சுந்தரேஸ்வரருக்கு மேல் உள்ள விமானம் இந்திரனால் அமைக்கப்பட்டது. இந்திரன் தனக்கு நேர்ந்த கொலைப்பாவத்தை போக்க பல தலங்களுக்கு சென்று வந்தான். அப்படி வரும்போது சிவனின் திருவிளையாடலால் கடம்பவனமாகிய இத்தலத்தில் ஓர் அழுகிய சுயம்புலிங்கத்தை கண்டு பூசித்து வழிபட பாவம் நீங்கியது. எனவே இந்திர விமானத்துடன் கூடிய இந்த பெருங்கோயிலை கட்டினான் என்பர். எனவே இது இந்திர விமானம். அம்மனின் சக்தி பீடங்களில் இது ராஜமாதங்கி சியாமள பீடமாகும் இங்குள்ள மீனாட்சி அம்மன் சிலை முழுவதும் மரகதக்கல்லால் ஆனது.
18 சித்தர்களில் சுந்தரானந்தர் அடங்கிய தலங்களுள் ஒன்று. தழிழ்நாட்டில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்ற பெயருடைய 366 கோயில்களில் முதன்மையானது. குளத்தை சுற்றி சிவனின் 64 திருவிளையாடல்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன. பாணபத்திரருக்கு பாசுரம் எழுதிக்கொடுத்து சேரனிடம் இறைவன் நிதி பெற வைத்த தலம். இராமர், லட்சுமணர் மற்றும் பிற தேவர்களும் முனிவர்களும் பூசித்துப் பேறு பெற்ற தலம். திருஞானசம்பந்தர் அனல் வாதம், புனல் வாதம் செய்து சைவத்தை பாண்டிநாட்டில் நிலைபெறச் செய்த தலம். இங்குள்ள சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். |