இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.கோயில் நுழைவு வாசலில் பதினாறுகால் மண்டபத்தில் விநாயகர் சன்னதி உள்ளது. இதன் உள்ளே சென்றால், வலதுபுறம் வேடுவர் உருவங்கள் இரண்டு உள்ளன. வழிமறித்து நிதிபறித்த இறைவன் இருக்குமிடத்தைக் கூப்பிட்டுச் சுந்தரருக்குக் காட்டிய கூப்பிடு விநாயகர் அவிநாசிக்குப் போகும் வழியில் 1.கி.மீ. தொலைவில் பாறைமேல் உள்ளார்.ஆயிரத்தெட்டுஅண்டங்களையும் அளவிலாத காலம் வரையில் அடக்கி ஆளும் வரம் பெற்ற சூரபத்மன், ஆணவம் கொண்டு தேவர்களை சிறைப்படுத்தி துன்புறுத்தி வந்தான்.அவனது அட்டூழியம் நாளுக்கு நாள் பெருகவே அவனை அழித்து தேவகுலத்தை காத்திட முருகன் சம்ஹாரத்திற்கு தயாரானார்.
ஆறுமுகங்கள் கொண்டு அல்லல் தந்த சூரனுடன் போர் கொண்டு அவனை தனது வேற்படையால் இரண்டாக வெட்டி பின்னர் மயிலாகவும், சேவலாகவும் மாற்றி ஆட்கொண்டார்.எப்படியிருப்பினும், சூரனை துன்புறுத்தியதன் விளைவாக ஆறுமுகனை பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது. தோஷம் நீங்க, கயிலை மலையில் இறைவன் சிவபெருமான் கூறியபடி மாதவிநாதரை வணங்க வந்தார்.அப்போது பூஜைக்கு தீர்த்தம் தேவைப்பட அவர் தனது வேலினால் அவ்விடத்தில் ஊன்ற தீர்த்தம் தோன்றியது. அந்நீர் எடுத்து சிவனை மேற்கு நோக்கியபடி பிரதிஷ்டை செய்து வணங்கினார். பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்றார். அவ்வாறு நீங்கிய பிரம்மஹத்தி, தற்போது கோயிலின் வெளியே உள்ள வேம்படிமுருகன் சன்னதியின் அருகில் உள்ள சதுரக்கல்லாக இருப்பதாக புராண வரலாறு கூறுகிறது. |