பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று இத்தத்தில் பெருமாளின் நான்கு கோல தரிசனம் காணலாம். இங்கு நரசிம்மர் பால நரசிம்மராக காட்சி தருகிறார். ராமாயணம் எழுதிய வால்மீகி மகரிஷிக்கு, ராமபிரானை, திருமணக்கோலத்தில் தரிசிக்க வேண்டும் என்று ஆசை எழுந்தது. அவர் இத்தலம் வந்து சுவாமியை வேண்டி தவமிருந்தார். பெருமாள் அவருக்கு சீதா, லட்சுமணன், பரதன், சத்ருக்கனன் ஆகியோருடன் திருமணக்கோலத்தில் காட்சி தந்தார். அப்போது வால்மீகி, தனக்கு காட்டிய தரிசனப்படியே நிரந்தரமாக தங்கும்படி வேண்டினார்.
சுவாமியும் அவ்வாறே அருளினார். இவர் மலையடிவாரத்தில் தனிக்கோயிலில் இருக்கிறார். நீர் சூழ்ந்த மலையின் மத்தியில் இருந்ததால் இவருக்கு, நீர்வண்ணப்பெருமாள் என்றும், தலத்திற்கு திருநீர்மலை என்றும் பெயர் ஏற்பட்டது. நீல நிற மேனி உடையவர் என்பதால் இவருக்கு "நீலவண்ணப்பெருமாள்' என்ற பெயரும் உண்டு. ராமபிரானுக்கும் சன்னதி இருக்கிறது. இவரது சன்னதியில், சுவாமியை வணங்கியபடி சுயம்புவாக தோன்றிய வால்மீகி காட்சி தருகிறார். |