பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. இத்தல இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் தத்வத் யோதக விமானம் எனப்படும். ருத்ரர், ஸ்வேதராஜன் ஆகியோர் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளனர்.12 ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வார் இரண்டு கோயில்களில் உள்ள பெருமாளைத்தான் "அண்ணா' என அழைத்து பாடியுள்ளார்.
ஒன்று திருப்பதியில் உள்ள பெருமாள். மற்றொன்று இத்தல பெருமாள். இதில் திருப்பதிக்கு முன்பே இத்தலத்து பெருமாளை "அண்ணா' என பாடியதால் இங்குள்ள பெருமாள் திருப்பதி ஏழுமலையானுக்கு "அண்ணன்' ஆகிவிடுகிறார். எனவேதான் இங்குள்ள சீனிவாசப்பெருமாளின் திருநாமம் "அண்ணன் பெருமாள்' என்றும் இத்தலம் "அண்ணன் கோயில்' என்றும் வழங்கப்படுகிறது.
திருப்பதியைப்போன்றே இத்தலத்திலும் பெருமாளின் திருநாமம் "சீனிவாசன்', தாயாரின் திருநாமம் "அலர்மேல்மங்கை'. திருமங்கையாழ்வார் இத்தலத்தை பூலோக வைகுண்டம் என்று பாடியுள்ளார். |