இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் வலது புறம் திரும்பிய மயில் வாகனத்துடன் இருக்கிறார். திரி அணைந்த தலம் என்பதால், "திரிநின்றியூர்' என்றும், மகாலட்சுமி வழிபட்டதால் "திருநின்றியூர்' என்றும் பெயர் பெற்றது. நவக்கிரகத்தில் உள்ள சூரியனும், சந்திரனும் ஒருவரையொருவர் நேரே பார்த்தபடி இருப்பது வித்தியாசமான அமைப்பு. அமாவாசை நாட்களில் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். சிவலிங்கத்தின் பாணத்தில் தற்போதும் கோடரி வெட்டிய தழும்பு இருக்கிறது. பரசுராமர் வழிபட்ட சிவன் பிரகாரத்தில் "பரசுராமலிங்க'மாக இருக்கிறார்.
அருகில் ஜமதக்னிக்கு காட்சி தந்த சிவன் "ஜமதக்னீஸ்வரராக' சிறியபாண வடிவிலும், பரிக்கேஸ்வரர் பெரியபாண வடிவிலும் அருகில் விஷ்ணுவும் இருக்கின்றனர். இக்கோயிலைச் சுற்றி மாலையிட்டது போல, மூன்று குளங்கள் இருப்பது விசேஷம். இத்தலத்து தீர்த்தத்தை "நீலமலர் பொய்கை' என்று சம்பந்தர் தனது பதிகத்தில் பாடியிருக்கிறார். மேலும் இங்கு வழிபடுவோர் பயம், பாவம் மற்றும் நோய்கள் நீங்கி நல்வாழ்வு வாழ்வர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இங்கு சிவனுக்கு மாதுளம்பழ முத்துக்களால் அபிஷேகம் செய்து வழிபடுவது விசேஷம். மகாலட்சுமியும் இத்தலத்தில் சிவனை வழிபட்டு அருள் பெற்றாள். எனவே, இத்தலத்து சிவன் "மகாலட்சுமீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். |