இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆப்புடையாரும், சுகந்த குந்தளாம்பிகையும் தனித்தனி சன்னதியில் இருந்து அருள்கின்றனர். அனுக்ஞை விநாயகர், முருகன், நடராஜர், காசிவிஸ்வநாதர், மீனாட்சி மற்றும் நவகிரகங்களையும் இங்கு தரிசிக்கலாம். லிங்கம் சிறியது தான். ஆனாலும் இவரது பெருமையோ மிகவும் சிறப்பானது. மலைகளில் மேருவைப்போலவும், பசுக்களுள் காமதேனுவைப் போலவும், விண்மீன்களுக்கிடையே சந்திரனைப்போலவும், பிரகாசமுள்ள பொருள்களுள் சூரியனைப்போலவும், கொடையாளிகளுள் மேகத்தைப்போலவும், புருஷர்களுள் விஷ்ணுவைப் போலவும் இம்மாதிரி எது எது அதிகமோ, அதேபோல் இங்குள்ள ஆப்புடையார் மற்ற சுயம்பு லிங்கங்களுள் விசேஷமானவர்.
பஞ்சத்தின் காரணமாக அர்ச்சகர் வைகை ஆற்று மணலை வைத்து சமைக்க எண்ணினார். அப்போது இறைவனின் அருளால் அந்த ஆற்று மணல் அன்னமாக மாறியது. இதனால் இத்தல இறைவனுக்கு "அன்னவிநோதன்' என்ற பெயர் ஏற்பட்டது. |