LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்


(வரலாற்றுக் கவிதை நாடகம்)

காட்சி 5

 

 

 

காலம் :         முன் நிலவு இராக்காலம்

இடம் :           ஊர்க்கோடி

வருவோர்:     பெரிய மருது, தேவர்,

(இருவரும் மாற்று உருவில் நகர்வலம் வருதல்)

 
பெரிய மருது
கோழிச் சண்டை கண்டு கூடும் குழுவில் நின்று
நாழி போக்கும் வண்ணம் நாடும் மனதில் எண்ணம்

தேவர்
கோழி இனமும் தம்முள் கொத்திச் சண்டை யிட்டே
நாழிப் பொழுது நம்மில் நாட்டும் வீரம் ஒன்றே!

பெரிய மருது
அந்த எண்ணம் என்றும் அகல்வதில்லை ஒன்றும்
இந்த மண்ணின் சாரம் இருப்ப தென்றும் வீரம்

தேவர்
கொண்டை யிட்ட சேவல் கொக்க ரிப்ப தெல்லாம்
சண்டை யிட்டுத் தம்முள் சாவ தற்கோ மண்ணில்?

பெரிய மருது
பண்டை வழக்கம் பாரும் பழகும் பழக்கந் தோறும்
சண்டை விளக்கங் காட்டி சமரில் வைத்தார் போட்டி.
விரைத்துக் கால்கள் பதித்து விளங்கும் பிடரி
                                        சிலிர்த்து
உரத்துப் பாயும் விதத்து உணர்த்தும் சிங்கம்

                                       நிகர்த்தே!

தேவர்
வாயால் சண்டை என்றால் வாவொரு கைபார்
                                                         என்பார்.
சாயா வாழ்வு கொள்வார். சரித்திரம் சாகக்
                                    கொல்வார்.

பெரிய மருது
நீதி யில்லா வழியும் நிலைத்து நில்லா தொழியும்
சேதி என்ன மொழியும் சினந்து கொள்வ தொழியும்.

தேவர்
வீதி தோரும் பார்த்தோம் விபரம் என்ன
                                    சேர்த்தோம்
சோதி மின்னும் பார்வை சுகமும் தந்தார் சேர்வை.

பெரிய மருது
தெருவில் நிற்கும் நம்மை தெரிந்து கொள்வர்
                                        உண்மை
உருவில் செய்த மாற்றம் உணர்ந்து நீரும் சாற்றும்.
 
தேவர்
நரிக்குடிச் சத்திரச் சோறு நாட்டினில் சேர்க்குதுப்

                                          பேறு
வரிப்புலிப் பாய்ச்சலும் உண்டு வான்புகழ் தர்மமும்
                                          உண்டே!

பெரிய மருது
உம்மை அழைத்து வந்தால் உணர்ந்தேன் உபத்திர

வந்தான்!
நம்மை அறியும் முன்னே நழுவும் உரைப்பேன்
                                          பின்னே!

 

(திரை)

காட்சி 6

காலம் : காலை
இடம் : அரண்மனை
வருவோர் :   பெரிய மருது, சின்ன மருது, தேவர்,
                        கறுத்தான்.

பெரிய மருது
ஊருக்குப் புதியவராய் ஒரு சிலபேர் இருந்திட்டார்
யாருக்கோ பயந்தவராய் எமக்கவரும் தென்பட்டார்
தேருக்கு அடியிருந்து தெருவெங்கும் கவனித்தால்
பேருக்கு இரண்டொருவர் பெரியவர்போல்

                                    நடித்தாரே

சின்ன மருது
தவறு இழைப்பதற்கேத் தயாரான ஒரு கூட்டம்
எவரும் அறியாமல் இரண்டொன்றாய்ப் புகும்திட்டம்
அவரும் வகுத்தந்த வழியினிலூ டுருவுகின்றார்
கவரும் பணத்தாசைக் கலக்கிவிட்ட தவரையே!

தேவர்
ஊடுருவல் செய்திடவே உத்திபெற்ற கைக்கூலி
கேடுறுவான் நாமறியக் கெட்டொழிவான்-
                                    நாடறியத்
தேடிப் பிடித்தவரைத் தேர்க்காலில் இட்டிடலாம்

நாடி நரம்பெடுத்த பின்பு.

கறுத்தான்
இந்தவொரு வாய்ப்பேனும் எந்தனுக்குத் தந்தருளும்
எந்தவிதந் தான்புகு வானிங்கே-சுந்தரனாம்
வெள்ளை மருதாசர் வேண்டுஞ் செயல்முடிக்க
கொள்ளை மனங்கொண்டேன் நான்.

சின்ன மருது
பயன்கருதி செய்வதுதான் பண்போ; கறுத்தான்
நயம்படவே நாமுமுரை யாடி-அயலானின்
எண்ணம் அறிந்திடிவோம் ஏற்றவழிக் கண்டிடுவோம்
கண்ணும் கருத்தாக நாம்.

தேவர்
ஒற்றறிய வந்தவர்கள் கற்றறிவ தென்னாவாம்
சிற்றறிவு மாந்தர்க்குச் சேதிசொல்வோம்-சற்றேனும்
நாட்டுணர்வு கொண்டிருந்தால் நாள் பார்த்து

                                    அன்னியர்க்கு
வேட்டுவைப்பீர் என்போம் விரைந்து.
 
சின்ன மருது
புதியவரின் நடமாட்டம் புரிந்திடாமல்

                                    விடமாட்டோம்
சதியவரும் புரிந்திடவும் சகலமுமே தெரிந்திடவும்
மதியிழந்தா யிருக்கின்றோம்? மமதையா பெறு

                                    கின்றோம்?
கதியிழந்து குடிமக்கள் கதறியதை மறந்திடவோ?

தேவர்
உமைதான் துதிக்கின்றார் உயர்ந்துவரும் நமதரசு
தமைதான் புகழ்கின்றார் தளராது உளத்தேற்கும்
சுமைதான் நினைக்கின்றார் சுகந்தந்த மருதரசர்
இமைதான் இவர்கண்கள் இதைத்தான்

                                   உணர்கின்றேன்.

கறுத்தான்
தளதளக்கும் சாந்துபொட்டுத் தார்மணக்கும்

                                   மேனியிட்டுக்
கமகமக்கும் சந்தனமும் கஸ்தூரி சவ்வாதும்
பளபளக்கும் பட்டுடுத்திப் பார்க்குந்திசை எட்டிலுமே
கலகலக்க வந்தருளும் காந்தரூபன் என்கின்றாரே.
 
பெரிய மருது
சக்கரைச் சவ்வாதுச் சீனியுடன் சாற்றுபுகழ்

அக்கரை கொண்டன்றாடம் பாடுதற்கே-இக்கணமே
இங்குறையும் பல்புலவர் எல்லோரும் மிஞ்சிநின்று
சங்கெடுத்து ஊதுவதேன் சாற்று.

ஆளழகும் தோளழகும் ஆடையணி பூணழகும்
காலழகும் கையழகு மோ அழகு - கோலமிகு
வானில் இறைந்துள்ள வண்ண ஒளிமீனில்
காணின் நிலவழ காம்.

தேவர்
மக்கள் மலிந்தவிண்மீன் மாமன்னர் அம்புலிதான்
தக்கபடி. நாடாளும் தாங்கள் தான்-எக்கணமும்

தண்ணொளி வீசும் தனிநிலவு இந்நாட்டில்
பொன்னொளி பொங்கும் பொலிந்து.

கறுத்தான்
நாட்டுக் கழகாகும் நல்லாட்சி; நாமறிவோம்
ஏட்டுக் கழகாகும் இன்கருத்து - நாட்டினிலே
கொட்டிக் கொடுக்கின்ற கோமகனே உன்னழகு
விட்டுப் பிரிந்தா விலகும்.

பெரிய மருது
ஊருக்கு மன்னர்தாம் உண்மையில்

                                 தொண்டரன்றோ?
பேருக்கு நாடாண்டு பேச்சுக்கு மன்னரானோம்
யாருக்குத் தொண்டாற்ற யாமிதையும்

                              ஏற்றுள்ளோம்
தேருக்குள் வைத்திருக்கும் தெய்வம் தெரியாதா?

சின்ன மருது
ஆச்சியின் பேராலே ஆட்சி நடத்துகின்றோம்
மூச்சிருக்கும் போதே முடிவுசெய்ய வேண்டுந்தாய்ப்
பேச்சைப் புரிந்திடுவோம் பேரணி கூட்டியேவாள்
வீச்சில் விழுந்தலைகள் ஆச்சி அடிசேர்ப்போம்.

(திரை)

 

 

காட்சி 7

காலம்:           அந்திப்பொழுது
இடம் :           ஊருணிக்கரை
வருவோர் :   சிவஞானம், மீனாட்சி
            [மீனாட்சி கல்லாசனத்தில் அமர்ந்திருக்க
                        சிவஞானம் ஆவலுடன் நெருங்குகிறான்.
                                    மீனாட்சி சிறு பிணக்கால் சினந்து ஒதுங்குகிறாள்.]

சிவஞானம்
பகலவன்முன் பங்கயமும் மலரவேண்டும்
      படைப்பினிலே இந்த உண்மை

                              நிகழவேண்டும்
மகளெவளும் மச்சான் முன் சினந்திடுதல்

மற்றபடி இந்நியதி களைந்திடுதல்
நகலெடுத்து வைத்துவிட்டால் நமனுமஞ்சும்

நல்லதொரு காட்சியேனும் நமக்கு மிஞ்சும்
அகமுடையான் ஆனபின்னே அடக்கிடுவேன்

அப்போதுப் பார்த்திதைநான் சிரித்திடுவேன்
வள்ளுவனார் காதலர்க்கு என்றோதி

வைத்திருப்ப தொன்றாகும் இந்நீதி
கொள்ளுகின்ற ஊடலதும் முன்பாதி

கொண்டுவரும் இன்பமன்றோ பின்பாதி.


மீனாட்சி
வெல்லுகின்ற நாட்டமதே ஆண்சாதி

விரைந்ததையும் மாற்றிடுமே பெண்சாதி
அல்லுபகல் அத்தனையும் சரிபாதி

ஆண்பெண்ணில் ஏனிந்த அநீதியாமோ.

சிவஞானம்
ஓகோநான் உண்மையை மறந்தே விட்டேன்
      ஊரிலுள்ள பெண்களைப்போல் நினைந்து

விட்டேன்

ஆகாகா சமஉரிமை கொண்டே வாழும்
      ஆச்சியரின் எண்ணமதோ உன்னில் வீழும்
போகாத எண்ணமதின் நியாயம் கண்டும்

போக்கிடவா நினைந்திடுவேன் புரிந்து

கொண்டும்

ஏகாதே என்னுயிரே இன்பம் வேண்டும்

ஏற்றமேது இருவருக்கும் சமந்தான் ஈண்டும்..

மீனாட்சி
உரிமைக்குக் குரல்கொடுப்போம் உணர்வோம்

                                  எல்லை

      உண்மையினை மறைத்துவாழும் உலுத்தர்

      இல்லை

நரிக்குணத்தால் ஏய்த்துவாழும் நாட்டம்
                                 கொள்ளோம்

நாங்களென்றும் கடமையினில் நழுவி
                                 நில்லோம்

உரிமைக்கு முன்னாலே கடமை வேண்டும்
      உண்மைக்கு எந்நாளும் முதன்மை வேண்டும்
சரிநானும் நேற்றேவா என்றீர் வந்தேன்

சல்லாபம் நினைப்பவரும் நில்லாததேனாம்.

சிவஞானம்
ஊருணிக் கரையிலே நானும்

உட்கார்ந் திருந்தேன் உனைக்காணோம்...
யாரினி இருப்பதா மென்றே
      யானும் எழுந்தே வந்துவிட்டேன்.
பேரணி திரட்டிடும் நானே
            பெண்ணே! நினைத்தேன் வந்தேன் நீ

ஊரினில் இருந்தவள் ஏனோ

உண்மை அறிந்தும் மறந்திருந்தாய்?

மீனாட்சி
      வந்து போகும் நினைவினைப்போல்

      வந்தே போவேன் எனநினைப்பா
      சொந்தங் கொண்ட பிறகதிலே

      சொல்லும் மறதி புரியலையே?

 சிவஞானம்
      அந்தக் காட்சி இலக்கியத்தில்

      அதிகம் படித்தோம் நமக்கெதற்கு
      இந்த வம்பு தவிர்த்திடுவோம்

      இனிக்கப் பேசி மகிழ்ந்திடுவோம்.

 

மீனாட்சி
            ஆச்சி அங்கே காத்திருப்பார்

      அடடா பலரும் பார்த்திருப்பார்.
      பேச்சில் என்ன இனிக்கிறதாம்

      பேசா தென்னை விட்டிடுங்கள்!

சிவஞானம்
        
(இருகரம்பற்றி யணைத்து)
      மூச்சில் சூடு பிறக்கிறது

      முகத்தில் எனக்கு உரைக்கிறது
      வீச்சில் சிறக்கும் விழியிரண்டும்

      வேலாய், வாளாய்த் தாக்கிடுதே!

மீனாட்சி
      அதிகம் பேச வேண்டாம்

      அனர்த்தம் செய்ய வேண்டாம்
      எதிலும் பொறுமை வேண்டும்

      எனக்கும் உரிமை வேண்டும்
சிவஞானம்

      புதிதாய் ஒன்றும் இல்லை

      புனிதம் கெடுவ தில்லை
      இதுதான் பொருத்தம் என்றே

      இறைவன் பிணைத்தான் அன்றே!

மீனாட்சி
      எனது உரிமை காட்ட

      எதை நான் கழுத்தில் பூட்ட
      மனதில் பிணைத்து வைத்தான்,

      மணமா முடித்து வைத்தான்.

சிவஞானம்
      
உளமகிழ் கொண்டிடலாம் கண்ணே

      ஒருவழி கண்டுவைத்தார் முன்னே
      களவழி குற்றமென்ன சொல்லேன்

      களிப்பது கண்டிடலாம் நில்லேன்.

மீனாட்சி
            வெங்காயம் சுக்கானால்
            வெந்தயத்தால் ஆவதென்ன?
      எங்கேயும் கற்றதில்லை

      ஏனிதையும் கேட்டதில்லை?

சிவஞானம்
            வெங்காயம் சுக்கானால்

      வெந்தயத்தால் ஆவதென்ன
      இங்கேயேன் பத்தியமே

      எடுத்துவையுன் வைத்தியமே.

மீனாட்சி
      
வெம்காயம் சுக்கு ஆனால்

      வெந்த அயத்தால் ஆவதென்ன?
      தங்காத இந்த வுடல்

      தரும் இன்பம் நின்றிடுமோ?

சிவஞானம்
      சலித்தவர்க்கே வேதாந்தம்

      சகலருக்கு மோபொருந்தும்
      பலித்திருக்கும் சலனந்தான்

      பார்த்திருப்போம் பலனுந்தான்.
 
மீனாட்சி

பார்த்திருக்கத் துடிக்கும் ராசாவே

      காத்திருந்தால் முடியும் லேசாவே
      சேர்த்துவைக்க வரும்நல் வேளையே

      செல்லுகிறேன் வருவேன் நாளையே!
            (கையசைத்துத் துள்ளி ஓடுகிறாள்)

 

                            (திரை)

காட்சி 8

இடம் :           அரண்மனையின் ஒரு பகுதி.
காலம்:           இரவு.
வருவோர் :   வேலநாச்சியார், மீனாட்சி.

            [சோகநிலையில் அமர்ந்திருக்கும் வேல்நாச்சி
      யார் அருகில் ஆறுதல் சொல்லும் வண்ணம்
      மீனாட்சி நின்றிருக்க]

வேல் நாச்சியார்
பெண்ணாகப் பிறந்தாலே வாழ்வில் என்றும்
பெருந்தவந்தான் எனச்சொல்வார் பெரிதாய்

இன்றும்

மண்ணாக மடிகின்ற மனித வாழ்வில்

மனத்தளவில் நமக்கேனும் நிறைவு வேண்டும்
கண்ணாளன் இறந்தபின்னே எந்தப் பெண்ணும்
காத்திருந்து மடிவதெனின் சாபக் கேடே!
முன்னாலே நடந்துவிடும் பேறே இன்றேல்

தன்னாலே அடைவதுவும் வேறே அன்றோ!

எந்தனுரை கேட்கலையே எந்நிலையைப்
                              பார்க்கலையே!

இந்தயிடம் விட்டகன்று ஏகிடுவீர் என்றனரே!

சந்தனத்தோள் வீசுமணம் சாக்காடும் நாறுமணம்

எந்தனுயிர் சேர்ந்திருக்கும் என்றிருந்தேன்;

வாழ்வதற்கே

வந்ததனால் என்ன பயன் வஞ்சமின்னும் தீரலையே

வந்தேறி ஓடலையே வாழ்வெனக்கும் போகலையே

சுந்தரனார் சொன்னவினை எந்தவிதந் தான் முடியும்

அந்தரத்தில் ஆடுகிறேன், ஆகவில்லை

வாடுகிறேன்.

மீனாட்சி
கொலையுண்ட கோவலனார் கொண்ட பேச்சில்

கொதித்தெழுந்த கண்ணகியை "இருக்க'' என்றார்.
நிலைகொண்ட நம்மறவர் நாட்டில் வீணர்
நிதம்வளரும் நீதியற்றப் போக்கை மாற்றி
விலை கொண்டு மண்வாங்கும் வெள்ளைக் கூட்டம்

விரிக்கின்ற சூழ்ச்சியிலே விழவா நாட்டம்

தளைகொண்ட நம்மினத்தைக் காக்க வேண்டி

தலைவரய்யா சொல்லியதும் ‘’பிழைக்க'' என்றே!

 

வேல் நாச்சியார்

      மன்னனைக் கொன்று விட்டாள்

      மாநகர் எரித்து விட்டாள்
      கண்ணகி முடித்து விட்டாள்

      காசினி சிறந்து விட்டாள்
      விண்ணடி அளந்த மாலாய்
            வெள்ளையன் மிதிக்க வேண்டும்.
      என்னடி இனி நான் செய்வேன்

      எப்படி நிலைதான் கொள்வேன்.

மீனாட்சி

கெட்டுவரும் சமுதாயம் கேட்பதில்லை

கேடுவந்தும் எதற்குமிங்கும் கேள்வியில்லை
வட்டமிடும் கழுகுக்கு வாழ்வா வேண்டும்?
            வாலறுத்து ஒழித்திடவே வாய்தா வேண்டும்.
எட்டுதிசை முழுவதுமே நம்மு ழக்கம்

எதிரொலிக்கச் சுதந்தரத்தீ மூட்டி விட்டோம்

நட்டுவைத்துப் பயிரறுத்து உண்ப துண்டு

நாட்கடந்து பலன் கொடுக்கும் நன்மா வுண்டே!

வேல் நாச்சியார்

      சின்ன வயதில் சிறந்தவளே!

      செப்பும் முறையை உணர்ந்தவளே!
      என்ன விதமாய் இத்தனையும்

      இதற்குள் அறிந்து கற்றனையாம்?

மீனாட்சி

      அன்னை நிழலில் அமர்ந்தபின்னே

      அதற்கும் அடுத்து அறிவதென்ன?
      சொன்ன மொழியும் மறந்திடவோ?

      சோம்பல் மிகுந்து நலங்கெடவோ?
            (நினைவு திரும்பியவளாய்)

      சொல்லவந்த தொன்று ஆச்சி

      சோகங்கண்டு மறந்தே போச்சு
      கல்மணத்தார் செயலும்; ஆச்சி
            கண்டபடி மலிய லாச்சு
      நல்மனத்தோர் குறைய லாச்சு

      நாட்டிலின்று தர்மம் போச்சு
      பல்மனத்தோர் போற்றும் சீமைப்

      பண்புமின்று அழிய லாச்சு.

வேல் நாச்சியார்

      என்னடி மீனா மறைக்கின்றாய் ஏது நீயும்

      என்னிடம் வந்து உரைக்கின்றாய்.

மீனாட்சி
- இந்நேரம்
மன்னர் இடுகாட்டில் பெண்வேகக்
                              கண்டிருப்பார்

வேல்நாச்சியார்
பெண்வேகக் காணுவதா பேரிடியும் என்னதடி?

 

மீனாட்சி
      ஆச்சி நரிக்குடியில் அன்னமிடும் சத்திரத்தில்
      பேச்சுக் கிளிபோலப் பெண்ணொருத்தித்

      தன்கணவன்

      பக்கத் துணையிருக்கப் பாண்டியரின் நாடுவந்து
      தக்கத் தொழில் தேடத் தங்கியுள்ள போது

      சில வெட்கமிலாப் பேர்வழிகள் வீணாசை

      காட்டிவேறு

      பக்கமாய் அழைத்துப்போய் பாசாங்குச்

      செய்துத்தான்

      நாணயமாய் வாழவந்த நல்லவரைக் கொன்று

            விட்டார்

      நாணமிலார் இன்னுமிந்த நாட்டிலுயிர்
                                     வாழுவதா?

வேல் நாச்சியார்
      மீனாட்சி போதுமடி நானாட்சி செய்தநாட்டில்
      கோனாட்சி அற்றுக் கொடுமை, மலிந்துவர
      கற்புடை மாதருக்கும் காவலற்றுப் போனதாக
      அற்பர் நினைத்திருந்து ஆர்ப்பாட்டம்
                                    செய்திடவா?

மீனாட்சி

      இல்லையம்மா மன்னர் இடியுண்ட நாகமென
      வில்லின் விடுகணையாய் வேகமாய்ச் சென்றுப்     

      பிடித்தந்தக் கூட்டத்துப் பேர்வழிகள் எல்லாம்
      அடித்துயிர் போக்கியும் ஆத்திரம் தீரலையாம்.

 

வேல் நாச்சியார்
            குற்றம் புரிந்தவர்கள் கொண்டிட்டார்
                                    தண்டனையை

      மற்றப்படியந்த மங்கைக்கென் செய்வோம்
      சிலம்புரைத்த நீதியின் செய்தியறி வாய்நீ
      பிளம்பு? கணவன் இறந்தார்க்குக்
                                காட்டுவதென்?

 
மீனாட்சி
      கெஞ்சிய மன்னரையும் மிஞ்சி உடன்கொழுநன்

      கொஞ்சிடுந் தீக்குளிக்கக் கொண்ட மனம்

            மாறலையாம்

      உத்தமரே! யானும் உலகத்துப் பெண்டிரிலே
      பத்தினியே தாமர்கில் பட்டுடையும் எந்தனது
      காதோலை கொண்ட கருமணி அத்தனையும்
      வேகாது நிற்கும் விளங்கிடுக என்றனளாம்.

வேல் நாச்சியார்
      சாகாத தெய்வமடி சத்தியம்! அங்குநானும்
      போகாதே சொல்வேன் புரிந்து.

 

                                    (திரை)

by Swathi   on 20 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 4 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 4
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.