன வருஷத்திலிருந்து அவனுக்கு மார்க்கெல்லாம் குறைந்து விட்டது.

 

       தான் வீட்டிலிருந்து அவனைப் படிக்கச் சொல்லி ஒழுங்காகக் கவனிக்க முடியாததுதான் காரணம் என்ற குற்ற உணர்ச்சி அவளுக்கு அதிகமாக இருந்தது. ஆகவே பிள்ளை தானாகவே டெஸ்டுக்குப் படிக்கப் போகிறேன் என்று கிளம்பியது அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. ஆனால் இன்றைக்கென்று சாப்பிடாமல்…“கொஞ்சம் இருந்து ஒரேயடியா சாப்பிட்டுட்டு போயேம்பா. இன்னைக்குன்னு அம்மா ஒனக்காகத்தான நல்ல கறி ஆக்கிக்கிட்டு இருக்கேன்…!”“நேரம் இல்லம்மா. சாப்பிட்டுப் போக நேரம் ஆயிடும். ராத்திரி வந்து சாப்பிட்டுக்கிறேன்” அவன் சைக்கிளில் ஏறிப் போவதை அவள் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.இந்த பிள்ளைதான் படித்துக் குடும்பத்தைக் கரையேற்ற வேண்டும். நல்லவன்தான். குடும்பத்தின் மீது பாசம் உள்ளவன்தான். ஆனால் பள்ளிக்கூடத்தில் எப்படியோ அவனுக்கு வாய்த்த நண்பர்கள் சரியில்லை.போன வருஷம் அவன் தமிழ்ப் பள்ளியில் படிப்பை முடித்துக் கொண்டு முதல் பாரத்தில் படிக்க தேசியப் பள்ளியில் சேர்ந்தபோது கேசவன் என்ற ஒரு பையனோடு விடாமல் சுற்றிக் கொண்டிருந்தான். அவன் படிப்பில் அக்கறை குறைந்தது. மார்க்குகள் குறைந்தன.

 

         பள்ளிக்கூடத்திற்கு அவன் முறையாக வருவதில்லை என்று அங்கிருந்து கடிதம் வந்தது.கேசவன் நல்ல பிள்ளையில்லை என்று பார்வதி கேள்விப்பட்டிருந்தாள். அவன் குடும்பம் சிதைந்த குடும்பம். தலைவன் இல்லாத குடும்பம். ஏறக்குறைய பார்வதியின் குடும்பத்தைப் போலத்தான். ஆனல் பார்வதிக்குக் குடும்பத்தின் மேல் உள்ள அக்கறை கேசவனின் தாய்க்கு இருக்கவில்லை. அவள் மிகச் சுதந்திரமாகக் கெட்டுத் திரிந்து அவன் தலையிலும் தண்ணீர் தெளித்துச் சுதந்திரமாகக் கெட்டுத் திரியவிட்ட மாதிரிதான் இருந்தது.“ஏம்பா, அந்தக் கேசவனோட உனக்கென்ன அவ்வளவு நெருக்கம்? அவன் நல்லவன் இல்லன்னு எல்லாரும் சொல்றாங்களே!” என்று பார்வதி ஒருநாள் விசாரித்துப் பார்த்தாள்.“சும்மாதாம்மா! அவன்தான் அடிக்கடி கூப்பிட்றான். நான் அவ்வளவு வச்சிக்கிறதில்ல!” என்றான் முத்தையா.“ஜாக்கிரதப்பா! அப்பனில்லாத பிள்ளைகளா நாந்தான் உங்கள வளக்க வேண்டியிருக்கு.

 

        நீதான் படிச்சி முன்னுக்கு வந்து குடும்பத்த காப்பாத்தணும். என் நம்பிக்கைய வீணாக்கிடாத!”“சரிம்மா, எனக்குத் தெரியும்மா. நீங்க கவலப்படாதீங்க” என்றான் முத்தையா.ஆனால் அப்புறமும் ஒரு நாள் அந்தக் கேசவனோடுதான் இவன் சுற்றுகிறான் என்று செய்தி வந்தது. பள்ளிக்கூட நேரத்தில் இருவரையும் கடைத்தெருவில் பார்த்ததாகச் சொன்னார்கள். பார்வதிக்கு வெறி வந்து விட்டது.வீட்டுக்குத் திரும்பியவுடன் கேட்டுப் பார்த்தாள். இல்லை இல்லையென்று வழுக்கி வழுக்கி பதில் சொன்னான். பள்ளிக்கூட நேரத்தில் கடைத்தெருவில் இருந்ததற்கு ஏதோ பொய்யான காரணங்களைக் கற்பித்துச் சொன்னான். அவன் பொய்களை அவளால் ஊடுருவிப் பார்க்க முடிந்தது.விறகுக் கட்டையை எடுத்தாள். அவன் முதுகிலும் கால்களிலும் தோள்பட்டையிலும் அடித்தாள். அவன் “வேணாம்மா, வேணாம்மா, இனிமே அவங்கூட சேர மாட்டேம்மா, விட்டும்மா!” என்று கெஞ்சக் கெஞ்ச அடித்தாள். அவன் கால்களிலிருந்து ரத்தம் கசியத் தொடங்கியபோதுதான் அவள் கோபம் அடங்கியது.அப்புறம் அவனைக் கட்டிப் பிடித்து அழுது காயங்களுக்கு மருந்து தடவி ஒரு மணி நேரம் அவனோடு பேசினாள்.

 

       ஒருவேளை தன் பழைய கதையைச் சொன்னால் வயது வந்த பிள்ளைக்கு வாழ்க்கையின் வக்கிரங்கள் விளங்கலாம் என்று அதைச் சொன்னாள். தான் படிக்க வேண்டிய வயதில் அவனுடைய அப்பனின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி படிப்பையும் குடும்பத்தையும் உதறிவிட்டு அவனோடு வீட்டை விட்டு ஓடிவந்த கதையைச் சொன்னாள். பின்னால் அவன் அவளுக்கு வாழ்க்கையில் ஒரு பொருளாதாரச் சுகத்தையும் தராமல் இந்த இரண்டு பிள்ளைகளை மட்டும் பெற்றுத் தந்து விட்டு, இன்னொரு இளம்பெண்ணை இழுத்துக் கொண்டு எங்கோ ஓடிவிட்ட கதையைச் சொன்னாள்.“முத்தையா! அந்த ஓடுகாலித் தகப்பன் மாதிரி நீ ஆயிடக் கூடாதுன்னுதாம்பா நான் கவலப் பட்றேன். ஆத்திரப் பட்றேன். நீ படி. முன்னுக்கு வா. அதுக்குத்தான நான் ராத்திரியும் பகலுமா ஒழைக்கிறேன். நீ பெரிய மனுஷனா வா. அப்புறம் என்னைக்காவது உங்கப்பன் ஒன்னத் தேடி வந்தா அவனுக்கு நல்லா புத்தி சொல்லிக்குடு. அத நான் பாக்கணும்பா” என்று அழுதழுது சொன்னாள்.அவனும் அழுதான். “சரிம்மா! நீ அழுவாதம்மா!” என்று அவள் கண்களைத் துடைத்தான். “நான் நல்லவனா இருக்கிறேம்மா. இனிமே அந்த கேசவனோட சேரமாட்டேம்மா! இது சத்தியம்மா!”அவனை மார்போடு அணைத்துக் கொண்டாள்.இந்த வருஷம் பிள்ளை அக்கறையாகப் படிப்பதைப் போலத்தான் தோன்றுகிறது. அமைதியாக இருக்கிறான். மற்ற நண்பர்களோடு சேர்ந்து படிக்கிறான். பாடங்களில் சுமாரான மார்க்குகள் வாங்குகிறான்.அவன் சைக்கிள் மறையும் வரை அவனைப் பாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் பார்வதி.

 

          முத்தையா சைக்கிளைக் கீழே நிறுத்திவிட்டு அந்த நான்கு மாடி மலிவு விலை அடுக்கு மாடிக் கட்டிடத்தின் இருண்ட படிக்கட்டுகளில் ஆவலோடு ஏறி வந்தான். குப்பை கூளம் மிக்க வராந்தா வழியாக நடந்து அந்த வீட்டின் கதவைத் தட்டிய போது அது தானே திறந்து கொண்டது. வீடு “ஓ”வென்று கிடந்தது. கேசவன் வீட்டில் இல்லை. வழக்கம் போல் வீட்டில் வேறு யாரும் இல்லை.கேசவனின் அப்பாவைப்பற்றி முத்தையாவுக்கு ஒன்றும் தெரியாது. கேசவனும் பேசுவதில்லை. அவன் அண்ணன் கோலாலும்பூரில் ஏதோ ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறான். எப்போதாவது இந்த பினாங்குக்கு அம்மாவையும் தம்பியையும் பார்க்க வீட்டுக்கு வருவதோடு சரி. அப்படி வீட்டுக்கு வரும் போதெல்லாம் கேசவனுக்கு நிறையப் பணம் கொடுத்துப் போவான். அந்த நாட்களில் எல்லாம் கேசவனின் அனுசரணையில் முத்தையாவுக்கும் ரொம்ப விருந்துதான். படம், வீடியோ கேம், சாப்பாடு என்று அலுக்காது. கேசவனின் அம்மா இதை ஒன்றையும் கண்டு கொள்வதில்லை.

 

        காலையில் மிகத் தாமதமாக எழுந்து அலங்கரித்துக் கொண்டு வெளியே போனால் திரும்ப வருவது நள்ளிரவோ அதற்குப் பிறகோ…!எங்கே போயிருப்பான் கேசவன்? “நாளைக்குப் பள்ளிக்கூடத்துக்கு போறதுக்கு முன்னால வா! புது வீடியோவுக்கு சொல்லி வச்சிருக்கேன். பாத்திட்டுப் போலாம்” என்றான்.“என்ன படண்டா? படையப்பாவா?” ஆவலோடு கேட்டான் முத்தையா.“போடா உன் படையப்பாவும் –ரப்பாவும்!” அவன் அப்படித்தான் பேசுவான். கொச்சை வார்த்தைகள் சரளமாக வந்து விழும் பேச்சு. அது ஆண்மையும் தைரியமும் கலந்த உலகத்தைப் புறந்தள்ளி தன்னை ஏற்றி வைத்துக் கொண்ட வீரப் பேச்சாகவும் முத்தையாவுக்குத் தெரியும்.அதுதான் இந்த கேசவனிடமிருந்த கவர்ச்சி. அவன் இந்த உலகத்தைத் தலைகீழாகப் படித்திருக்கிறான். படித்து இதைப் புறக்கணிக்கவும் இகழவும் உமிழவும் கற்றுக் கொண்டிருக்கிறான். பள்ளிக்கூடம், படிப்பு அவனுக்குக் கால் தூசு. “படிச்சி என்ன –ரப் –ங்கப் போறோம்? ஒரு நாளைக்கு இருவது முப்பதும் சம்பாரிக்கவா? இப்பவே நான் முப்பது நாப்பது சம்பாரிக்கிறேன் தெரியுமா?”யார் யாருக்கோ ஏதேதோ டெலிவரி வேலை செய்தான். ஒவ்வொரு டெலிவரிக்கும் கை மேல் பணம். அவன் அண்ணன் வீட்டில் விட்டுப் போயிருந்த மோட்டார் சைக்கிளில் லைசன்ஸ் இல்லாமலேயே சுற்றுவான்.

 

       போலிஸ்காரன் எங்கு மறைந்திருப்பான், அவனை எப்படி ஏய்த்து வேறு குறுக்கு வழிகளில் போகலாம் எல்லாம் அவனுக்குத் தெரியும். அப்படியே பிடிபட்டுவிட்டால் எப்படிக் குழைவது, எத்தனை தருவது எல்லாம் தெரிந்து தயாராக இருப்பான்.பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போட அவன் அஞ்சுவதில்லை. அவன் பள்ளிக்கூடம் வரவில்லை என்று அறிவிக்கும் கடிதங்கள் வீட்டு முகவரிக்கு வந்தால் தானே பிரித்து கள்ளக் கையெழுத்துப் போட்டு கொண்டு வந்து கொடுத்துவிடுவான். முத்தையாவிடம் எல்லாம் சொல்லியிருக்கிறான். முத்தையா ஏதேதெல்லாம் செய்ய முடியாமல் தயங்குகிறானோ அத்தனையும் கேசவன் செய்வான். கேசவன் முத்தையாவின் ஹீரோ. அவன்தான் படையப்பா, அருணாச்சலம், பாட்சா!“அப்புறம் என்ன படண்டா?”“வேற படம் சொல்லி வச்சிருக்கேன். புளூ ·பிலிம். இந்தியாவிலிருந்து வந்தது. ·பிலிம் ஸ்டார்ஸ். எல்லாம் தமிழ்ப் பொம்பிளங்க!”“கிர்”ரென்று ஒரு காம உணர்ச்சி ஏறியது. “தமிழ்ப் பொம்பிளங்களா? நெசமாவா? இது வரைக்கும் சீனத்திங்க வெள்ளக்காரிச்சிங்கதான…”“அதெல்லாம் பழசு. ஆனா ரொம்ப பத்திரமா இருக்கணும். போலிஸ்காரங்க தேடிக்கிட்டிருக்காங்களாம்.

 

          ஒரு காப்பி மூணு மணிநேரம் வாடகைக்கு எடுக்க அம்பது வெள்ளி”“அம்பது வெள்ளியா?”“போடா —! “அம்பது வெள்ளியா”ன்னு வாயப் பொளக்கிறான். ஒங்கிட்ட இப்ப காசு கேட்டனா? படத்துக்கு நாந்தான் டெலிவரி போய்! நீ எனக்கு பெஸ்ட் ·பிரன்ட் இல்லியா! நாளைக்கு வா. ஒனக்கு ·ப்ரீ ஷோ!”இரவு முழுவதும் தூக்கம் பிடிக்கவில்லை. அவனுடைய அபிமான நடிகைகள் நிர்வாணமாக மனதில் உலா வந்தார்கள். கேசவனின் வீரத்தோற்றம் முத்தையாவின் எண்ணத்தில் இன்னும் உயர்ந்தது. என்ன அபூர்வமான விஷயங்களெல்லாம் வைத்திருக்கிறான்! எப்படியெல்லாம் பூந்து விளையாடுகிறான்! எத்தனை தைரியம், தன்னம்பிக்கை! அவனை நெருங்கிய நண்பனாக அடைந்திருப்பதில் அவன் வகுப்பு மாணவர்கள் மத்தியில் அவனுக்கு ஒரு தனிப் பெருமை இருந்ததாக நினைத்துக் கொண்டான்.நாளைக்குப் பள்ளிக்கூடம் போகும் வேளையில் அம்மா வீட்டில் இருப்பாள். ஆனால் ஏதாகிலும் சமாதானம் சொல்லிவிட்டுப் புறப்படலாம். தெரிந்தால் தொலைத்து விடுவாள்.

 

       கேசவன் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறான்! எந்தப் பிச்சுப் பிடுங்கலும் இல்லை. இந்த வீட்டில் எந்த நேரமும் நச்சு நச்சென்று…!ஆனால் அம்மா சொல்வதும் சரிதான். கேசவனைப் போலத் தான் ஆக முடியாது. அவனைப் போல பொறுப்புகள் இல்லாமல் சுற்ற முடியாது. அம்மா தன்னைத்தான் நம்பியிருக்கிறாள். தன்னை உழைத்துக் காப்பாற்ற வேண்டிய அப்பா இல்லாத குறைக்குத் தொழிற்சாலையில் இரண்டிரண்டு ஷி·ப்டாக வேலை செய்கிறாள். கண்களெல்லாம் சிவந்து போய் வீடு வருகிறாள். வீட்டிலிருக்கும் நேரத்திலெல்லாம் முதுகிலும் தோளிலும் வலி நிவாரணித் தைலங்களைத் தேய்த்துக் கொண்டு அந்த நாற்றத்தோடே சுற்றிக் கொண்டிருக்கிறாள். பாவமாக இருக்கிறது. அவளைக் காப்பாற்ற வேண்டும்.ஆனால் இன்று ஒரு நாள்… இந்த வாய்ப்பை விட முடியாது. தமிழ் நடிகைகளாமே…! குஷ்புவா, ரம்பாவா? ஆ…!இரவு முழுவதும் நாளைக்கு நண்பனுடன் ரகசிய கூட்டில் ஈடுபடும் கிளர்ச்சி, காமக் கிளுகிளுப்பு, அம்மா நினைவுக்கு வந்த மாத்திரத்தில் குற்ற உணர்ச்சி, நாளைக்குப் பிறகு நல்லவனாக மாறிவிடலாம் என்ற சமாதானம் எல்லாம் வந்து அவனைத் தூங்க விடாமல் அடித்திருந்தன.இத்தனைக்கும் மத்தியில் இத்தனை எதிர்பார்ப்புக்களுடன் இங்கே வந்து… எங்கே போனான் கேசவன்?முத்தையா கேசவனின் வீட்டுக்கு வெளியிலேயே வராந்தாவில் உட்கார்ந்து காத்திருந்தான். இன்னும் ஒரு மணி நேரத்தில் பள்ளிக் கூடம் போயாக வேண்டும். படம் பார்க்க அரை மணி நேரமாவது ஆகும்.

 

         கேசவன் துரோகம் பண்ணி விட்டான். இனிமேல் இவனை நம்பக் கூடாது. இவனுடன் என்ன தோழமை வேண்டிக் கிடக்கிறது? ஒழித்துத் தொலைக்க வேண்டும். அயோக்கியன்.இருந்தாலும் கொஞ்ச நேரம் இருந்து பார்க்கலாம். இல்லாவிட்டால் “என்ன –ரு அவசரம் ஒனக்கு? அஞ்சு நிமிஷம் காத்திருக்கக் கூடாதா?” என்று திட்டுவான்.வராந்தா வழியே ஒரு தமிழ்ப் பெண் போனாள். அவனைப் பார்த்து லேசாகச் சிரித்தது போல் இருந்தது. முத்தையா தெரியாதது மாதிரி தலையைத் திருப்பிக் கொண்டான். யார் எங்கேயோ பார்த்தது போல….! அம்மாவை ஒரு நாள் பார்க்க வந்தாளோ? அம்மாவோடு வேலை செய்யும் பெண்ணோ? மனம் திடுக்கிட்டது. தெரிந்து கொண்டிருப்பாளா? அம்மாவிடம் சொல்வாளோ? ஒரு மாதிரி பயம் வந்து கவிந்தது.சீச்சி! தெரிந்திருக்காது. வீட்டுக்கு வந்தபோது என்னைப் பார்த்தது கூட நினைவிருக்காது. எப்பவோ ஒரு நாள். மறந்து போயிருக்கும். மனம் சமாதானப் பட்டது.காத்திருந்தான். இன்னும் ஐந்து நிமிடங்கள். பள்ளிக்கூடத்துக்கு லேட்டாகிவிடும். பரவாயில்லை. கொஞ்சம் லேட்டானால் சமாதானம் சொல்லிக் கொள்ளலாம். “பைசிக்களில் காத்துப் போய்விட்டது சார், அம்மாவுக்கு ஒடம்பு சரியில்லை சார், வயித்து வலி சார்” எத்தனையோ மாதிரி சொல்லலாம்.மோட்டார் சைக்கிள் சத்தம் கீழே கேட்டு எட்டிப் பார்த்த போது கேசவன்தான். மோட்டார் சைக்கிளைக் கீழே வைத்துப் பூட்டிவிட்டு மேலே வந்தான்.“என்னடா லேட் பண்ணிட்ட?” என்று ஆவலோடு கேட்டான் முத்தையா.“போடா. பெரிய சிக்கலாப் போச்சி.

 

        வேற ஆளுங்க வாடகைக்கு வாங்கிட்டுப் போயிட்டாங்க. இன்னுங் கொஞ்ச நேரத்தில கெடைச்சிரும்”கேசவன் கவலைப்பட்டான். “கொஞ்ச நேரன்னா?”“இன்னும் அரை மணி நேரத்தில…”“இன்னும் அரை மணியா? கேசவா, பள்ளிக்கூடத்துக்கு நேரமாயிடுண்டா. நாளைக்குப் பாத்துக்கலாமா?”“போடா பெரிய பள்ளிக்கூடம். நீ போறதுன்னா போ! நான் இன்னைக்குப் போகல! நாளைக்கு இந்த வீடியோ கிடைக்காது. இன்னைக்கு திரும்ப குடுத்திறனும். அத வேற எடத்துக்கு அனுப்பப் போறாங்களாம்.”மனம் தவித்தது. “அப்படின்னா?”“வேணுமின்னா இருந்து பாத்துட்டுப் போ. இல்லன்னா ஒன் இஷ்டம்!”“பள்ளிக்கூடம்?”“–ர் பள்ளிக்கூடம்”கேசவனின் அந்தத் துணிவும் அலட்சியமும் கருத்தில் கொண்ட காரியத்தில் உறுதியாக நிற்பதும் தனக்கு ஏன் வரமாட்டேனென்கிறது? ஏன் பயமும் கோழைத் தன்மையுமே முன்னால் நிற்கின்றன? இந்த விஷயத்தில் பின்வாங்கிக் கேசவனின் முன்னால் தலைகுனிந்து வாலைச் சுருட்டிக்கொண்டு பள்ளிக்கூடத்துக்கு ஓட மனம் ஒப்பவில்லை. போனாலும் மனசு தவறிப் போன வீடியோவின் ஏக்கத்திலேயே இருக்கும்.இருந்து பார்த்துவிட்டுப் போய்விடுவது என முடிவு செய்தான் முத்தையா. “சரிடா!” என்றான்.“அப்ப நீயும் வா! மோட்டார் சைக்கிள்ளியே போயி கையோட வாங்கிட்டு வந்திரலாம்!” என்றான் கேசவன்.“ரெண்டு பேருமா? ஒனக்கே லைசன்ஸ் இல்லையே…!” என்று தயங்கினான் முத்தையா.“நீ இப்படித்தாண்டா, பொட்டப் பயந்தாங்கொள்ளி!”“சரி, வா போலாம்” என்றான் முத்தையா.

 

       “நிச்சயமா தெரியுமா கமலா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள் பார்வதி.“நிச்சயமா ஒம் மகன்தான். அப்படியா எனக்குத் தெரியாமப் போகும்?” என்றாள் கமலா.பார்வதி கமலாவின் முகத்தைப் பார்த்தவாறு அதிர்ந்து நின்றாள்.“அந்த கேசவன் ரொம்ப கெட்டவன் பார்வதி. பொய், திருட்டு எல்லாம் இருக்கு. ஆபாச வீடியோ வியாபாரம் பண்றவங்களோட சேந்து இவனும் வியாபாரம் பண்றானாம். என் மகன்கிட்ட கூட வாங்கிப் பாக்கிறியான்னு கேட்டானாம்!”பார்வதிக்கு மனசு ஆடிப் போனது. உடம்பும் கூட ஆடியது. செய்யும் வேலை மறந்து விட்டது. அப்படியே நின்றாள்.“என்ன பார்வதி?” என்று அருகே வந்தாள் கமலா.கண்ணீர் பொலபொலவென கொட்டியது. துடைத்துக் கொண்டே சொன்னாள்: “அவங்கிட்ட கெஞ்சி பாத்திட்டேன் கமலா. அடிச்சி பாத்திட்டேன். அடிச்ச பிறகு கொஞ்சியும் பாத்திட்டேன். இனிமே அவனோட சேரமாட்டேன்னு இல்லாத சத்தியமெல்லாம் பண்ணிட்டான். அப்படி பண்ணிட்டு இப்படி ஏய்ச்சிட்டானே…. நான் என்னதான் பண்ணுவேன்?”அவளுக்கு ஆறுதல் கூற முடியாமல் கமலாவும் அயர்ந்து நின்றாள்.

 

       வீடு திரும்பும் போது முத்தையாவுக்கு குற்ற உணர்ச்சிதான் அதிகமாக இருந்தது. வீடியோ பார்க்கும் போது இருந்த கிளர்ச்சிகள் எல்லாம் குறைந்து விட்டிருந்தன.வீடியோவைத் தேடி ஓடி காத்திருந்து வாங்கி கேசவனின் வீட்டில் ஜன்னல்களையெல்லாம் அடைத்துவிட்டு போட்டுப் பார்த்து முடித்ததில் நேரம் போய்விட்டது. இனி பள்ளிக்கூடம் போவதில் அர்த்தமில்லை என்று தோன்றியவுடன் கண்ட இடத்தில் அலைந்து விட்டு வீட்டுக்குத் திரும்பும் சரியான நேரத்திற்குத் திரும்பினான்.வீடு திரும்பும் வேளையில் அம்மா வீட்டில் இருக்க மாட்டாள் என்பது ஆறுதலாக இருந்தது. இருந்தாலும் அக்கம் பக்கத்தார் பார்க்கக்கூடும் என்பதற்காக இந்த நடிப்பு தேவையாக இருந்தது.வீட்டில் தங்கை மீனா மட்டும் தனியாக இருந்தாள். முத்தையா குளித்துவிட்டு டிவி பார்த்துவிட்டு அம்மா வீடு வரும் நேரத்துக்கு புத்தகத்தைத் திறந்து வைத்துப் படிப்பதாகப் பாவனை செய்து கொண்டிருந்தான். அம்மா வரும் நேரம் நெருங்க நெருங்க அம்மாவின் சகதொழிலாளி தன்னைக் கேசவன் வீட்டில் பார்த்த நினைவு அடிக்கடி வந்தவாறிருந்தது. அம்மாவுக்குத் தெரிந்து விட்டிருக்குமா? பயம் கவிந்தது.சனியன், ஏன் இந்தப் படத்தைப் போய்ப் பார்த்தோம்? பார்த்தால் எல்லாம் பம்மாத்து வேலை. சில சினிமா காட்சிகளைக் காட்டி அப்புறம் தலையில்லாத முகந்தெரியாத முண்டமான பெண்களை வெட்டி ஒட்டி… எல்லாம் சுத்த ஏமாற்று வேலை. இதற்காகப் பள்ளிக்கூடத்திற்கு மட்டம் போட்டு, அம்மாவிடம் பொய் சொல்லி, நாளைக்குப் பள்ளிக்கூடத்திலும் பொய் சொல்லி…. சீச்சீ!அம்மா ஏழு மணிக்கு வந்தாள். அவள் முகத்தில் தன் குட்டு உடைந்துவிட்ட அறிகுறிகள் தெரிகின்றனவா என்று முத்தையா ரகசியமாகப் பார்த்தான். ஒன்றும் தெரியவில்லை.

 

      அம்மாவின் முகத்தில் நீண்ட நேர உழைப்புக்குப் பின் தெரியும் வழக்கமான களைப்பும் இறுக்கமும்தான் இருந்தன போலத் தெரிந்தது. ஒன்றும் பேசாமல் குளிக்கப் போனாள். அவனுக்குப் பெரிய ஆறுதலாக இருந்தது. ஒன்றும் அம்பலமாகவில்லை.அம்மா பகல் ஷி·ப்ட் செய்யும் போதெல்லாம் இரவில் அவர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதுதான் வழக்கம். முத்தையாவுக்கு பயங்கள் தெளிந்தவுடன் காலையில் அம்மா சமைத்த ஆட்டுக் கறியின் நினைவு வந்தது. நாக்குச் சப்புக்கொட்டிக் காத்திருந்தான்.அம்மா குளித்து வந்ததும் ஒன்றும் பேசாமல் கறியைச் சுடப் பண்ணி சாப்பாடு எடுத்து வைத்தாள். குழந்தைகள் சாப்பிட ஆரம்பித்ததும் அவள் டிவி முன்னால் போய் உட்கார்ந்து விட்டாள்.“ஏன் அம்மா, நீங்க சாப்பிடலயா?” என்று மீனா கேட்டாள்.“நீங்க சாப்பிடுங்க! எனக்குப் பசியில்ல!” என்றாள் பார்வதி.

 

       மறுநாள் பள்ளிக்கூடம் போய் வகுப்பு ஆசிரியரிடம் மழுப்பி மழுப்பிக் காரணம் கூறித் தப்பித்தாகிவிட்டது. ஆனால் நேற்று எதிர்பாராமல் கணக்கு ஆசிரியர் திடீர் கணக்குப் பரிசோதனை வைத்தார் என்றும் அதில் கலந்து கொள்ளாததால் அது ஆண்டு ரிப்போர்ட் கார்டில் “வரவில்லை” என்று எழுதப்படும் என்றும் கேள்விப்பட்டபோது அவனுக்கு வயிற்றைக் கலக்கியது.கேசவனும்தான் கலந்து கொள்ளவில்லை. ஆனால் இது அவனுக்குப் பொருட்டல்ல. அவன் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை. அவன் ரிப்போர்ட் கார்டைக் கேட்டுப் பார்க்க ஆளில்லை. கள்ளக் கையெழுத்தும் அவனே போட்டுக் கொள்வான். ஆனால் முத்தையாவின் அம்மா தவறாமல் கேட்டு வாங்கிப் பார்ப்பாள். அந்தப் பரிட்சையில் கலந்து கொள்ளாமல் போனதை ரிப்போர்ட் கார்டில் கையெழுத்து வாங்கும்போது அம்மாவுக்கு விளக்கியாக வேண்டுமே! இப்போதே மனம் பொய்ச் சமாதானங்களைத் தயாரிக்கத் தொடங்கியிருந்தது.அன்று இரவும் சாப்பிட உட்கார்ந்த போது அம்மா சாப்பாட்டுக்கு வரவில்லை. அதிகம் பேசவும் இல்லை. ஆளும் மிகச் சோர்ந்து இருந்ததுபோல் காணப் பட்டாள். மீனாவைக் கூப்பிட்டு “நீயே எடுத்துப் போட்டுச் சாப்பிடு மீனா! அண்ணனுக்கும் போட்டுக்குடு!” என்றாள்.சாப்பிடும் போது முத்தையா மீனாவிடம் ரகசியமாகக் கேட்டான்: “ஏன் மீனா, அம்மாவுக்கு என்ன, ஒடம்பு சரியில்லியா?”“எனக்குத் தெரியாது!” என்று வெடுக்கென்று சொன்னாள் மீனா.மறுநாள் பகல் பார்வதி படுக்கையிலேயே இருந்தாள்.

 

         முத்தையா பள்ளிக்கூடத்திற்குத் தயாராகிய போது சாப்பாடு ஒன்றும் தயாராகியிருக்கவில்லை.அவன் அவள் படுக்கையை எட்டிப்பார்த்து “ஏம்மா இன்னைக்கு சமைக்கிலியா?” என்றான்.அவள் தலைமாட்டிலிருந்து ஐந்து வெள்ளியை எடுத்துக் கொடுத்து “ஏதாச்சும் கடையில வாங்கிச் சாப்பிட்டுட்டு, ராத்திரிக்கு வரும்போதும் ஏதாச்சும் வாங்கிட்டு வந்திரு!” என்றாள்.காசை வாங்கிக் கொண்டு “ஏம்மா, ஒடம்பு சரியில்லையா?” என்று கேட்டான்.ஒன்றும் பேசாமல் திரும்பிப் படுத்துக் கொண்டாள். கொஞ்ச நேரம் நின்றுவிட்டு பேசாமல் போனான்.பள்ளிக்கூடத்தில் இருந்த போதும் அம்மா நினைவு அதிகமாக இருந்தது. ஏதோ சரியில்லை என்று தோன்றியது. அம்மா உடல் தளர்ந்திருக்கிறாள். இப்படி அவள் படுத்து அவன் பார்த்ததே இல்லை. இப்படி இருந்தால் எப்படி வேலைக்குப் போவாள்?ஒரு வேளை தான் செய்தது தெரிந்து விட்டதா? தெரிந்தால் ஏன் கேட்கவில்லை? ஏன் கத்தவில்லை? ஏன் அடிக்கவில்லை? தெரிந்திருக்காது. வேறு காரணமாக இருக்கலாம்.அன்று மாலை வீட்டுக்கு கொஞ்சம் அவசரமாகவே வந்தான். வரும் வழியில் மறக்காமல் எல்லாருக்கும் ரொட்டிச் சாணாய் வாங்கிக் கொண்டு வந்தான்.அவன் சந்தேகப் பட்டதைப் போலவே அம்மா வேலைக்குப் போகாமல் படுத்தபடிதான் இருந்தாள்.

 

       தலை கலைந்து முகம் ஒடுக்கு விழுந்து கண்மூடிப் படுத்திருந்தாள். மீனாவின் குழந்தை முகத்திலும் சோகம் படர்ந்திருந்தது. வீடு முழுவதும் இருள் கவிந்திருந்தது.“என்ன மீனா, அம்மா ஏன் இப்படி இருக்காங்க?” என்று கவலையுடன் தங்கையைக் கேட்டான்.“தெரிலிய! ஒடம்பு சரியில்லன்னுதான் சொல்றாங்க. எங்கிட்டயும் சரியா பேசமாட்டேங்கிறாங்க! மூணு நாளா சாப்பாட்டையே தொடல. தண்ணி மாத்திரம்தான் குடிக்கிறாங்க. அடுத்தவீட்டு அம்மா வந்து பாத்திட்டுப் போனாங்க. “ஆஸ்பத்திரிக்குக் கொண்டுட்டுப் போகவா”ன்னு கேட்டாங்க. அம்மா வேணான்ட்டாங்க!” என்றாள்.முத்தையாவின் தொண்டைக் குழிக்குள் ஏதோ ஒன்று அடைத்துக் கொண்டது. கண்களில் அழுகை முட்டினாலும் அடக்கிக் கொண்டான். அம்மாவிடம் போய்ப் பேச பயமும் தயக்கமும் இருந்தது. ஆனால் இங்கு நிலைமை கைமீறிப் போய்க் கொண்டிருந்தது. பயமும் தயக்கமும் இருந்து பயனில்லை.அம்மாவின் படுக்கையை நோக்கிப் போனான். திரும்பிப் படுத்திருந்தாள். அவளுடைய கலைந்த, அழுக்கடைந்த கூந்தல் தாறுமாறாகக் கிடந்தது. அவளுடைய கைலி கலைந்து தளர்ந்து கிடந்தது.அவள் முதுகைத் தொட்டு “அம்மா!” என்றான்.

 

       மெதுவாகத் திரும்பி அவனைப் பார்த்தாள். கைலியைச் சரி செய்து கொண்டாள்.“உடம்புக்கு என்ன செய்யிது?” அழுகை மீண்டும் முட்டிக் கொண்டு வந்தது.பேசாமல் இருந்தாள். வெறுமையான விழிகளால் அவனைப் பார்த்தாள்.“சொல்லும்மா! நான் வேணா காடி பிடிச்சி ஒன்ன ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகட்டா?” என்று கேட்டான்.சிரமத்துடன் வாய் திறந்தாள்: “வேண்டாம் முத்தையா! என் ஒடம்புக்கு ஒண்ணும் இல்ல!”“அப்படின்னா ஏன் இப்படி இருக்கிற? ஏன் சாப்பிடாம இருக்கிற?”மீண்டும் பேச்சில்லை.“சொல்லும்மா!” என்றான்.“சாப்பிட்டு இந்த ஒடம்ப வளத்து என்ன பிரயோசனம் முத்தையா? நம்ப மாதிரி ஏழைங்களுக்கு என்ன எதிர்காலம் இருக்குது?”அவனுக்கு இதில் ஏதோ ஒரு வகையில் தான் சம்பந்தப்பட்டிருப்பது போலத் தெரிந்தது.“ஏம்மா இப்படியெல்லாம் பேசிற?” என்றான்.“ஆமாப்பா! நான் எவ்வளவுதான் கஷ்டப்பட்டு சீரளிஞ்சி போனாலும் நீ நல்லா படிச்சி இந்தக் குடும்பத்த முன்னுக்குக் கொண்டு வருவேன்னு நெனச்சேன். அது நடக்கப் போறதில்லன்னு நீ காட்டிட்ட! நீ உங்கப்பனப் போலத்தான் இருக்கப் போற! படிப்ப குட்டிச் சுவராக்கப் போற! ஒரு வயசு வந்ததும் ஒருத்திய ஏமாத்தி இழுத்து ஓடி இப்படி நம்ப குடும்பம் மாதிரி இன்னொரு லட்சியமே இல்லாத ஏழைக் குடும்பத்த ஆரம்பிக்கப் போற! குழந்தைகளப் பெத்துப் பாழாக்கப் போற! அதையெல்லாம் நான் உயிரோட இருந்து இன்னொரு தடவ பாக்கணுமா?”அவள் ஒரு மரக்கட்டையை எடுத்து அவன் முதுகில் அடி அடியென்று அடித்திருக்கலாம்.

 

       முன்பு அப்படி அடித்து அவன் தாங்கியிருக்கிறான். ஆனால் இந்தச் சொற்களின் அடி அவன் மனத்தில் வெட்டு வெட்டாகக விழுந்தன. மனத் தசைகளை இரத்தம் வழியக் கிழித்தன.“ஏம்மா இப்படியெல்லாம் பேசிற? நான் என்ன செஞ்சிட்டேன் இப்ப?” அழுகையோடு கேட்டான்.“ஒனக்குத் தெரியாதா முத்தையா? தெரியலன்னா நான் சொல்லிப் பிரயோஜனம் இல்ல! தெரியாத மாதிரி நடிக்கிறேன்னுதான் அர்த்தம். எத்தனையோ பொய்யோட இன்னும் ஒரு பொய்ய சொல்லப் போற அவ்வளவுதானே!” மெதுவாக முகத்தைத் திரும்பிக் கொண்டாள்.பேசாமல் உட்கார்ந்து கண்ணீரை வழியவிட்டுக் கொண்டிருந்தான். இனி மறைக்க முடியாது. இது முன்பு போல இல்லை. அம்மா முன்பு போல அடிக்காமல் ஏசாமல் தானாக தன் கழுத்தில் இறுக்கு முடிச்சுப் போட்டுக்கொண்டு அதன் ஒரு முனையை அவன் கையில் தந்திருக்கிறாள்.மனதைத் திடப்படுத்திக் கொண்டு சொன்னான். “சரி அம்மா, நான் செஞ்சது தப்புத்தான். பள்ளிக்கூடம் போகாம கேசவனோட சேர்ந்து படம் பார்த்தேன். நெசந்தான். இனிமே சத்தியமா அப்படி செய்ய மாட்டேம்மா! என்ன மன்னிச்சிரும்மா!”திரும்பி அவன் முகத்தைப் பார்த்தாள். “பிரயோஜனம் இல்ல முத்தையா! உன்னோட சத்தியம், என்னோட மன்னிப்பு இதுக்கெல்லாம் ஒரு மதிப்பும் கெடையாது. நீ சத்தியம் பண்ணிட்டியேன்னு நான் ஒன்ன அணைச்சிக்கிட்டு அழுது சமாதானம் ஆயிடலாம். ஆனா ஒரு வாரம் போனா எல்லாம் சகஜமா போயிடும். ஒனக்குக் கூட்டாளிங்க வந்திருவாங்க. பழைய ஆசைங்க எல்லாம் வந்திரும்.

 

       அம்மாவ ஏமாத்திறது எவ்வளவு சுலபம்னு ஒனக்குந் தெரியும். ஒனக்கு கைவந்த கலைதான. ஆகவே எல்லாம் மிந்தியப் போலத்தான் நடக்கும். பிரயோஜனமில்லப்பா!”அதிர்ச்சியடைந்து அவளைப் பார்த்தான். “இல்லம்மா! நான் உண்மையிலேயே திருந்திட்டேன்!”“அப்படியா? எவ்வளவு நேரமா திருந்தியிருக்க? இதோ அம்மாவுக்கு உண்மை தெரிஞ்சு போச்சின்னு நெனச்சவுடனே பல வருஷங்களா இருந்த கெட்ட பழக்கத்த உட்டு ஒரு நிமிஷத்தில திருந்திட்டியா? அவ்வளவு சீக்கிரம் திருந்தினவன் மறுபடி கெட்டுப் போறதுக்கு எவ்வளவு நேரம்பா வேணும்?”அம்மா குரல் அடைக்க அடைக்க மிக மெதுவாகப் பேசினாள். அவளால் உரத்துப் பேச முடியவில்லை. கோபத்தைக்கூடக் காட்ட முடியவில்லை. பலவீனமான தொனியில் அளந்து அளந்து பேசினாள். ஆனால் அவன் இதயத்தைக் குறி வைத்து குறி வைத்து அடித்தாள்.“என்ன என்னதாம்மா பண்ணச் சொல்ற?” அழுதான்.“ஒண்ணும் பண்ண வேணாம் முத்தையா. எதுவும் பண்ணிப் பிரயோஜனமில்ல! நீ விரும்பின வழியில நீ போகலாம். என்ன என் வழிக்குப் போக விடு!” மீண்டும் திரும்பிக் கொண்டாள்.“ஹீம்” என்று குரல் விட்டுக் கேவி அழுதான்.

 

      “வேணாம்மா! அப்படிப் பேசாத. நீ போயிட்டா எனக்கும் தங்கச்சிக்கும் என்ன கதி?”அவனைப் பார்த்தாள். “உனக்கும் தங்கச்சிக்கும் என்ன கதிங்கிறத நீதான் தீர்மானிச்சிட்டியே தம்பி! உங்கப்பா காட்டின வழிதான் உனக்கு வாய்ச்சிருக்கு. நீ இப்படியே போனா இந்தக் குடும்பம் முன்னேற முடியாம பாழாத்தான் போகும். நான் உயிரோட இருந்தாலும் இல்லைன்னாலும் இப்படித்தான் நடக்கும். ஆகவே இதையெல்லாம் பாக்காம நான் சீக்கிரமே போயிடலான்னு முடிவுக்கு வந்திட்டேன். ஒங்க தலைவிதிப்படி ஒங்க விருப்பப்படி நடக்கட்டும். நீ என்னுடைய கட்டுப்பாட்டில இல்ல. முழுக்க முழுக்க உன் நண்பனோட கட்டுப் பாட்டில இருக்க! அவன்தான் உனக்கு எதிர்காலத்துக்கு வழி சொல்லிக் குடுப்பான்!”“இல்லம்மா, அப்படிச் சொல்லாதம்மா! இன்னையோட அவனை விட்டுட்றம்மா! இனிமே அவனோட சேரமாட்டேம்மா. சத்தியம்மா, சத்தியம், சத்தியம்!” அவள் கையைப் பிடித்து உள்ளங்கையில் அடித்தான்.“மூணு சத்தியமாப்பா? காப்பாத்த அவசியமில்லாதபோது மூணு என்ன, நூறு கூடப் பண்ணலாம். எனக்கு நம்பிக்கையில்லப்பா!” என்றாள்.என்ன செய்ய நினைத்துவிட்டாள் இந்த அம்மா! செத்தே போவது என்று முடிவு செய்து விட்டாளா? தன்னையும் தன் தங்கையையும் அநாதைகள் ஆக்கிவிடுவதென்று முடிவு செய்து விட்டாளா? அந்த அளவுக்கா என் செயல் அவளைத் தைத்து விட்டது?முத்தையாவுக்கு மனம் முற்றாக உடைந்து போனது. கதறினான்.

 

      “வேணாம்மா? இப்படிச் செய்யாத! எங்கள விட்டுப் போகாத. நான் என்ன செய்யணும் சொல்லு? வேணுன்னா என்ன கட்டி வச்சி அடி! எனக்குச் சூடு வை. நான் பண்ணின குத்தத்துக்கு நீ ஏன் இப்படி தண்டனை அனுபவிக்கிற?”“ஏன்னா ஒனக்கு எந்தத் தண்டனை கொடுத்தாலும் பிரயோஜனம் இல்லாமப் போகுது. அதினால ஒன்ன சரியா திருத்தி வளக்க முடியாததுக்கு எனக்கே நான் தண்டனை கொடுத்துக்கிறேன். அவ்வளவுதான்!”“வேணாம்மா! நான் எல்லத்தையும் இன்னைக்கோட விட்டிட்றேன். நீ எந்திரிம்மா. சாப்பிடும்மா!” அழுதழுது சொன்னான்.அவள் லேசாக எழுந்து உட்கார்ந்தாள். முத்தையா அவள் எழுந்து சாய்ந்து கொள்ளத் தலையணையை முட்டுக் கொடுத்தான்.“இனிமே அந்த கேசவனோட சேராம இருப்பியா?”“சேரமாட்டேன். சத்தியம்மா!” கண்களைத் துடைத்துக் கொண்டான்.“அப்படின்னா அந்தக் கேசவனையே இங்க கொண்டாந்து எனக்குச் சத்தியம் பண்ணிக் கொடுக்கச் சொல்லு!”அதிர்ச்சியடைந்தான். கேசவனா? அவன் வருவானா? எப்படி வருவான்?“என்னப்பா அப்படிப் பாக்கிற? வருவானா?”“அம்மா! அவன் வருவானா இல்லையான்னு தெரிலம்மா! அவன் எதுக்கு? ஆனா நான் இனிமே அவன் கிட்டயே போக மாட்டேம்மா!”“முடியாது முத்தையா! நீ போக மாட்டே! ஆனா அவன் வந்தான்னா ஒட்டிக்குவ. ஒன்னால அவன எதிர்த்து நிக்க முடியாது. அவன வரச்சொல்லு. எங்கிட்ட சத்தியம் பண்ணிக் கொடுக்கச் சொல்லு!”“அம்மா!”“அதுவரைக்கும் நான் சாப்பிட மாட்டேன். இதே கட்டில்! இங்கேயேதான் என் உயிர் போகும்!”

 

        சைக்கிளை எடுத்துக் கொண்டு தலை தெறிக்கும் வேகத்தில் வந்து கேசவனின் அடுக்குமாடி வீட்டை அடைந்த போது இரவு மணி ஒன்பதாகி விட்டது. கேசவன் இருக்கிறானோ இல்லையோ தெரியவில்லை. கீழே அவன் மோட்டார் சைக்கிளைப் பார்க்க முடியவில்லை. தயக்கத்தோடு கதவைத் தட்டினான்.திறந்தது கேசவனின் அம்மா. அலங்காரம் ஒன்றுமில்லாமல் சூம்பிப் போன முகத்துடன் தலை முடி விரிந்து கிடந்தாள். “என்னா வேணும்?” என்று கேட்டாள். அவள் குரல் முரட்டுத் தனமாக இருந்தது.“கேசவனப் பாக்கணும் அண்டி” என்றான்.“நீ யாரு?”“நான் அவனோட ஸ்கூல் ·பிரண்ட். அவன அவசரமாப் பாக்கணும்!”“அது ஊட்டில எங்க இருக்கு?”“எங்க போயிருக்கான்? எப்ப வருவான்?”“ஆமா, எங்கிட்ட சொல்லிக்கிட்டுத்தான் போவுது. யாருக்குத் தெரியும்? நாய் மாதிரி ஊரெல்லாம் சுத்தும். ஆமா நீ ஏன் இந்த ராத்திரி நேரத்தில அதத் தேட்ற?”“பேச வேண்டியிருக்கு அண்டி”“ஆமா, நீங்க ராத்திரி ராத்திரியாதான் கூடிப் பேசிறதா? ஒன்னப்போல ·பிரன்ட்ஸ் சேந்துதான் அதையும் இப்படித் தறுதலையா ஆக்கிட்டிங்க!” கோபத்தோடு பேசினாள்.“அண்டி! வந்தா என் வீட்டுக்கு வரச் சொல்லுங்க அண்டி. அவசரம். என் பேரு முத்தையா. அவனுக்கு வீடு தெரியும்!”ஒன்றும் சொல்லாமல் கதவை பட்டென்று சாத்தினாள்.என்ன செய்வது என முத்தையா யோசித்தான். வீட்டுக்குப் போய் அம்மாவின் கையைப் பிடித்து அழலாம் என்று தோன்றினாலும் கேசவன் இல்லாமல் அம்மாவைப் பார்த்துப் பயனில்லை எனத் தோன்றியது. அம்மா அவனை ஏறெடுத்தும் பார்க்கமாட்டாள்.

 

         முகத்தைத் திருப்பிப் படுத்துக் கொண்டு சொன்னது போலவே செத்துப் போய்விடுவாள்.கீழே போய் ஏறிவரும் படியில் உட்கார்ந்தான். முத்தையா வர என்னேரமானாலும் உட்கார்ந்து அவன் கையைப் பிடித்து அழைத்துப் போகாமல் விடுவதில்லை.அந்த மலிவு விலை அடுக்குமாடிக் கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் எங்கோ மூலையிலிருந்து மூத்திர மணம் வந்தது. கொஞ்சம் தூரத்தில் சீனர் அங்காடிக் கடைகளில் கொய்த்தியோவும் மீயும் பிரட்டுகின்ற மணமும் சத்தங்களும் வந்தன. தொடைகளில் முழங்கைகளை முட்டுக் கொடுத்துக் கொண்டு முத்தையா காத்திருந்தான். மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்படும் இடத்தில் அவன் பார்வை நிலைத்திருந்தது. கேசவன் வந்தால் அங்குதான் வந்து நிற்பான். பிடித்துவிடலாம்.அம்மா எப்படி இருப்பாள் என்ற நினைவே புரண்டு புரண்டு வந்ததது. அவள் படுக்கையில் ஒரு கந்தல் துணி போல நைந்து போய்க் கிடந்தது ஞாபகத்திற்கு வந்தது. “அம்மா! எங்களை விட்டுப் போய்விடாதே! நான் திருந்தி விட்டேன்! நான் குடும்பத்தைக் காப்பாற்றுவேன்! எனக்காகக் காத்திரு!” மனம் நடுங்கியது.ஒன்பது மணியளவில் கேசவன் மோட்டார் சைக்கிளோடு வந்தான். அவன் நிறுத்து முன் அவனை நோக்கி ஓடினான் முத்தையா.“என்னடா முத்தையா, இந்த நேரத்தில!”“கேசவா. நீ இப்பவே என்னோட எங்க வீட்டுக்கு வரணும்”“உங்க வீட்டுக்கா? ஏன்? என்ன விஷயம்?”எப்படிச் சொல்வது என்று யோசித்தான்.

 

           “கேசவா எங்க அம்மா சாகப் பிழைக்க கெடக்கிறாங்க!”“ஏன்? என்ன சீக்கு?”“சீக்கு இல்லடா. அன்னைக்கு நாம ரெண்டு பேரும் பள்ளிக் கூடம் போகாம இங்க வீடியோ பாத்தது அம்மாவுக்குத் தெரிஞ்சி போச்சி! அதினால இனிமே நான் அப்படியெல்லாம் செய்யக் கூடாதுன்னு மூணு நாளா சாப்பிடாம இருக்காங்க!”கேசவன் அவனை மேலும் கீழும் பார்த்தான். “போடா –ரு! இதுதாண்டா ஒன்ன சேத்துக்கிறதில உள்ள தொல்லை. ஏன் உங்கம்மாவுக்கு சொல்லித் தொலைச்ச?”“நான் சொல்லலடா!” அம்மாவுக்கு எப்படித் தெரிந்திருக்கலாம் என்பதைச் சுருக்கமாகச் சொன்னான்.“நீயும் உங்கம்மாவும் எப்படியாவது போங்க! என்ன எதுக்கு இதில இழுக்கிற?” என்றான் கேசவன் எரிச்சலோடு.“இல்லடா! நான் இனிமே இப்படியெல்லாம் செய்ய மாட்டேன்னு சொன்னாலும் எங்கம்மா ஏத்துக்க மாட்டேங்கிறாங்க. நீ வந்து சொல்லணுமாம். வாடா. ஒன்னக் கெஞ்சிக் கேட்டிக்கிறண்டா!”கேசவன் மருண்டிருந்தான். கண்களில் கோபமும் பயமும் இருந்தன. “போடா போடா!” என்று மிகக் கொச்சை வார்த்தைகளில் முத்தையாவைத் திட்டினான்.“என்ன என்ன வேணுன்னாலும் சொல்லு. நான் கேட்டுக்கிறேன். ஆனா என்னோட வந்து எங்கம்மாவுக்கு ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போடா!”“போடா! எதுக்கு நான் வரணும்? அங்க வந்து நாந்தான் புளூ ·பிலிம் காமிச்சேன்னு ஒத்துக்கிட்டு அப்புறம் உங்கம்மா போலிசைக் கூப்பிட்டு பிடிச்சிக் குடுக்கவா? முடியாது. நீ போய் என்ன வேணுன்னாலும் பண்ணிக்க. நான் வரமுடியாது.”“கேசவா! நீ வரலின்னா எங்கம்மா செத்துப் போயிடுவாங்கடா!” முத்தையா அழுதான்.

 

            “செத்துத் தொலைக்கிட்டுமே! சாவமாட்டாளான்னுதான் நான் காத்துக்கிட்டு இருக்கேன்!” அலட்சியமாகச் சொன்னான் கேசவன்.“என்னடா சொன்ன?” முத்தையா பாய்ந்து அவன் சட்டையைப் பிடித்தான். “எங்கம்மாவையா செத்துத் தொலையச் சொன்ன? எங்கம்மாதாண்டா எனக்கும் உசிரு! அவங்க உயிர் போச்சின்னா ஒன்னயும் கொன்னுட்டு நானும் செத்துப் போவேண்டா!”கேசவன் அவனைப் பிடித்துத் தள்ளினான். முத்தையா சட்டையை விடவில்லை. இருவரும் தார் ரோட்டில் விழுந்து புரண்டார்கள். முத்தையா கேசவனின் முகத்தில் குத்தினான். கேசவன் திருப்பிக் குத்தினான். முத்தையா விழுந்த இடத்தில் தலையில் பட்டு கொஞ்சமாக ரத்தம் வழிந்தது.சீனர்கள் அங்காடிக் கடையிலிருந்து ஒரு கூட்டம் வேடிக்கை பார்க்க ஓடிவந்தது. கேசவன் முத்தையாவை ஓர் ஓரமாகத் தள்ளினான். அங்கிருந்து ஓடி தன் மோட்டார் சைக்கிளை உதைத்துக் கிளப்பினான். ஏதோ ஒரு பக்கம் தலை தெறிக்க ஓட்டி மறைந்து போனான்.முத்தையா மெதுவாக எழுந்தான். கூடியிருந்த சிறிய கூட்டத்தைப் பார்த்தான். தலையில் கை வைத்து ரத்தத்தைப் பார்த்தான். தலையும் குத்துப் பட்ட முகமும் “விண்விண்”னென்று வலித்தன. ஆனால் அதைவிட மனம்தான் அதிகமாக ரணப்பட்டுக் கசிந்திருந்தது. இந்த அயோக்கிய நண்பனின் உறவால் அம்மாவையே இழந்து விடுவோமோ என்ற திகில் வந்து படர்ந்தது. அவமானமும் ஏமாற்றமும் மனதை அழுத்த குனிந்தவாறே சோர்ந்து போய் தன் சைக்கிளை நோக்கி நடந்தான்.

 

           தன்னைக் கட்டிப்பிடித்துத் தேம்பித் தேம்பி அழுகின்ற மகனைப் பஞ்சடைந்த கண்களுக்கூடே பார்த்தாள் பார்வதி. அவன் தலையைத் தடவியபோது அந்த ரத்தம் கையில் பிசுக்கென்று ஒட்டியது.“ஐயோ, இது என்ன ஐயா?” என்று கேட்டாள்.“அம்மா! அவன் ரொம்ப கெட்ட ராஸ்கலும்மா! அயோக்கியன். நான் எவ்வளவு கெஞ்சிக் கேட்டும் வர முடியாதுன்னு சொல்லிட்டாம்மா! என்னப் பிடிச்சி தள்ளிட்டு ஓடிட்டாம்மா! அம்மா! அவன் வேணாம்மா! நான் ஒன் மகன் இல்லியா? நான் சொல்றதக் கேளு! இனி ஜென்மத்துக்கும் நான் அவனோட சேரமாட்டேன். இதுக்கு மேல நான் என்ன பண்ண முடியும்மா? சொல்லும்மா?”பார்வதி நீண்ட நேரம் அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். சோகம் கப்பியிருந்த கண்களில் இரக்க நீர் சுரக்க ஆரம்பித்திருந்தது. அப்புறம் தலையைத் திருப்பி பக்கத்தில் அழுதவாறே நின்றிருந்த மகளைக் கூப்பிட்டாள். மீனா அருகில் வந்ததும் “சாப்பிட ஏதாச்சும் இருக்கா மீனா?” என்று கேட்டாள்.“அடுத்த ஊட்டு அம்மா கொஞ்சம் கஞ்சி வச்சிக் குடுத்திருக்காங்க!” என்றாள் மீனா.“அதக் கொஞ்சம் எடுத்திட்டு வா!”மீனா ஓடி ஒரு சிறிய பாத்திரத்தில் கஞ்சி ஊற்றி அதில் ஒரு கரண்டியையும் போட்டுக் கொண்டு வந்தாள்.“முத்தையா! கொஞ்சம் எடுத்து வாயில ஊட்டுப்பா!” என்றாள்.

 

         முத்தையாவின் கரங்கள் வெடவெடவென்று நடுங்கின. கரண்டியிலிருந்து கொஞ்சம் கஞ்சி அம்மாவின் மார்பில் ரவிக்கை மேல் விழுந்தது. துடைக்க முயன்றான்.“பரவால்ல! அப்புறம் தொடச்சிக்கலாம்!” என்றாள். அவள் வாயைத் திறந்து முத்தையா ஊற்றிய கஞ்சியைக் கொஞ்சமாகக் குடித்தாள். “போதும்!” என்றாள். சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்தாள். கைலியைச் சரிப்படுத்தினாள்.“முத்தையா, நான் மெதுவா குடிச்சிக்கிறேன். நீ மீனாவையும் கூட்டிக்கிட்டு கிளினிக் போய் காயத்தக் காமிச்சிட்டு வாப்பா” என்றாள். தலைமாட்டிலிருந்து 20 ரிங்கிட்டை எடுத்துக் கொடுத்தாள்.அவன் முகத்தில் தெளிவு வந்திருந்தது. மலர்ச்சி வந்திருந்தது! “நீ மொதல்ல சாப்பிட்டு முடிம்மா. நான் மெதுவா போறேன். மீனாவையும் கூட்டிட்டுப் போனா உன்ன யார் பாத்துக்குவாங்க?” என்றான்.“நான் கூட்டிட்டுப் போறேன்!”யார்? குரல் வந்த பக்கம் திரும்பினான். கேசவன்.

 

         முத்தையாவில் முகத்தில் அனல் பறந்தது. “நீ ஏண்டா இங்க வந்த? எங்கம்மாவ செத்துத் தொலையிட்டும்னு சொன்னேல்ல!”கேசவன் தலை குனிந்து தரையைப் பார்த்தவாறிருந்தான். அப்புறம் நிமிர்ந்து பார்வதியின் முகத்தைப் பார்த்துப் பேசினான்.“எங்கம்மாவ நெனச்சி சொன்னேன். இந்த அம்மாவை இல்ல…!” என்றான் கேசவன்.பார்வதி அவனைப் பரிவுடன் பார்த்தாள்.“போடா! ஒன்னோட சேந்ததுனாலதான் இத்தனையும் நடந்திச்சி. இனி நீயும் நானும் கூட்டாளி இல்ல. எங்கம்மா சாப்பிட்றேன்னு சொல்லிட்டாங்க! இனி நீ தேவையில்ல! வெளியே போ!”“இரு முத்தையா!” பார்வதி தடுத்தாள். கேசவனைப் பார்த்துச் சொன்னாள். “தம்பி! அழச்சிட்டுப் போப்பா! முத்தையாவுக்குத் துணையா போய் அவன பத்திரமா திருப்பிக் கொண்டாந்து விட்டிரு!” என்றாள்.“வேணாம்மா! நான் தனியா போய்க்கிறேன்! இவன் வேணாம்! இவனோட சேந்தா இன்னும் கெட்டுத்தான் போவேன்!” என்றான் முத்தையா.“இல்ல முத்தையா! கூடப் போ! இனிமே இந்தத் தம்பியால நீ கெட்டுப் போக மாட்ட! அதுதான் ஒன்னால திருந்தப் போகுதுன்னு நெனைக்கிறேன்!”அம்மா மெதுவாகக் கஞ்சியை உறிஞ்சியவாறு அவர்கள் இருவரும் வெளியே போவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு மாங்காய்க்கு வைத்த குறியில் இரு மாங்காய்கள் கனிந்து விழுந்திருப்பது சந்தோஷமாய்த்தானிருந்தது. கஞ்சியைக் கீழே வைத்துவிட்டு மீனாவைப் பக்கத்தில் கூப்பிட்டு இறுக அணைத்துக் கொண்டாள்.

by parthi   on 15 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
யானையும் மூப்பனும் யானையும் மூப்பனும்
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.