இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிககிறார். இத்தலத்து இறைவன் திரிதள விமானத்தின் கீழ் அருளுகிறார். கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி சிம்ம மண்டபத்தில் காட்சி தருகிறார். கருவறைக்கு எதிரே இருப்பதைப்போல இவருக்கு எதிரே ஒரு நந்தியும், பின்புறத்தில் மற்றொரு நந்தியும் இருக்கிறது. இவரது சன்னதிக்கு நேர் எதிரே மெய்க்கண்டநாயனாருக்கு சன்னதி இருக்கிறது. மகிஷாசுரனை சம்ஹாரம் செய்த துர்க்கை, இத்தலத்தில் சிவனை வணங்கி ஆசிபெற்றாளாம். இவள் கோஷ்டத்தில் எட்டு கைகளுடன், சிம்மவாகனத்துடன் இருக்கிறாள். இவளது இடது கீழ் கையில் கிளி இருப்பதும், ஆயுதங்களுடன் இருந்தாலும் சாந்த துர்க்கையாக அருளுவதும் விசேஷம். பிரகாரத்தில் அஷ்ட நாகங்கள் இருக்க, அதன் மத்தியில் விநாயகர் இருக்கிறார்.
நாகதோஷம் உள்ளவர்கள் இவரிடம் விசேஷ பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். புற்றிற்கு அடியில் சிவன் வெளிப்பட்ட தலம் என்பதால், விநாயகர் சன்னதியும் புற்றிற்குள் இருப்பதை போன்று அமைக்கப்பட்டிருக்கிறது. ருதுகேதன் எனும் மன்னன், இப்பகுதியை ஆட்சி செய்தபோது நாட்டில் கடும்பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் பசியில் வாடினர். மக்களை காத்தருளும்படி மன்னன் வேண்டவே, சிவன் மாணிக்க மழையை பொழிவித்தாராம். எனவே இவருக்கு "மாணிக்கவண்ணர்' என்று பெயர் வந்தது. மாணிக்க கல் வைத்து பூஜிக்கப்பட்டவர் என்பதால் இப்பெயரில் அழைக்கப்படுவதாகவும் சொல்வர். அர்ஜுனனின் வாளை ஒளித்து வைத்தவர் என்பதால் இத்தலம், "வாளொளிப்புற்றூர்' என்று பெயர் பெற்றது. அம்பாள் வண்டமர்பூங்குழல் நாயகி தனிச்சன்னதியில் இருக்கிறாள். |