இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நவக்கிரக சன்னதியில் சூரியனுடன் அவரது மனைவியர்களான உஷா, பிரதியூஷா இருவரும் ஒருவரையொருவர் நேருக்குநேர் பார்த்தபடி இருக்கின்றனர். இக்கோயிலுக்கு இடது புறத்தில் கைலாசநாதர் தனிக்கோயிலில் இருக்கிறார். பிரம்ம தீர்த்தம், பதும தீர்த்தம், மது தீர்த்தம், குமார தீர்த்தம் என நான்கு தீர்த்தங்கள் உள்ளது. ஆதிசேஷனுக்கும், வாயு தேவனுக்கும் இடையே யார் பெரியவர் என போட்டி வந்தபோது வாயுவால் பெயர்க்கப்பட்ட மேரு மலையின் ஒரு பகுதியே இங்கு மலையாக இருக்கிறதாம்.
இத்தலத்தின் தல விநாயகரின் திருநாமம் செல்வ விநாயகர். அம்பாள் நறுங்குழல் நாயகி தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். கோஷ்டத்தில் சிவனுக்கு பின்புறத்தில் சிவனும், மகாவிஷ்ணுவும் சேர்ந்த சங்கர நாராயணரும், ருத்ராட்ச பந்தலின் கீழ், நடராஜர் காலில் கொழுசு அணிந்த கோலத்தில் இருப்பதும் சிறப்பு. தினமும் சுவாமிக்கு பூஜைகள் நடக்கும்போது கருவறையில் எறும்புகள் வரிசையாக ஊர்ந்து சென்று, நைவேத்தியப் பொருட்களை எடுத்துக்கொள்ளுமாம். இதனை சிவனே எறும்பு வடிவில் வருவதாக சொல்கிறார்கள். |