LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- வைக்கம் முஹம்மது பஷீர்

ஒரு சிறைக் கைதியின் புகைப்படம்

நடுவில் இயேசு கிறிஸ்துவின் பெரிய படம். அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு சாதாரண புகைப்படங்கள். ஒன்று- வாழ்க்கையின் கஷ்டங்களை எல்லாம் அனுபவித்துத் தளர்ச்சியடைந்த ஒரு நடுத்தர வயதைத் தாண்டிய மனிதனின் படம். இன்னொன்று- அழகான சுருண்ட கேசத்துடனும், புன்சிரிப்பு தவழ்ந்து கொண்டிருக்கும் முகத்துடனும், பெரிய கண்களுடனும் இருக்கும் ஒரு இளைஞனின் படம்.

வீட்டுக்குள் நுழைந்ததும் இந்தப் படங் களைத்தான் முதலில் பார்த்தாள் மரியாம்மா. அந்தப் படத்தில் இருந்த இளைஞனின்மீது ஒருவித ஆர்வம் உண்டானது அவளுக்கு. அப்படித்தான் சொல்ல வேண்டுமே தவிர, அப்போது ஆழமான காதல் உண்டானது என்று சொல்ல முடியாது. அந்தப் புகைப்படத்தில் இருந்தவன் எத்தனையோ மைல்களுக்கு அப்பால் சிறையில் கடுங்காவல் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஜோசப் என்பது அவளுக்குத் தெரியாது.அந்தப் படங்களையே வைத்த கண் எடுக்காது பார்த்தவாறு கவலை தோய்ந்த முகத்துடன் அந்த அறையில் அமர்ந்திருந்தாள் ஜோசப்பின் தாய். அந்த வயதான கிழவியின் கணவன் எப்போதோ மரணத்தைத் தழுவி விட்டான். இப்போது மகனோ சிறையில் இருக்கிறான். யாருமே இல்லாமல் தன்னந்தனியாய் அவளின் வாழ்க்கை வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.

தாய் மகனின் வரவுக்காகக் காத்திருக்கிறாள்.

தந்தை இறந்துபோன செய்தியை சிறையில் இருக்கும் தன் மகனுக்கு அவள் தெரிவிக்கவே இல்லை.

மகனை ஏன் தேவையில்லாமல் கவலைக்குள்ளாக்க வேண்டும் என்ற எண்ணமே காரணம்.

அந்த மகனை, யாரென்றே தெரியாமல்- எப்படி இருப்பான் என்று கூடத் தெரியாமல் மரியாம்மா காதலித் தாள். அவன் இருக்கும் சிறைக்கு எத்தனையோ கடிதங்களை எழுதினாள் அவள்.

அதன் ஆரம்பம் இப்படித்தான்:

கன்னியாஸ்திரீகள் தங்கி இருக்கும்- உயர்ந்த கல் சுவருக்குள் அடங்கியிருக்கும் மடம். அங்கு தங்கியிருப்பவள் தான் மரியாம்மா. உணர்ச்சிகளை மனதிற்குள்ளேயே போட்டு அடக்கிக் கொண்டு, தனக்குள் ஒரு குறுகிய வட்டத் தைப் போட்டுக் கொண்டு, உயிரற்ற பொருள்போல் தன்னை பாவித்துக் கொண்டு, மற்றவர்களைப்போல் அமைதியாக அங்கு தன் நாட்களைக் கடத்திக் கொண்டிருப்பவள்தான் மரியாம்மா. துறுதுறுவென்ற மனதையும், வனப்பான மார்பையும் கொண்ட மாணவி அவள். இப்போது அவளுக்கு இருபத்தியிரண்டு வயது நடக்கிறது. கருப்பு நிறம். பெரிய அழகி அவள் என்று கூறுவதற்கில்லை. அதற்காக காதலோ மற்ற அந்த மாதிரியான ஏக்கங்களோ ஒரு பெண்ணுக்கு இல்லாமற் போய்விடுமா என்ன? அவளின் தோழிகளில் பலருக்கும் காதலர்கள் இருக்கவே செய்கிறார்கள். மடத்தில் இருக்கும் சட்டதிட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் சர்வ சாதாரணமாக மீறித்தான் அவர்களின் கடிதப் பரிமாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதுவரை மரியாம்மா காதல் கடிதம் எதுவும் எழுதியது இல்லை. அப்படியொரு கடிதத்தைப் படித்ததும் இல்லை. ஆனால், எழுதத் தெரியும். அவளின் இதயம் முழுக்க காதல் உணர்வுகள் இருக்கின்றன. ஆனால், யாருக்கு எழுதுவது? இதுவரை அவளை யாரும் காதலித்தது இல்லையே! அவள் யாரையாவது காதலிக்க நினைப்பதென்னவோ உண்மை. கட்டாயம் காதலிக்க வேண்டும் என்பது அவளின் ஆசை. சில நாட்களில் விடுமுறைக் காலம் வருகிறது. அவள் தனக்கே தெரியாமல் காதலியாகிறாள்.

இது எப்படி நடந்தது?

விடுமுறையில் அவள் செல்வது புதிய வீட்டிற்கு என்பதை அவள் எற்கெனவே அறிந்திருந்தாள். அவளின் தந்தைக்கு வேறொரு வங்கியில் வேலை மாற்றம் ஆகியிருந்தது. அதனால், அவளின் பெற்றோர்கள் புதிய இடத்திற்கு குடி பெயர்ந்திருந்தார்கள். அவர்கள் அங்கு போய் இரண்டு மாதங்கள் ஆகின்றன.

அந்த வீட்டுக்குத்தான் விடுமுறையில் மரியாம்மா சென்றாள். வீட்டில் அப்படியொன்றும் அவளுக்கு வேலை இல்லை. சாப்பிட்டுவிட்டு ஏதாவது புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பாள். இல்லாவிட்டால் எதையாவது கனவு கண்டவாறு, வீட்டின் முன் இருந்த வெற்றிடத்தில் நடந்து கொண்டிருப்பாள். அவளின் வீட்டைச் சுற்றி சிறிய சுவர் கட்டப்பட்டிருந்தது. அதைத் தாண்டிப் பார்த்தால், ஒரு வீடு தெரிந்தது. அந்த வீட்டைச் சுற்றி நிறைய மரங்கள். அங்கே ஒன்றிரண்டு பெண்கள் நடமாடுவது மட்டும் அவ்வப்போது தெரியும். வேறு அந்த வீட்டைப் பற்றி மரியாம்மாவுக்கு எதுவும் தெரியாது. மரியாம்மாவின் தாய்கூட இன்னும் அந்தப் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அந்த வீட்டுக்குப் போன மூன்றாம் நாள் மரியாம்மா அந்தச் சுவரின் மேல் ஏறி உட்கார்ந்திருந்தாள். பின் என்ன நினைத்தாளோ, அந்தப் பக்கமாய் மெல்ல இறங்கினாள்.

""யார் அது?'' ஒரு பெண் அடுக்களையில் இருந்தவாறு கேட்டாள்.

எதுவுமே நடக்காதது மாதிரி சாதாரணமாக மரியாம்மா சொன்னாள்:

""ஓ... ஒண்ணுமில்ல... நான்தான்... உங்ககூட கொஞ்ச நேரம் பேசலாம்னு வந்தேன்!''

அவள் மெதுவாக நடந்து வீட்டின் முற்றத்திற்கு வந்தாள். உள்ளே இருந்து வாசலுக்கு வந்தாள் ஜோசப்பின் தாய். அவள் யார் என்று மரியாம்மாவிற்கு அந்த நிமிடத்தில் தெரியாதே! ஒரு கிழவி. தலை முழுக்க முழுக்க நரைத்து விட்டிருந்தது. சோகம் கப்பிக் கொண்டிருந்த விழிகள். பேச்சே கிடையாது. ஒரே அமைதி. அந்த வயதான கிழவி மரியாம்மாவையே உற்றுப் பார்த்தாள். மரியாம்மா லேசாகப் புன்னகைத்தாள். அந்தக் கிழவியின் உதட்டிலும் பலவீனமான புன்னகை ஒரு நிமிடம் அரும்பியது.

""வா மகளே... இங்க வந்து உட்காரு!''

மரியாம்மா அந்த அறைக்குள் போய் உட்கார்ந்தாள். அப்போதுதான் அவள் அந்தப் புகைப்படங்களைப் பார்த்தது.

புகைப்படத்தில், சுருட்டை முடியுடன், புன்னகை செய்தவாறு, பெரிய கண்களுடன் இருந்த அந்த அழகான இளைஞன்.

அவனையே பார்த்தாள் மரியாம்மா.

""இவன் என்னோட மகன்.'' அந்தக் கிழவி சொன்னாள்.

தொடர்ந்து தன் மகனைப் பற்றி எத்தனையோ விஷயங்களைச் சொன்னாள் அந்தத் தாய். பேச்சுக்கு இடையில் மரியாம்மா தன்னை கிழவியிடம் அறிமுகப் படுத்திக் கொண்டாள். தற்போது இன்டர்மீடியட் படித்துக் கொண்டிருப்பதையும், மடத்தில் தங்கி இருப்பதையும் அவள் கிழவியிடம் சொன்னாள். அப்போது கிழவி சொன்னாள், ""இன்டர்மீடியட் படிக்கிறப்போதான் என் மகன் ஜோசப் முதல் தடவையா தண்டனை வாங்கி ஜெயிலுக்குப் போனான்'' என்ற தகவலை. அப்போது ஜோசப்பிற்கு வயது பதினெட்டு. அப்போது எடுக்கப்பட்ட படம்தான் சுவரில் மாட்டப் பட்டிருப்பது.

""இப்போ அவனுக்கு இருபத்தாறு வயசு நடக்குது. இதற்கிடையில் நாலு தடவை தண்டனை கிடைச்சு ஜெயிலுக்குப் போயிருக்கான். நாலாவது தடவை ஜெயிலுக்குப் போன பிறகுதான் அவனோட அப்பா செத்துப்போனது. ஆனா, அவனுக்கு நான் தகவலே தெரிவிக்கல...''

""ஏன்?...''

""தேவையில்லாமல் அவன் ஏன் மனசுல கவலைப்படணும்? எங்களோட வீட்டையும் நிலத்தையும் அரசாங்கத்துல ஜப்தி செஞ்சிட்டாங்க. இந்த விஷயத்தையும் நான் அவனுக்குச் சொல்லவே இல்ல. அவன் ஏதோ மனிதர்களுக்கு நல்லது செய்ற விஷயத்துக்காகத்தான் ஜெயிலுக்கே போயிருக்கான். இங்கே நடக்குறது எதுவுமே அவனுக்குத் தெரியவேண்டாம்னு நினைக்கிறேன்!''

""இந்த வீடு?''

""என் மகளைக் கல்யாணம் பண்ணின மருமகனோட வீடு இது.''

""ஜெயில்ல இருந்து கடிதம் வருமா?''

""ம்... வீட்டோட அட்ரஸுக்குத்தான் கடிதம் எழுதுவான்.''

அந்த வயதான தாய் பெட்டியில் ஒரு கைக்குட்டையில் வைத்திருந்த நான்கு கடிதங்களை எடுத்து மரியாம்மாவின் முன் வைத்தாள்.

""இது அவனோட கைக்குட்டைதான்!''

மரியாம்மா கைக்குட்டையை அவிழ்த்தாள். நான்கு சிறைச் சாலைகளில் இருந்தும் எழுதப்பட்ட கடிதங்கள் அவை.

முதல் கடிதத்தில்-

மொத்தம் சிறையில் உள்ளவர்கள் 2114

ஆண்கள் 1817

பெண்கள் 297

இதில் அரசியல் கைதிகள் 1742

அதில் ஆண்கள் 1344

பெண்கள் 398

தூக்கில் தொங்க இருப்பவர்கள் 16

இரண்டாவது கடிதத்தில்-

மொத்தம் சிறையில் இருப்பவர்கள் 172

ஆண்கள், பெண்கள் உட்பட அரசியல் கைதிகள் 984

தூக்கில் தொங்க இருப்பவர்கள் 34

மூன்றாவது ஜெயிலில்- மொத்தம் 2512

தூக்கில் தொங்க இருப்பவர்கள் 99

மொத்தம் அரசியல் கைதிகள் 1115

நான்காவது சிறையில்- மொத்தம் 1648

தூக்குத் தண்டனை கைதிகள் 42

அரசியல் கைதிகள் 849

இந்த விவரங்கள் போக, தந்தை- தாயின் நல்ல சுகத்தைப் பற்றி, அக்காமார்களின் நலத்தைப் பற்றி, அவர்கள் கணவர்களின், குழந்தைகளின் நற்சுகத்தைப் பற்றி எல்லாக் கடிதங்களிலும் விசாரித்து எழுதியிருந்தான். ஒவ்வொன்றிலும் சிறைக்கு வெளியே உள்ள ஒரு ரகசிய முகவரி எழுதப் பட்டிருந்தது. அதைப் பற்றி நான்காவது கடிதத்தில் அவன் இவ்வாறு எழுதியிருந்தான்.

"எனக்குக் கடிதம் எழுதும்போது, எழுதிய கடிதத்தை ஒரு கவருக்குள் போட்டு, அதன் வெளிப்பக்கத்தில் 1051 என்ற எண்ணை எழுத வேண்டும். அதற்குப்பிறகு அந்தக் கவரை இன்னொரு கவருக்குள் போட்டு அதற்கு வெளியே நான் கொடுத்திருக்கும் முகவரிக்கு ஸ்டாம்ப் ஒட்டி போஸ்ட் பண்ணவும். கடிதம் சரியாக என் கையில் கிடைக்கும்.'

கடிதம் கிடைக்கும்.

மரியாம்மாவின் இதயத்தில் ஒரு சிறு மின்னல்... ஒரு கடிதம் எழுதினால் என்ன? எதற்கு அவள் எழுத வேண்டும்? ஏன் அப்படி ஒரு எண்ணம் வந்தது? அவளுக்கே இதற்கான விடை தெரியவில்லை. இதுவரை அவனை அவள் பார்த்ததில்லை, அவனுடன் பேசியதில்லை. யாரென்றே தெரியாமல், எங்கோ, எதற்கோ சிறையில் கடுங்காவல் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.

அழகான சுருட்டை முடியும், புன்னகை தவழ்கின்ற முகமும், பெரிய கண்களும்- மொத்தத்தில் அழகான ஒரு இளைஞன்.

ஆனால், என்ன சொல்லி கடிதம் எழுதுவது? அவன் அவளைப் பற்றி என்ன நினைப்பான்? சொல்லப்போனால் சிறையைப் பற்றி அவள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றனவே! சிறை என்பது எப்படி இருக்கும்? அங்கே ஆண்களும் பெண்களும் எப்படி இருக்கிறார்கள்? அவர்களின் வாழ்க்கை நிலை எப்படி? இவற்றை எல்லாம் அவள் தெரிந்து கொள்ள ஆசைப்படுவதில் தவறில்லையே! இவை மட்டும்தானா? வேறு ஏதேனும் கூடத் தெரிந்து கொள்ள வேண்டுமா?

""அம்மா... நான் இந்தக் கடிதங்களை என்னோட அப்பா, அம்மாகிட்ட படிச்சுக் காண்பிச்சிட்டு திருப்பிக் கொண்டு வரட்டா?''

அந்த வயதான தாய் அவளையே பார்த்தாள். அவள் சம்மதித்தாளா இல்லையா என்பது பற்றியெல்லாம் மரியாம்மா கவலைப்படவே இல்லை. அந்தக் கடிதங்களுடன் அவள் தன் வீட்டுக்குப் போனாள். யாரிடமும் அந்தக் கடிதங்களைப் படித்து அவள் காட்டவில்லை.

அவள் அன்று இரவு, அந்தக் கடிதங்கள் ஒவ்வொன் றையும் திரும்பத் திரும்பப் படித்தாள்.

சிறை!

நாட்டில் மொத்தம் எத்தனை சிறைகள் இருக்கும்? அதில் மொத்தம் எத்தனை ஆண்களும் பெண்களும் தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்...? கம்பிகளுக்குள் அடைபட்டு...

இதுவரை படித்த படிப்பை வைத்து இதையெல்லாம் தெரிந்து கொள்ள முடியுமா என்ன? தான் தங்கியிருந்த கன்னியாஸ்திரீ மடத்தைப் பற்றி அவள் நினைத்துப் பார்த்தாள். நினைக்கும்போதே மூச்சை அடைப்பதுபோல் இருந்தது.

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவள் ஜோசப்பிற்கு கடிதம் எழுதத் தீர்மானித்தாள். வெள்ளைத் தாள் ஒன்றை எடுத்தாள். "பிரிய...' என்று ஆரம்பித்தாள். அதை எப்படித் தொடர்வது என்ற குழப்பம் இப்போது அவளுக்கு. தான் எழுதிய அந்த வார்த்தையையே பார்த்தவாறு எந்தவித சலனமும் இல்லாமல் சில நிமிடங்கள் அப்படியே உட்கார்ந்திருந்தாள்.

"பிரிய...'

மரியாம்மா அன்று கடிதம் எழுதவில்லை. அவள் வெளியே எழுதும் முகவரியை மட்டும் தனியாக ஒரு தாளில் குறித்து வைத்துக் கொண்டாள். அவனின் நம்பரை அவள் ஆட்டோகிராஃப் புத்தகத்தில் எழுதினாள். கிறிஸ்துவ பாதிரியார்கள், மதர் சுப்பீரியர், கன்னியாஸ்திரீகள், கல்லூரிப் பேராசிரியர்கள் ஆகியோரின் கையெழுத்துக் களும் அவர்களின் அறிவுரைகளும் அந்தப் புத்தகத்தில் இருந்தன. அதில் ஒரு சிவப்பு நிறப் பக்கத்தில் 1051 என்று அவள் எழுதினாள்.

அடுத்த நாள் அந்தக் கடிதங்களைக் கொண்டு போய் ஜோசப்பின் தாயிடம் திருப்பிக் கொடுத்தாள்.

ஒவ்வொரு நாளும் அவள் அந்த வீட்டுக்குச் செல்வாள். அந்த அறையில் அமர்ந்து அந்தத் தாயுடன் பேசிக் கொண்டிருப்பாள். பெரும்பாலும் மரியாம்மா அதிகம் பேசுவதில்லை. அந்த வயதான கிழவி சொல்லும் பல சம்பவங்களையும் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருப்பாள் என்பதே உண்மை.

விடுமுறைக் காலம் முடிந்தது. ஜோசப்பின் தாயை இறுகக் கட்டிப்பிடித்துக் கண்ணீர் விட்டவாறு பிரியாவிடை பெற்றாள் மரியாம்மா.

கன்னியாஸ்திரீ மடத்திற்குப் போய்ச் சேர்ந்தவுடன், அவள் ஜோசப்பிற்குக் கடிதம் எழுதிவிடவில்லை. மனமும் உடலும் மிகவும் சோம்பல் அடைந்திருந்தன. ஏதாவது பண்ண வேண்டுமே என்று அவள் நினைத்தாள். அரசியல் செய்திகள் ஏதாவது படிக்கலாமா என்று பார்த்தாள். அவளுக்கு எதுவுமே சரியாகப் புரியவில்லை. படிக்கும்போது பல விஷயங்களையும் அவளால் தெரிந்து கொள்ள முடிந்தது. அப்போது அவளுக்கு ஒரு விஷயம் தெரிய வந்தது. பத்திரிகைகள் இரண்டு வகை. பெரும்பாலான பத்திரிகைகள் அரசாங்கத்திற்கு ஆதரவான செய்திகளைப் பிரசுரிக்கக் கூடியவை. சில பத்திரிகைகள் மட்டுமே சுதந்திரமாக, தாங்கள் நினைக்கக் கூடியவற்றை எந்தவித அச்சமும் இல்லாமல் எழுதக் கூடியவையாக இருந்தன. அப்படிப்பட்ட பத்திரிகை கள் மடத்தில் இருக்கவே கூடாது என்று மதர் சுப்பீரியர் கடுமையான உத்தரவு போட்டிருந்தார். இருந்தாலும் அவளுக்கு எப்படியோ அப்படிப்பட்ட பத்திரிகைகள் கிடைத்துக் கொண்டுதான் இருந்தன. மடத்தில் உள்ள கல்லூரியில் படித்துக் கொண்டே வெளியில் தங்கியிருந்த ஒரு பெண்ணிடம் இருந்து அவ்வகை பத்திரிகைகளை வாங்கி வரச் சொல்லி படித்தாள் மரியாம்மா. படிக்கப் படிக்க, அரசியல் காரியங்களில் தீவிரமாக ஈடுபட்டுப் போராடும் ஆட்கள்மீது ஒரு வகையான ஈர்ப்பும் ஒட்டுதலும் அவளுக்கு உண்டானது. அரசியல் சம்பந்தமான விஷயங்களில் அவளின் ஆர்வம் அதிகரித்தது. சாலையில் சில நேரங்களில் செல்லும் அரசியல் ஊர்வலங்கள் எழுப்பும் உணர்ச்சிகரமான கோஷங்களைக் கேட்டு அவள் மனதில் இனம் புரியாத ஒரு பரபரப்பு உண்டாகும். அவர்கள் உச்ச குரலில் எழுப்பும் கோஷம் அவளின் மனதில் ஒரு எழுச்சியை உண்டாக்கும்.

"அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய்க!' இப்படி அவர்கள் கூறிச் செல்லும்போது, அவள் மனதில் பலவித எண்ணங்களும் உண்டாகும். இரவும் பகலும் உட்கார்ந்து சிறையில் இருக்கும் ஜோசப்பைப் பற்றி நினைத்துப் பார்ப்பாள். ஜோசப்... ஜோசப்.. இப்படி அவள் எந்த நேரம் பார்த்தாலும் அவனைப் பற்றி எண்ணி எண்ணியே, அவனுடன் ஒருவகை நெருக்கத்தை அவள் தனக்குள் உண்டாக்கிக் கொண்டாள். அவள் அவனுக்கு ஒன்பது கடிதங்கள் எழுதினாள். ஆனால், எதையும் அவள் அனுப்ப வில்லை. எல்லாவற்றையும் கிழித்து துண்டு துண்டாக்கி கன்னியாஸ்திரீ மடத்தின் ஜன்னல் வழியே வெளியே எறிந்தாள். அதற்காக அவள் வெறுமனே இருந்துவிட முடியுமா? மீண்டும் அவள் எழுதினாள். மடத்தில் இருந்து எழுதப்படும் கடிதங்களையும், மடத்திற்கு வரும் கடிதங் களையும் மதர் சுப்பிரீயர் கட்டாயம் பார்ப்பார். படிப்பார். அப்படி ஒரு சட்டம் அங்கு உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால், மரியாம்மா தான் எழுதிய கடிதத்தை மதர் சுப்பீரியரிடம் காட்டவில்லை. வெளியே தங்கிப் படிக்கும் மாணவியின் வீட்டு முகவரியைத்தான் அவள் கடிதத்தில் எழுதி இருந்தாள். பல மணி நேரங்கள் சிந்தித்து மரியாம்மா ஜோசப்பிற்கு எழுதிய முதல் கடிதம் இப்படி இருந்தது.

"பிரிய நண்பரே,

உங்களுக்கு நான் யார் என்பது தெரியாது. ஆனால், உங்களை எனக்குத் தெரியும்.

நான் மடத்தில் தங்கிக் கொண்டு படிக்கும் ஒரு மாணவி. உங்களின் தாயை எனக்கு நன்றாகத் தெரியும். என் தந்தையும் தாயும் உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில்தான் வசிக்கிறார்கள். என் தந்தை இம்பீரியல் வங்கியில் கேஷியராகப் பணியாற்றுகிறார். விடுமுறையில் வீட்டுக்குப் போயிருந்தபோது, உங்களின் தாயை ஒவ்வொரு நாளும் போய்ப் பார்ப்பேன். நீங்கள் எழுதியிருந்த கடிதங்களை நான் படித்தேன்.

உங்களின் தாய் நன்றாகவே இருக்கிறார்.

எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்ய முடியுமா? சிறையைப் பற்றி பல உண்மையான செய்திகளை நீங்கள் எழுதி அனுப்பினால், எனக்கு அவை உபயோகமாக இருக்கும். உங்களுக்கு இன்னும் பல வெற்றிகள் கிடைக்கட்டும்.

இப்படிக்கு,

எம்.பி. மரியாம்மா'

இந்தக் கடிதத்தை மரியாம்மா அனுப்பினாள். அதில் அவளின் இதய ஒலியும் கலந்திருந்ததே! அந்த ரகசியத்தை ஜோசப்பால் தெரிந்து கொள்ள முடியுமா?

இருபது நாட்கள் கழித்து, அவளுக்கு ஜோசப்பிடமிருந்து பதில் கடிதம் வந்திருந்தது. ஆனால் கடிதம் அவளுக்கு எழுதப் பட்டதுதானா? பெயரோ இடமோ எதுவுமே கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை. மொட்டையாகக் கடிதம் இருந்தது. இருந்தாலும் சிறையைப் பற்றி விலாவரியாக அவன் எழுதியிருந்தான்:

"மனிதர்கள் உண்டாக்கிய ஒரு தனியான உலகம் சிறை என்பது. இங்குள்ள ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் எதிர்பார்ப்பு இருக்கிறது. போலீஸ் லாக்-அப்களில் பலவித கஷ்டங்களையும் அனுபவித்த பிறகுதான் இங்கே ஒவ்வொரு வரும் வந்து சேர்கிறார்கள்.' மரியாம்மா ஆர்வத்துடன் அந்தக் கடிதத்தைப் படித்தாள். ஜோசப்பின் கையெழுத்துதான்.

"ஜோசப்... ஜோசப்..' அவள் மனம் நினைத்தது.

கடிதம் தொடர்ந்தது:

"உயர்ந்த கற்சுவர்களால் சூழப்பட்ட இந்தச் சிறைக்குள் ஆயிரத்து அறுநூறைத் தாண்டிய ஆண்களும் பெண்களும் கைதிகளாக இருக்கிறார்கள். ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளும்கூட இங்கு இருக்கிறார்கள். ஆசைகளும் லட்சியங்களும் ஏக்கங்களும் ரத்தமும் எலும்பும் கொண்ட ஆண்களும் பெண்களும்... வெளியுலகில் என்ன நடக்கிறது என்பதை இவர்கள் யாரும் தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு அமைக்கப்பட்டிருக்கும் உயர்ந்த சுவர்கள். ஆகாயத்தையே இந்த சுவர் முட்டிக் கொண்டி ருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. உள்ளே இதே மாதிரியான சின்னச்சின்ன சுவர்களால் பிரிக்கப்பட்டிருக்கும் கட்டிடங்கள்...

சூப்பிரண்ட், ஜெயிலர், வார்டர்கள், கன்விக்ட் வார்டர்கள், மேஸ்திரிகள்- இங்கு வேலை பார்ப்பவர்கள் இவர்கள். இவர்கள் தவிர, பெண் வார்டர்களும் இருக்கிறார்கள். அவர்கள் பெண்கள் சிறையில் இருப்பார்கள். டாக்டரும் இங்கே உண்டு.

கன்விக்ட் வார்டர்கள், மேஸ்திரிகள்- இவர்கள் வேறு யாருமல்ல... நீண்ட காலம் சிறையில் தங்களின் வாழ்க்கை யைக் கழித்த கைதிகள்தாம். இவர்களில் பெரும்பாலான வர்கள் யாரையாவது கொலை செய்திருப்பார்கள். கைதிகளைக் கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பதற்கும், அவர்களை வேலை செய்ய வைப்பதற்கும் வார்டர்களுக்கு இவர்கள் உதவியாக இருப்பார்கள். இவர்கள் பயன்படுத்தும் சொற்களையும் அவர்களின் பல நடவடிக்கைகளையும் இங்கு எழுத்தில் காட்ட முடியாது. அந்த அளவிற்கு தரம் தாழ்ந்த வையாகவும் அசிங்கமாகவும் அவை இருக்கும். யாரையும் "டேய்...' என்ற அடைமொழியுடன்தான் இவர்கள் அழைப் பார்கள். அரசியல் கைதிகளையும் சேர்த்து இங்குள்ள மற்ற கைதிகளையும் இவர்கள் வேலை வாங்குவார்கள். வெந்து போகும் அளவிற்கு உள்ள வெயிலிலும், உடலே நடுங்கக் கூடிய கடும் குளிரிலும்கூட இவர்கள் மற்றவர்களை வேலை செய்யச் சொல்லிக் கஷ்டப்படுத்துவார்கள்.

திறந்த வெளியில் இரண்டு கற்களால் அடுத்தடுத்து கக்கூஸ் அமைக்கப்பட்டிருக்கும். ஒருவரையொருவர் முகத்தைப் பார்த்துக் கொண்டு, இல்லாவிட்டால் தோளோடு தோள் உரசிக் கொண்டு ஐநூறோ அறுநூறோ ஆட்கள் மலத்தை வெளியேற்றிக் கொண்டிருக்கும் காட்சியை என்னவென்பது!

மிருகத்தனமான பல விஷயங்களும் இங்கு தினமும் நடக்கத்தான் செய்கின்றன. சொல்லப்போனால் காட்டு மிராண்டித்தனமான செயல்கள் இங்கு வளர்க்கப்படுகின்றன என்று கூடக் கூறலாம். இங்கு தண்டனைகள் என்ற பெயரில் நடக்கும் வன்முறைச் செயல்களுக்கு ஒரு எல்லையே இல்லை. முக்காலியில் ஆளைக் கட்டி வைத்து அடிப்பது, பிரம்பை வைத்து அடிப்பது எல்லாமே இங்கு உண்டு. தேவாலயங் களும், புரோகிதர்களும், தனியறைகளும், தூக்குத் தண்டனைக் கைதிகளின் அறையும், தூக்கு மரமும்... எல்லாமே இங்கு உண்டு.

"மனிதர்கள் நல்லவர்களாக மாற இதெல்லாம் தேவை தானே!'

பதினான்கு வருடங்களாக பெண்களையே பார்த்திராத ஆண்கள், ஆண்களையே கண்டிராத பெண்கள் இங்கு இருக்கவே செய்கிறார்கள். இவர்களின் நிலை எப்படி இருக் கும்? இதன் விளைவு- ஆண் ஆணையும் பெண் பெண்ணை யும்... இப்படிப் போகிறது இவர்களின் அன்றாட வாழ்க்கை.

பொதுவாக இந்தச் சிறையில் வாழ்க்கை எப்படி இருக்கிறதோ இதே கதைதான் நாட்டிலுள்ள எல்லாச் சிறைகளிலும். சிறை என்பது ஒரு தனி உலகம். இங்குள்ள ஒவ்வொருவருக்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது. பூமியில் சிறை என்ற ஒன்று எந்தக் காலத்திலும் கட்டாயம் இருக்கும். சிறைகள்!'

ய் ய் ய்"பிரியமுள்ள 1051,

உங்களின் கடிதத்தை நான் படித்தேன். என்னுடைய தோழிகள் பலரும் அதைப் படித்தார்கள். உலகமே கேட்கிற மாதிரி அந்தக் கடிதத்தை உரத்த குரலில் படித்தால் என்ன என்றுகூட நினைத்தேன். நான் நினைப்பது சரிதானே!

நான் இந்தக் கற்சுவருக்குள் இருக்கும் மடத்தில் உட்கார்ந்து கொண்டு நினைத்துப் பார்க்கிறேன். உங்களின் தாயுடன் நானும் சேர்ந்து உங்களை நினைக்கிறேன். சிறையைப் பற்றிய இன்னும் பல விஷயங்களையும், உங்களின் நற்சுகத்தைப் பற்றியும் அறிய மிகவும் ஆவலாக உள்ளேன்.

என்னையும் சேர்த்து நாட்டிலுள்ள பொதுமக்களின் நலமான வாழ்விற்காகவும், சுதந்திரமான வாழ்க்கைக்கும் வேண்டி பாடுபடும் உங்களின் தியாக மனதிற்கும், சேவை எண்ணத்திற்கும் இருகரம் கூப்பி வணக்கம் சொல்கிறேன்.

உங்களின்,

எம்.பி. மரியாம்மா'

ய் ய் ய்"நான் அறியாமல் இருக்கும் சினேகிதியே,

நான் உங்களின் கடிதத்தைப் படித்துவிட்டு பல மணி நேரம் உட்கார்ந்து சிந்தனையில் ஆழ்ந்தேன். உங்களுக்கு என்ன பதில் எழுதுவது?

நான் அப்படியொன்றும் பெரிய சேவைகள் செய்ய வில்லை. மரியாதைக்காக இதை நான் கூறுகிறேன் என்று நினைக்க வேண்டாம். என் தாய், தந்தையைப்போன்ற எத்தனையோ ஆயிரம் பேர் வீடுகளில் ஆதரவின்றி இருக்கிறார்கள். இவர்களின் பிள்ளைகள் நாடு முழுக்க உள்ள பல சிறைகளிலும் அடைபட்டுக் கிடக்கிறார்கள். சிலர் முப்பது தடவையோ நாற்பது தடவையோகூட சிறைக்குள் வந்தவர்களாய் இருப்பார்கள். கை- கால் உடைந்தவர்கள், கொடிய நோயால் பீடிக்கப்பட்டவர்கள், பைத்தியம் பிடித்தவர்கள், தூக்கு மரத்தை முத்தமிட்டவர்கள்... இப்படி யாரையும் நீங்கள் எண்ணிப்பாருங்கள். நான் என்ன பெரிய சேவை செய்து விட்டேன்? சேவை என்ற பெரிய வார்த் தைக்கு முன்னால் நான் கூனிக்குறுகி உட்கார முற்படுகிறேன். இந்த இயக்கத்தை பலப்படுத்தி வெற்றி பெறச் செய்ய நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? நான் கேட்பதற்காக மன்னிக்க வேண்டும். உங்களின் வயது என்ன என்று எனக்குத் தெரியாது. பல வயதுப் பெண்களும் இங்கு இருக்கிறார்கள். பூமியில் உள்ள எல்லா போலீஸ் லாக்-அப்களிலும், கான்ஸன்ட்ரேஷன் கேம்ப்களிலும், எல்லா சிறைகளிலும் பெண்கள் இருக்கிறார்கள். நீங்கள் அவர்களை மறந்துவிடக் கூடாது. வீர சகோதரிகள்!

கடந்த இரண்டரை வருடங்களில் அரசியல் கைதிகளில் ஒன்பது பேர் மரணத்தைத் தழுவி இருக்கிறார்கள். அதில் ஆறு பேர் பெண்கள். இதைப்போல எல்லா சிறைச்சாலைகளையும் சேர்த்துப் பார்த்தால், எத்தனை பெண்கள் இறந்திருப்பார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்.

வீர சகோதரிகள்! அவர்களை நீங்கள் மறக்கவே கூடாது.

சிறையைப் பற்றி இதற்குமேல் நீங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்? போன கடிதத்தில் நான் எழுதியிருந் தேனே- மனிதர்கள் உண்டாக்கிய ஒரு தனி உலகம் சிறை!

சிறையின் மிகப்பெரிய சுவருக்கு மூன்று பக்கங்களில் மூன்று கதவுகள் இருக்கின்றன. அவற்றில் இரண்டு சிறியவை- ஒன்று மட்டும் பெரியது. மூன்றுமே இரும்பால் ஆனவை. பெரிய கதவு வழியாகத்தான் ஒருவர் உள்ளே நுழைய முடியும். அங்கே எப்போதும் ஆயுதம் தாங்கிய காவல்காரர்கள் நின்று கொண்டிருப்பார்கள். யார் வந்தாலும் முழுமையாகச் சோதித்துவிட்டுத்தான் உள்ளேயே விடுவார்கள். அதன் வழியாகத்தான் கைதிகளை உள்ளே கொண்டு வருவார்கள்.

மற்ற இரண்டு வாசல்களும் உள்ளே இருக்கும் கைதிகளை வெளியே கொண்டு போவதற்கானவை. அங்கு எந்தவித சோதனையும் கிடையாது. சொல்லப்போனால் அந்த இரண்டு வாசல்கள் வழியே கொண்டு போவது பிணத்தைத்தான் என்றுகூடக் கூறலாம். காரணம்- ஒரு வாசல் தூக்குமரத்திற்குப் போவது. இன்னொரு வாசல்- அங்கிருக்கும் மருத்துவ மனைக்குப் போவது.

சிறையின் பிரதான வாசலுக்குப் பக்கத்திலேயே சூப்பிரண்டின் அலுவலகமும், ஜெயிலரின் அலுவலகமும், பிற அலுவலகங்களும் இருக்கின்றன. அதைத் தாண்டினால் சிறையின் மையப்பகுதியில் ஒரு பெரிய டவர். அதன் உச்சியில் நின்று பார்த்தால் முழு நகரமும் தெரியும். சிறைக்கூடத்தின் எல்லாப் பகுதிகளையும் அங்கிருந்து பார்க்கலாம். தூக்குத் தண்டனைக் கைதிகள் இருக்கும் இடம், தூக்கு மரம், பெண்கள் சிறை, மருத்துவமனை... இப்படிப் பலவற்றையும்...

டவரின் உச்சியில் இருந்து ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களுக்கும் மணி அடிக்கப்படும். அதன் பயங்கரமான ஒலியைக் கேட்டு, அங்குள்ளவர்களுக்கு ஒரு நடுக்கமே உண்டாகும்.

சிறையில் எல்லா இடங்களுக்கும் மின்விளக்குகள் உண்டு. இரவுகூடப் பகல் மாதிரியே இருக்கும்.

சாயங்காலம் ஆகிவிட்டால், கைதிகளைச் சரிபார்த்து, எண்ணி, உள்ளே அனுப்பிப் பூட்டி விடுவார்கள். ஒவ்வொரு கட்டிடத்தின் உள்ளேயும் வெளியேயும் காவல் காக்கும் நபர்கள் நின்றிருப்பார்கள். உள்ளே கன்விக்ட் வார்டர். வெளியே சாதாரண வார்டர்.

சிறைக்குள் எது வேண்டுமானாலும் நடக்கும். எது தேவையானாலும் கிடைக்கும். சாராயம், கள்ளு, கஞ்சா, பிற மயக்க மருந்துகள், பீடி, வெற்றிலைப் பாக்கு, தேயிலை, சர்க்கரை- இப்படி எது வேண்டுமானாலும் கவலையே இல்லாமல் அங்குள்ளவர்களுக்குக் கிடைக்கும். வியாபாரி கள் சிறையில் இருக்கும் கைதிகள்தாம். கன்விக்டர் வார்டர், வார்டர், ஹெட் வார்டர்- எல்லாருக்கும் இதில் பங்கு உண்டு. வெளியே ஆறு பைசாவுக்கு விற்பது, உள்ளே ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். லாபத்தின் ஒரு பங்கை பிரதான வாசலில் இருப்பவர்களுக்குத் தர வேண்டும்.

இடுப்பில் யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துக் கொண்டுதான் இந்தப் பொருட்கள் உள்ளே கடத்திக் கொண்டு வரப்படுகின்றன. சிறைக்கு வெளியே இருக்கும் தோட்டங்களில் வேலை செய்யச் செல்லும் கைதிகள், வார்டருக்குத் தெரிந்து கொண்டு வருவதுதான் இந்தப் பொருட்கள். வெளியே அவர்களுக்கு விற்பனை செய்வதற் கென்று ஆட்கள் இருப்பார்கள். உள்ளே வரும்போது சோதனை செய்து அவை கண்டுபிடிக்கப்பட்டால், முக்காலியில் கட்டி வைத்து அடிப்பார்கள்.

திருடியும், வழிப்பறி செய்தும், கொலை செய்தும் சிறைக்குள் வந்தபிறகு, ஆறாயிரம் ரூபாய் வரை சம்பாதித்து, யாருக்கும் தெரியாமல் வீடுகளுக்கு அனுப்பி வைக்கும் கைதிகளும் இங்கு உண்டு. திருடாதவனைக்கூட எப்படித் திருடுவது என்பதைக் கற்றுத்தரும் இடங்கள்தாம் நம் சிறைகள். சொல்லப்போனால் குற்றவாளிகள் உருவாகும் இடம் இது என்றுகூடக் கூறலாம். பூமியில் இருக்கும் எல்லா போலீஸ் லாக்-அப்களும், கான்ஸன்ட்ரேஷன் கேம்ப்களும், எல்லா சிறைச்சாலைகளும் குற்றவாளிகளை உருவாக்கு கின்றன என்றே நான் சொல்வேன்.

போலீஸ்காரர்களைப்போலவே வார்டர்களுக்கும் சம்பளம் மிகக்குறைவே. இரண்டு பேருக்குமே குடும்பம் இருக்கின்றன. கடமைகள் இருக்கின்றன. மனைவி, குழந்தைகளை அவர்கள் காப்பாற்ற வேண்டும். அவர்கள் வாங்கும் சம்பளத்தை வைத்து ஒரு மாதத்திற்கு காப்பி குடிக்கக்கூட முடியாது. பிறகு அவர்கள் எப்படித்தான் வாழ்வது? அவர்களின் எல்லா நடவடிக்கை களையும் நான் நன்கு அறிவேன். இருந்தாலும் அவர்கள்மேல் நான் அனுதாபம் கொள்ளவே செய்கிறேன். அவர்களை இப்படி கொடூர மனப்பான்மை கொண்ட மனிதர்களாக மாற்றியது அரசாங்கம்தான் என்பேன் நான். பூமியில் உள்ள எல்லா போலீஸ் லாக்-அப்களிலும், கான்ஸன்ட்ரேஷன் கேம்ப்களிலும், சிறைகளிலும் இதுதான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனால் கிடைக்கும் பயன் என்ன? குற்றம் செய்யும் எண்ணத்தையே மாற்றி, குற்றவாளிகளை உத்தம மனிதர்களாக ஆக்குவதுதானே சிறைச்சாலையில் கொடுக்கப்படும் தண்டனையின் பின்விளைவாக இருக்க வேண்டும்? ஆனால், இது நடக்கிறதா?

நான் என்னவோ எழுதிக் கொண்டிருக்கிறேன். என் மனதில் உள்ளவற்றை எல்லாம் எழுதுவது என்றால், அதற்கு பேப்பர் போதுமா? பென்சிலால் எழுதுவதால், சில எழுத்துகள் உங்களுக்குச் சரியாகப் புரியாமல்கூட இருக்கலாம்.

அரசியல் கைதிகளுக்குத்தான் இங்கு கடுமை யான தண்டனைகள் கொடுக்கப்படுகின்றன. எல்லாருக்கும் உணவு வேண்டும். வீடு வேண்டும். கல்வி கற்க வசதியும், வைத்திய உதவிகளும் வேண்டும். சமத்துவம் நிலவ வேண்டும். சகோதரத் துவம் இருக்க வேண்டும். அன்பு, பரிவு, கருணை இவை எங்கும் இருக்க வேண்டும். வன்முறை கூடாது. இவற்றை நாம் சொன்னால் கடுமையான தண்டனையாம்! கடவுளின் பிரதிநிதியாம் இந்த அரசாங்கம்! எந்த அரசாங்கமும்!

அன்பான சினேகிதியே, என்னுடைய கருத்துகளுடன் நீங்கள் ஒத்துப்போக வேண்டும் என்ற கட்டாயமில்லை. வேதனை நிறைந்த பல அனுபவங்களையும் மனதில் வைத்துக் கொண்டு தான் நான் இந்தக் கடிதத்தையே எழுதுகிறேன். என்னைப்போல அனுபவங்கள் பல கொண்ட எத்தனையோ ஆயிரம் ஆண்களும் பெண்களும் இருக்கவே செய்கிறார்கள். இவர்கள் எல்லாரும் போலீஸ் லாக்-அப்களிலும், கான்ஸன்ட்ரேஷன் கேம்ப்களிலும், சிறைச்சாலைகளிலும் கிடந்து நரகத்தின் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் செய்த குற்றம்தான் என்ன?

அச்சம் தலைவிரித்துக் கோலோச்சும் இடம்தான் நம் அரசாங்கம்! சொல்லப்போனால், பூமியில் உள்ள எல்லா அரசாங்கங்களுக்கும் இது பொருந்தும். இங்கு இருப்பவர்கள் கம்பீரமானவர்கள் இல்லை. ஆட்சி செய்பவர்கள், ஆட்சி செய்யப்படுபவர்கள்- எல்லாருமே அடிமைகள்! அடிமைகள்!

கடவுளே... எவ்வளவு வேதனையாக இருக்கிறது ஒவ்வொன் றையும் நினைத்துப் பார்க்கிறபோது. மனதையும் உடலையும் நடுங்கச் செய்கிற பயங்கரமான இருள் நிறைந்த உலகம் இது!

என் இனிய சினேகிதியே, நான் எதை எல்லாமோ எழுதிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் கன்னியாஸ்திரீ மடத்தில் தங்கிக் கொண்டு படிப்பதாக எழுதி இருந்தீர்கள். என்ன வகுப்பில் படிக்கிறீர்கள்? வேதப் புத்தகங்களையும் பாடப் புத்தகங்களையும் தவிர வேறு ஏதாவது புத்தகங்களை நீங்கள் படிப்பதுண்டா? நான் கேட்பதற்காக மன்னிக்க வேண்டும். மாணவிகளும் மாணவர்களும்தான் நாட்டின் எதிர்கால உயிர்கள். நீங்கள் அடிமைகளாக எந்தக் காரணம் கொண்டும் வளரக் கூடாது.

பிரகாசமான எதிர்காலத்தை வாழ்த்தியவாறு,

உங்களின் 1051'

ய் ய் ய்"என்னுடைய பிரிய 1051,

உங்களின் கடிதம் என் இதயத்தில் என்னென்னவோ மாற்றங்களை உண்டாக்கி விட்டது. நான் ஒரு சாதாரண மானவள். எனக்கு எதுவுமே தெரியாது. இருந்தாலும் நான் உங்களின் இயக்கத்தை ஆதரிக்கிறேன். அதன் வெற்றிக்காக என்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யவும் தயாராக இருக்கிறேன். நான் தற்போது இன்டர்மீடியட் படித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய வயது இருபத்தியிரண்டு. நான் ஒரு அறிவாளி அல்ல. மக்குதான். விளைவு- பல வகுப்பு களிலுமாக நான்கு ஆண்டுகள் தோற்றிருக்கிறேன். நான் பார்க்க கருப்பாக இருப்பேன். அழகியும் அல்ல.

உங்களின் கருத்துகளை நான் சிந்தனையில் கொண்டுள்ளேன். அவற்றோடு மனப்பூர்வமாக உடன்பாடு கொள்ளவும் செய்கிறேன். அதைப்பற்றி நீங்கள் பெரிதாக எண்ணவேண்டிய அவசியம் இல்லை.

நீங்கள் எது சொன்னாலும், அதன்மீது நம்பிக்கை கொள்ளத் தயாராக இருக்கிறேன். முழுமையாக என்னை அதில் இணைத்துக் கொள்ளவும் செய்கிறேன். வேதப் புத்தகங்களையும் பாடப் புத்தகங்களையும் படித்ததுபோக நான் நம்முடைய பத்திரிகையைப் படிக்கிறேன். அதை இங்கு அனுமதிக்கக் கூடாது என்பதுதான் மதர் சுப்பீரியரின் கடுமையான கட்டளை. இருந்தாலும்- அதை எப்படியோ இங்கு வரவழைத்து நான் படிக்கிறேன். அதில் சொல்லப்படும் புத்தகங்களையும் படிக்கிறேன். இனியும் நான் எதையெல்லாம் படிக்க வேண்டும் என்று நீங்கள் எழுதினால் எனக்கு உதவியாக இருக்கும். அரசியல் கைதிகளுக்குத் தண்டனை கடுமையாக இருக்கும் என்று எழுதி இருந்தீர்கள். அதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அதைப் படித்து நான் மிகவும் வேதனைப்பட்டேன்.

உங்களின் தாயுடன் பேசிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த உங்களின் அழகான புகைப் படத்தைப் பார்த்த நிமிடத்தில், இப்படி எல்லாம் உங்களைப்பற்றி நான் நினைக்கவில்லை. அந்தப் புகைப்படம் என் இதயத்தில் அப்படியே பசுமரத்தாணிபோல் ஆழமாகப் பதிந்துவிட்டது.

உங்களை எப்போது விடுதலை செய்வார்கள்? எப்போது வீட்டிற்கு வருவீர்கள்?

எல்லா விவரத்திற்கும் உடனடியாக பதில் கடிதம் எழுதவும். பதில் தாமதம் ஆகிறபோது, என் மனதில் வேதனையும் கவலையும் உண்டாகின்றன. செத்துப்போவதைப்போல உணர்கிறேன்.

உங்களின் மன நலம் நன்றாக இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.

உங்களின் சொந்தம்.

எம்.பி. மரியாம்மா'

அந்தக் கடிதத்திற்கு உடனே பதில் வரவில்லை. மரியாம்மா கவலையில் ஆழ்ந்துவிட்டாள். வகுப்பறையில் இருக்கும்போது அவளின் கவனம் படிப்புமீது செல்லவில்லை. கண்களைத் திறந்தவாறு, வெறுமனே அமர்ந்திருப்பாள். ஏன் அவன் பதில் கடிதம் எழுதவில்லை? அந்தக் கடிதம் ஒருவேளை அவன் கையில் கிடைக்காமல் போயிருக்குமோ? பாதி இரவு கழிந்த பிறகும்கூட அவள் இருட்டையே வெறித்துப் பார்த்தவாறு படுத்திருப்பாள்.

காலையில் பொழுது புலர்வதிலிருந்தே ஒரே சிந்தனை மயம்தான். ஒவ்வொரு நாளும் கடிதம் வரும் என்று எதிர்பார்ப்பாள். ஆனால், வராது. இப்படியே ஒன்றரை மாதங்கள் ஓடிவிட்டன. கடைசியில் அவள் தன் பொறுமையை இழந்துவிட்டாள். மீண்டும் ஒரு கடிதம் எழுதலாமா என்று நினைத்தாள். அப்போது ஜோசப்பிடமிருந்து பதில் கடிதம் வந்தது!

"பிரிய சகோதரி,

என் தாயின் அருகில் இருக்கும்போது நீங்கள் என் புகைப்படத்தைப் பார்த்ததாக எழுதியிருந்தீர்கள். அது ஒரு சிறைக்கைதியின் படமல்ல.

நீங்கள் அறிவாளி அல்ல என்றும், மக்கு என்றும், நிறம் கருப்பு என்றும் எழுதி இருப்பதன் உண்மையான அர்த்தம் என்ன? நீங்கள் என்னைக் காதலிக்கிறீர்களா? அப்படியானால், அந்த எண்ணத்தை இந்த நிமிடத்திலேயே மாற்றிக் கொள்ளுங்கள். என்னை நீங்கள் முழுமையாக மறந்துவிட வேண்டும்.

நான் ஒரு அரசியல் தொண்டன். இதன் அர்த்தம், எனக்குக் காதலோ காமமோ இல்லை என்று இல்லை. நீங்கள் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். என்னுடைய வாழ்க்கை நிலை இல்லாத ஒன்று. பாதுகாப்பே இல்லாதது அது. நான் எத்தனையோ போலீஸ் லாக்-அப்களில் இதுவரை கிடந்திருக்கிறேன். எத்தனையோ சிறைகளிலும் இருந்து விட்டேன். "என்னைப்போல நாட்டிலுள்ள பல சிறைச் சாலைகளிலும் எத்தனையோ அரசியல் கைதிகள் அடைபட்டுக் கிடக்கின்றனர். எங்களிடம் பல மாறுதல்களும் உண்டாகி இருக்கின்றன. இதை எல்லாம் இங்கு விவரித்து எழுத வேண்டிய அவசியமில்லை.

எங்களைப் பொறுத்தவரை கால அளவு என்று எதுவும் கிடையாது. எப்போது எங்களை விடுதலை செய்வார்கள் என்பது எங்களுக்கே தெரியாது. இந்த விவரத்தை நீங்கள் என் தாய்க்கும் தந்தைக்கும் சொல்லக்கூடாது.'

"அப்பா... அவர் இறந்து, அவரை மண்ணு தின்னு எவ்வளவு நாளாச்சு!'- கண்ணீர் மல்க நினைத்த மரியாம்மா கடிதத்தைத் தொடர்ந்து வாசித்தாள்.

"நீங்கள் எனக்குக் கடிதம் எழுதிய விவரம் தாய்க்கோ தந்தைக்கோ தெரிந்திருந்தால், என்னைப் பற்றி அவர்கள் ஏதேனும் கேட்டால், சீக்கிரம் எங்களை விடுதலை செய்ய இருக் கிறார்கள் என்று கூறுங்கள். அவர்கள் மனம் எதற்கு வீணாக வேதனைப்பட வேண்டும்?

எங்களுக்குக் கிடைத்திருப்பது தனிமைச் சிறை. நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக் கூடாது. பேசக்கூடாது. நான்கு சுவர்களுக்குள் தனிமையாக இருக்க வேண்டும். இது எவ்வளவு பயங்கரமானது! மனிதர்களின் கொடூரமான அக்கிரமம் இது!

நட்சத்திரங்களையும், நிலவையும், இரவுநேர ஆகாயத்தையும் பார்த்து எவ்வளவு நாட்களாகி விட்டன! எனக்கே தெரியவில்லை.

நான் ஒரு தனியான கட்டிடத்தில் இருக்கிறேன். அதாவது- ஒரு சிறிய அறை. இப்படி இருக்கும் சின்னச்சின்ன அறைகளில் தான் அரசியல் கைதிகள் ஒவ்வொருவரும் அடைக் கப்பட்டிருக்கிறார்கள். எங்கள் எல்லாரையும் ஒரே அறையில் அடைப்பதற்கான தைரியம் அரசாங்கத்திற்கு இல்லை. மற்ற சாதாரண கைதிகளுடன் எங்களைப் போடவும் அவர்களுக்குச் சம்மதம் இல்லை. எங்களையும் அவர்களையும் பிரித்து வைத்துதான் அவர்கள் பார்க்கிறார்கள். இது தூக்குத் தண்டனைக் கைதிகளை அடைத்து வைத்திருந்த அறை. இதில் பலரும் இதற்கு முன்பு தற்கொலை செய்து கொண்டி ருக்கிறார்கள்.

இந்த அறை எத்தனை சம்பவங்களுக்கு சாட்சியாக இருந்திருக்கும்! இதன் நீளம் பன்னிரண்டு அடி. உயரம் பன்னிரண்டு அடி. அகலம் ஆறு அடி. கருங்கல்லால் ஆன சுவர். உள்ளே சுண்ணாம்பு பூசப்பட்டிருக்கிறது. முன்பக்கம் கறுத்து இருண்டுபோய் இருக்கும் அகழியுடன் கூடிய ஒரு இரும்புக் கதவு. வெளியில் வாசல் கதவுக்குப் பக்கத்தில் உள்ளே இருந்து கை எட்டாத தூரத்தில் வெளிச்சம் பரப்பிக் கொண்டிருக்கும் மின்சார விளக்கு. அறைக்கு வெளியே நாலடி அளவில் உள்ள முற்றத்தை விட்டுப் பார்த்தால், மூன்று பக்கங்களிலும் பெரிய கற்சுவர். அதற்கும் ஒரு இரும்புக் கதவு. கற்சுவருக்கு உள்ளே ஒரு தண்ணீர்க் குழாய். ஒரு கழிப்பறை.

வெளியில் இருக்கும் சுவரின் வாசலை பகல் நேரத்தில் பூட்டி விடுவார்கள். இரவில் என்னை இங்கே உள்ளே அடைத்துப் பூட்டிவிட்டு வெளியே இருக்கும் கதவைத் திறந்து விடுவார்கள்.

நான் எழுதும் இந்தக் கடிதமும் வெளியே இருக்கும் என் நண்பனின் முகவரிக்கு எனக்கு வரும் கடிதமும் இங்கே இருந்து போவதும், வெளியே இருந்து எனக்கு இங்கே வருவதும் எப்படி என்பதை நான் இங்கு தெரிவிக்கவில்லை. இந்தக் கடிதம் மற்றவர் கள் யாருடைய கையிலாவது ஒருவேளை கிடைத்துவிட்டால்... தேவையில்லாமல் வார்டர்களின் வேலை போய்விடும். அவர்களின் குடும்பம் எதற்கு வீணாகக் கஷ்டப்பட வேண்டும்? உங்களின் காதல் விஷயம் இந்தச் சிறைக்குள் இருக்கும் கைதியைத் தேடி வந்திருப்பது உண்மையிலேயே ஒரு வினோதமான சமாச்சாரம்தான். நான் என்னென்னவோ சிந்தனையில் ஆழ்ந்துபோகிறேன்.

இரவு நேரத்துக்கே உரிய அச்சத்தை வெளிப்படுத்தும் மயான அமைதி. பக்கத்தில் இருக்கும் பெண்கள் சிறையில் இருந்து என்னவோ சப்தம் வருகிறது. வந்த வேகத்திலேயே அது நின்றும் போகிறது. மீண்டும் ஒரே நிசப்தம். அதே நேரத்தில் சற்று தூரத்தில் நகரத்தில் இருக்கும் பயணிகள் மாளிகையில் இருந்து சிங்கத்தின் கண்ணீர் நிறைந்த கர்ஜனை ஒலிகள் காற்றைக் கிழித்துக் கொண்டு ஒலிக்கின்றன. ஆகாயத்தையே எட்டும் துக்கத்தின் இடி முழக்கங்கள் அவை.

சகோதரி, என்னை தயவு செய்து மறந்துவிடுங்கள். எப்போதாவது நீங்கள் என் வீட்டுக்குப் போக நேர்ந்தால், என் தாயிடமும் தந்தையிடமும் அங்கே இருக்கிற என் புகைப் படத்தை எடுத்துவிடச் சொல்வீர்களா? என் தலையில் இருந்த தலைமுடி பெரும்பாலும் உதிர்ந்துவிட்டது. மீதி இருக்கும் கொஞ்சம் முடிகள்கூட நரைத்து விட்டன. எனக்கு இரண்டு கண்கள் இருந்தன. இப்போது வலது கண் மட்டுமே உள்ளது- சிவந்த கூர்மையான ரத்த நட்சத்திரம்போல...

நல்வாழ்த்துக்களுடன்,

உங்களின் சிறைக்கைதி 1051'

ஜோசப்பின் ஒரு கண் எப்படி இல்லாமற்போனது? தலை நரைக்கக் காரணம்?

இதய வேதனையுடன் மரியாம்மா ஜோசப்பிற்கு பதில் கடிதம் எழுதி அனுப்பினாள்.

"நான் உங்களுக்காக காத்திருப்பேன்- தேவைப்பட்டால், மரணம் வரையிலும் கூட' இவ்வளவுதான் அவள் கடிதத்தில் எழுதி இருந்தாள். இரண்டு பக்கங் களிலும் உள்ள ரகசியங்கள் அவளின் இதயத்திற் குள்ளேயே அடைபட்டுக் கிடந்தன. சமீபத்தில் அவள் வீட்டிற்குப் போயிருந்தாள். ஜோசப் எழுதிய கடிதங்கள் அவளின் உள்பாடிக்குள் இருந்தன. அவள் ஜோசப்பின் தாயைத் தேடிப் போனாள். அந்த வயதான தாய் அப்போதும் அதே அறையில்தான்.

நடுவில் இயேசு கிறிஸ்துவின் பெரிய படம். அதற்கு இரண்டு பக்கங்களிலும் இரண்டு சாதாரண புகைப்படங்கள். ஒன்று- வாழ்க்கையின் கஷ்டங்களை எல்லாம் அனுபவித்து தளர்ச்சியடைந்த ஒரு நடுத்தர வயதைத் தாண்டிய மனிதனின் படம். இன்னொன்று- அழகான சுருண்ட கேசத்துடனும், புன்சிரிப்பு தவழ்ந்து கொண்டிருக்கும் முகத்துடனும், பெரிய கண்களுடனும் இருக்கும் ஒரு இளைஞனின் படம்.

by Swathi   on 27 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
யானையும் மூப்பனும் யானையும் மூப்பனும்
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.