LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!


(வரலாற்றுக் கவிதை நாடகம்)

காட்சி 17

 

 

 

காலம் : காலை
இடம்  : அரண்மனை
வருவோர்கள் : வெல்ஷ், துபாஷ், சிப்பாய்கள், பெரிய

மருது, சின்ன மருது, தேவர், ஊமைத்துரை, ராக்
காத்தா, பொன்னாத்தா.
           
            [ பெரிய மருது, சின்ன மருது, கறுத்தான்,

ஊமைத்துரை இவர்கள் நின்றிருக்க,
               
தேவர் உள்ளே வருகிறார்]

தேவர்
      
வெல்ஷ் துரை வருகின்றான்-அதோ
      வெள்ளையன் வருகின்றான்.

ஊமைத்துரை
      
மன்னியுங்கள் மருதையா -அவன்
      மண்டையைப் பிளக்கின்றேன்.

பெரிய மருது

            நண்பனாக வருகின்றான் - நீங்கள்
      பண்பறிந்து நடவுங்கள்.,

ஊமைத்துரை
      
பொருந்தாத உறவென்றும் - புவியில்
      பெருந்தீது தருமன்றோ

 

பெரிய மருது
      விலகியிரும் வேண்டுகின்றோம் - அவன்
      பழகுமுறை கண்டிடுவோம்.
                        (வெல்ஷ், துபாஷ் சிப்பாய்கள் முதலானோர்

       உள்ளே நுழைகின்றனர்.)

பெரிய மருது
            வரவேண்டும் வரவேண்டும் - நலம்

பெறவேண்டும் உறவேண்டும்.

வெல்ஷ்

Greetings cannot be Received
            Great thing had been Deceivd


துபாஷ்
            வாழ்த்துப் பெற வரவில்லை - உறவைத்
      தாழ்த்தியதும் தரமில்லை .

பெரிய மருது

வாழ்த்தாதது முறையில்லை - எண்ணிப்
      பார்த்தா லதிற் குறையில்லை.

சின்ன மருது

தரம் பற்றிப் பேச்செதற்கு - நெஞ்சில்

உரம் பெற்ற ஏச்செதற்கு?

வெல்ஷ்
      
Don't want your Explanation
            Can't take your Decision

 

துபாஷ்

      
      
முகாந்திரம் தேவையில்லை - உமது

முடிவின்னும் கூறவில்லை .

பெரிய மருது

            முகாந்திரம் பழக்கமில்லை - நட்பை
      முறித்திடுதல் வழக்கமில்லை .

(வெல்ஷ் ஆத்திரமும் ஏளனமுமாய்ச் சிரிக்
           கிறான்
)

சின்ன மருது

வெல்ஷ் துரை சிரிப்பதுமேன் - மிக

வேகமுடன் இருப்பதுமேன்.

வெல்ஷ்
      
Oomaidurai is here

Hand over my dear
துபாஷ்

ஊமைத்துரை இருப்பதிங்கே - நீரும்

ஒப்படைப்பீர் அவனெங்கே.

சின்ன மருது
            சீமைத்துரை வந்ததிங்கே - அவர்

செப்புமுறை மிக ஒழுங்கே!

வெல்ஷ்
      
 Hand over have friendship ever
            Stands o
rder and save your power

  

துபாஷ்
ஒப்படைத்தால் நட்பாகும்

ஒளித்துவைத்தால் பகையாகும்
இத்திறத்த தெம் ஆணை

இழக்காதீர் பதவி வீணே!

சின்ன மருது :

ஒப்படைத்தால்

துபாஷ் :

நட்பாகும்

பெரிய மருது

ஒளித்து வைத்தால்

துபாஷ் :

பகையாகும்

சின்ன மருது

இத்திறத்தது

துபாஷ்

எம் ஆணை …. …...

பெரிய மருது

இழக்காதீர்............
துபாஷ்

ப...த...வி ........வீ........ணே ........!

 

சின்ன மருது
வெட்கம் கெட்ட நாயே-உடன்
வெந்திடு முந்தன் வாயே!

தேவர்
உத்திரவு இங்கிட்டாயா- நீயும்
பத்திரமாய்ப் போய்ச்சேர் வாயா!

பெரிய மருது
ஆள்பவர் நாமிருக்க ஆணையிட வந்தாயா?
தோள்வலி கொண்டார்முன் துச்சனம் செய்தாயா!

சின்ன மருது
      காணும் கயமைக் குணம்

      காட்ட வந்த வனே
      நானும் கொண்ட நட்பால்

      நல்லபடி நீ பிழைத்தாய்
      மானங் கெட்ட நாயே

      மடியுமுன் ஓடு நீயே.
வெல்ஷ்
      
All Right......
            All Right.........

(கோபமாக வெளியேறுதல்)

பெரிய மருது
நாட்டில் அமைதிவந்து நான்காண்டே ஆகிறதே
வேட்டைப் பெருங்காடா வேண்டுமென்றே

      காட்டிவந்தேன்

 

நானும் பொறுமை; நலங்கெடவா லாட்டினால்கல்
தூணோ வளையும் துவண்டு?

(ஊமைத்துரை உள்ளிருந்து மெல்ல வந்து)

 

ஊமைத்துரை

ஆமை நுழைத்ததுபோல் ஆச்சோ -
                              அரண்மனையில்
ஊமையன் கொண்ட உறவு.


பெரிய மருது
தீமை யேதுமில்லை ஊமையரே - என்றும்
நாமோ நட்புறவின் பான்மையரே.


சின்ன மருது
நட்புக்கு உயிர் கொடுக்கும் நல்லாண்மை - இந்த
நாட்டில் மலிந்துள்ள நம் பான்மை.
        (ராக்காத்தா-பொன்னாத்தா உள்ளிருந்து வந்து)


ராக்காத்தா

சீண்டியவன் சென்றதையும் செவியுற்றோம்
                                    நாங்களுமே

பாண்டியர் உங்களுடன் பாஞ்சாலத் தாரிணைந்தார்
வேண்டியது என்னஇனி வெகுண்டெழுந்தால்
                                    தூள் தூளே

வேண்டித் துதிக்கின்றோம் வென்றிடுக
                                  போரிலென்றே.

 

பொன்னாத்தா
கிள்ளைச் சிறாரழித்தே கொள்ளையிட்டார்
                                    பெண்டிரையும்
கள்ள மதிக்கயவர் கட்டழிவர் - சொல்லுகிறேன்
வெள்ளிவரக் கொள்ளிவர வாய்க்கரிசிக் கொட்டிவர
அள்ளிச்சென் றேகிடு வீர்.

சின்ன மருது

பலே...... பலே….....
அண்ணியொடு பொன்னாத்தா அறைகூவி
                                    விட்டார்கள்
எண்ணிப்பின் துணிந்துவிட்டோம் இருக்குமொரே
                                    வழிகண்டோம்

புண்ணியஇச் சிவகங்கை புனிதமண்ணை அடிமை
                                         செய்ய
எண்ணிடுமிச் சிறுமதியார் எவருமினிப்
                                பிழைப்பதுவோ?

வேல்பாய்ச்சி விடுகணையும் விரைந்தோச்சி
வாள் பாய்ச்சி வளரித்தண் டெடுத்தோச்சி

குடலெடுத்து குலையறுத்து குழிபறித்து

உடல் பொடித்து தலையொடித்து உயிர் குடித்துப்
பழி வாங்க
பொறுத்தது போதும் பொங்கியே!

மறக்குலம் புறப்படப் போர் போர் போரே.

                  (திரை)

 

 

 

காட்சி 18

காலம் : இரவு

இடம்  : காட்டில் மறவர் படைமுகாம்

வருவோர்கள் : பெரிய மருது, சின்ன மருது, ஊமைத்
               துரை, கறுத்தான், சிவஞானம், இளம்
               போர் வீரன், படையாட்கள்.

பெரிய மருது

கமுதியிலே போர்தொடங்கிக் காட்டினோம் வீரம்
திமுதிமுவென் றெங்கும் திறல் மறவர் தீரமுடன்
புற்றீசல் போலே புறப்பட்டுக் கொன்றபகை
வெற்றிவந்த வேளையும் வீண் அகந்தை கொள்ளாது நாற்பத்தாறு கல்தாண்டி நாகலச் சேரிபின்னர்
நாம்திரும் பத்தொடுத்தப் போர் திருப் பூவணம்
எத்தனைப் போர்தொடுத்தோம் எங்கெங்கு தாக்கி
                                          வந்தோம்

அத்தனையும் வெற்றி அடைந்தவர்கள் நாம்தானே.

ஊமைத்துரை

படைநடத்திச் செல்லசிங்க அண்ணனில்லை
                                    எந்தனுக்குப்

பக்கம் நின்று பாயும் வெள்ளையத்தே வனில்லை
என்றோய்ந்து நொந்திருந்த தெந்தனது உள்ளம்
இனிக்கவலை எனக்கில்லை எதிரிகளைக்
                                 கொன்றிடுவேன்

சிங்கநிகர் அண்ணனும் தங்கவீரன் தேவனும்
இங்கிருக்கும் மருதையர் நான் கண்டிருக்கும்
                                    காட்சியாம்
96

 

சின்ன மருது
பாஞ்சை இளையவரே பட்டழிந்தான் மேஜர்கிரே
பக்கத் தளபதிகள் பர்மின்டன் ஸ்டூவர்டு
கோல்பிளாக்கர் கொஞ்சியதும் நம்கொடிய
                                      வாளினிலே
பார்த்திப னூரிலே ஆர்த்தெழுந்தோம் நாமும்
பரமகுடிப் பாதை பயந்தவர்கள் சென்றுச்
சிரமமுடன் சேர்ந்தாராம் ராமனாத புரமும்
பழமனேரி விட்டோடி பக்கத்துக் கோட்டை
விழக்கண்ட கூட்டம் விழுந்தெடுத்த தோட்டம்
அடுத்திருந்த ஆற்றங் கரையங்கும் ஓட்டம்
பிடித்தே ஒளிந்தார் பெருங்கமுதிக் கோட்டையில்
ஒக்கூரைத் தீயிட் டொழித்தனராம் நள்ளிரவில்
வெட்கங்கெட் டார்க்கு விடியட்டும் காட்டிடுவோம்.

(சிவஞான மும்-தோழனும் கைக்கூலி ஒருவனைப்
            பிடித்திழுத்து வருகின்றனர்)

என்ன சிவஞானம் யாரிவன் வெள்ளையன்
சொன்னதைச் செய்து சொகுசுபெறும் -
                                  சின்னமதித்
தன்னலக் கைக்கூலி தான்

சிவஞானம்

ஓலை எடுத்துச் செல்லும் உலுத்தன்
ஆளைப் பிடித்தி ழுத்து வந்தேன்
கண்ணுங் கருத்துமாய் காரியம் ஆற்ற
இன்ஸ்துரை என்பான் இவனை அனுப்பி
மதுரை நீங்கிய மற்றவன் ஆக்நியூ
எதுவரை வந்தே இணைவ தென்று
அறிந்திடச் செய்தி அனுப்பு கின்றான்.சின்ன மருது
நாங்கள் அறியாமல் நடமாட்ட மிங்கேது
போங்கள் கறுத்தான் புரிந்திடச் செய்யும்.
      (உள்ளிழுத்துச் சென்று கறுத்தான் அடிகொடுக்கக்
      கருங்காலி கதறுகிறான்)

 

சிவஞானம்
நத்தம் கிளம்பிய நாள் முதலாகவே
நித்தம் புடைக்கிறோம் நீசன் இன்ஸ்படையை
சிங்கப் பிடாரி சென்றடி கொடுத்தோம்
எங்குப் போவது என்றறியாமல்
மணலைப் பச்சேரி வந்தார் அவரை
மண்ணைக் கவ்வச் செய்தோம்; மகிழ்ந்தோம்.

 

சின்ன மருது
இருபடை சேர்ந்தால் பெரும்படை யாகும்
'சிறுபடை கொண்டு நாம் பொருந்திட வேண்டும்
எந்த விதத்திலும் இதைத்தடுக் கத்தீப்
பந்தம் கொளுத்தி படைமே லெறிவோம்
நிலத்தில் நடத்தும் போரை நீரின்
பலத்தும் காட்ட வேண்டும் அதனால்
தொண்டித் துறைவுறைத் தோணிகள் எல்லாம்
கண்டதும் எதிரிக் கலங்கள் உடைத்து
வந்திடும் உணவைக் கொந்திட வேண்டும்.
சிவஞானம்
தந்திரம் உண்டு தைரியம் உண்டு
வந்தவர் வாழ்வதா? நொந்து நாம் சாவதா?
என்பவர் பெருகியே இன்றெதும் முடிக்கிறார்.
      (சிவஞானத்தின் தோழனைப் பார்த்து
             புன்முறுவலுடன்)

  தண்-7

 

சின்ன மருது
நம்மை யறியா நடமாட்ட மேது
உண்மை மறைத்து உலவுவார் உண்டோ ?

சிவஞானம்
வாய்ப் பேச்சு ஊமை உரைதான்
வாள் வீச்சோ ஊமைத் துரைதான்
வாய்ப்பிற்கு என்னைத் தேடி
வந்த யிவன் பெருங்கில் லாடி.

சின்ன மருது: (சிவஞானத்தையும் தோழனையும் மாறி
                     மாறிப் பார்த்து முறுவலிக்கிறான்)

 

(திரை)

 

 

காட்சி 19

 

காலம் : அந்தி நேரம்

இரவு  : காட்டில் கூலிப்படைகள் போர் முகாம்

வருவோர்கள்: வெல்ஷ், துபாஷ், சிப்பாய்கள்.

துபாஷ்

Reported to the High Command

Not yet responded to our demand

வெல்ஷ்
      
Understand Tamil well
            Unable to speak
            Ofcourse it's my will
            Always in Tamil you speak

 

துபாஷ்
      நாற்புறமும் சூழ்ந்து வந்து பிடிக்க
      நம்படைகள் கொண்டு வந்து குவிக்க
      மேற்கொண்டு எழுதுகிறோம் அநேகம்
      மெத்தனமாய் இருக்கின்றார் சமூகம்

வெல்ஷ்
            Our hopes are burried
            Oh! I am much worried

துபாஷ்
      தொலைத்தவரை ஒடுக்கிடவே
            துரைத்தனமும் நடுக்கிடவா
      மலைத்தினியும் விடுத்திடிலோ
            மருதிருவர் மடித்திடிவர்
வெல்ஷ்
            He has many things to boast
            World knows Nimarat of the East.

துபாஷ்
      துரை மகனார் புகழ்ந்திடும் பேச்சு
            தொலைத்திடுவோம் உறுதியென்ப தாச்சு
      நிறைமாதம் இருக்கின்றாள் மனைவி
            நிறைய பணம் விரும்புமொரு துணைவி
      முறையாலே பெண்டாட்டி ரெண்டு
            முழிக்கின்றேன் மீளோமே என்று
      கரையேற வழிகாட்ட வேண்டும்
            கண்டிப்பாய்க் காப்பாத்த வேண்டும்

வெள்ளைத் தளபதிகள் கூடி

விடுமுறை கேட்கின்றார் நாடி
கொள்ளைப்பல நோய்கள் கொண்டார்

குலவிடும் குலை நடுக்கம் கண்டார்.

[துபாஷ் காதில் சிப்பாய் ஏதோ சொல்கிறான்]

துபாஷ்

இரண்டு மருதுகளை இங்கேநீ பார்த்தாயா
            மிரண்டு இருக்கின்றோம் மெல்லச்
                                    சொன்னாயா
      புரண்டு கிடப்பவரை போய் நீ கூட்டிவந்து
            திரண்டு இருந்திடுங்கள் தெய்வம்
                                    காத்திடட்டும்.
வெல்ஷ்

            Don't threaten me
            Want shelter tell me.

(துபாஷ் வெல்ஷ் இருவரும் பயந்து ஓடி ஒளி

கின்றனர்.)

 சிப்பாய்
         
(வாய் பொத்தி மெதுவாய் சிரித்து.)
      மருதமரம் இரண்டிங்கு முன்னே

      மறைந்திருக் கெனவந்து சொன்னேன்
      பொருதவந்த தளபதிக்கோ ஆட்டம்

      பொந்துதேடி எடுக்கின்றார் ஓட்டம்.

போர் வீரன் 1
           
துணிச்ச லில்லா பயலைநம்பி அண்ணாச்சி -
                                                                                    நாமும்

      துணிஞ்சு துரோகம் பண்ணியிங்கே வந்தாச்சி

 

            கணிச்சதென்ன நினைச்சதென்ன அண்ணாச்சி
                                                                                    - இப்போ
      கண்ணுமுன்னே நடப்பதெல்லாம் என்னாச்சி.

போர் வீரன் 2
           
இவனை நம்பி வந்ததில்லை அண்ணாச்சி -

                                    இங்கே

      இருக்கும் நம்ம கூட்டம் ரொம்ப பெரிசாச்சி   கவலைவேண்டாம் விட்டிடுங்க அண்ணாச்சி -
                                                                                    நாம

      கடைசிவரை நின்னிடுவோம் வந்தாச்சு.

போர் வீரன் 3
 
புத்தி கெட்ட பசங்க வந்து குவிஞ்சிடுவாங்க -

நாமும

புரிஞ்ச துரோகம் செஞ்சிங்கே நிறைஞ்சிடுவாங்க
மத்தபடி நினைச்சிபாரு நல்லாருங்க - யாரும்

மனசு ஒப்பி இந்தவழி நில்லாருங்க.
 
போர் வீரன் 2
புத்தியுள்ள மனுசனெல்லாம் தொடங்கி

  விட்டாங்க--இந்த

புதுப்பழக்கம் கடைப்பிடிச்சி இறங்கி விட்டாங்க
பத்துகாசு கொடுத்ததுமே மயங்கிப் புட்டாங்க-பாரு

பயகயிங்கே மடமடன்னு குவிஞ்சி புட்டாங்க.

போர் வீரன் 1
பொழைக்கவழி இதுதான்னு கத்துகிட்டாங்க -
                                                                                    இந்த

      புதுமுறையைப் பெரும்பாலும் ஒத்துக்கிட்டாங்க

 

 

பழையகதை நினைச்சவங்க மாட்டிக்கிட்டாங்க
                                          வீணா
      பரிதவிச்சி இருக்கவழி கேட்டுகிட்டாங்க.

போர் வீரன் 3
பகையாளிக்கும் எதிராளிக்கும் அருள்பாலிக்கும்
பகவானொக்கும் பலவானுக்கும் படையாதோற்கும் நகையாயிருக்கும் நமக்கேபிறக்கும்

நயவஞ்சனைக்கும்

நலமோபிறக்கும் நாடோஏற்கும் நம்

துரோகம்தான்.

 

போர் வீரன் 1
பெரியவருக்கு செஞ்சாத்தான் பெருத்த

லாபம்-நல்லா

      புரியவைக்க வேணுமின்றி திருத்தலாமோ?
சரியிவர்க்கு கெட்டகாலம் சரியிராரு-நம்ப

சரித்திரத்தைப் பாத்துகிட்டா தெரியிறாரு.

( திரை)

காட்சி 20

காலம்  : இரவு
இடம்   : காட்டில் போர்முகாம்.
வருவோர்கள் : பெரிய மருது, சின்ன மருது,ஊமைத்துரை.

   போர்வீரர்கள், தேவர்.

            [தேவர் ஓடி வந்து]

தேவர்
ஆபத்து மன்னவரே ஆபத்து! ஆபத்து!

சென்னைப் பெரும்படையோடும் சேர்ந்துவரும்

                                    ஆயுதங்கள்
பின்னைத் தொடர்ந்து வரும் பேய் வாய்ப்பீரங்கி திருநெல்வேலியிலே தேங்கி நிற்கும் பெரும் படையும்

திருமயக் கோட்டைவிட்ட தீக்குணத்துத்

                                 தொண்டைமான்
ஆக அனைத்தும் அறிவீர்கள். ஆனால்....


பெரிய மருது

ஆனால்...அதென்ன? முடியும்!


தேவர்
உடையணரை மன்னராக்கி ஒற்றுமையை

உடைத்துவிட்டார்

படையனைத்தும் நம்மினத்துப் பங்காளி

  யளிக்கின்றார்

வெள்ளைக் காசடித்து வீண்வதந்தி பரப்புகின்றார் வெள்ளையர்க்குத் துணையாக விரைந்து பலர்

      சேருகின்றார்

 

தேவர்
காளையார் கோவிலுக்குக் காடழித்து வழியமைக்க பாளையத்தார் கவுலெடுத்துப் பாட்டையே

காணுகின்றார்

எத்தனையோ செய்தாலும் எவரெவரோ

சேர்ந்தாலும்

இத்தனைக்கும் மேலேதான் இருக்குமொரு ஆபத்து....சின்ன மருது .

ஆபத்தை வரவேற்க ஆண்மை துடிக்கிறது
கோபக் கனல்மேலே கொட்டுகிறீர் எண்ணெய் நீர்.

 

தேவர்
உடையணன் மாமன்நம் படையினில் சிறந்து

நின்றான்

கடையவன் நம்மை நீங்கி கம்பெனி சேர்ந்தங்கே

அடைக்கலம் என்று சொல்லி அக்நியூ
                                கால்வீழ்ந்தான்

படைக்கலம் குறைந்துள்ளோம் பலரங்கே

சேர்ந்துள்ளார்.


ஊமைத்துரை
சேரட்டும் கவலையில்லை சேர்த்தவரை
                                    வீழ்த்திடுவோம்

கூறட்டும் பதில்நமக்கு கூரியநம் வாள்முனைக்கு

 

பெரிய மருது
சக்கரப் பதிக்காட்டின் சங்கதி யறியார்கள்
தக்கதாய் அந்தரங்கத் 'தளங்களும் ஏராளம்.

சின்ன மருது
இந்தஒரு பலத்தாலே எதிரியை வீழ்த்திடலாம்
எந்தவிதம் காட்டரணும் இருக்கிறது கறுத்தான்

(சற்று நிதானித்து)

கறுத்தான் கறுத்தான் எங்கே காணவில்லை
பொறுத்தமாய் அறிந்தவன் பொருதும் முறை

      தெரிந்தவன்.


பெரிய மருது
ஆபத்து என்னவென்றீர் அதையின்னும்

கூறவில்லை

கோபத்தைக் கிளறவேண்டாம் கொண்டுவந்த

செய்தி என்ன

 

தேவர்
உடல்நிழல் ஒதுங்கிடுமா கடல்நீர் வறண்டிடுமா
நடந்துவிட்டான் நம்கறுத்தான் நமைநீங்கி

எதிரியுடன்

தப்பென்றே தெரிந்திருந்தும் தான்வாழத்

திட்டமிட்டான்

உப்பிட்ட வருக்கிவனும் உலைவைக்கத்

      துணிந்துவிட்டான்

அந்தரங்கப் பலம்முழுதும் அந்நியர்க்குக்

கிடைத்துவிடும்

எந்தவிதம் தவிர்ப்போம்நாம் இதுவன்றோ ஆபத்து.
.

 

சின்ன மருது
புரிகிறது தேவரே புரிகிறது
வருகிறது ஆபத்தென்ற வகைநமக்குப் புரிகிறது.
தெரிகிறது தேவரே தெரிகிறது
தேர்ந்துவிட்ட துரோகத்தின் தீமையெலாம்

தெரிகிறது.

சரிகிறது தேவரே சரிகிறது
      சத்தியமும் வீரம்நேர்மை சகலமும் சரிகிறது
விரிகிறது தேவரே விரிகிறது

வீணடிமைத் தனமெங்கும் வெகுவாக விரிகிறது
வருகிறது தேவரே வருகிறது

வல்லாரின் வாழ்வழிக்க ஊழ்விதியே வருகிறது சதிசெய்யும் நம்மினத்து சழக்கரின் வழக்கத்தை

விதியென்ப தன்றியதை வேறென்ன .

சொல்லுவதோ?

                                    (திரை)

 

 

காட்சி 21

காலம் : அந்தி நேரம்
இடம் சக்கரைப்பதிகாடு
வருவோர் : சின்ன மருது, சிவ ஞானம், மீனாட்சி.

(சிவஞானம் முன்செல்ல ஊமை இளைஞன் பின் தொடர்கிறான். கூலிப்படை ஆள் ஒருவன் குறி
வைத்து சிவஞானத்தைச் சுட தோழன் துப்பாக்
கிக் குண்டை மார்பேந்துகிறான்.

      சிவஞானம் சுட்டவனை நோக்கிப் பாய்கி

றான். சின்னமருது அங்கே வந்து ஊமை வீரனை

தாங்கிப் பிடித்துக் கொள்கிறான். சிவஞானம  

திரும்பி வந்து...)

சிவஞானம்

சுட்டுவிட்டுப் போனவனை நானும்

வெட்டிவிட்டு வந்துவிட்டேன் காணும்

(குண்டடிப்பட்ட தோழனைப் பார்த்து

சோகமாக)

எட்டியெட்டி விலகிவந்த நண்பா

என்னுயிரைக் காத்ததுமுன் பண்பா?

சின்ன மருது

எம்மை அறியாமல்
            இங்கு நடமிட்டா
தம்மை அடையாளம்

காணா ரெனவிருந்தாய்

 

 

சிவஞானம்

      நம்மை அறியாமல்

      நடமாடி இருப்பதுவா
      உண்மை புரியவில்லை

      உரையுங்கள் தெரியவில்லை.

[மிகவும் நொந்துபோய்)

சின்ன மருது
 

      வாய்ப் பேச்சில் ஊமை உரை

      வாள்வீச்சில் ஊமைத்துரை
      தாய்ப் பேச்சில் வளர்ந்த சிட்டு

      தரிக்காமல் போரு மிட்டு
      காய்க்காமல் உதிர்ந்த மொட்டு.

      கடக்குதடா நம்மை விட்டு.
 
சிவஞானம்

      மொட்டென்றும் சிட்டென்றும்

      மூடி வைப்ப தேனப்பா
      பட்டென்று பாய்ந்தென்னைப்

      பாது காத்தான் யாரப்பா.

சின்ன மருது

      கட்டி முடிக்காது

      காத்துவைத்தப் பொன் மணியை
      கொட்டி இரைத்து விட்டோம்

      கோலமணித் தோற்றுவிட்டோம்.
      கொத்து மலர் பறித்துக்
            கொண்டுவாடா என் மகனே

 

 

       அத்து மீறிடுதே

      ஆண்டவனே (சிவஞானத்தைப் பார்த்து)

போ மகனே

                        [சிவஞானம் வெளியேறுதல்]
      வெற்றித் தேவதையாய்

      விளங்குகிறாய் என்றிருந்தேன்
      விட்டுப் பிரிந்திடவா

      விரும்புகிறாய் என் மகளே
      பெற்று வளர்த்தவனும்

      பேதலித்துப் போய்- விடுவான்
      சற்றுப் பொறுத்திடம்மா

      சடுதியிலே வந்திடுவான்.

சின்ன மருது

      மகளே மகனே என் மகளே

      மாமனைப் பாராய் என் மகளே
            [மலருடன் திரும்பிவந்த சிவஞானத்தைப்பார்த்து]
      மகனே மகனே உன் மீனா

      மடியில் கொள்வாய்…

சிவஞானம்
           
[அதிர்ச்சியால் தாக்கப்பட்டு பதறிப் போய்]

...மீனா

சின்ன மருது

      பூச்சூடித் திலகமிட்டு

      பொன்மகளைப் பார்த்துவிட்டு
      ஆச்சிந்த வாழ் வென்று

      அமைதி கொள்வாய் என் மகனே

 

(அவசர அவசரமாக சிவஞானம் மீனாவின் தலைப்

      பாகையை நீக்கி, பூச்சூடி நெஞ்சில் வழியும்
     குருதியை எடுத்து மீனாவுக்குத் திலகமிடுகிறான்.)

மீனாட்சி

      பூவோடு பொட்டோடு
            போவதிலே தான் பெருமை
      சாவோடுப் போராட
            சக்தியில்லை அத்..தான்!
      (மீனாட்சி உயிர் பிரிகிறது-சிவஞானம், சின்ன மருது

            அதிர்ச்சியடைகின்றனர்)

(திரை)

by Swathi   on 20 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 4 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 4
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 3 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 3
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 2 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 2
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.