LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இலக்கியக் கட்டுரைகள்

கட்டு நீத்தலும் கடவுட் பற்றும் - மு.வள்ளியம்மை

- முனைவர். மு.வள்ளியம்மை - தமிழ்ப் பேராசிரியர்(ஓய்வு)

இறைவன் ஒருவன் என்பதும் ,உயிர்கள் எண்ணற்றவை என்பதும்,இடைப் பட்டுத் தடையாக நிற்கும் தளைகள் ஐந்து என்பதும் சைவ சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கை.

 

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின் நமனில்லை நாணாமே

_திருமூலர்

 

ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு_ பட்டினத்தார் _

என்ற பாடலடிகளின் வழி இறைவன் ஒருவன் என்பதும்,

 

பிறந்த நாள் மேலும் பிறக்கும் நாள் போலும்

துறந்தோர் துறப்போர் தொகை_உமாபதி சிவம்


துறந்தார் பெருமை துணைக் கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக் கொண்டற்று_வள்ளுவர்


என்ற
பாடல்களால் உயிர்கள் எண்ணற்றவை என்பதும்
,

 

ஏகமாய்த் தம் கால எல்லைகளின் மீளும்

எண்ணரிய சத்தியதாய் இருளொளிர இருண்ட

மோகமாய்ச் செம்பினுருக் களிம்பேய்ந்து நித்த

மூலமலமாய் அறிவு முழுதினையும் மறைக்கும்

பாகமாம் வகைநின்று திரோதாயி சத்தி

பண்ணுதலான் மலமெனவும் பகர்வது அதுபரிந்து

நாகம் மாந்திமதியம் பொதிசடையான் அடிகள்

நணுகும் வகை கருணைமிக நயக்கும் தானே- உமாபதிசிவம்


என்பதால்
உயிர்களுக்கும் இறைவனுக்கும் இடைப்பட்டுத் தளைகள் உள்ளன என்பதும் புலனாகும்
.

எண்ணற்ற இந்த உயிர்கள் தடைகளை விலக்கி ஒருவனாகிய இறைவனை எவ்வாறு உணர்வது என்பதே இதன் வழி அமைகின்ற சிந்தனை.


கட்டு

ஒரு நன்மையை அடைய முடியாதவாறு எவையெல்லாம் செயற்படுகின்றனவோ அவற்றைத் தடை என்று சொல்லுகிறோம். சைவ சித்தாந்தப் பெரு நெறியில் இத்தடைகள்கட்டுகள்என்றும் ,பாசங்கள் என்றும் ,’மலங்கள்என்றும் ,’தளைகள்என்றும்,’பந்தங்கள்என்றும் கூறப் படுகின்றன.இத்தகைய கட்டுக்களை ஐந்து என வகுத்தனர் ஆன்றோர்.இதை

மோகம் மிக உயிர்கள்தொறும் உடனாய் நிற்கும்

மூல ஆணவம் ஒன்று;முயங்கி நின்று

பாகம் மிக உதவி திரோதாயி ஒன்று

பகர் மாயை ஒன்று;படர் கன்மம்ஒன்று

தேகமுறு கரணமொடு புவன போகச்

செயலாகும் மாயேயத் திரட்சி ஒன்று

ஆகமலம் ஐந்தென்பர்ஐந்தும் மாறாது

அருள் என்பது அரிது என்பர் அறிந்துளோரே


-சிவப்பிரகாசம் 32


ன்று ஐந்து மலங்களையும் அவற்றின் இயல்புகளோடு சிவப்பிரகாசம் வகுத்துரைக்கும்
.அதோடன்றி இந்த ஐந்தும் நீங்காவிட்டால் அருள் என்பது அரிது என்றும் கூறுகிறது.இந்த ஐந்தில் ஆணவம் ,கன்மம்,மாயை என்ற மூன்றும் நிலையானவை.பொதுவாக இவற்றை மும் மலங்கள் எனக் குறிப்பது வழக்கம்.இவற்றைப் பற்றிக் காண்பதற்கு முன் திரோதாயி,மாயேயம் என்பது பற்றிச் சிந்திப்போம்.


திரோதாயி

திரோதாயி என்பது சிவபெருமானின் மறைப்பாற்றல் ஆற்றலைப் பெண்ணாகக் கூறுவது சைவத்தில் ஒரு மரபு. ஆதிசக்தி எனப்படும் அத் திரோதாயி நம் ஊழ்வினைக் கேற்ப நம்மை உலகியலில் செலுத்துங்கால் நாம் இறைவனை அடையமுடியாதவாறு அதுவே ஒரு தடையாக இருக்கிறது.இதைஒரு சிறு உவமையின் மூலம் உணர்த்தலாம்.தெருவில் ஓடியாடி விளையாடி அழுக்கடைந்த கால்களோடு உள்ளே வரும் குழந்தை,தந்தையின் தூய உடையை அழுக்காக்கி விடாதவாறு தாய் தடுக்கிறாள்.தடுத்து அக்குழந்தையின் அழுக்கடைந்த கை,கால்களைக் கழுவித் தூய்மைப் படுத்துகிறாள்.அதன் பின்னரே தந்தையிடம் சேர்ப்பிக்கின்றாள்.அதே போன்றுதான் மும்மலங்களால் மாசுபடிந்த உயிர்களாகிய நம்மை இறைவனிடம் செல்லாதவாறு உலகியலில் செலுத்தி ,மலங்கள் நீங்கும் போது இறைவனிடம் சேர்ப்பிக்கின்றாள் சிவசக்தி.தந்தையிடம் செல்ல நினைத்த குழந்தையை உடனே செல்லவிடாதவாறு தடையாக இருப்பவள் தாயே. அதேபோல இடைப்பட்ட காலத்தில் இறைவனிடம் செல்லாதவாறு நமக்குத் தடையாய் இருக்கிற அவளையும் பாசங்களில் ஒன்றாகவே கொள்வது சைவ மரபு.


மாயேயம்

மாயேயம் என்பது மாயையின் பருமையான வெளிப்பாடு. உயிர்களாகிய நாம் செய்த வினைகளுக்கேற்ப இந்த உயிர் தங்கிச் செயல்படுவதற்கு ஓர் உடலையும் ,சிந்திப்பதற்கு மனம் முதலிய கருவிகளையும் தந்திருக்கிறான் இறைவன்.அவற்றோடன்றி இந்த உடல் ஊடியாடி இன்ப துன்பங்களை நுகர்வதற்கு விளையாட்டுப் பண்ணையாக உலகத்தையும், அவற்றை நுகர்வதற்கான வாய்ப்புகளையும் அருளியுள்ளான்.இங்ஙனம் நமக்கு வாய்த்த உடல், கருவி,உலகம், நுகர்ச்சி என்றநான்கையும்வட நூலார் தனு,கரண,புவன, போகம் என்று கூறுவர்.இவை தனித் தனியாகவோ,ஒரு சேரவோ ஒரு காலத்தில் தோன்றி,ஒரு காலம் வரை வாழ்ந்து இறுதியில் மூலப் பொருளாகிய மாயையின் உள்ளேயே ஒடுங்கிவிடும். ஆகையால் இவை நிலையற்றவை என்பது தெளிவு.


ஆணவம்

ஆணவம் என்பது அநாதியான ஒரு தீய சக்தி. அதற்குத் தோற்றமோ,அழிவோ இல்லை.இயல்பாகவே வியாபகத்தன்மையுடைய உயிரின் ஆற்றல்களை எல்லாம் அணு அளவினதாக முடக்கிவிடுகின்ற தன்மையால் இதனை ஆணவம் என்பர்ஆணவம் நிலையான பொருள் என்பதோடு எண்வகையான தீய செயற்பாடுகளும் உடையது.ஆதலால் சிற்றறிவு


ஆன்மாக்களாகிய
நாம் அதன் பிடி
(கட்டு)யிலிருந்து விடுபடுவது எளிதன்று.

 

ஒன்றதாய் அநேக சக்தி

உடையதாய் உடனாய் ஆதி

அன்றதாய் ஆன்மாவின் தன்

அறிவொடு தொழிலை ஆர்த்து

நின்று போத்திருத்து வத்தை

நிகழ்த்திச் செம்பினில் களிம்புஏய்ந்து

என்றும் அஞ்ஞானம் காட்டும்

ஆணவம் இயைந்து நின்றே

 

சிவஞான சித்தியார்-80


(போத்திருத்துவம்-சகல நிலையில் போக நுகர்ச்சிக்கு ஏதுவாய வினை முதலாம் தன்மை)என்று ஆணவ மலத்தின் இயல்புகளைச் சிவஞான சித்தியார் விளக்கும்.

முன்னுரையில் கூறியதுபோல உயிரும் ஆணவம் முதலிய பாசங்களும் இறைவனைப் போலவே தோற்றமும் இறூதியும் இல்லாதவை.இதை ,’பதியைப் போல் பசு பாசம் அநாதிஎனப் பகரும் திரு மந்திரம்.

எனவே ஆன்மாவிற்குத் துன்பம் தரும் ஆணவத்தைஉடன் பிறந்தே கொல்லும் நோய்எனச் சாத்திர நூலார் சால்புற உரைப்பர்.


கன்மம்

கன்மம் என்பது நாம் செய்யும் செயல்கள்.கருமம்,கன்மம், வினை, செயல், தொழில், முதலிய பலவும் ஒரே பொருளைத் தருவன.ஆன்மாக்களாகிய நம்முடைய அறிவு இயல்பாகவே சிற்றறிவு.நம்முடைய செயல்களோ அச்சிற்றறிவுக்கு உட்பட்ட சிறு செயல்கள். நம்முடைய விருப்பங்களும் முழுமையான சிறப்புடையன அல்ல.இங்ஙனம் விருப்பங்களுக்கு முழுமையாகக் கீழ்மைப்பட்டுக் கிடக்கும் நம்மை ஆணவம் என்ற இருள் மலம் வேறு பற்றிக் கொள்கிறது.அதனால் சிற்றறிவு மேலும் முடங்கிக் குற்றறிவாகிக் குறுகி நிற்கிறது.மனங் கெட்டுவிட விருப்பங்களும் முரண்படுகின்றன.இவற்றால் செயல் திறனும் சீர் கெட்டு தீய காரியங்களில் தலைப் படுகிறது. நமக்குத் தன் முனைப்பு மேலிடுகிறது. தற்போதம் தலை தூக்கி நிற்கிறது. அந்நிலையில் இறைவனை மறந்து ஆணவத்தின் தூண்டுதலால் விளைந்த குற்றறிவினாலும் ,முடக்குண்ட செயற்பாடுகளாலும்,முரண்பட்ட விருப்பங்களாலும், ஆன்மாக்களாகிய நாம் காரியங்களைச் செய்கிறோம். அவ்வாறு தன் முனைப்போடு இந்தச் செயல்கள் செய்யப்படுவதால் அவை நமக்குஇருள் சேர் இருவினையாகின்றன.

மேலைக்கு வித்தும் ஆகி,

விளைந்தவை உணவும் ஆகி,

ஞாலத்து வருமா போல,

நாம் செய்யும் வினைகள் எல்லாம்

ஏலத்தான் பலமாச் செய்யும்

இதம் தங்கட்கு எல்லாம்

மூலத்ததாகி என்றும்

வந்தி(டு) முறைமையோடே

-சிவஞான சித்தியார் -101


உணவுப்
பொருட்களை நாம் பயிரிடுகிறோம்
. அங்ஙனம் விளைந்த பொருட்கள் நமக்கு உணவாகப் பயன்படுவதோடு மேல்வரும் ஆண்டிற்கு வித்தாகவும் உதவுகின்றன.அதேபோல் நாம் செய்யும் வினைகள் இப்பிறப்பில் இன்ப துன்பங்களை நுகர்வதற்குத் துணையாவதோடு மேல்வரும் மறு பிறப்பிற்கும் வித்தாகின்றன என்று சிவஞான சித்தியார் விளக்கும்.

நம்மால் செய்யப்பட்ட வினைகள் சிறியவையாயினும் ,பெரியவையாயினும் ஒவ்வொன்றுக்கும் ஏற்ற பலன் உண்டு.


நண்ணியிடும்
உருவதனுக்கு ஏதுவாகி

நானா போகங்களாய் நாச உற்பத்தி

பண்ணிவரும் ,ஆதலால் அநாதியாகிப்

பலவாகி அணுக்கள்தொறும் படர்வதாகி

எண்ணிவரும் மனவாச ,கர்மத்தால் இயற்றும்

இயல்பினதாய் மதிகதமாய் இருபயனாம் பாவ

புண்ணியமாய்ப் புலர்காலை மாயை மேவிப்

பொருந்தும் இது கன்மமலம் புகலுமாறே

சிவப் பிரகாசம் -28


(மதிகதமாய்புத்தி தத்துவத்தை இருப்பிடமாகக் கொண்டு)

என்று தீவினை நல்வினைகளுக்கேற்ப ஆன்மா துன்ப இன்பங்களை அடையும் என அறிவுறுத்துகிறார். எனவே சிற்றறிவு உயிர்களாகிய நம்முடைய பிறப்பிற்கும் ,இன்ப துன்பங்களுக்கும் காரணம் கன்ம மலமே.


மாயை

மாயை என்பது சிவபெருமானின் வைப்பு ஆற்றல்.இதனைப்பரிக்கிரக சக்திஎன்பர் வட நூலார்.தானாக இயங்கும் ஆற்றல் இல்லாத இதனைச் சிவபெருமான் ஆணைப்படி சிவ சக்தியே தொழிற்படுத்தி நமக்கு ஏற்ற உடல் ,உலகம் ,கருவி, நுகர்ச்சியாக மாற்றித்தருகிறாள். இவற்றைக் கொண்டு நாம் மலங்களின் கேடுகளை அறியவும் நமது ஆன்ம இயல்புகள் சிறுமையானவை என்பதைப் புரிந்து கொள்ளவும் ,இறைவனின் பெருங்கருணைத் திறத்தை உணரவும் ,ஒரு வாய்ப்பினை இறைவன் அமைத்துத் தருகிறான். ஆயினும் மாயை என்னும் இந்த நுண் பொருளும் நம்மைப் பலகாலும் மயக்கத்திலும் ,மருட்கையிலும் அமிழ்த்திவிடுகிறது. ஆதலால் இறைமை இயல்புகளை உணரவேண்டிய நாம் நிலையற்ற உலகச் சிறுமைகளில் பெரு நாட்டம் உடையவராக ஆகிவிடுகிறோம். இறைவனை அடையத் தடையாக இருக்கும் எந்தப் பொருளும்பாசம்என்ற அடிப்படையில் சிந்திக்கப் படுவதால்மாயை என்பதும் நமக்கு ஒருகட்டு(பாசம்) ஆகவே கொள்ளப் படுகிறது. ”விடிவாம் அளவும் விளக்கனைய மாயை

வடிவாதி கன்மத்து வந்து

திருவருட் பயன்இருள்மல நிலை30


புற
இருள் நீங்கும் வரை மட்டுமே விளக்கு பயனாகிறது
.அது போன்று ஆணவ வல்லிருள் முற்றாக நீங்கும் வரை மாயாகாரிய உடம்பு அறிவு விளங்கத் துணை நிற்கும் என்பர் உமாபதி சிவம்.

இவ்வாறு இறைவனை அடைய முடியாதவாறு ஆன்மாக்களுக்குத் தடையாக இருப்பவை ஐந்து மலங்கள்.இவற்றை நீத்தால்தான் இறைவனை அடைய முடியும். உயிர்கள் அனைத்தும் இன்பத்தையே விரும்புகின்றன. இதை,

எல்லா உயிர்க்கும் இன்பம் என்பதுவே

தானமர்ந்து வரூ உம் மேவற்றாகும்

_தொல்காப்பியம்


என்பர்
தொல்காப்பியர்
.இன்பத்தைப் பெறத் துன்பத்தின் பிடியிலிருந்து விடுதலை அடைய வேண்டும்.துன்பமாகிய கட்டுக்களை நீத்தலே பேரின்பமாகிய இறைவனருள் சேர வழி காட்டும்.இவைகளை நீத்தல் எங்ஙனம்?


கட்டு
நீத்தல்

நீத்தல் என்பதுவிடுபடல்என்று பொருள்படும்.

மலங்கள் கேடுசெய்வன; ஆனால் அவை ஆன்மாவிற்குக் கேடு செய்வன என்ற உணர்வு கூட நம் சிற்றறிவிற்கு இல்லை.அவை நிலையானவை. அவை ஒவ்வொன்றிற்கும் தனித் தனியே பல தீய சக்திகள் உண்டு.நமது சிற்றியல்புகளால் அவற்றை அழிக்க முடியாது. இந்த மும் மலங்களும் நம்மை வலிதே பிணித்துள்ளன. அவற்றிலிருந்து விடுபடும் ஆற்றல் நமக்கு இல்லை. ஆனால் அந்தக் கட்டுகளை அவிழ்த்தே ஆக வேண்டும். எனவே அவற்றை ஒடுக்க வல்ல பேராற்றல் உடைய ஒருவனை நாட வேண்டியுள்ளது.இதை,


கள்ளப் புலக் குரம்பைக் கட்டவிழ்க்க வல்லானே

என்று சிவ புராணத்திலும்,

வினையின் தொகுதி ஒறுத்து என்னை ஆண்டு கொள்

என்று நீத்தல் விண்ணப்பத்திலும் மாணிக்க வாசகர் வினையின் தொகுதியை ஒழிக்க இறைவனை நாடுகிறார் .


கடவுள்

உயிர்களின் மனம், மொழி, மெய்களைக் கடந்தும், உயிர்களுக்குள் உயிராகவும்,உயிர்களின் செயற்பாட்டில் உடனிருந்து உறுதுணையாகவும் இருப்பதால் கடந்தும் உள்ளும் இருக்கும் அவனைக்கடவுள்என்று நாம் கூறுகிறோம்.

நம்மால் முடியாத கட்டு நீத்தல் பிற தெய்வங்களால் இயலுமா எனில் இயலாது. ஏனெனில் மற்றைத் தெய்வங்கள் பிறக்கும்,இறக்கும், பல்வினையும் செய்யும். இதை ,”செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள்என்பர் குமர குருபரர். எனவே உயிர்கள் கட்டு நீத்தற்குப் பரம்பொருளை நாடலே ஏற்புடையது.

பரம்பொருளால் மட்டுமே உயிர்களைப் பாசங்களிலிருந்து விடுவிக்க முடியும் என்றால் அந்தப் பரம் பொருள் எது?அவனே கடவுள் .அவனைச்செம்பொருள்என்பர் சான்றோர்.செம்பொருள்

பிறப்பு என்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்

செம்பொருள் காண்ப தறிவு

_குறள்-358

என்று பிறப்பு நீங்கச் செம்பொருளைக் காண்பதே அறிவு என்பர் வள்ளுவர். சிவந்த பவள நிறத்தை உடைய பொருளை ச் செம்பொருள் என்பது உலகியல் வழக்கு. சிவந்த பவள நிறத்தை உடையவன் சிவன்.

எனவே செம்பொருளாகிய அச் செவ்வியரை சிவம் என அழைப்பது பொருந்தும்.”உடலில் சிவந்த நிறத்தை உடையது குருதி.இது உடல் திசுக்களை ஆக்கவும், காக்கவும், அழிக்கவும் வல்லது.அதைப் போலவே ஆன்மாக்களாகிய நம்மை வலிதே பிணித்துள்ளஆணவாதி மலக் கட்டுகளை ஒடுக்கவும் ஆன்ம அறிவைப் படிமுறையில் வளர்த்துப் பேரின்பம் நல்கி அருள் பாலிக்கவும் வல்லவர் செம்பொருளாகிய சிவ பெருமான் ஒருவரே என்பது உறுதி.

செந்தழல் புரை திருமேனியும் காட்டி

என மாணிக்கவாசகர் சிவனின் நெருப்பனைய திருமேனியைச் சுட்டுவார். எப்பொருளையும் நிலத்தால் ஒடுக்கினும் ,நீரால் ஒடுக்கினும்,முழுமையாக ஒடுக்க இயலாது. நெருப்பால் ஒடுக்கினால்தான் முழுமையாக ஒடுக்க முடியும்.எனவே நெருப்பனைய திருமேனியையுடைய சிவபெருமானே.தனக்கு எவ்வித ஊறுமின்றி மும்மலங்களையும் ஒடுக்கவல்லவன் என்பது தெளிவாகிறது.

கடவுட் பற்று

ஒருவரிடம் பற்றுக் கொள்ள வேண்டுமானால் அவருக்கும் நமக்கும் இடையே ஒரு உறவு இருக்க வேண்டும்.தொடர்பு இருக்க வேண்டும். கடவுளாகிய பரம சிவத்திற்கும் உயிர்களாகிய நமக்கும் தொடர்பு உண்டு. எங்கும் எதிலும் எப்போதும் கலந்திருக்கும் முழு முதல்வன்,அறிவு ஜீவிகளாகிய உயிர்களிடத்தும் கலந்திருக்கிறான்.

கண்ணிற்குப் புலப்படாத நுண்ணியனாகிய அவனைக் காணவும் முடியாது. அண்ட பேரண்டம் அனைத்தையும் உள்ளடக்கிய அப்பேருருவினை நம் மனத்துள் அடக்கவும் முடியாது.இவ்வளவு பெருமை வாய்ந்த கடவுளை நம் போன்ற சிறியோர் அடைவது யாங்ஙனம் என்பது இயல்பாக எழக்கூடிய வினா.

நம்முடைய அன்பு என்ற ஓர் உள்ளார்ந்த உணர்வினால்,ஒன்றிய சிந்தனையால் ,பயிற்சியால் உணர முடியும். சிற்றறிவுடைய நம்மால் பேரறிவுடைய கடவுளை எளிதில் உணர முடியாது என்பதால் உயிர்கள் தம்மை உணர்ந்து வழிபட்டு உய்யும் பொருட்டு,’கன்றை நினைத்து வரும் பசுப் போலவும்,விறகின் கண் தீப்போலவும்,பாலின் கண் உள்ள வெண்ணெய் போலவும் வெளிப்பட்டு அவனே வந்து அருள் செய்கிறான் .உயிரினை மத்தாகக் கொண்டு,அன்பென்னும் கயிறு கட்டி இழுத்துக் கடையவே அவன் வெளிப்பட்டுத் தோன்றி அருள் புரிவான் என்பதனைத் தேவாரம் தெளிவாகக் கூறும்.

கருணைக் கடலான இந்தக் கடவுளிடம் எவ்வாறு அன்பு செய்வது என்பதற்கு பல் வேறு நெறிமுறைகளைத் தன் அருளடியார்களின் மூலமாக இறைவன் வெளிப்படுத்தியிருக்கிறான். அவை வேதங்களாகவும் ,ஆகமங்களாகவும் வெளிப்பட்டன. சைவ சித்தாந்தம் இதை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நால்வகை நெறிகளாகக் கூறும்.இப் படி நிலைகளில் நின்று ஞானத்தை அடைய வேண்டும். ஞானம் வரும் வரையில் அஞ்ஞானம் நீங்காது.அஞ்ஞானம் நீங்காதவரை முத்தியும் கிடைக்காது.இறைவனை அறியும் அறிவே ஞானம் எனப்படும்.உயர்வான இந்த ஞானம் உயிர்களுக்குத் தானே வருவதில்லை. ஞான வேட்கை உடைய உயிர்களுக்கு இது ஒரு சற்குருவின் மூலமே கிட்டும்.

வினையின் நீங்கி விளங்கிய அறிவைப் பெற்ற மேலான உயிர்,உடலோடு கூடியிருப்பினும் ,தன்முனைப்பு இன்றி ,இறைபணி நின்று,எஞ்சிய வாழ்வின் சிந்தை முழுவதையும் சிவபெருமான் திருவடியிலேயே நிலைபெறுமாறு நிறுத்துகிறது.அதற்குசீவன் முத்தர்என்ற சிறப்புப் பெயர் நிலவுகிறது. அத்தகு சீவன்முத்த நிலையில் உடலோடுகூடிய இந்த மனிதப் பிறவியிலேயே திருவடிப் பேரின்பம் சிந்திப்பதற்கு வாய்ப்பு உண்டுஎன்பது சிவாகமக் கருத்து.

எனவே இத்தகு உயர்ந்த நிலையைப் பெற ,நமது இதயத் தாமரையில் சிவபெருமானை எழுந்தருளச் செய்து,அபிடேக ஆராதனைகளாலும் ,மலர் தூப தீப ,நைவேத்திய வழிபாடுகளாலும் உயரிய ஆன்மார்த்த வழிபாட்டினைச் செய்ய வேண்டும்.ஆன்மார்த்த வழிபாட்டினால் பாசக் கட்டுகள் ஓரளவு நீக்கப் படுகின்றன.இதய வளம் பெருகுகிறது.இந்த வளப் பெருக்கால் எல்லா உயிர்களிடமும் நமக்கு அன்பு பெருகுகிறது.’அன்பே சிவம்என்பர் ஆன்றோர்.இதன் மூலம் இம்மை, மறுமை, அம்மைப் பேரின்பம் ஆகிய முத்திறப் பயனும் கிடைப்பது உறுதி.

திருச் சிற்றம்பலம்.

by Swathi   on 10 May 2018  0 Comments
Tags: Mu. Valliyammai   Kadavul Patru   Kattu Neethal   கட்டு   வள்ளியம்மை   கடவுட் பற்று     
 தொடர்புடையவை-Related Articles
தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி : கட்டுரை, குறும்படம், சிறுகதைப் போட்டிகள் தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சி : கட்டுரை, குறும்படம், சிறுகதைப் போட்டிகள்
கட்டு நீத்தலும் கடவுட் பற்றும் - மு.வள்ளியம்மை கட்டு நீத்தலும் கடவுட் பற்றும் - மு.வள்ளியம்மை
நீட் தேர்விற்கான ஆடை கட்டுப்பாடுகளை அறிவித்தது சிபிஎஸ்இ!! நீட் தேர்விற்கான ஆடை கட்டுப்பாடுகளை அறிவித்தது சிபிஎஸ்இ!!
வா.. நாமெல்லோரும் ஒன்றே.. (நிமிடக் கட்டுரை) வா.. நாமெல்லோரும் ஒன்றே.. (நிமிடக் கட்டுரை)
குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கம் நடத்தும் கல்லூரி மாணாக்கர்களுக்கான மாநில அளவிலான போட்டிகள் குறிஞ்சிக் கபிலர் தமிழ்ச் சங்கம் நடத்தும் கல்லூரி மாணாக்கர்களுக்கான மாநில அளவிலான போட்டிகள்
ரௌத்திரம் பழகு! ரௌத்திரம் பழகு!
ஓங்கி உலகளந்த தமிழர் - 11 : நல்லனவும் அல்லனவும் ஓங்கி உலகளந்த தமிழர் - 11 : நல்லனவும் அல்லனவும்
ஓங்கி உலகளந்த தமிழர் - 10 : அறிவியல் (Science) என்றால் என்ன? ஓங்கி உலகளந்த தமிழர் - 10 : அறிவியல் (Science) என்றால் என்ன?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.