இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். இத்தல இறைவனை சூரியன், வலியன், காரணமாமுனிவர், பாண்டவர்கள், கோச்செங்கட்சோழன், அருணகிரிநாதர் ஆகியோர் வழிபட்டுள்ளனர். இத்தல விநாயகர் வலம்புரி விநாயகராக அருள்பாலிக்கிறார். "பிடியதன் உருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர் கடி கண பதிவுர அருளினன் மிகு கொடை வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே' என்ற பாடலில் இந்த வலம்புரி விநாயகரை போற்றி சம்பந்தர் பாடியுள்ளார்.
சிவாலயங்களில் தேவாரப்பாடல் பாடும் ஓதுவார்கள், தேவாரப்பாடல் பாடும் முன் இத்திருப்பாடலை பாடிய பின்னரே அடுத்த தேவாரப்பாடல் பாட வேண்டும் என முறை செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து இத்தல விநாயகரின் சிறப்பை அறியலாம். கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயிலில் இதுவும் ஒன்று. அருணகிரிநாதர் இத்தல முருகனைகுறித்து திருப்புகழ் பாடியுள்ளார். இத்தலத்தைப்பற்றி சம்பந்தரும், அப்பரும் பாடிய பாடலை சுந்தரர் மிகைப்படுத்தி பாடியுள்ளார். |