பெருமாளின் 108 திருப்பதிகளில் ஒன்று. படைக்கும் கடவுளான பிரம்மா பல யுகங்கள் வாழும்படி சாகாவரம் பெற்றிருந்தார். இதனால் அவர் மனதில் கர்வம் உண்டாகவே, தனது பணியையும் அவர் சரியாக செய்யவில்லை. அவரது கர்வத்தை அடக்க எண்ணம் கொண்டார் மகாவிஷ்ணு.இதனிடையே மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து திரிவிக்கிரமனாக காலைத்தூக்கி மூவுலகத்தையும் அளந்து காட்டிய கோலத்தைக் காண வேண்டும் என உரோமச முனிவருக்கு ஆசை எழுந்தது. சுவாமியை வேண்டி இத்தலத்தில் தவம் இருந்தார்.
அவருக்கு காட்சி தந்த மகாவிஷ்ணு, தன் இடக் காலை தூக்கி திரிவிக்கிரம அவதாரத்தை காட்டியருளினார். பின் அவர் உரோமசரிடம், "என் ஏகாந்த நிலையை தரிசித்த நீங்கள் பெறுவதற்கு அரிய பல பேறுகளைப் பெற்று சிறப்பான நிலையை பெறுவீர்கள். மேலும், பிரம்மனை விட கூடுதலான ஆயுட்காலமும் பெற்று வாழ்வீர். உமது உடலில் இருக்கும் ஒரு முடி உதிர்ந்தால் பிரம்மாவின் ஆயுட்காலத்தில் ஒரு வருடம் முடியும்' என்று கூறி இத்தலத்தில் திரிவிக்கிரமனாக எழுந்தருளினார். மகாவிஷ்ணு சூட்சுமமாக தன் ஆயுளைக் குறைத்ததை அறிந்த பிரம்மா தன் கர்வம் அழியப்பெற்றார். |