இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். லிங்கத்தின் பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் அமர்ந்துள்ளது தனி சிறப்பு. இத்தலம் 63 நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த தலம். இக்கோயில் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரம், 3 பிரகாரங்களோடு கூடியது. இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் கஜபிருஷ்டம் எனப்படும். திருவேற்காடு பாலாம்பிகையையும், திருவலிதாயம் ஜகதாம்பிகையையும், திருவொற்றியூர் வடிவாம்பிகையையும் ஒரே நாளில் வழிபடுவோர் இம்மையிலும், மறுமையிலும் அனைத்து நலன்களையும் பெறுவர் என கூறப்படுகிறது.
இத்தல தீர்த்தத்தில் ஞாயிறு தோறும் நீராடி வந்தால் தோல் சம்பந்த நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. இக்கோயில் சோழ அரசனால் கட்டப்பட்டது. சிவன் ஒரு முறை பார்வதியிடம், இத்தலத்தை மனதால் நினைத்தாலும், ஒரு பொழுதாவது இங்கு தங்கியிருந்தாலும், இத்தலம் வழியாக சென்றாலும் முக்தியடைவர் என்று கூறியுள்ளார். இவ்வூரின் தல விருட்சம் வெள்வேல மரமாகும். இதனால் இத்தலம் "திருவேற்காடு' என அழைக்கப்படுகிறது. இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். |