இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட பஞ்சலிங்கங்கள் உள்ளது. இங்குள்ள கோபுரம் 5 நிலைகளைக் கொண்டது. பிரகாரத்தில் திரவுபதி வழிபட்ட வலம்புரி விநாயகர் இருக்கிறார். இவருக்கு அருகிலேயே இடம்புரி விநாயகரும் இருக்கிறார். ஒரே இடத்தில் இரட்டை விநாயகர்களை தரிசனம் செய்வது விசேஷம். கோயிலுக்கு எதிரே வெளியில் விஜய விநாயகர் இருக்கிறார். இவரிடம் வேண்டிக்கொண்டும் அனைத்து செயல்களும் வெற்றியடையும் என்பது நம்பிக்கை.
இலுப்பை மரங்கள் நிறைந்த பகுதி என்பதால் இத்தலம் "இலுப்பைபட்டு' என்று பெயர் பெற்றது. திருப்பழமண்ணிப் படிக்கரை, மதூகவனம் என்பது இத்தலத்தின் வேறு பெயர்கள். இத்தலத்திலிருந்து சுமார் 3 கி.மீ., தூரத்தில் சிவன், அர்ஜுனனின் வாளை ஒழித்து வைத்து அருள் செய்த திருவாளொளிப்புற்றூர் கோயில் அமைந்துள்ளது. பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்தபோது, இங்கு சிலகாலம் தங்கியிருந்தனர். சிவபூஜை செய்ய விரும்பிய அவர்கள், இங்கு தேடிப்பார்த்தும் லிங்கம் லிங்கம் கிடைக்கவில்லை.
எனவே, அவர்கள் ஐந்து பேரும் ஒரு இலுப்பை மரத்தின் அடியில், இலுப்பைக்காயில் விளக்கேற்றி சிவனை மானசீகமாக வணங்கினர். சிவன் அவர்கள் ஐந்து பேருக்கும் தனித்தனி மூர்த்தியாக காட்சி தந்தார். அவர்கள் சிவனிடம், தங்களுக்கு அருளியதைப்போலவே இங்கிருந்து அருள் செய்ய வேண்டுமென வேண்டிக்கொண்டனர். சிவனும் ஐந்து மூர்த்திகளாக எழுந்தருளினார். தற்போதும் இக்கோயிலில் ஐந்து லிங்கங்கள் தனித்தனி சன்னதியில் இருக்கிறது. |