தமிழகத்தின் ஆன்மிகநகரான காஞ்சிபுரத்தில் தேவாரப்பாடல் பெற்ற ஐந்து சிவாலயங்களுள் முக்கியமானது ஓணகாந்தன் தளி கோயிலாகும். “இங்குள்ள இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். காஞ்சிபுரத்தில் அன்னை காமாட்சிக்கு தனிக்கோயில் இருக்கிறது. அவளே சர்வவியாபி என்பதால், இந்நகரிலுள்ள எந்த சிவாலயத்திலும் அம்மன் சன்னதி கிடையாது. ஓணகாந்தேஸ்வரர் கோயிலிலும், இக்கோயிலை ஒட்டி அமைந்துள்ள ஓணகாந்தன் தளி கோயிலிலும் அம்மன் இல்லை. இங்கே சிவன் மூன்று லிங்கங்களாக காட்சி தருகிறார்.சுந்தரர் இந்த தலத்தில் அருளிய பக்திப் பாடல்கள் இத்தலத்திலேயே கிடைக்கிறது.
மூன்று நிலை ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், தனித்தனி சன்னதிகளில் மூன்று லிங்கங்களும் மூன்று பிரதான சன்னதிகளில் உள்ளது. ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர், ஜலந்தரேஸ்வரர் ஆகியோர் இவர்கள். இது காணக்கிடைக்காத தரிசனம். அர்த்த மண்டபத்தில் சுந்தரரும், இறைவனின் திருப்பாத தரிசனமும் கிடைக்கிறது. இங்குள்ள வயிறுதாரி விநாயகர் கேட்ட வரம் அருளுபவர். இதுதவிர மற்றொரு விநாயகரான ஓங்கார கணபதியின் சிலையில் பக்தியுடன் காது வைத்து கேட்டால் "ஓம்' என்ற ஒலி மெல்லிய அளவில் கேட்பதாகச் சொல்லப்படுவதுண்டு. |