பத்ரிநாராயணர் கருவறையில் அமர்ந்த கோலத்தில் தாமரை மலர் மீது கால் வைத்தபடி காட்சி தருகிறார்.வருடத்தின் அனைத்து நாட்களிலும் காலை வேளையில் இவர் மீது சூரிய ஒளி விழுகிறது. இது மிகவும் அபூர்வமானதாகும். பார்வதியின் தந்தையாகிய தட்சன், சிவனை அழைக்காமல் யாகம் செய்தான். அந்த யாகத்திற்கு செல்ல வேண்டாம் என பார்வதியை தடுத்தார் சிவன். ஆனாலும் நியாயம் கேட்பதற்காக யாகத்திற்கு சென்றுவிட்டாள் பார்வதி. கோபம் கொண்ட சிவன் ருத்ர தாண்டவம் ஆடினார்.
அப்போது சிவனது திருச்சடை முடி தரையில் பட்ட இடங்களில் எல்லாம் சிவ வடிவங்கள் தோன்றின. இவ்வாறு 11 சிவ வடிவங்கள் தோன்றி அனைவரும் தாண்டவம் ஆடினர். இதனால் உலக உயிர்கள் கலக்கமடைந்தன. அச்சம் கொண்ட மகரிஷிகள், தேவர்கள் சிவனை சாந்தப்படுத்தும்படி மகாவிஷ்ணுவிடம் வேண்டினர். அவர் பத்ரி நாராயணராக 11 வடிவங்கள் எடுத்து சிவன் முன்பு வந்தார்.
நாராயணரைக் கண்ட சிவன் தாண்டவத்தை நிறுத்தினார். பின் அவர் 11 சிவ வடிவங்களையும் ஒன்றாக ஐக்கியப்படுத்தினார். இந்நிகழ்ச்சி இத்தலத்தில் நடந்தது என தலவரலாறு கூறுகிறது. இதன் அடிப்படையில் இங்கு 11 பெருமாள் கோயில்களும், 11 சிவாலயங்களும் இருக்கிறது. 11 பெருமாள்களுக்கும் பத்ரி நாராயணரே பிரதானமானவராக இருக்கிறார். இவர் ஒருவரை தரிசனம் செய்தாலே அனைவரையும் தரிசனம் செய்த பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள். |