- முனைவர் கி.செம்பியன்
அன்பின் வழிய துயிர்நிலை யஃதிலார்க் கென்புதோல் போர்த்த வுடம்பு (80)
அன்பின் வழியது உயிர்நிலை---அன்பு முதலாக அதன்வழி நின்ற உடம்பே உயிர்நின்ற உடம்பாவது; அவ்வன்பில்லாதார்க்கு உளவான உடம்புகள் என்பினைத் தோலாற்போர்த்தனவாம், உயிர்நின்றனவாகா---பரிமேலழகர்)
உயிர்கள் ஒன்றன்மீது ஒன்று அன்பு செலுத்துகின்றன.
பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் அன்புணர்ச்சி உண்டு.
கொடிய விலங்குகளும் குட்டிகளிடத்தில் அன்பு செலுத்துகின்றன.
தாயன்பு மேலானது.
அன்பின் வழியது உயிர்நிலை என்கிறார் வள்ளுவர்.
உயிர் நிலைபெறுவது அன்பினால்!
உயிர் நிலைபெறுதல் என்றால் உயிர்கள் தொடர்ந்து உண்டாவதா?
இரண்டையும் சார்ந்ததா?
அன்பு இல்லாத மனிதனை வள்ளுவர் தோலால் போர்த்தப்பட்ட எலும்பு என்கிறார்.
அன்பு இருந்தால் மனிதன், இல்லாவிட்டால் எலும்புக்கூடு!
கோடி கோடி மக்கள் வாழ்கின்றார்கள்.
இவர்களுள் எவன் மனிதன், எவன் எலும்புக்கூடு?
நிறுத்தால் அவனவன் எடை அறியலாம்!
ஸ்கேனிங் செய்தால் உள்பாகங்கள் புரியலாம்!
ஒருவனிடத்தில் அன்பு உடையவன் இன்னொருவனிடத்தில் அன்பு இல்லாதவன்!
ஏதோ ஓரிடத்தல் அன்பு உடையவன்.
ஓரிடத்திலும் ஒருபொருளிலும் அன்பு இல்லாதவன் என்று ஒருவன் இருக்கமுடியுமா?
அன்பே கடவுள்!
பெரிய பொருளாக இருக்கிறதே!
அவனது நாட்டின் மீது உள்ள அன்பினால், எனது நாடு விடுதலையடையவேண்டும் என்று போராடியபோது சுட்டான்!
புலி தனது குட்டியின்மீது கொண்ட அன்பினால்,உணவு ஊட்ட எண்ணித் தாய்மானைக் கொன்றது!
இராமன் சீதையிடம் வைத்த அன்பினால் இராவணனைக் கொன்றான் போரில் மற்றும் பலரையும் கொன்றான்!
அன்பு கொலை செய்யுமா?
பீமன் பாஞ்சாலியின்மீது கொண்ட அன்பினால் துச்சாதனனைப் பிளந்தான்!
மன்னர்கள் தங்கள் தங்கள் நாட்டின்மீது கொண்ட அன்பினால் எதிரி நாட்டு மன்னர்களையும் மக்களையும் கொன்றார்கள்!
பாண்டியன் நெடுஞ்செழியன் கோப்பெருந்தேவிமீது கொண்ட அன்பால் தவறான தீர்ப்புரைத்தான்!
கண்ணகி கோவலன்மீது கொண்ட அன்பால், வழக்காடிப் பாண்டியனின் உயிரைப் போக்கினாள்; மதுரையை எரித்தாள்?
கண்ணகி அன்பு உடையவளா இல்லையா?
அமெரிக்கர்கள் தங்கள் நாட்டின்மீது கொண்ட அன்பினால்தான் ஹிரோஷிமா, நாகசாகியில் அணுக்குண்டு வீசினார்களோ?
சீதையின்மீது இராவணன் கொண்ட அன்பு முறையற்றது.
முறையான அன்பு, முறையற்ற அன்பு!
யார் இவற்றை அளவிடுபவர்?
மனிதன் அன்பின் அடையாளமா, அறிவின் அடையாளமா?
ஒரு கன்னத்தில் அறைந்;தார்க்கு மறு கன்னத்தைக் காட்டியது அன்பா?
உதைத்த காலுக்குச் செருப்புத் தைத்துக் கொடுத்தது அன்பா?
சிலுவையில் அறைந்திட உடலைக் காட்டியது அன்பா?
பசித்த வயிற்றையும் இளைத்த மேனியையும் கண்டு வாடியது அன்பா?
யானைக்காலில் குழந்தையை இடறமுற்பட்டபோது, தடுத்து நிறுத்த ஓடிய புலவன் அன்பின் வயப்பட்டவனா?
புறாவிற்காகத் துலாபாரத்தில் ஏறிய அரசன் அன்பானவனா?
கன்றிற்காக மகனைக் கொன்றவன் பசுவின்மீது அன்பு உடையவனா?
கல்லடி வாங்கிய முகம்மதுநபி மக்கள்மீது அன்பு கொண்டவரா?
அன்பு, அருள், பரிவு, பற்று, பாசம், இரக்கம்!
அன்பு வைத்தால் ஆபத்தா?
(தொடரும்....)
|