இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், விநாயகர், வல்லபையை மணம் முடித்த தலம் என்றாலும் இங்கு தனிச்சன்னதியில் விநாயகர் மட்டுமே இருக்கிறார். இக்கோயில் மூலவர் சன்னதியுடன், ஒரே பிரகாரத்துடன் அமைந்த சிறிய கோயிலாக உள்ளது. ராஜகோபுரமும் கிடையாது. பிரதான வாயில் வடக்கு பகுதியில் இருக்கிறது. இங்கு அம்பாளுக்கு சன்னதி இல்லை. விநாயகர் பிரதிஷ்டை செய்த லிங்கம் என்பதால் சுவாமி, "அநேகதங்காவதேஸ்வரர்' எனப்படுகிறார். பிரம்மாவின் புத்திரராகிய மரீசி மகரிஷி, தடாகத்தில் நீராடச்சென்றபோது, நீரிலிருந்த தாமரை மலரில் ஒரு குழந்தையைக் கண்டார். குழந்தைக்கு "வல்லபை' என பெயரிட்டு வளர்த்து வந்தார்.சிவபக்தையாக இருந்த அவளை இரண்ய அசுரனான கேசி பிடித்துச் சென்றான்.
வல்லபை, தன்னை காத்தருளும்படி சிவனிடம் வேண்டினாள். சிவன், விநாயகரை அனுப்பி வல்லபையை மீட்டுவர எண்ணினார். அப்போது அம்பிகை சிவனிடம், விநாயகன் அசுரர்களை அழித்து வெற்றி பெற அருள் செய்ய வேண்டும் என்றாள். சிவன், இத்தலத்தில் தன்னை வணங்கிவிட்டு சென்றிட அசுரர்களை வெற்றி கொள்ள வலிமை உண்டாகும் என்றார். விநாயகரும் அசுரர்களை அழிக்க செல்லும்முன்பு, இவ்விடத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின், வல்லபையை மீட்டு வந்தார். சிவன், அம்பாள் இருவரும் விநாயகருக்கு இத்தலத்திலேயே வல்லபையை மணம் முடித்து வைத்தனர். |