இத்தலத்தில் உள்ள வன்னிமரத்தின் வயதை கணக்கிட முடியவில்லை. மிகவும் பழமையான இந்தமரத்தில் பூ பூக்கும். ஆனால் காய் காய்க்காது. ஒரு பக்கம் முள் இருக்கும். மற்றொரு பக்கம் முள் இல்லை. இந்த மரத்தின் இலையை தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாளானாலும் தண்ணீர் கெடுவதில்லை. பழநி பங்குனி உத்திர விழாவிற்கு தீர்த்தக்காவடி கொண்டு செல்லும்போது காவிரி தீர்த்தத்தில் இந்த இலைகளை போட்டுதான் பக்தர்கள் பாதயாத்திரையாக கொண்டு செல்கிறார்கள்.
அமாவாசை நாட்களில் பிதுர் தர்ப்பணம் செய்ய காவிரிக்கரையில் ஏராளமானோர் கூடுகிறார்கள். அறுபதாம் கல்யாணம், ஆயுள்ஹோமம் ஆகியவை நடத்த இத்தலம் விசேஷமானது. பெருமாள் சன்னதியின் உட்புறத்தில் ஒரு தூணில் வியாக்ரபாத விநாயகரின் சிற்பம் உள்ளது. புலியின் காலும், யானையின் முகமும் கொண்ட இந்த விநாயகர் மிகவும் அபூர்வமானவர். இங்கே மகுடேஸ்வரர் மலை கொளுந்தீஸ்வரர் என்றும், அம்பாள் சவுந்தரநாயகி, வடிவுடைய நாயகி என்றும் பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படுகின்றனர். |