- முனைவர் கி.செம்பியன்
நன்றாங்கா னல்லவாக் காண்பவ ரன்றாங்கா லல்லற் படுவ தெவன் (379)
(நன்று ஆங்கால் நல்லவாக் காண்பவர்---நல்வினை விளையுங்கால் அதன் விளைவாய இன்பங்களைத் துடைக்குந்திறன் நாடாது இவை நல்;லவென்று இயைந்தனுபவிப்பார்; அன்று ஆங்கால் அல்லற்படுவது எவன்---ஏனைத்தீவினை விளையுங்கால் அதன் விளைவாய துன்பங்களையும் அவ்வாறனுபவியாது துடைக்குந்திறன் நாடி அல்லலுழப்பது என் கருதி--பரிமேலழகர்)
முதலில் ஒரு குழந்தை - மகிழ்ச்சி!
அடுத்ததும் ஓர் ஆண் குழந்தை--மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!
மூன்றாவது ஒரு பெண் குழந்தை--வருத்தம்! (பெண்ணியவாதிகள் பொறுத்தருளவேண்டும்)
முதலில் பிறந்த ஆண் குழந்தை, நான் ஆணாகப் பிறக்கவா, பெண்ணாகப் பிறக்கவா என்று பெற்றோரைக் கேட்டுக்கொண்டா பிறந்தது? அதற்கு மகிழ்ச்சியடைந்தவர், பெண் பிறந்ததற்காக வருந்துவானேன்?
பலநாள் மிதிவண்;டியில் ஒழுங்காகப் போய்வந்தார்; மகிழ்ந்தார்;! ஒருநாள் கீழே விழுந்துவிட்டார்;! புருவத்தில் அடி; குருதி கொட்டியது; முக்கியமான நரம்பு துண்டிக்கப்பட்டுவிட்டது; பலநாள் வைத்தியம்; நல்லவேளை, பைத்தியம் பிடிக்கவில்லை!
அந்த மிதிவண்டியைப் பார்த்துப் பார்த்து வருத்தம்! பலநாள் ஒழுங்காகச் சென்று மகிழ்வித்த வண்டி, ஒருநாள் இப்படிச் செய்துவிட்டது!
நல்லது நடந்தது; யாரைக் கேட்டு நடந்தது? அதற்கு மகிழ்ந்தார்!
கெட்டது நடந்தது; யார் சொல்லி நடந்தது? இதற்கு மட்டும் ஏன் வருந்தவேண்டும்?
நல்ல சட்டை; நல்ல நிறம்; நல்ல தையல்; அவருக்கு மிகப் பொருத்தம்; அதை அணிந்தாலே தனி அழகு; ஆள் பாதி ஆடை பாதி என்பார்களே, அஃது இந்தச் சட்டையைப் பார்த்துத்தானோ, அப்;படி ஓர் அழகு; பலரும் கேட்டிருக்கிறார்கள், எங்கே தைக்கப்பட்டது என்று; பல மேடைகளி;ல் பலருடைய கண் பட்டது; கடைத்தெருவிலே, பேருந்திலே, மக்கள் கூடும் எந்த இடத்திற்குச் சென்றாலும், அந்தச் சட்டையால் ஓர் ஆழகுப் பார்வைக் கிடைத்துவந்தது அவருக்கு! அந்தத் தையல்காரர் எத்தனையோ பேருக்குத் தைக்கிறார்; அவையெல்லாம் பேர் பெறவில்லை; இவருக்குத் தைத்தது மட்டும் அத்தனை நேர்த்தி!
ஐயகோ,
ஒருநாள் அரசு நகரப் பேருந்தில் கூட்டத்தோடு ஏறும்போது ஒரு கம்பியில் சிக்கிப் பார்வையான இடத்தில் கிழிந்துவிட்டது; ஈடு செய்ய முடியாத கிழிசல்!
அந்தச் சட்டையை நினைந்து நினைந்து பலநாள் வருத்தம்!
அது இருந்தால் இது இல்லை; இது இருந்தால்; அது இல்லை; அதுவும் இதுவும் சேர்ந்திருந்தால், அவனுக்கு இங்கே இடமில்லை----என்றான் பட்டுக்;கோட்டை கலியாணசுந்தரம்; அந்த நேர்த்தி யாரைக் கேட்டு நடந்தது? அதற்கு மகிழ்ந்தார்!
மகிழத் தெரிந்த மனமே, இதற்கு ஏன் வருந்துகிறாய்?
நல்லனவற்றிற்கு மகிழ்ந்தால், அல்லனவற்றிற்கும் மகிழ்;ச்சி கொள்! ஓன்றிற்கு மகிழ்ந்து மற்றொன்றிற்கு வருத்தமா?
கூடாது!
மகிழாதே; வருந்தாதே!
எது நடந்தாலும் நடுநிலையாக இருக்கக் கற்றுக்கொள்!
ஓட்டையும் செம்பொன்னையும் ஒக்கவே நோக்கு!
அதற்காகக் காதுகளில் ஓடுகளையா தொங்கவிட்டுக்கொள்ள முடியும்?
ஓடுபோட்ட கூரையைப் பெர்;ன்னம்பலம் ஆக்கலாமா?
ஒரு மன்னன் கட்டினான்; மகிழ்ச்சி!
ஒரு மன்னன் இடித்தான்; வருத்தம்!
ஒரு மன்னன் பிறந்தான்; மகிழ்ச்சி!
அந்த மன்னனை இந்த மன்னன் வெட்டினான்; வருத்தம்!
தீபாவளி வெடி வெடித்தது; இன்பம், கொள்ளை இன்;பம்!
இந்த முறை கண்ணில் பட்டுவிட்டது; கண்ணே வெந்துவிட்டது;
துன்பம், துன்பம்!
பல ஆண்டுகளாகக் காளையை அடக்கிவரும் வீரன் அவன்; பல தங்கக் காசுகளை வென்றவன்! மகிழ்ச்சியோ மகிழ்ச்சி! இந்தப் பொங்கலின்போது வயிற்றில் முட்டி உயரே தூக்கிவிட்டது அந்தக் காளை! துயரமோ துயரம்!
பலமுறை விண்ணிலே பறந்து சாதனை; உலகம் மகிழ்ந்தது! இம்முறை வெடித்துவிட்டது; உலகமே துயரம்!
இன்பமும் துன்பமும் கலந்ததுதான் உலகம் என்று தெரிந்திருந்;தாலும்,
இன்பத்தைக் கண்டு மகிழாமலும்
துன்பத்தைக் கண்டு வருந்தாமலும்
எப்படி வாழமுடியும்?
வள்ளுவரே வணக்கம்!
அந்த முறையைக் கற்றுத்தாரும்!
(தொடரும்....)
|