இங்குள்ள லிங்கம் சுயம்பு மூர்த்தியாக மிகுந்த அழகுடன் காட்சியளிக்கிறது. இத்தலத்து விருட்சமான மாமரம், இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என மூன்று சுவைகளுடன் இருக்கிறது. இம்மரம் கோயிலின் தென்கிழக்கு பிரகாரத்திலிருந்து பார்க்கும்போது, நந்தி வடிவில் தோற்றமளிக்கிறது. இந்திரனுக்கு உதவி செய்த முசுகுந்த சக்கரவர்த்தி, அவர் பூஜித்த ஏழு லிங்கங்களைப் பெற்று ஏழு தலங்களில் வைத்து பூஜித்தார். மிகச்சிறிய லிங்கமாக இருந்ததால், "விடங்கலிங்கம்' என்று பெயர் பெற்றது.
இத்தலங்கள் "சப்தவிடங்க தலம்' எனப்படுகிறது. இதில் இத்தலமும் ஒன்று. இங்குள்ள லிங்கம் மிகுந்த அழகுடன், கோமேதகத்தால் செய்யப்பட்டதாக காட்சியளிக்கிறது. எனவே இவரை, "சுந்தர விடங்கர்' என்று அழைக்கிறார்கள். சிவன் சன்னதிக்கு வலப்புறம், தியாகராஜர் தனிச்சன்னதியில் இருக்கிறார். பெரும்பாலான கோயில்களில், தியாகராஜரின் முகத்தை மட்டுமே தரிசிக்க முடியும். இத்தலத்தில் வைகாசி விசாக விழாவின்போதும், மார்கழி திருவாதிரையன்றும் சுவாமியின் வலது கை மற்றும் பாதத்தை தரிசிக்கும்படியாக அலங்காரம் செய்கிறார்கள்.
இந்த இரண்டு நாட்கள் மட்டுமே தியாகராஜரின் இந்த கோலத்தை தரிசிக்க முடியும். விழாவின்போது இவர் அலைபோல முன்னும், பின்னுமாக வீசியவாறு நடனமாடி வருவார். இந்த நடனத்திற்கு, "பாராவாரா நடனம்' என்று பெயர். அம்பிகை, கடல் போல அருளுபவளாக இருக்கிறாள். இதை உணர்த்தும்விதமாக இவளது கண்கள் கடல் நிறத்தில், நீல நிறமாக இருக்கிறது. எனவே இவள், "நீலாயதாட்சி' என்று அழைக்கப்படுகிறாள். கருந்தடங்கண்ணி என்றும் இவளுக்குப் பெயருண்டு. இவளுக்கு தனி கொடிமரத்துடன் கூடிய சன்னதி இருக்கிறது. |