|
||||||||||||||||||
செருப்பு |
||||||||||||||||||
செருப்பு அப்பாடி..! நான்காவது மாதத்தில் ஐநூறு ரூபாய் சேர்ந்து விட்டது. பணத்தை எண்ணிப்பார்த்தவன் இதை மனைவிக்கு தெரியாமல் வீட்டுக்குள் ஒரு இடத்தில் ஒளித்து வைக்க வேண்டும், முடிவு செய்த வீட்டுக்கு செல்லும் பாதையில் நடக்க ஆரம்பித்தான். கிட்டத்தட்ட இந்த நான்கு மாதத்தில் மாதம் செலவுகள் போக இவ்வளவு பணத்தை மிச்சம் பிடிக்க எவ்வளவு சிரமப்படவேண்டியிருந்தது. மாலை அலுவலகத்திலிருந்து நடந்தே வருகிறான். கிட்டத்தட்ட இரண்டரை கிலோ மீட்டர். பஸ்ஸில் ஏறினால் ஆறு ரூபாய் ஆகிறது, அதை மிச்சம் பிடிக்க இந்த முடிவை எடுத்தான். காலையில் அவசரமாய் அலுவலகம் சென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் பஸ் ஏறி விட்டாலும் மாலையில் நடந்தே வந்தால் அந்த பணம் மிச்சம்தானே ! இதனால் வீட்டுக்கு வரும் போது ஏற்படும் தாமதத்திற்கு மனைவியிடம் ஏதோ காரணம் சொல்லி விடுவான். இல்லாவிட்டால் அவள் இவன் நடந்து வருகிறான் என்று தெரிந்து விட்டால் ‘அந்த பஸ்’ காசுக்கு வீட்டு மாத செலவு என்று கணக்கு வைத்து வசூலித்து விடுவாள். இதற்காகவே இவன் ‘வேலை ஜாஸ்தி’ அப்படி, இப்படி என்று பொய் சொல்லிக்கொண்டிருந்தான். இந்த நான்கு மாதங்கள் நடப்பது கூட சிரமமாக தெரியவில்லை, அவன் காலில் போட்டிருந்த செருப்பு இருக்கிறதே, அது செய்த சோதனை, அப்பப்பா, எத்தனை முறைதான் அதை தைக்க கொண்டு போவது? தைக்க இடமே இல்லாமல் தைத்து கொடுத்து விட்டு “புதுசாத்தான் ஒரு செருப்பு வாங்கு சார்” பதவிசாய் சொல்லி விட்டான் செருப்பு தைப்பவன். அவன் இவன் செருப்பை தைக்கும் சலிப்பில் சொல்லிவிட்டான். இவனால் முடிய வேண்டுமே? வாங்கும் சம்பளம் பதினைந்தாயிரத்தில் வீட்டு வாடகை போக குழந்தை பள்ளிக்கு போக பீஸ், வேன் செலவு இப்படி இழுத்து கொண்டே போக, என்னதான் செய்ய முடியும்? நல்ல செருப்பு வாங்க வேண்டுமென்றால் நானூறு ஐநூறாவது வேண்டும். இப்பொழுது போட்டு கொண்டிருந்த செருப்பு கூட நான்கு வருடங்கள் முன்னால் வாங்கியது, அப்பொழுதே முன்னூறு ரூபாய். இவன் மனதார வாங்கவில்லை, மாமனார் ஊரிலிருந்து வந்திருந்தார். அவரை பஸ் ஏற்றிவிட அவருடன் நடந்து வந்த பொழுது இவன் போட்டிருந்த செருப்பு அறுந்து விட்டது. வாங்க மாப்பிள்ளை, அவனை அப்பொழுதே செருப்பு கடைக்கு கூட்டி சென்று இந்த செருப்பை வாங்கி கொடுத்தார். இவனுக்கு மனசு உறுத்தலாக இருந்தது, வேண்டாம் மாமா இதைய தைச்சுக்கறேன், சொல்லி பார்த்தான் அவர் ஒத்துக்கொள்ளவில்லை. பாவம் அவர் எவ்வளவு கையில் வைத்திருந்தாரோ? மாப்பிள்ளைக்கு சாதாரண செருப்பை வாங்கி தரமுடியுமா? இவன் கூட அவரிடம் இவ்வளவு விலை வேண்டாமென்றுதான் சொன்னான். அவர் இல்லை மாப்பிள்ளை விலைய பார்த்தீங்கன்னா உழைப்பு இருக்காது. இது தாங்கும் இரண்டு மூணு வருசத்துக்கு. உண்மைதான், நாலு வருசமாய் தாங்கி விட்டதே ! அதனால் இவனும் முடிவெடுத்து விட்டான். அதே மாதிரி கொஞ்சம் விலை அதிகமா இருந்தாலும் நல்ல செருப்பை எடுத்துக்கணும். அதுக்கு பணம்? அப்பொழுதுதான் இந்த யோசனை. உடனே அன்று மாலையே நடைப்பயணம் மூலம் செயல்படுத்தி விட்டான். முதல் மாதம் இப்படி மிச்சம் பண்ணி சேமித்த பணத்தில் பத்து இருபது அவசரத்திற்கு செலவாகியிருந்தாலும், கிட்டத்தட்ட நூறு ரூபாய் இருந்தது. தன்னையே பாரட்டி கொண்டான். பரவாயில்லையே, நூறு ரூபாய் பக்கம் மிச்சம் ஆயிடுச்சே..! அடுத்து, அடுத்து ஆர்வமாய் சேமிக்க அவ்வப்பொழுது கொஞ்சம் செலவுகள் கை மீறினாலும் இறுக்கி பிடித்து ஐநூறு வரை கொண்டு வந்து விட்டான். இன்று வீட்டுக்கு போனதும் எங்காவது ஒரு இடத்தில் ஒளித்து வைத்து விட்டு காலையில் அலுவலகம் பக்கம் இருந்த செருப்பு கடையில் இதே மாதிரி புது செருப்பை வாங்கிவிடலாம். வீட்டுக்குள் நுழையும்போது மனைவியின் முகம் கறுத்திருந்தது, என்னாச்சு? ஏன் இப்படி இருக்கே? பாப்பா ஸ்கூல் விட்டு வரும்போதே ஒரு மாதிரி இருந்தா, இப்ப நல்ல காய்ச்சல் அடிக்குது, டாக்டருகிட்ட கூட்டிகிட்டு போகணும், மாசக்கடைசி வேற, என்ன பண்னறதுன்னு யோசனையில உங்களை எதிர்பார்த்துகிட்டிருக்கேன். திடுக்கிட்டான், என்னாச்சு அவளுக்கு? உள்புறமாய் சென்றவன் மகள் வாடிய செடியாய் படுக்கையில் சுருண்டு கிடப்பதை பார்த்தவுடன் அரண்டு விட்டான். எப்பொழுதும் அவனை அம்மாவுடன் வரவேற்க வாசலில் நின்றபடி இருப்பள், இவளை இப்படி பார்த்ததே இல்லை. தொட்டு பார்க்க நல்ல காய்ச்சலை உடல் சூடு காண்பித்தது. சட்டென தோளில் எடுத்து போட்டு வெளியே வந்தவன் போய்க்கொண்டிருந்த ஆட்டோவை கூப்பிட்டான். மகளுடன் வீட்டுக்கு வரும்போது இவன் தோளில் சாய்ந்திருந்த மகளின் முகம் சற்று தெளிந்திருந்தது. டாக்டர் ஊசியும் மருந்தும் கொடுத்திருந்தார். வேளா வேளைக்கு மூணு நாளைக்கு கரெக்டா கொடுக்கணும், வலியுறுத்தி சொல்லியிருந்தார். மூன்று நாளைக்கு மருந்தையும் கடையில் வாங்கி கொண்டான். காலையில் அலுவலகம் கிளம்பியவன் சட்டை பையில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்த்தான். நூறு ரூபாய் சில்லறையாக இருந்தது. அப்படியே எடுத்து மனைவியிடம் கொடுத்தவன், பாப்பாவுக்கு ஏதாவது வாங்கி கொடுக்க கையில வச்சுக்க, மனைவியிடம் கொடுத்து விட்டு நடக்க ஆரம்பித்தான். பஸ் அவனை தாண்டி சென்று நின்றது.ஒரு நிமிடம் ஓடிப்போய் ஏறலாமா? நினைத்தவன் வேண்டாம் நடந்தால் அரை மணி நேரம்தான், சரியா இருக்கும், வேகமாக நடக்க ஆரம்பித்தான். நடக்கும்போதே காலையிலும் மாலையிலும் பஸ் காச சேர்த்து வச்சா எவ்வளவு வரும்? மனம் கணக்கு போட்டு கொண்டிருக்க நடை மட்டும் வேகமாக அலுவலகத்தை நோக்கி சென்று சென்று கொண்டிருந்தது. |
||||||||||||||||||
Chappal | ||||||||||||||||||
by Dhamotharan.S on 22 Feb 2023 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|