பிரகாரத்தில் வில்வம், வேம்பு, ஆலமரம் ஆகிய மூன்று மரங்கள் இணைந்திருக்கிறது. சிவன், அம்பாள், விநாயகர் ஆகிய மூவரும் இம்மரத்தில் வடிவில் அருளுகின்றனர். சிவன் மறைந்த குளம் ""காட்சிக்குளம்'' என்ற பெயரில் தற்போதும் இருக்கிறது. கோயிலில் பிரமாண்டேஸ்வரருக்கும், பிரமாண்டேஸ்வரிக்கும் தனித்தனி சன்னதி உள்ளது. இடைச்சுரநாதரை கவுதமர், பிருங்கி மகரிஷி ஆகியோர் வணங்கிச் சென்றுள்ளனர். மூலவர் மரகத லிங்கமாக கிழக்கு திசை நோக்கி இருக்கிறார். பிரதான வாயில் தெற்கு பக்கம் இருக்கிறது. தீப ஆராதனையின் போது லிங்கத்தில் பிரகாசமாக ஜோதி தெரிவது சிறப்பு.
ஜோதி ரூபனாக சுவாமியை தரிசித்தால் தீய குணங்கள் மறையும், வாழ்க்கை பிரகாசமடையும் என்பது நம்பிக்கை. சேக்கிழார் தனது பெரியபுராணத்தில் சுவாமியை அழகு மிகுந்தவர் என குறிப்பிட்டுள்ளார். இத்தலத்து தெட்சிணாமூர்த்தியின் காலுக்கு கீழே இருக்கும் முயலகன் இடது பக்கம் திரும்பி படுத்த கோலத்தில் வித்தியாசமாக இருக்கிறான். தெட்சிணாமூர்த்தியை அவரது சீடர் சனத்குமாரர் வழிபட்டுள்ளார். அம்பிகையே பசு வடிவில், ஞானம் தரும் பாலை அபிஷேகித்து பூஜை செய்த சிவன் என்பதால் இவரை "ஞானபுரீஸ்வரர்' என்றும், அம்பாளை "கோவர்த்தனாம்பிகை' என்றும் அழைக்கின்றனர். |