சோறுபோட்ட நிலத்தை வெட்டி
வீடு கட்டுவார்!
நாளை
சோறில்லாமல் சாகும்போது
சுவரில் முட்டுவார்!
வண்டி வாகனம் நிறய வாங்கி
வாசலில் நிறுத்துவார்!
நாளை
வாந்தி வரும் உணவை உண்டு
வாழ்வைக் கழிப்பார்!
ஏழை வயிற்றில் அடித்தக் காசை
எண்ணிக் குவிப்பார்!
நாளை
ஏழு எட்டு ஏக்கர் வாங்கி விற்று
கணக்கை முடிப்பார்!
வாய் நிறையப் பொய்யைச் சொல்லி
உண்மையை மறைப்பார்!
நாளை
வாய்க்கரிசி போட்டுவிட்டு
வாய்கிழியச் சிரிப்பார்!
இலட்சம் வரும் கோடி வரும்
அள்ளி விடுவார்!
நாளை
விளைநிலத்தை விலை நிலமாய்
மாற்றி அமைப்பார்!
வாயில் பல வித்தை வைத்து
வளைத்துப் போடுவார்!
நாளை
ஏழை வாழ்வை அழித்து மறைத்து
மண்ணில் புதைப்பார்!
ஏழையை ஏய்த்து ஏணி வாங்கி
உயர ஏறுவார்!
நாளை
எதைத் திண்பது எனத் தெறியாமல்
மண்ணைத் தின்னுவார்!
நம்மையும் கொன்று தன்னையும் கொன்று
நாசமாய் போவார்!
நாளை
நாடு அழிந்து போகும் முன்னே
யார் தடுப்பார்!
|