பெருமாளின் 108 திருப்பதிகளில் ஒன்று. பத்ரிகாசிரமத்திற்கு அடுத்ததாக பெருமாள் திருமந்திரத்தை தானே உபதேசம் செய்த இடமாதலால் இத்தலம் பத்ரிக்கு இணையானது. லட்சுமியுடன் பெருமாள் நரசிம்ம கோலத்தில் வீற்றிருப்பதால் இத்தலத்திற்கு "லட்சுமி நரசிம்ம க்ஷேத்திரம்' என்ற பெயரும் உண்டு. திருவாலியையும் தரிசிப்பதால் இங்கே பஞ்ச நரசிம்ம தலங்களைத் தரிசித்த புண்ணியம் கிடைக்கும். திருமங்கையாழ்வாருக்கு விரைவில் அருள்பாலிக்க வேண்டும் என லட்சுமி தேவி பெருமாளை இடைவிடாது வேண்டினாள்.
பெருமாள் கூறியபடி லட்சுமி திருவாலியில் தவம் செய்யும் பூர்ண மகரிஷியின் மகளாக பிறந்தாள். பெருமாளை திருமணம் செய்து கொண்டு திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்திற்கு வரும் போது திருமங்கை மன்னன் வழிமறித்து வழிப்பறி நடத்த, பெருமாள் திருமங்கையின் காதில் அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து ஆட்கொண்டார். இதை முன்னிட்டு ஆண்டுதோறும் தேவராஜபுரத்தில் திருமங்கை மன்னன் பெருமாளை வழிப்பறி நடத்தி, திருமந்திர உபதேசம் பெறும் விழா சிறப்பாக நடக்கிறது. |