இத்தல சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் பிறபெயர்கள்அச்சேஸ்வரர், அச்சுகொண்டருளிய தேவர் என்பதாகும். பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன், கமலாட்சன், வித்வன்மாலி ஆகிய திரிபுர அசுரர்கள் சேர்ந்துகொண்டு தேவர்களை கொடுமைப்படுத்தி வந்தனர். அசுரர்களை எதிர்க்க முடியாத தேவர்கள், அவர்களை அழித்து தங்களை காக்கும்படி சிவனிடம் வேண்டினர். தேவர்களுக்கு இரங்கிய சிவன், வானுலகு மற்றும் பாதாள உலகை இணைத்து தேராக்கி அதில் ஏறி அசுரர்களை அழிக்கச் சென்றார். ஆனால் அசுரர்களை அழிக்க வேண்டும் என்ற வேகத்தில் விநாயகரை நினைக்காமல் சென்றார் சிவன்.
அவருடன் சென்ற தேவர்களோ சிவனே நம்முடன் இருக்கும் போது வேறென்ன துணை வேண்டும்? என்ற எண்ணத்தில் அவரை வணங்காமல் சென்றனர். கோபம் கொண்ட விநாயகர், தேரின் அச்சை முறித்து சிவனை செல்லவிடாமல் தடுத்து விட்டார். தேர் அங்கேயே நின்றது. இது விநாயகரின் செயல்தான் என உணர்ந்த சிவன், அவரை மனதில் நினைத்து செல்லும் செயல் சிறப்பாய் நடந்திட காவலனாய் இருக்கும்படி வேண்டினார். தந்தை சொல்கேட்ட விநாயகர் தேர் அச்சை சரியாக்கினார். பின் சிவன் திரிபுர அசுரர்களை அழித்தார். தேர் அச்சு இற்று நின்ற இடமென்பதால் இத்தலம் "அச்சு இறு பாகம்' என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் "அச்சிறுப்பாக்கம்' என்றானது. சிவன் "அட்சீஸ்வரர்' என்றும், "ஆட்சிபுரீஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார். |