LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- வைக்கம் முஹம்மது பஷீர்

செகண்ட் ஹேண்ட்

முடியை அவிழ்த்துப்போட்டு, கண்கள் சிவக்க சாரதா பயங்கர கோபத்துடன் நின்று கொண்டிருக்கும் கோலத்தைப் பார்த்த பத்திரிகை முதலாளி கோபிநாதன் தாழ்ந்த குரலில் சொன்னார்:

""சாரதா... நாளைக்குப் பத்திரிகை வெளிவர்ற நாள்னு உனக்குத் தெரியாதா? இன்னைக்கு ராத்திரி எனக்கு ஏகப்பட்ட வேலைகள் இருக்கு. சாப்பாடு ஏதாவது இருந்தா கொடு...''

""சாப்பாடு...'' சாரதா கோபத்தில் அலறினாள். ""நான் ஒண்ணுமே தயாரிக்கல. புரியுதா? வேணும்னா என்னையே சாப்பிட்டுருங்க. எனக்கு இந்த வாழ்க்கையே வெறுத்துப் போச்சு!''



அவள் சொன்னது ஒருவிதத்தில் சரிதான். சாரதாவிற்கு கோபிநாதனை ஆரம்பத்தில் இருந்தே பிடிக்காது. அவள் அவர்மீது எந்தக் காலத்திலும் காதல் கொண்டது இல்லை. "என்னோட இதயத்துல காதல்னு ஒண்ணு இல்லவே இல்ல. என்னால யாரையும் காதலிக்கவும் முடியாது' என்றுதான் திருமணத்திற்கு முன்பே சாரதா சொன்னாள். திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. இந்த நிமிடம் வரை சாரதாவுக்குப் பிடிக்காத மாதிரி- அவள் முகத்தைச் சுழிக்கிற மாதிரியான ஒரு காரியத்தை கோபிநாதன் செய்ததே இல்லை என்பதே உண்மை. அவளை "அன்பே...' என்று பாசத்துடன் அழைக்கவோ, முத்தம் கொடுக்கவோ, தொடவோகூட அவர் செய்ததில்லை.

கோபிநாதன் கேட்டார்:

""நீ இப்படி முணுமுணுத்து- கோபப்பட்டு ரொம்ப நாளாச்சே! சாரதா, உனக்குப் பிடிக்காதது மாதிரி நான் ஏதாவது பண்ணிட்டேனா என்ன?''

""நீங்க ஏன் என்னைக் கல்யாணம் பண்ணினீங்க?'' தன் பெரிய மார்புப் பகுதியை முன் பக்கமாய்த் தள்ளிக் கொண்டு சுவரில் சாய்ந்து நின்றவாறு ஒய்யாரமாக அவள் கேட்டாள். அவள் அப்படிக் கேட்டதும், உண்மையிலேயே ஒரு நிமிடம் கோபிநாதன் நடுங்கித்தான் போனார். ஒரு மனைவி தன் கணவனிடம், "ஏன் என்னைத் திருமணம் செஞ்சீங்க?' என்று கேட்டால், அதற்கு அவன் என்ன பதில் சொல்ல முடியும்? கோபிநாதன் ஒன்றுமே பதில் கூறாமல் வெறுமனே ஜன்னல் வழியே இருண்டு கிடந்த தெருவையே வெறித்துப் பார்த்தார். வேகமாக வீசிக் கொண்டிருந்த காற்று சிறிது நேரத்தில் மழைத் துளிகளை அறைக்குள் விழவைத்துக் கொண்டிருந்தது.

""தண்ணி உள்ளே விழுறது தெரியலியா? நீங்க நனையறீங்களேன்றதுக்காக நான் இதைச் சொல்லல. அறை முழுவதும் மழை நீராயிடும்.'' சாரதா சொன்னாள்.

ஜன்னலை இழுத்து மூடிவிட்டு கோபிநாதன் சாரதாவுக்கு அருகில் போய் நின்றார். அவளின் கண்களில் இருந்து வழிந்த நீரில் அறையில் இருந்த மின்விளக்கு பிரதிபலித்தது.

""எனக்கு சாகணும்போல இருக்கு.'' அவள் நெஞ்சில் அடித்தவாறு சொன்னாள்.

கோபிநாதன் அவளின் கைகளைப் பிடித்தார்.

""என்னைத் தொடாதீங்க. நான்தான் தொடக் கூடாத பொருளாச்சே!'' அவள் அலறினாள்.

கோபிநாதன் அவளின் வாயைக் கையால் மூட முற்பட்டார்.

""நான் சாகப்போறேன்.'' அவள் சுவரில் தன் தலையை மோதினாள். தன் புடவைத் தலைப்பைக் கையில் எடுத்தாள்.

""இந்த வெறுப்படைஞ்சுபோன வாழ்க்கை எனக்குத் தேவையே இல்ல.'' கையில் இருந்த வளையல்களை உடைத்தாள். உடைந்த வளையல்களை அறைக்குள் வீசி எறிந்தாள். பைத்தியம் பிடித்ததைப் போல அடுத்த அறைக்குள் ஓடினாள். படுக்கையில் விழுந்து தேம்பித் தேம்பி அழுதாள்.

கோபிநாதன் என்ன செய்வது என்று புரியாமல் நாற்காலியில் போய் உட்கார்ந்தார். சாரதா இப்படி நடந்து கொள்வதற்குக் காரணம் என்ன? அப்படி அவள் நடக்கிற அளவிற்கு கோபிநாதன் தவறுதலாக ஒன்றும் நடக்கவில்லை. பெண் என்பவளே ஒரு வினோதமான படைப்புதான் என்று மனதிற்குள் நினைத்தவாறு காற்றின் இரைச்சலையும் மழையின் ஆரவாரத்தையும் காதுகொடுத்துக் கேட்டவாறு அவர் வெறுமனே அமர்ந்திருந்தார்.

சாரதாவை கோபிநாதன் முதன்முறையாகப் பார்த்தது, அவர் வாழ்க்கையில் மிகவும் விரக்தி அடைந்திருந்த காலகட்டத்தில். உஷ்ணத்தில் சூடேறிப் போன பாலைவன மணலில் நடப்பது மாதிரி பலவித கஷ்டங்களையும் வேதனைகளையும் அவர் அனுபவித்துக் கொண்டிருந்த நேரமது. அவரின் எலும்பும் நரம்பும் சதையும் வேதனையால் துடித்துக் கொண்டிருந்தன. ஏதோ ஒன்றை அவை தேடிக் கொண்டிருந்தன. குளிர்ச்சியான நீர் நிறைந்த பொய்கைதான் பெண் என்பவள் என்று அவர் மனதில் தோன்றிக் கொண்டிருந்த காலம் அது. பெண்ணைப் பார்ப்பது என்பது அவரின் கண்களுக்கு ஒரு குளிர்ச்சியான விஷயமாக இருந்தது. பெண்ணொருத்தியை இறுக மார்போடு சேர்த்துப் பிடித்து அணைக்க வேண்டும், அவளுக்கு ஆசை தீர முத்தம் தர வேண்டும், ஆயிரமாயிரம் அன்பான வார்த்தைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றெல்லாம் மனப்பூர்வமாக ஆசைப்பட்டார் அவர். ஆனால், கட்டிப்பிடிக்கவும் முத்தம் தரவும் ஆசைதீரப் பேசவும் யாராவது இருந்தால்தானே!

அப்போதுதான் அவரின் வாழ்க்கையில் சாரதா வந்து சேர்கிறாள். அதுவும் மழையும் காற்றும் நிறைந்த ஒரு இரவுப் பொழுதில்! கோபிநாதன் பத்திரிகை அலுவலகத்தில் இருந்து தங்கியிருக்கும் இடத்திற்கு வருகிறார். அப்போது பூட்டு போட்டுப் பூட்டப்பட்டிருந்த வாசல் கதவு அருகில் சுவரோடு சேர்ந்து யாரோ நிற்பது தெரிகிறது. கோபிநாதன் அருகில் சென்று மின் விளக்கைப் போட்டார். நிற்பது ஒரு பெண். அவள்தான் சாரதா. அவள் பெயர் சாரதா என்று அப்போது கோபிநாதனுக்குத் தெரியாது. கோபிநாதன் கேட்ட கேள்விகளுக்கு அவள் முதலில் சரியாக பதில் சொல்லவில்லை. காற்றிலும் மழையிலும் நின்று நடுங்கி கொண்டிருந்த அந்த இளம் பெண்ணை உள்ளே வரும்படி அழைத்தார் கோபிநாதன்.

""உங்களுக்கு குடை வேணுமா? இல்ல... போறதுக்கு ஏதாவது வண்டி வேணுமா?'' கோபிநாதன் கேட்டார்.

அதற்கும் அவள் பதில் சொல்லவில்லை.

""நீங்க அங்கேயே நின்னுக்கிட்டிருந்தா எப்படி? உள்ளே வந்து உட்காருங்க...''

அவள் கதவருகில் வந்து நின்றாள். கையில் ஒரு சிறிய சூட்கேஸ் இருந்தது. அவளின் கண்கள் கலங்கியிருந்தன. அப்போதும் கன்னங்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. கட்டியிருந்த ஆடை நனைந்து உடம்போடு ஒட்டிப்போய் இருந்தது. கருப்பு பார்டர் போட்ட வெள்ளைப் புடவையும் கருப்பு புள்ளிகள் போட்ட வெள்ளை ப்ளவுஸும் அவள் அணிந்திருந்தாள். புலியைப் பார்க்கும் பசுவைப்போல அவள் கோபிநாதனைப் பார்த்தாள்.

கோபிநாதன் சொன்னார்:

""பயப்படாதீங்க. உள்ளே வந்து உட்காருங்க!''

அவள் உள்ளே வந்தாள். கோபிநாதன் கதவை அடைத்து தாழ்ப்பாள் போட்டார்.

""நீங்க எங்கே போகணும்?''

அவள் பதில் பேசவில்லை.

""நீங்க உள்ளே இருக்குற அறைக்குள் போங்க. போட்டிருக்கிற ஆடை முழுசா நனைஞ்சிருக்கு. ஆடைகளை மாற்றிக்கோங்க. இங்கே நான் மட்டும்தான் இருக்கேன். நீங்க எதைப்பற்றியும் பயப்பட வேண்டாம். நான் உங்க அப்பா மாதிரின்னு நினைச்சுக்கோங்க. நான் உங்க சகோதரன் மாதிரின்னு நினைச்சுக்கோங்க. நான் உங்க...''

அதற்கு மேல் கோபிநாதன் பேசவில்லை. அவளிடம் வேறு ஆடைகள் எதுவும் இல்லை என்று அவள் சொன்னாள்.

கம்பி அறுந்த வீணை மாதிரி இனிய குரலில் அவள் பேசினாள். அந்தக் குரலைக் கேட்டு என்னவோபோல் ஆகிவிட்டார் கோபிநாதன். வேகமாகச் சென்று பெட்டியில் சுத்தம் செய்து வைக்கப்பட்டிருந்த ஒரு வேஷ்டியையும் ஒரு சால்வையையும் எடுத்து அவள் கையில் தந்தார்.

""என்கிட்ட ப்ளவுஸோ புடவையோ கிடையாது. காரணம்- நான் இன்னும் கல்யாணம் ஆகாதவன்.''

அவர் அப்படிச் சொன்னதும், அவள் லேசாகச் சிரித்தது மாதிரி இருந்தது. அவள் அடுத்த அறைக்குள் சென்று ஆடைகளை மாற்றிக் கொண்டு வந்தாள்.

கோபிநாதன் கேட்டார்:

""ஏதாவது சாப்பிடுறீங்களா?''

அவள் மெதுவான குரலில் சொன்னாள்:

""எனக்கு எதுவும் வேண்டாம்.''

கோபிநாதன் சொன்னார்:

""ஏதாவது சாப்பிடணும். என்னோட வீட்டுக்கு வந்துட்டு ஒண்ணுமே சாப்பிடாம இருந்தா எப்படி? ஒரு டம்ளர் தேநீர் குடிக்கலாம்.''

அவள் அதற்கு வேண்டும் என்றோ வேண்டாம் என்றோ ஒன்றும் கூறவில்லை. கோபிநாதன் எழுந்து தன்னை அவளுக்குப் பரிச்சயப்படுத்தினார்.

""என் பேரு கோபிநாதன். ஒரு பத்திரிகையோட உரிமையாளர் நான். உங்க பேரு?''

""சாரதா...'' அவள் குனிந்தவாறு அமர்ந்து பதில் சொன்னாள். கோபிநாதன் தேநீர் தயாரிப்பதற்காக அடுத்த அறைக்குள் நுழைந்தார். இரண்டு ஜன்னல்களின் கம்பிகளில் புடவையின் நுனிகளைக் கட்டி காய வைத்திருந்தாள் சாரதா. அதற்குமேல் ப்ளவுஸையும் பாடியையும் பாவாடையையும் போட்டிருந்தாள். அவரின் வீட்டிற்குள் பெண்கள் அணியும் ஆடைகளே இப்போதுதான் முதல் தடவையாக நுழைந்திருக்கின்றன. பெண்...! இந்தச் சொல்லை நினைத்துப் பார்த்தபோதே அவரின் இதயத்தில் இனம் புரியாத சுகம் உண்டானது. ஆனந்த உணர்வு அங்கு அரும்பிவிட்டிருந்தது. அதற்குமேல் அவரால் சிந்திக்கவே முடியவில்லை. மறைந்து நின்று அவர் அந்தப் புடவையில் தன் உதட்டால் முத்தம் கொடுத்தார். அந்த பாடியிலும்... பெண்ணின் மணம்... பிறகு ஸ்டவ்வைப் பற்ற வைத்து தேநீர் உண்டாக்கினார். இரண்டு டம்ளர்களில் தேநீருடன் அவர் வந்தபோது, அவள் மேஜைக்குப் பக்கத்தில் அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.

""திருமதி சாரதா... தேநீர் குடிக்கலாமா?'' கோபிநாதன் சொன்னார். அவள் களைத்துப்போன முகத்துடன் தேநீரை வாங்கிக் குடித்தாள்.

""தூக்கம் வர்ற மாதிரி இருக்கா?'' கோபிநாதன் கேட்டார்.

அவள் சொன்னாள்:

""நான் இந்த நாற்காலியில் உட்கார்ந்தபடியே தூங்கிக்கிறேன்.''

""சே... சே...'' கோபிநாதன் அவளைத் தடுத்தார். ""எதற்கு நாற்காலியில தூங்கணும்? அடுத்த அறைக்குள் போயி கதவைத் தாழ்ப்பாள் போட்டுட்டு தூங்குங்க. நான் இந்த சாய்வு நாற்காலியில படுத்து தூங்கிக்கிறேன்.''

அவள் முதலில் தயங்கினாள். பின் என்ன நினைத்தாளோ- அடுத்த அறைக்குள் நுழைந்து உள்ளே தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு படுத்தாள்.

வாழ்க்கையை அவர் நினைத்துப் பார்த்தார். "யார் அவள்? ஒரு துணையே இல்லாமல் எங்கே இருந்து அவள் வந்திருக்கிறாள்? அவளின் கண்ணீருக்குப் பின்னால் மறைந்திருக்கும் உண்மைதான் என்ன?' அவர் தனக்குத்தானே இந்தக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு சிகரெட்டாகப் பிடித்துப் போட்டார். இப்படி எத்தனையோ சிகரெட்டுகள்! அப்படியே சில மணி நேரங்களில் தன்னை மறந்து தூங்கியும் போனார். அவர் கண்களைத் திறந்தபோது பொழுது நன்கு விடிந்து விட்டிருந்தது.

அவர் சாய்வு நாற்காலியை விட்டு எழுந்தார். அறையில் அவர் இங்குமங்குமாய் நடக்கும் ஒலியைக் கேட்டு சாரதா கதவைத் திறந்தாள்.

கோபிநாதன் அவளுக்கு காலை வணக்கம் சொன்னார்.

""குட் மார்னிங்...''

""குட் மார்னிங்...''

""நல்லா தூங்கினீங்களா?''

""நல்லா தூங்கினேன்.''

""குளிக்கணும்னா...''- அவர் நடந்து சென்று சோப், எண்ணெய், துண்டு ஆகியவற்றை எடுத்துக் கொடுத்தார். ஒரு சீப்பு, ஒரு பேப்பரில் மடிக்கப்பட்ட கொஞ்சம் உமிக்கரி- இவற்றையும் தந்தார். குளிக்கும் அறையையும் கழிப்பறையையும் அவளுக்குக் காட்டினார். அதற்குப் பிறகு கோபிநாதன் தெர்மாஸ்ஃப்ளாஸ்க்கை எடுத்துக் கொண்டு போய் காப்பி, பலகாரத்துடன் திரும்பி வந்தார். சாரதா குளித்து முடித்து, அவளுடைய ஆடைகளை அணிந்து அழகாக நின்றிருந்தாள்.

கோபிநாதனும் குளித்து முடித்தார். இரண்டு பேரும் காப்பி குடித்தார்கள். அப்போதுதான் சாரதாவின் முகத்தையே நேருக்கு நேராகப் பார்த்தார் கோபிநாதன். அவளுடைய முகம் சாதாரணமாக இருப்பதைவிட வெளிறிப் போயிருந்தது. என்ன காரணம் என்று அவருக்குத் தெரியவில்லை. என்றைக்கும் இல்லாமல் அன்று கோபிநாதன் சூட் அணிந்தார். தவிட்டு நிறத்தில் ஷூவும், வெள்ளை நிறத்தில் சூட்டும், வெள்ளை நிற சட்டையும், ப்ளேஸர் கோட்டும்... டிப்டாப்பாக ஆடையணிந்து அலுவலகம் செல்லத் தயாரானார். சாரதாவைப் பார்த்துக் கேட்டார்:

""நீங்க எங்கே போகணும்?''

சாரதா பதிலே பேசவில்லை. அதற்குப் பதிலாக அவள் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

கோபிநாதன் கேட்டார்.

""ஏன் அழறீங்க?''

அவள் தலை குனிந்தவாறு சொன்னாள்:

""ஒண்ணுமில்ல...''

நேத்து ராத்திரி எங்கே இருந்து வந்தீங்க?''

""ஆஸ்பத்திரியில இருந்து...''

""அப்ப நீங்க நர்ஸா?''

""இல்ல...''

""டாக்டரா?''

""இல்ல...''

""அங்கே ஏதாவது படிக்கிறீங்களா?''

""இல்ல..''

""சொந்த ஊர் எது?''

அவள் சொந்த ஊரின் பெயரைச் சொன்னாள்:

""...''

எழுபது மைல் தூரத்தில் இருக்கும் ஊர் அது.

""அங்கே என்ன பண்ணினீங்க?''

""படிச்சிக்கிட்டு இருந்தேன்.''

""எந்த க்ளாஸ்ல?''

""பி.ஏ.''

""அம்மாவும் அப்பாவும் இருக்காங்களா?''

""இருக்காங்க''

""அப்பா என்ன பண்றாரு?''

""ஹைஸ்கூல்ல ஹெட்மாஸ்டரா இருக்காரு!''

""வீட்ல இருந்து கோவிச்சிக்கிட்டு வந்துட்டீங்களா?''

அதற்கு சாரதா பதில் சொல்லவில்லை.

""ஊருக்குத் திரும்பிப் போகணுமா?''

""வேண்டாம்...''

""அப்படின்னா வேற எங்கே போகணும்?''

""எனக்கு எங்கே போகணும்னே தெரியல. போறதுக்கு ஒரு இடமும் இல்ல...''

அதைக் கேட்டதும் கோபிநாதனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பெண்தானே! வேண்டுமென்றே ஏமாற்றலாம்- சதி வேலை செய்யலாம்- தன்னைக் கைக்குள் போடுவதற்கு முயற்சிக்கலாம்- இல்லாவிட்டால் ஏதாவது திருடலாம் என்று வந்திருக்கலாம். இதில் எது உண்மை? இவள் நல்லவளா கெட்டவளா? அவரால் எந்தவித முடிவுக்குமே வர முடியவில்லை. காரணம்- அவளின் குரலில் உண்மைத்தனம் தெரிந்தது. சில நிமிடங்கள் யோசித்த கோபிநாதன் இனி என்ன செய்வது என்று மண்டையைப் போட்டுக் குழப்பினார். கடவுளே! கோபிநாதனுக்கு இப்படியொரு நிலைமையா? மிகப் பெரிய மக்கள் கூட்டத்திற்கு முன் முதல் தடவையாக வாழ்க்கையில் உரையாற்றப்போகும் ஒரு ஆரம்பப் பேச்சாளனைப்போல, அவர் தயக்கமும் பரபரப்பும் கொண்ட மனிதராக மாறினார்.

""நான் இப்போ சொல்லப்போறதை நீங்க கவனமா கேட்டுக்கணும்.'' கோபிநாதன் சொன்னார். ""சாரதா, உங்களுக்கு என்னைப் பற்றி ஒண்ணும் தெரியாது. அதே மாதிரி உங்களையும் எனக்குத் தெரியாது. இந்தப் பிரபஞ்சம் மிகமிகப் பெரியது. நேத்து ராத்திரிதான் நாம ஒருவரையொருவர் பார்த்திருக்கோம். சாரதா... உங்களுக்கு அம்மா, அப்பா இருக்காங்க. வீடும் இருக்கு. ஆனா, போறதுக்கு ஒரு இடமும் இல்லைன்னு நீங்க சொல்றீங்க. அதற்கான காரணம் என்னன்னு நான் விசாரிக்க விரும்பல. உங்களைப் பற்றி இனியும் தகவல் ஏதாவது வேணும்னு நான் கேட்கல. சாரதா.. நீங்க என் கூடவே எப்போதும் இருக்கணும்னு நான் கேட்டுக்குறேன்.''

சிறிது நேர அமைதி. சாரதா அதைக் கலைத்தாள்:

""நான் எப்படித் தங்குறது?''

கோபிநாதன் மகிழ்ச்சியான குரலில் சொன்னார்:

""என்னோட மனைவியா. எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு. இந்த நிமிடத்திலேயே உங்களை என்னோட மனைவியா ஏத்துக்கிறதுக்கு நான் தயாரா இருக்கேன்.''

""திருமணம்...!'' இந்த வார்த்தையைக் கேட்டதும் அவள் அதிர்ச்சி அடைந்தாள். அவர் சொன்னதைத் தான் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது மாதிரி மீண்டும் கேட்டாள்:

""திருமணம்...?''

""ஆமா... சாரதா, உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு. நான் உங்களை விரும்புறேன்.''

கொஞ்சம்கூட பதற்றமே இல்லாமல் அவள் கோபிநாதனின் கண்களையே உற்றுப் பார்த்தாள்.

""நீங்க நல்ல மனிதர்.'' வருத்தம் கலந்த குரலில் அவள் சொன்னாள்: ""உங்களோட வாழ்க்கையில் பங்குபெற எந்தக் காலத்திலும் தகுதியே இல்லாத ஒரு அசுத்தமான பெண் நான்.''

""அதைப் பற்றி பிரச்சினை இல்ல... நானும் அப்படி ஒண்ணும் பெரிய மகாத்மா இல்ல...''

""அதற்காக நான் உங்களை ஏமாற்ற விரும்பல...''

""இதுல ஏமாத்துறதுக்கு என்ன இருக்கு?''

""என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியல!''

இப்போது பதிலுக்கு அவர் ஏதாவது சொல்லியாக வேண்டும். தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேசத் தொடங்கினார். தத்துவ ஞானம் நிறைந்த ஒரு கம்பீரமான சொற்பொழிவு அது.

""ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடியாத இரண்டு வெவ்வேறு படைப்புகள். ஒருவர் இதயத்திற்குள் இன்னொருவர் எப்படி எட்டிப் பார்க்க முடியும்? மனித உடம்பே ஒரு பெரிய கற்கோட்டை மாதிரிதானே! அதற்குள் என்னவென்றே புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கும் ஆத்மாவைப் பற்றி எனக்கு ஒண்ணுமே தெரியாது. இருந்தாலும் நான் கண்களை ஆத்மாவோட வாசல் கதவுகள்னு தீர்க்கமா நம்புறேன். அந்த வகையில் நான் சொல்ல வர்றது என்னன்னா... சாரதா, உங்களோட கண்கள் வழியாக உங்களோட சுத்தமான ஆத்மாவை என்னால பார்க்க முடியுது. அதை நான் என்னை நேசிப்பதைவிட அதிகமா நேசிக்கிறேன்.''

அவ்வளவுதான்-

சாரதா தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள். ""நான் ஒரு அசிங்கமான பெண்.''

அதைக்கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார் கோபிநாதன்.

""சாரதா, நீங்க எப்படி அசிங்கமான பெண்ணுன்னு உங்களைச் சொல்றீங்க? உங்க உடம்புல அழுக்கு ஏதாவது பட்டிருக்கா என்ன?''

அவரின் கண்களையே உற்றுப் பார்த்தாள் சாரதா. பிறகு அவள் சொன்னாள்:

""இந்த உலகத்துல எனக்குன்னு இருக்க ஒரு இடமும் இல்ல. இதுதான் உண்மை. நீங்க எனக்கு எல்லாம் தரத் தயாரா இருக்குறதா சொல்றீங்க. நாம ரெண்டு பேரும் பார்த்துப் பேசியதே சில மணி நேரங்கள்தான். இந்தக் குறுகிய நேரத்துல நீங்க என்னை விரும்புறதா சொல்றீங்க. என்னைத் திருமணம் செய்யப் போறதாகவும் சொல்றீங்க...''

""சொல்றது மட்டுமல்ல... உடனே செய்து காட்டவும் தயாரா இருக்கேன். குறுகிய நேரம்னு சொல்றீங்க.... வாழ்க்கை இருப்பதே குறுகிய நேரத்துக்குத்தானே! திருமணத்தைப் பற்றி மணிக்கணக்கா சிந்திச்சிக்கிட்டு இருக்கிறதுக்கும் யோசனை பண்றதுக்கும் என்ன இருக்கு?''

""இருந்தாலும்...''

""என்ன இருந்தாலும்?''

""என்னோட கடந்த காலத்தைப் பற்றி...?''

""அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. எனக்குக் கூடத்தான் கடந்த காலம் இருக்கு. அங்கே பல பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்யுது. நாம ரெண்டு பேருமே கடந்த காலத்தை மறந்திட வேண்டியதுதான். நமக்கு இப்போ இருக்குறது நிகழ்காலம்தான். நாம வாழ்ந்துக்கிட்டு இருக்கிற இந்தக் காலத்துல ஒருவரையொருவர் புரிஞ்சிக்கிட்டு, அன்பு செலுத்தி, நம்பிக்கையுடன் வாழ்றது எப்படின்னுதான் இப்போ நாம பார்க்கணும்.''

""உங்களுக்கு ஒண்ணுமே தெரியல!'' அவள் ஏதோ சொல்ல முற்பட்டாள். வார்த்தைகள் வெளியே வரவில்லை. அடுத்த நிமிடம் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. கண்ணீர் விட்டவாறு அவள் சொன்னாள்: ""நான் ஆஸ்பத்திரியில ஒரு குழந்தையைப் பெற்றேன்...''

சில நிமிட மவுனத்திற்குப் பிறகு கோபிநாதன் கேட்டார்:

""இப்போ அந்தக் குழந்தை எங்கே?''

""அது செத்துப் போயிடுச்சு!''

""அப்போ உங்களோட கணவர்?''

""எனக்குக் கல்யாணமே ஆகல!''

""குழந்தையோட தகப்பன்?''

""என்னோட ஒரு நண்பன்!''

""இப்போ அந்த ஆள் எங்கே இருக்கார்?'

""ஹானர்ஸ் படிச்சிக்கிட்டு இருக்கார்.''

""அதுனால?''

""அவரோட எதிர்காலத்தை அவர் பார்க்கணுமாம். என்கிட்ட சொல்லிட்டாரு!''

""என்ன எதிர்காலம்?''

""அவர் ஒரு கவிஞர். சில புத்தகங்கள்கூட எழுதியிருக்காரு. அவரோட தேர்வு போன வாரம் ஆரம்பிச்சது. தேர்வுல பாஸ் ஆயிட்டா, அதே கல்லுரியில வேலை அவருக்குக் கிடைக்கும்.''

""கவிஞரோட பேரு?''

சாரதா அந்த ஆளின் பெயரைச் சொன்னாள்:

""...''

""அந்த இலட்சியவாதி...''

""ஆமா...'' சாரதா தொடர்ந்தாள்: ""நான் அவரோட கவிதைகளைப் படிச்சிருக்கேன். இந்த நிலைமையில ஒருநாள் நான் தங்கி இருந்த ஹாஸ்டலோட எதிர்ப்பக்கம் இருந்த வீட்டுக்கு வாடகைக்கு வந்தார் அவர். அவர் எழுதிய ஒரு புத்தகத்தைப் பற்றி சில தகவல்களை அவர்கிட்ட நான் கேட்டேன். இப்படித்தான் எங்களுக்குள் பழக்கம் உண்டானது. அதுவே நாளடைவில் காதலா மாறிச்சு. காதல்... எல்லையைக் கடந்த காதல்... தெய்வீகக் காதல்... நாங்கள் ஒருவருக்கொருவர் நிறைய கடிதங்கள் எழுதியிருக்கோம். அவர் ஒரு மாதிரியான ஆள்னு என்னோட தோழிகள் பலரும் சொன்னாங்க. ஆனா, அவரோட கவிதைகள் ஒவ்வொண்ணும் உண்மைக் காதலின் புனிதத் தன்மையைப் பறைசாற்றக் கூடியவை ஆயிற்றே!

நான் அவரை முழுமையா நம்பினேன். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து பல சத்தியங்கள் செய்தோம். நிலவு வானத்துல இருக்கிற நேரத்துல... இரவு நேரங்களில்... அவர் ஹாஸ்டலோட சுவரைத் தாண்டிக் குதிச்சு உள்ளே வருவார். தோட்டத்தில் இருந்த மாமரத்துக்குக் கீழே வச்சு...

நான் எல்லாத்தையும் யாருக்கும் தெரியாமல் மறைச்சு வச்சேன். என்னோட தோழிகள் என்னைக் குற்றம் சொன்னாங்க. நான் என் வீட்டுக்குப் போனேன். எல்லாருக்கும் விஷயம் தெரிஞ்சு போச்சு. வீட்டைவிட்டு வெளியேறினேன். யாருமே வேண்டாம்- எதுவுமே வேண்டாம்னு கிளம்பிட்டேன். ஆஸ்பத்திரிக்கு வந்தேன். நான் மூணு கடிதங்கள் எழுதினேன். அவர் கடைசி கடிதத்திற்குப் பெயர் எழுதாமல் ஒரே வரியில் பதில் எழுதியிருந்தார்- "என்னோட எதிர்காலத்தை நான் பார்க்கணும்'- இதுதான் அவர் எழுதியிருந்தது! என்னோட கையில் பணம் எதுவும் இல்ல. முந்தாநாள் ராத்திரி நான் ஆஸ்பத்திரியிலேயே தற்கொலை பண்ணிக்கலாமான்னு பார்த்தேன். ஜன்னல் வழியாக கீழே குதிக்க முயற்சித்தேன். அப்போ போலிஸோட விசில் சத்தம். அதைக் கேட்டதும் நான் நடுங்கிப்போனேன். தற்கொலை முயற்சி நின்னிருச்சி. மீண்டும் வாழவேண்டியதாப் போயிடுச்சு. ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறினேன். எங்கே போறதுன்னே தெரியல. மதியத்திலிருந்து நான் பாட்டுக்கு நடந்துக்கிட்டே இருந்தேன். மழை பெய்துகிட்டிருந்தது. நான் நல்லா நனைஞ்சிட்டேன். எங்கே போறதுன்னே தெரியாம அப்படி ஒரு நடை... எங்கே மழையில விரைச்சுப்போய் கீழே விழுந்திடுவோமோன்னு தோணினப்போதான் இங்கே வந்து நான் நின்னது...''

""விஷயம் இவ்வளவுதானா?'' கோபிநாதன் சொன்னார்: ""பரவாயில்ல... வாழ்க்கைன்றது கவலைப்படுறதுக்காக உள்ளது இல்ல. சாரதா, உங்க வாழ்க்கையில ஒரு தப்பு நடந்திடுச்சு. பெரும்பாலான திருமணமாகாத பெண்கள் வாழ்க்கையில் நடக்குற ஒரு சமாச்சாரம்தான் இது. குறிப்பா கல்லூரி மாணவிகளுக்கு. வெளியே காண்பிச்சிக்கிட்டு இருக்குற அளவுக்கு பலரும் உள்ளே அவ்வளவு நல்லவங்க இல்ல. ஆண்கள்- பெண்கள் இரண்டு பேருக்குமே இது பொருந்தும். இனி நடந்து போன விஷயங்களை நினைச்சுப் பார்த்து என்ன பிரயோஜனம்? மகிழ்ச்சியா இருக்கணும். நான் போய் உங்களுக்காக ஏதாவது ஆடைகள் வாங்கிக்கிட்டு வர்றேன்!''

""எதற்கு?''

""சாரதா, நீங்க என்னோட மனைவியா என்கூட இருக்குறப்போ, உங்களுக்கு அணிய ஆடைகள் வேணுமே! என்னோட வேஷ்டியையும் சால்வையையும் எப்பவுமே அணிய முடியுமா என்ன?''

""வேண்டாம். இந்தக் கல்யாணம் நல்லா இருக்காது. உங்களுக்கு அப்பா, அம்மா இருக்காங்கள்ல? உங்களுக்கு நண்பர்கள் இருக்காங்கள்ல? அவங்களுக்கு நிச்சயம் இது பிடிக்காது.''

""அவங்களா உங்களைக் கல்யாணம் பண்ணப்போறாங்க? எனக்கு அப்பா கிடையாது. அம்மா மட்டும்தான் இருக்காங்க. அவங்க என்னோட சம்மதம் இல்லாமலே வேறொரு ஆளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. எனக்கு சகோதரர்கள் யாரும் கிடையாது. ஒரே ஒரு சகோதரி இருக்கா. அவளுக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. சுருக்கமாச் சொல்லப்போனா- இந்தப் பெரிய உலகத்துல நான் மட்டும் ஒரு தனி மனிதனாகத்தான் இருக்கேன். சொத்துன்னு ஒண்ணும் கிடையாது. நான் இன்டர்மீடியட் வரை படிச்சிருக்கேன். சொத்துன்னு சொல்லணும்னா என்னோட பத்திரிகையை மட்டும்தான் சொல்ல முடியும். ஆபிஸ் பையன், மேனேஜர், பத்திரிகை முதலாளி- எல்லாமே நான்தான். இதுதான் என்னோட வாழ்க்கை வரலாறு. இப்ப உங்களுக்கு ஏதாவது தடை இருக்குமா?''

""ஆனா என்னோட இதயத்துல காதல்னு ஒண்ணு இல்லியே! என்னால இனிமேல் யாரையும் காதலிக்க முடியாது. இதயம் ஒண்ணுமே இல்லாம சூனியமா இல்ல இருக்கு...''

""சாரதா, உங்களுக்கு என்மேல் நம்பிக்கை இருக்கா?''

இரு கன்னங்களிலும் கண்ணீர் வழிய அவள் மவுனமாக, "இருக்கு' என்பது மாதிரி தலையை ஆட்டினாள்.

அன்றே பதிவாளர் முன்பு அவர்கள் இருவரும் கணவன்- மனைவியாக ஆனார்கள். அன்று இருவரும் ஒன்றாகச் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்தார்கள். அந்தப் புகைப்படத்தை ப்ளாக் எடுத்து பத்திரிகையில் கோபிநாதன் பிரசுரம் செய்தார். பத்திரிகையின் ஒரு பிரதியை கவிஞருக்கும், ஒரு பிரதியை சாரதாவின் தந்தைக்கும் அவர் அனுப்பி வைத்தார்.

சாரதாவின் தாயும் தந்தையும் அவர்கள் இருவரையும் வந்து பார்த்தார்கள். அவர்கள் தம்பதிகளை மனப்பூர்வமாக வாழ்த்தினார்கள். இதற்கிடையில் கவிஞரையும் காணக்கூடிய சந்தர்ப்பம் வாய்த்தது. அந்த இடத்தில் நடந்த ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு சம்பந்தப்பட்ட அந்தக் கவிஞர்தான் தலைமை தாங்கினார். கோபிநாதனும் அந்தக் கூட்டத்தில் ஒரு பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தார். கூட்டம் முடிந்தபிறகு, ஏகப்பட்ட மாலைகளைக் கையில் வைத்துக் கொண்டு வந்த அந்தக் கவிஞர் கோபிநாதனைப் பார்த்துக் கேட்டார்:

""பத்திரிகை அதிபரான உங்களோட திருமணம் சமீபத்துலதான் நடந்தது... இல்ல...?''

கோபிநாதன் சொன்னார்:

""ஆமா...''

""அந்தப் பெண்ணை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?''

""தெரியாது!''

""அவள் எழுதிய சில காதல் கடிதங்கள் ஒரு ஆளுகிட்ட இப்பவும் இருக்கு!''

""ஒருவேளை அந்தக் காதல் கடிதங்களை அந்த ஆளு விற்பனை செய்யறதுக்காகக் கையில வச்சிருக்கலாம். இதைப் பற்றி சாரதா முன்னாடியே என்கிட்ட சொல்லியாச்சு!''

""கல்யாணத்துக்கு முன்னாடியே குழந்தை பிறந்த விஷயத்தைச் சொல்லி இருக்காளா?''

""அதையும் சொல்லிட்டா!''

""அவள் ஒரு செகண்ட் ஹேண்ட் பொருள்ன்ற விஷயத்தை உங்ககிட்ட சொல்லிட்டா. அப்படித்தானே?'' அந்தக் கவிஞர் சிரித்தார். கோபிநாதன் சொன்னார்: ""சாரதா எல்லா விஷயத்தையும் என்கிட்ட சொல்லிட்டா...''

சிறிது இடைவெளி விட்டு கோபிநாதனே தொடர்ந்தார்: ""அவளை அப்படியொரு நிலைக்கு ஆளாக்கிய அந்தக் காதலனான கவிஞரோட பேரையும் அவள் சொன்னாள்!''

அவ்வளவுதான்-

இருளடைந்துபோன முகத்துடன் அந்தக் கவிஞர் கோபிநாதனைப் பார்த்தார். லேசாகச் சிரித்த கோபிநாதன் கவிஞரிடம் விடைபெற்றுக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.

கவிஞரைப் பார்த்த விஷயத்தை கோபிநாதன் சாரதாவிடம் சொல்லவில்லை. ஏன் தேவையில்லாமல் அவள் மனதை நோகடிக்க வேண்டும் என்று அவர் நினைத்ததே காரணம். அந்த விஷயத்தில் கோபிநாதன் எப்போதும் கவனமாக இருந்தார். சாரதாவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. வாழ்க்கை நன்றாகவே போய்க் கொண்டிருந்தது. வீட்டு வேலைகளைக் கவனிப்பது, சமையல் செய்வது, பத்திரிகைகளை மடக்கி அட்டை ஒட்டி முகவரிகள் எழுதுவது- எல்லாமே சாரதாதான். ஆனால், அவளின் எல்லா வேலைகளுக்குப் பின்னாலும், "என்னோட இதயத்துல காதல்னு ஒண்ணு இல்லியே! என்னால இனிமேல் யாரையும் காதலிக்க முடியாது. இதயம் ஒண்ணுமே இல்லாம சூனியமா இல்ல இருக்கு' என்ற அவளின் குரலும் இருந்தது.

கோபிநாதனின் மனதில் ஒரு பெரிய உணர்ச்சிக் கொந்தளிப்பே இருந்தது. இருந்தாலும், சாரதாவின் வார்த்தைகள் அதற்கு முன் ஒரு பெரிய பாறை மாதிரி நின்று கொண்டிருந்தது.

மழையின் ஆரவாரத்திலும் காற்றின் இரைச்சலிலும் கோபிநாதனின் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது சாரதாவின் அந்த வார்த்தைகள்தாம். இப்போது அவள் அவரைப் பார்த்துக் கேட்கிறாள், "என்னை ஏன் கல்யாணம் செஞ்சீங்க' என்று.

கோபிநாதன் எழுந்து குடையையும் பேப்பர்களையும் எடுத்துக் கொண்டு அச்சகத்திற்குப் புறப்பட ஆரம்பித்தார். சாரதாவிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டுப் போகலாம் என்று போனால், அங்கு அவள் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள். அவரைப் பார்த்ததும் அவள் எழுந்து நின்றாள். அவளை அப்படியே இறுகக் கட்டிப்பிடித்து அணைக்க வேண்டும் என்றும், ஆசை தீர முத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்றும் அவர் மனது துடித்தது. ஆனால், அவள்தான் அவரைக் காதலிக்கவில்லையே!

""சாரதா, நான் அச்சகத்திற்குப் போயிட்டு வர்றேன்.''

அவள் உரத்த குரலில் அழ ஆரம்பித்தாள்.

""நீங்க வர்றப்போ நான் இங்கே இருக்க மாட்டேன்!''

""எங்கே போறே?''

""நான் எங்கே போனா உங்களுக்கென்ன? ஒருவேளை நான் தூக்குப்போட்டு செத்தாலும் சாகலாம்.''

""அந்த அளவுக்கு உனக்கு என்ன பிரச்சினை?''

""பிரச்சினையா?'' அவள் மார்பு குலுங்க சொன்னாள்: ""ஒண்ணுமில்ல...''

அவள் மீண்டும் நெஞ்சைக் கைகளால் அடித்தாள். கோபிநாதன் அருகில் சென்று அவளின் கைகளைப் பிடித்தார்.

சாரதா கோபத்துடன் உறுமினாள்:

""என்னைத் தொடாதீங்க. நான் கெட்டுப்போனவ. அசிங்கமானவ.''

""கெட்டுப்போனவளா? என்ன சொல்ற நீ?''

""ஒண்ணுமில்ல. நான் சாகப்போறேன்.''

""சாகப்போறயா? அந்த அளவுக்கு உனக்கு என்ன பிரச்சினை?''

""ம்.. ஒண்ணுமில்ல...'' சிறிது இடைவெளிக்குப் பிறகு அவளே தொடர்ந்தாள்: ""எனக்குன்னு இந்த உலகத்துல யாரும் இல்ல. வெறுத்துப்போன இந்த வாழ்க்கை எனக்கு போரடிச்சுப்போச்சு.''

""யார் இந்த வாழ்க்கையை வெறுக்க வைச்சது?''

""நீங்கதான்.''

""அடக் கடவுளே!'' கோபிநாதன் உண்மையிலேயே அதிர்ச்சியில் உறைந்தே போனார். ""நானா?'' வாயைப் பிளந்தவாறு அவர் நின்றார்.

""ஆமா...'' நீர் வழிந்த கண்களுடன் நின்றிருந்த சாரதா ஏக்கப் பெருமூச்சு விட்டவாறு சொன்னாள்: ""என்னைப் பார்க்கவே உங்களுக்குப் பிடிக்கல...''

""எனக்கா? சாரதா, உனக்குத்தானே என்னைப் பிடிக்கவே இல்ல...!''

""எனக்கா?'' சாரதா கோபிநாதனின் அகன்ற மார்பில் சாய்ந்து தேம்பித் தேம்பி அழுதாள்:

""நான்... உங்களை... என்னோட... கடவுளைவிட...'' சாரதா சொன்னாள்.

by Swathi   on 27 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.