LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தாய்த்தமிழ் பள்ளிகள் Print Friendly and PDF

தனித்துவமிக்க தலைமையாசிரியர் – திருமதி கு.ரமாராணி,

தனித்துவமிக்க தலைமையாசிரியர் – திருமதி கு.ரமாராணி,
தலைமையாசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கூகலூர், ஈரோடு – 638313.

அறிமுகம்:

         மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு வழிவகை செய்பவர்கள் சிறந்த ஆசிரியர்களாவர். அத்தகைய ஆசிரியர்களையும் சிறப்பாக வழிநடத்திச் செல்பவர்கள் தலைமையாசிரியர்கள் ஆவர். இவர்களில் சிறந்த முன்மாதிரியாக விளங்குபவர்கள் ஒருசிலரே. அத்தகையோரில் திருமதி கு.ரமாராணி அவர்கள் சிறந்த தலைமையாசிரியராகச் செயலாற்றி வருகின்றார். இவர் தன் பள்ளியில் கட்டமைப்பு மேம்பாடு, ஆங்கிலவழி கல்வி, அதிக மாணவர் சேர்க்கை, திறன்மிகு வகுப்பறைச்சூழல் போன்ற பல சாதனைகளைப் புரிந்துள்ளார்.

1. உங்கள் பள்ளியின் கட்டமைப்பு மேம்பாட்டிற்கு தங்களின் திட்டங்கள் யாவை?

         வணக்கம். நான் இப்பள்ளியில் பணிக்குச் சேரும் பொழுது பள்ளிக் கட்டமைப்பு பழையதாக இருந்தது. கட்டமைப்பினை மேம்படுத்தி மாணவர்களுக்குப் பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என விரும்பினேன். மேலும் எங்கள் பள்ளி மாணவர்கள் பிற தனியார்ப் பள்ளி பேருந்தினை வியப்புடன் ஆர்வமாகச் சென்று காணுதலை அறிந்தேன். எனவே மாணவர்களுக்கு ஆர்வமூட்டும் வகுப்பறைச் சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதைத் தீர்மானித்தேன். இதற்காகப் புரவலர்களைத் திரட்ட தொடங்கினேன். தற்போது எங்கள் பள்ளிக்கு ஏறக்குறைய 400 புரவலர்கள் வரை உள்ளனர். அதைத்தவிர முன்னாள் பள்ளி மாணவர்கள் பலரும் உதவுகின்றனர்.

2. உங்கள் பள்ளியிலுள்ள ஆசிரியர்களின் பங்களிப்புகள் பற்றிய தங்களின் கருத்துக்கள் யாவை?

         ஆசிரியர்களுக்குள் எந்த பாகுபாடும் பாராது பள்ளி வளர்ச்சிக்காக ஒற்றுமையாகச் செயலாற்றும் எண்ணமே இவ்வெற்றிக்குக் காரணம். ஆசிரியர்களின் ஒத்துழைப்பின்றி பள்ளி இத்தகைய நிலையை அடைந்திருக்க முடியாது. அனைவரும் நண்பர்களாகவே பழகுவது எங்களின் பலமாக உள்ளது. ஆசிரியர்கள் மட்டும் இணைந்து தங்களின் சொந்த செலவில் முதல்திட்டமாக முதலாம் வகுப்பறை மேம்பாட்டுப் பணியைச் செய்தோம். பலரும் எங்களின் முதல் முயற்சியை வெகுவாக பாராட்டினர். பலர் ஊக்கமளித்து தாமாக உதவ முன்வந்தனர். இத்தகைய வெற்றிக்கு முதற்காரணமாக இருப்பவர்கள் எங்கள் ஆசிரியர்களே என்று கூறலாம்.

3. பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பள்ளிக்கட்டமைப்பு பணிகளுக்கு உறுதுணையாக விளங்குகின்றனர். அவ்வாறு அவர்களின் பங்களிப்பில் தாங்கள் வியந்த உதவிகள் யாவை?

         ஆசிரியர்களின் பங்களிப்பினைப் போன்றே பெற்றோர்கள், பொதுமக்கள் போன்றோரின் பங்களிப்பும் இன்றியமையாதது. எங்கள் பள்ளியில் மாதம் ஒருமுறை பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டம், பள்ளி மேலாண்மைக் கூட்டம் போன்றவை நிகழும். அவ்வாறு ஒரு கூட்டத்தில் பெற்றோர்கள் ஆசிரியர்களின் முதல் வகுப்பறை மேம்பாட்டிற்கு தங்களையும் அழைத்திருக்கலாமே என்று அன்புடன் கடிந்து கொண்டனர். அதோடு மட்டுமில்லாமல் அடுத்தடுத்த வகுப்பறை மேம்பாட்டுப் பணிகளுக்குத் தாமாக முன்வந்து உதவினர். வாரயிறுதி நாட்களில் தங்கள் நேரத்தை ஒதுக்கி இத்தகைய அரிய பணியினை செய்தனர். எங்கள் பள்ளியின் வளர்ச்சி இன்று தன்னிறைவு நிலையை பெற்றுள்ளமைக்கு முக்கிய காரணம் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆகியோர் ஆவர்.

4. தங்களின் தனித்துவ சிந்தனைகளுக்கு ஊன்றுகோலாக அமைந்தது என்ன?

         நான் பள்ளி ஆசிரியராக இதுவரை 30 ஆண்டுகளாக பணிபுரிந்துவருகின்றேன். பல பள்ளிகளில் பணியாற்றிய அனுபவங்கள் எனக்குள்ளன. எனவே அப்பள்ளிகளில் உள்ள சிறப்புக்கூறுகளை இப்பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பது ஊன்றுகோலாக அமைந்தது. இதைத்தவிர அரசுப்பள்ளி என்றால் மக்கள் மனதில் நிலவும் கண்ணோட்டத்தை மாற்ற வேண்டும் என்பதும் ஒரு காரணம் எனலாம். எந்த செயலினையும் சிரத்தையுடன் சிறப்பாகச் செய்யவேண்டும் என்பது எனது கொள்கை. இக்கொள்கையும் ஒரு ஊன்றுகோல் எனலாம்.

5. நீங்கள் எதிர்கொண்ட சவால்களையும் அவற்றை எதிர்கொண்ட விதத்தினையும் கூறுக.

         பல சவால்கள் செயல்பாடுகளுக்கு இடையூறுகளாக அமைந்தன. முதலாவதாக முதலீட்டுத்தேவைகளே பெரும் சவாலாக அமைந்தன. பள்ளிக்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு இதுவரை 65 இலட்ச ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளது. இவ்வளவு தொகையைத் திரட்ட பல இடையூறுகள் ஏற்பட்டன. அடுத்ததாகக் கட்டுமான அனுமதி பெறுதல் பெரிய சவாலாக அமைந்தது. நவீன கணினிமயமாக்கப்பட்ட கணினி ஆய்வகத்தினை கட்டுவதற்குக் கொடையாளர்கள் தயாராக இருந்தாலும் கட்டுமான அனுமதி அரசிடம் பெறுவது பெரிய சிக்கலாக இருந்தது. பின்பு அனுமதி பெற்று ஆய்வகம் கட்டியது மறக்க முடியாத சவாலான செயலாக அமைந்தது. தற்போது எங்கள் பள்ளி வகுப்பறைகள் திறன் வகுப்பறைகளாக மாற்றப்பட்டுள்ளன. கணினி மற்றும் ஆங்கில ஆய்வகங்கள் உள்ளன. பள்ளி நூலகம் மற்றும் கலையரங்கம் உள்ளன. சுகாதாரமான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளன. இவை யாவும் தன்னார்வலர்கள், கொடையாளர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் உதவியினால் மட்டுமே அமைந்துள்ளன.

6. தங்களைப் போலவே பிற தலைமையாசிரியர்களும் செயலாற்ற தங்களின் ஆலோசனைகள் யாவை?

         எந்த தலைமையாசிரியரும் தங்கள் அரசுப்பள்ளியினை குறித்த மக்கள் கண்ணோட்டத்தை மாற்றிச் சிறந்த தரம் வாய்ந்த பள்ளியாக மாற்றவேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொள்ளவேண்டும். அப்போதே அரசுப்பள்ளிகள் சிறந்து விளங்கும். எங்கள் பள்ளியில் தமிழ்வழி மற்றும் ஆங்கிலவழி கல்வி முறைகள் உள்ளன. இதனால் பெரும்பாலானோர் தனியார்ப் பள்ளிகளை நாடிச் செல்லாமல் அரசுப்பள்ளியில் பயில வாய்ப்புண்டு.

7. தங்கள் பள்ளியில் மாணவர்களின் ஆளுமைத்திறன் மேம்பாட்டிற்கான முயற்சிகள் யாவை?

         எங்கள் பள்ளியில் நடைபெறும் வழிபாட்டுக் கூட்டத்தில் ஒவ்வொரு வகுப்பு மாணவர்கள் பாரதியார் பாடல்களினைப் பாடுவர். எனவே அனைத்து வகுப்பினர்களுக்கும் பாரதியார் பாடல்கள் எளிதாகிவிட்டன. இதனால் போட்டிகளில் மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதைத்தவிர அனைத்து மாணவர்களுக்கு ஆங்கிலப்பயிற்சி அளிக்கப்படுகின்றது. மேலும்  மாதம் முழுவதும் சிறப்பாகச் செயலாற்றும் வகுப்பிற்குச் சுழற்கோப்பை ஒன்று வழங்கப்படுகின்றது. சுட்டிஸ் பண்பலை என்பது பள்ளி வளாகத்திற்குள் தினமும் மதியம் 1 - 1.20 வரை ஒலிபரப்பப்படுகின்றது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகுப்பு இப்பண்பலையில் செயலாற்றுவர். மேலும் பள்ளிக்குள் மாணவர்களுக்குள் கடித போக்குவரத்தும் நடைபெறுகின்றது. இதற்கென தனி மாணவர் அமைப்பு உள்ளது. மேலும் கதைசொல்லிகளின் மூலம் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் சிந்தனைகளை வளர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

     திருமதி கு.ரமாராணி அவர்களின் வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துக்களும் பாராட்டுகளும்…

 

by Lakshmi G   on 26 Jan 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தனித்துவமிக்க தலைமையாசிரியர் – நிகழ்வு – 11 - திருமதி. வசந்தா தனித்துவமிக்க தலைமையாசிரியர் – நிகழ்வு – 11 - திருமதி. வசந்தா
ஆற்றல்மிகு ஆசிரியர் –– நிகழ்வு – 11 - திரு. திலீப் ஆற்றல்மிகு ஆசிரியர் –– நிகழ்வு – 11 - திரு. திலீப்
தனித்துவமிக்க தலைமையாசிரியர் - திருமதி. மரகதம் தனித்துவமிக்க தலைமையாசிரியர் - திருமதி. மரகதம்
ஆற்றல் மிகு ஆசிரியர்- திருமதி. கி. கலைச்செல்வி ஆற்றல் மிகு ஆசிரியர்- திருமதி. கி. கலைச்செல்வி
தனித்துவமிக்க தலைமையாசிரியர் –- திரு. செல்வக்கண்ணன், அரசு ஊராட்சி ஒன்றியப்பள்ளி, க.பரமத்தி, கருவு+ர். தனித்துவமிக்க தலைமையாசிரியர் –- திரு. செல்வக்கண்ணன், அரசு ஊராட்சி ஒன்றியப்பள்ளி, க.பரமத்தி, கருவு+ர்.
சென்னை:பாவாணர் தமிழ்வழி மழலையர் தொடக்கப்  பள்ளி, 600100 சென்னை:பாவாணர் தமிழ்வழி மழலையர் தொடக்கப் பள்ளி, 600100
கரூர்: சக்தி தமிழ்ப் பள்ளிக் கூடம், 639004 கரூர்: சக்தி தமிழ்ப் பள்ளிக் கூடம், 639004
புதுப்பட்டிணம்:பாவலரேறு தமிழ்வழித் தொடக்கப்பள்ளி, 603102 புதுப்பட்டிணம்:பாவலரேறு தமிழ்வழித் தொடக்கப்பள்ளி, 603102
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.