ஆங்கிலேயர்களுக்கு ழ என்ற வார்த்தை வாயில் நுழையாததால், தமிழ் என்பதை அவர்கள் டமில் என்று உச்சரித்தனர். அதே பெயரில்தான் தமிழ்நாடு என்ற மாநிலப் பெயர் ஆங்கிலத்தில் உச்சரிக்கப்பட்டுவருகிறது. இதை மாற்றக்கோரி கோவிந்தராஜு கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழ்மொழி 2000 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த செம்மொழியாகும். தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் மட்டுமே ‘ழ' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இந்த வார்த்தையை ஆங்கிலேயர்களால் உச்சரிக்க முடியாததால், அவர்கள் ‘தமிழ்' என்ற சொல்லை ‘டமில்' என்று உச்சரித்தனர்.
இந்த நிலையில், மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. இதையடுத்து, 1969-ம் ஆண்டு ஜனவரி 14-ந்தேதி ‘தமிழ்நாடு' என்று பெயர் சூட்டப்பட்டது. ஆனால், ஆங்கிலத்தில் இதை ‘Tamilnadu' என்று எழுதப்பட்டு வருகிறது. மேலும் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் தமிழக அரசிடம் பெற்ற விவரத்தில், ‘Tamilnadu' என்று ஆங்கிலத்தில் எழுதுவதை ‘தமிழ்நாடு' என்று எழுதும் விதமாக ஆங்கில வார்த்தைகளை மாற்றவேண்டும் என்று தமிழ் வளர்ச்சித்துறை 2009-ம் ஆண்டு தமிழக அரசுக்கு பரிந்துரை செயதுள்ளது.
இதன் பின்னர். 2013-ம் ஆண்டு இதே கோரிக்கையுடன் மற்றொரு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து தகுந்த உத்தரவினை தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி ரவிச்சந்திர பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மாநிலத்தின் பெயரை மாற்றும் அதிகாரம், நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. அந்த அதிகாரம் மாநில சட்டசபைக்கு இல்லை என்றும். எனவே இந்த வழக்கை வாபஸ் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.
|