தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!
(வரலாற்றுக் கவிதை நாடகம்)
காட்சி 9
காலம் : அதிகாலை இடம் : இடுகாட்டுப் பாதை வருவோர் : பெரிய மருது, சின்னமருது, தேவர், கறுத்தான்,மற்றும் பலர்.
(பெரிய மருது, சின்ன மருது முதலானோர் கடு
காட்டிற்குச் செல்கின்றனர்.)
* * *
காட்சி மாற்றம்
(அநீதியால் கொலையுண்ட கணவனுடன் உடன்
கட்டையேறிய மனைவி இவர்களின் பிணம் வெந்து தீச்சுடர் அடங்கும் நிலையில் பெரிய மருது, சின்ன மருது முதலானோர் அருகில் சென்று பார்க்கின்றனர். பத்தினியுரைத்தபடி
பட்டாடை, காதோலை, கருமணி வேகாத
நிலைகண்டு வியந்து அவற்றைப் பெரிய மருது
அள்ளி எடுத்து...)
பெரியமருது சாகாது உயிர்வாழ்தல் சரியில்லை என்றெங்கும் ஆகாத செயல்காட்டி அமர நிலை
அடைந்ததாயே!
காதோலை கருமணியும் கருகாத பட்டுடையும் வேகாத நிலைதனிலே விளங்குகிறாய் தெய்வமாய்நீ.
சின்ன மருது சிரிக்கத் தெரிந்தவன் மனிதன் தான்
சிரிக்கப் படுபவன் அவனேதான் மரிக்கப் பிறந்தவர் மனிதரென்றே
மனிதில் உணர்ந்திடின் தவறு முண்டோ? தரிக்கா தெனதுயிர் தனித்தெனவே
தணலில் புகுந்துயிர் கலந்தாயே! பறிக்கப் படுவதும் கற்பாமோ? பாரில் அதற்கெதும் ஒப்பாமோ?
தேவர்
குடிகொள்ள வந்த தெய்வம் - நாம்
கொண்டாடும் இந்தத் தெய்வம் அடித் தொழுவோம் அன்னை தெய்வம் - நம்
அனைவருக்கும் அவளே தெய்வம். கறுத்தான் என்னிடம் கொடுங்கள் பத்திரமாய்
எடுத்து நான் வைப்பேன் பவித்திரமாய் தன்னிடம் தேடி வந்ததெய்வம் தவறாமல் தொழுவேன் பெண்தெய்வம்.
பெரியமருது கறுத்தான் அதை நீர் தொட வேண்டாம்
கைகள் அதன்மேல் படவேண்டாம் பொருத்தம் தம்பி ஒருவனுக்கே
புனிதம் பெறட்டும் தலைமுறைக்கே
கறுத்த மதியார் நிறைந்திடவா?
கண்டு நாமும் இருந்திடவா? உறுத்தும் இதயம் உறைந்திடுமுன்
உலுத்தர் கூட்டம் அழித்திடுவோம்.
சின்ன மருது புதுப்பானை உறியிட்டுப் போற்றிவைப்போம்
வீட்டில்
புனிதத்தின் உறைவிடமாய்க் காட்டி
வைப்போம் இன்றே
ஒதுக்கான இடமிட்டு உயர்வாகப் பணிவோம்
ஒவ்வொருநாள் தீபமிட்டு உச்சியிலே
கொள்வோம்
எதுக்காகத் தொடர்ந்தாலும் இத்தெய்வம்
தொழுவோம்
எமைக்காக்கும் குலதெய்வம் இதுவுமெனச்
சொல்வோம்
அதுக்கான ஏற்பாடு அத்தனையும் இன்றே
அண்ணாநம் மனையினிலே அவசியமாய்ச்
செய்வேன்
[திரை]
காட்சி 10
காலம் : நடு இரவு இடம் : அந்தப்புரம் - இருபகுதி -ஒரே காட்சி
வருவோர் :பெரிய மருது, ராக்காத்தாள், சின்ன மருது,
பொன்னாத்தாள், புலவன், புலவன் மனைவி.
(காட்சியின் ஒரு பகுதியில்)
(பெரிய மருது மஞ்சத்தில் சாய்ந்தவாறு எதிரி
லுள்ள முத்துவடுகநாத தேவரும், அவர் மனைவி வேல்நாச்சியும் சேர்ந்துள்ள
சிலையைப் பார்த்து, சிந்தனையில் ஆழ்ந்
திருக்கிறார். அவர் மனைவி ராக்காத்தாள்
மஞ்சத்தில் அமர்ந்து பெரிய மருதுவின்
கால்களை இதமாகப் பிடித்து விடுகிறாள்.
பெருமூச்சுவிடும் கணவனைப் பார்த்து)
ராக்காத்தாள் தேவரய்யா சிலைப்பார்த்துக் காவலரும் காண்பதென்ன? நாவறியா பேர்படைத்த நம்மாச்சி வேலம்மை சேவடிகள் வேண்டுகையில் சேர்ந்தபெரு மூச்சென்ன? பாவலர்கள் போற்றுகின்ற பாண்டியருக் கென்ன குறை?
பெரிய மருது
காட்சிக்குச் சிறந்திருந்த கருவூலச் சிறுவயலில் பேச்சுக்கும் பெரிதாகப் பெருந்தேவர் வலிகாட்ட
ஆச்சியரும் களம்புகுந்து ஐயன்நிகர் உளம்சிறந்து பாய்ச்சிய வேல்வாளும் பாரென்றும் மறக்காதே!
ராக்காத்தாள்
ஆற்காட்டு நவாபும் அழைத்து வந்த
வெள்ளையனும்
போர்காட்ட அஞ்சிப் புறம்போந்தார் நானறிவேன் கப்பம் எனக்கேட்டுக் காலெடுத்து வையோமென ஓப்பம் அளித்தவரும் ஓடியதை நானறிவேன்.
பெரிய மருது
ஓடியவன் சாய்ந்தானா? ஒருவழியாய் மாய்ந்தானா? பேடியவன் பின்சென்றுப் பெருந்திட்டம்
போடுகின்றான்
வாடிநிற்கும் பயிர்வேண்டும் வானநீரே
போல்மக்கள்
தேடிவந்து நமையேற்றார் தீக்குணத்தார் தோற்றாரே…
நம்மோடு பிறந்திட்ட நயவஞ்சக் காரனால் வெம்மேட்டுக் களமதிலே வீரதேவர் நாமிழந்தோம்
பிரித்தாளும் சூதினனாம் பிறநாட்டுப் பறங்கியனும் விரித்தானே நட்புக்கை வேண்டியதை ஏற்றிருந்தும் கருத்தமதிக் கொண்டவர்கள் கலகமிக மூட்டுகின்றார் பொறுத்திருந்துப் பார்த்திருப்போம் புல்லர்களின்
தன்மையதை
(காட்சி மறுபகுதியில்)
(சின்ன மருது மஞ்சத்தில் சிந்தித்தவண்ணம்
அமர்ந்திருக்க, பொன்னாத்தாள் அருகில் அமர்ந்து கணவனின் தோள்களைப் பற்று கின்றாள். திரும்பிப் பார்த்து விட்டு மீண்டும்
சிந்தித்தவாறு பெரு மூச்சு விட , )
பொன்னாத்தாள் சின்னவரின் செவியினிலே என்னுரை
படவிலையே
என்னபெரும் நினைப்பினிலே ஏக்கப்
பெருமூச்சாம்!
சின்ன மருது படையறியா உடையணனும் பகடைக்கா
யாகிடுவான்
கடைகொண்ட கும்பினியான் காலூன்ற
முயன்றிடுவான்
படைகாணா வெள்ளமென நம்மக்கள்
குருதியெங்கும்
தடையின்றிப் பெருகுதற்குத் தருணமது.
வரும்போலும்!
பொன்னாத்தாள் சிவகங்கைக் கெட்டழியச் சித்தமதோ
உடையணர்க்கு
பவவினையும் அதுவாயின் பார்த்திடுவோம்
ஒருகை நாம்.
சின்ன மருது
கண்ணே பொன்னாத்தா காத்திருப்போம்
சின்னாட்தான்
முன்னே நேர்ந்தவற்றை முழுதும்நாம்,
மறந்திடவா?
உன்னொத்தத் தாய்க்குலத்தார் உறைகின்ற
சீமையிது!
உன்மத்த ராய்ப்பிறந்தார் ஒழிந்திடுவார்
உண்மையிது.
பொன்னாத்தாள்
செல்வமகன் சிவஞானம் செயல்யாவும்
அறிந்தீரா?
அல்லும் பகலும் ஆரண்யம் அவன்வீடு கொல்லும்புலி வேங்கைதனை மல்லுக்கு
அழைக்கின்றான்
சொல்லி அழைத்து வந்து....
(சின்ன மருது பொன்னத்தாள் கரம்பற்ற)
சின்ன மருது அண்ணனைப் பிரிந்திருக்க அவனாலும் ஆகாதே அண்ணியார் அவனின்றி அரை நாழித் தாளாரே!
பொன்னாத்தாள் அவர்கள் நினைவொன்றால் அரண்மனை
வருகின்றான்
கவருமென் மனமெல்லாம் காட்டினிலே
என்கின்றான்
புரியப்பல் வீரமதும் புலிவேங்கை யுடனென்றால்
சரியப்பா எனச்சொல்லி பெரியப்பா
அனுப்புகிறார்.
சின்ன மருது வீரத்தைக் காட்டுதற்கு விலங்குகள் கிடைத்திடுமே தீரத்தின் குன்றன்றோ திண்டோள் அண்ணனவர் வேறன்ன சொல்வாராம் விளையாடு அங்கென்பார் காரன்ன குழலுடையாய்! கட்டழகே பொன்னாத்தா [அவள் குழலை வருடி செல்லமாக முகவாயை
கையேந்தி]
சின்னவன் உறங்கினானா? சிலையழகே!
பொன்னாத்தா!
பொன்னாத்தாள் (நளினமாக விடுவித்துக் கொண்டு) என்னயிது விடுங்களய்யோ இரவு பாதி முடிந்தாச்சு
[தலைவிரி கோலமாய் தாரையாய் கண்ணீர் மல்க இருக்கின்ற மனையாளை அழைத்துக்கொண்டு பதறிய வண்ணம் உள்ளே நுழைந்து]
புலவர் மருதீசா! மகேஸ்வரா! மருதீசா! மகேஸ்வரா [மருது இருவர் எழுந்துவர அவர் தம் மனைவியர்
பின் தொடர்]
பெரிய மருது
பெருவோலம் வருவானேன் மருதென்றே
அழைப்பானேன்
சின்ன மருது என்னயிது கூக்குரல்? ஏனிங்கே எழுந்தது?
[புலவர் தம்பதிகள் நிலைகண்டு] கண்ணீருங் கம்பலையும் காணுகின்ற நீங்கள் யார்? உண்மையில் உற்றதுயர் ஓதிடுவீர் பெரியவரே?
புலவர்
“மருவிருக்கும் கூந்தல் மனையாள், கணவன்
அருகிருக்கத் தாலி அறுமா? - இரவுனக்குச்
செங்கோல் இலையாயித் தேசமெங்கும் கள்ளருக்குப் பங்கோ மருதுபூ பா”
சின்ன மருது
போதுமய்யா ........புலவரேறே!
பெரிய மருது புரிந்து கொண்டோம் நிலைமைதனை
சின்ன மருது
ஏது செய்ய எடுத்தியம்பும்?
பெரிய மருது எது வேண்டும்? எதற்குமஞ்சீர்!
பெரிய மருது கரமிருந்தும் காக்கத் திறமிருந்தும் கள்வர் பரவிவரப் பார்த்திருப்போமோ?
சின்ன மருது
-உரங்கொண்ட
செங்கையின் மண்ணிலே இங்ஙனம் ஆவதா மங்கை மனத்துய ரா.
ராக்காத்தாள் (உணர்ச்சிவசப்பட்டு)
உழன்றிட்டுத் துன்பம் உறுகின்ற மகளே - நீ இழந்திட்ட தாலியெந் தாலியே
(அனைவரும் திகைத்து)
புலவா் தாயே!
சின்ன மருது அண்ணி
பெரிய மருது ராக்கா
பொன்னாத்தாள அக்கா என்ன வார்த்தை?
ராக்காத்தாள்
(நினைவு திரும்பியவளாய்)
என்னை அறியாமல் எகிறிவந்தச் சொற்களிவை மன்னியுங்கள் மன்னா மற்றவரும் மன்னியுங்கள் பெண்ணே! எடுத்துச்செல் பெரியமணி மாலையிதோ!
பொன்னாத்தாள் பொன் மணி யாலான என்மணிச்சரமிது! கண்மணிமகளே! கழுத்தில் புனைந்திடுக!
[புலவர் மனைவி பொன்னணி புனைய புலவர் மகிழ்ந்து...] புலவர் ‘'ஆலிருக்கும் கைகள் அருள்கின்ற பார்வை அரசுபரி பாலிக்கும் செங்கோல் படை கொண்ட வீரம் - பகைக்கும் எதி
ராளிக்கும் கருணை அருள்கின்ற வேந்தே!
அரிவையரின்
தாலிக்கு வேலி தமிழுக்குத் தந்தாய் தார்மன்னனே!
[புலவர் தம்பதிகள் வெளியேறுகின்றனர்]
பெரிய மருது செந்தமிழ்ப் புலவரே! சென்று அமைதி பெறும்!
சின்ன மருது என்றந்தக் கூட்டத்தைக் கொன்று குவிப்பதண்ணா?
[திரை]
காட்சி 11
காலம் : காலை இடம் : அரண்மனை வருவோர் : பெரிய மருது, சின்ன மருது, தேவர்.
கறுத்தான்.
சின்ன மருது வில்லேந்தும் கூட்டமதில் விளைந்தகாளான் அவனும் சொல்லேந்திச் சென்றுரைக்கச் சேர்த்தானாம்
ஒருவன்
புல்லேந்தும் புரி நூலான் புகழறியான் புல்லன் கல்லேந்தும் மனத்தினராய்க் கண்டனராம் வெல்ஷை மல்லேந்தும் மார்பினரும் மறக்குலத்துக் குடியும் வில்லேந்தி வாளேந்தி வீடுகாக்க வேண்டும். பெரிய மருது தம்பி பொறுத்திருப் போமே தனியாள் உடையணர் தாமே வம்பு இழுத்தவர் வாரார்
வந்தால் வலுவினைத் தாளார் நம்பி இருக்கிறோம் பார்ப்போம்
நட்புச் சிறத்திடக் காப்போம். சின்ன மருது கள்ளர்களை ஏவிவிட்டுக் கொள்ளை யிட்டார்
குள்ளமதிக் கும்பினியார் கூட்டுக் கொண்டார், பள்ளமது ஆட்சிக்குப் பறித்திட்டாரே!
பாவியரை நாமினியும் பொறுத்திட் டாலோ உள்ளமது நொந்திட்ட ஊரின் மக்கள்
எள்ளளவும் பொறுத்திடார் எடுப்பார் கைவேல். பெரிய மருது தேவர் வருகின்றார்
தெரிவோம் செய்தி யினை!
சின்ன மருது ஆவல் மிகக்கொண்டே
அனைவரும் காத்திருந்தோம் தேவரே சொல்லுங்கள்
தெரிந்து வந்த செய்தியினை. (தேவர் வாய்பேசாது தலைகவிழ்ந்து நிற்க)
பெரிய மருது ஏனிந்தத் தயக்கம் எடுத்தியம்பும் தேவரே!
தேவர் நானென்ன சொல்வேன் நாட்டின் காவலரே!
சின்ன மருது தேவரின் தடுமாற்றம் தெரிவிப்பதே மாற்றம்
தேவர் எது கேட்டு அறிவதற்கு என்னை எதிர்பார்த்தீர் புதுக்கோட்டை மன்னரவர் புகுந்தினைந்தார் கும்பினியில்
எட்டைய புரத்தாரும் இணைந்ததிலே பங்கேற்றார்
சின்ன மருது கட்டொழியும் வேண்டாம் பழங்கதைகள் வீரர் நிலை
பட்டெனவே கூறிடும் பாஞ்சாலத் தென்னநிலை?
தேவர் கட்டபொம்ம நாயக்கரைக் கயத்தாற்றில்
தூக்கிலிட்டார். (அனைவரும் அதிர்ந்து போய்)
பெரிய மருது கட்டபொம்ம நாயக்கரை....?
சின்ன மருது கயத்தாற்றில் தூக்கிலிட்டார். பெரிய மருது நம்புவ தோ நாமிதையும்?
சின்ன மருது
வெம்பி வெதும்புவோம் வேறுவழி
பெரிய மருது தம்பி………………….
சின்ன மருது சிறுநரியின் வாயிலே சிங்கமாம் கேளுங்கள் உறுபுலியின் சீற்றம் ஓய்ந்ததாம் எலிகளாலே பெரும்பழியும் சூதும் பெற்றுவிட்ட வெற்றியிவை வரும்பகை அழித்த வானரசே நீவாழி!
தேவர் நாகலாபுரத் திளவல் நல்லபிள்ளைத் தானாவதி ஆகலானோர் அனைவரையும் அங்கங்கே .
தூக்கிலிட்டார்
போகட்டும் என்று சிறை பூட்டிட்டார்; ஊமைத்துரை
சாகட்டும்வீரநெறி, சத்தியம் என்றாயிற்றே !
சின்ன மருது அன்னியர்கள் இங்குவந்து ஆதிக்கம் செலுத்துவதா?
புண்ணியபூ மியின்வீர புருஷர்கள் நாமன்றோ ?
விண்ணது பொழியவும் மண்ணது விளையவும் என்னதற் காகயெமைக் கேட்டாய் நீ கப்பமெனச் சொன்னவனே! எம்மிதயச் சுதந்திரத்தின்
மன்னவனே!
என்னஇனி செய்திடுவோம் இதுவேதான்
விதிபோலும்!
பெரிய மருது சேதுபதிச் சீமையிலே சிவகெங்கை தான்மிச்சம் பாதிக்கு மேல்போச்சுப் பங்காளிச் சண்டையிலே தென்பாண்டிச் சீமையிலே திகழ்ந்தஇரு பத்திரண்டு முன்கொண்ட பாளையங்கள் மண்மேடு ஆகினவே!
சின்ன மருது
கெக்கலி கொட்டும் கேண்மையும் வாய்ப்பும் கெடுமதியாளார் தந்தால் விடுவதில் நியாயமில்லை. அக்கறைச் சீமையானை அனுமதித்ததால்
இத்தொல்லை .
சிக்கலை வளர்த்திடுவார் சிறுமதியாளர் சேர்வார் தக்க நடவடிக்கைத் தாமேற்போம் நாமே!
(திரை)
காட்சி 12
காலம் : இரவு இடம் : அரண்மனையில் ஒரு பகுதி வருவோர் : வேல்நாச்சி, மீனாட்சி.
[மண்டிக்கிடக்கும் இருளினிலேமங்கிய நீல ஒளி
யிலே பொங்கியெழுந்த வேல்நாச்சி புனைந்து நிற்கிறார் போர்க்கோலம். இளஞ்சிவப்
பொளி இவள் முகத்தில் படுகிறது.
இளஞ்சிவப்பு கடுஞ்சிவப்பாகிறது. போர்க்கோலந்
தரித்த வேல்நாச்சி பொருதும் பெரும் படைக்குத் தானைத் தலைமையேற்று ஆணை
பிறப்பிக்கிறாள்.]
வேல்நாச்சியார் :
கடலலை எனவணி திரண்டிடவே
கடமையின் உணர்விலே முகிழ்த்திடவே அடலென படையினில் சிறந்திடவே
ஆற்றலில் பரங்கிகள் உருண்டிடுமே. பொருதிட வருபவன் பரங்கியனே
ஒருபொழு தெனுமெதிர் இறங்குவனோ? சிறுமதி பெறமறக் குலங்கெடவே
வெகுமதி நினைந்தவர் தொலைந்திடவே.
கருதிடும் பரங்கியன் திறம்படவே
களபலி தருவதில் முனைந்திடுவான் உருவிடும் குடலெலாம் பரங்கியனாய்
உயிர்குடித்திடுவதில் இறங்கிடுவோம். (பின்னணியில் படை ஆரவாரம் எழுந்து அடங்க)
மரமறை வினில்வரு மெதிரிகளை
சிரமறுத் திடக்கர முயர்த்திடுவோம் வரவர நமதிடம் அணுகிவரும் தரமிலாப் பரங்கியை அழித்திடுவோம்.
கடகட வெனகதை முடிக்கலாம்
படபட வெனபகை ஒழிக்கலாம். சடசட வெனவுடல் குவிக்கலாம்
மடமட வெனவுயிர் குடிக்கலாம்.
திடுதிடு வெனயெடு படைக்கலம்
கிடுகிடு வெனதடை உடைக்கணும் பொடுபொடு வெனத் தலையுகுக்கணும்
விடுவிடுவென வுயிர் குடிக்கணும்.
(பின்னணியில் ஆங்கிலத்தில் ஆணைகள், துப்பாக்கி
வெடிகுண்டுச் சத்தம் இவற்றுடன் யானை யின் பிளிறல், குதிரைக் கனைப்பு, மறவர்கள்
போர் முழக்கம்)
எடுத்திடு வில்லினை விடுத்திடு வேலினை படுத்திடும் பரங்கியைத் தொலைத்திடு
வாளினால்
தடுத்திடு குண்டினைத் தகர்த்திடு அணியினை
பொடித்துயிர் குடித்திடுப் பொசுக்கிடுப்
பொசுக்கிடு
(போ் ஒலி எழுந்து அடங்க)
வெள்ளையன் விழித்துக் கொண்டான்
வியூகமும் அமைத்துக் கொண்டான் கொல்லநாம் எழுந்தோ மென்றே
கும்பினிப் பதுங்கிக் கொண்டான்
சக்கரமாய்ப் படையமைத்து நடுவே
சண்டாளார்ப் பதுங்குகின்றார்; நாமும் உக்கிரமாய்த் தாக்கிடுவோம் ஒன்றி
உடைத்து நடு சென்றிடுவோம் வாரீக் (போர் ஒலி)
கமலமலர்ப் போலே அன்னார்
கட்டமைத்துக் கொண்டு விட்டார் இமயத்து நெஞ்சத் தீரே
எப்புறமும் வளைத்து நிற்பீர்
(போர் ஒலி மீண்டும் எழுந்து அடங்க)
நாகமாய்ப் படையமைத்து நழுவுகின்றான் வெள்ளையன்
ஏகமாய்ப் பருந்தாவோம் என் தலைமை
மூக்கினிலே
வேகமாய் விரைந்திடுவோம் விருந்தாக்கி
மகிழ்ந்திடுவோம்
பாகமாய் இறக்கைகளில் பங்கேற்பீர் மருதையா.........
(பதறிப்போய் மீனாட்சி ஓடிவர எங்கும் ஒளி
பரவுகிறது. மனப்பிரமை கொண்டு மறக் கோலம் கொண்ட தாயை அணைத்துப் பிடித்தவள் ஆறுதல் சொல்லியே போர்க் கோலங்களைந்து பொறுமை கொள்ள வேண்டுகிறாள்.)
மீனாட்சி நோய்ப்பட்ட பின்னும் நொடிப் பொழுதும்
போர்க்கோலம்
போய்க்கொள்ள லாமோ பொறுத்திடுங்கள் -
தாய்க்குலமே
எப்போதுங் கண்டிராத எந்தாயே உங்களுடல் இப்போது ஏற்கா திதை.
வேல் நாச்சியார்
வாளை எடுத்துவாடி மீனாட்சி நான் நலிந்த நாளை அறிவேன்தா னானாலும்-கேளிதை நீ வீரர் கை வாளெடுத்தால் வெங்குருதி தோயாது சேரா துரைநோக்கித் தான். மறப்புலி குணத்தினில் சிறப்பெது உரைத்திடு புறப்படின் இரத்தமும் குடித்திட நினைத்திடின் சிறப்புற எதிர்ப்பட இரைக்கெதும் கிடைக்கிலின் பறப்பிதன் நகக்கடி உகுப்பதைச் சுவைத்திடும்.
(மீனாட்சியிடமிருந்து வாளைப் பிடுங்கித் தன்
இடக்கையில் வாளாற் கீறி, வரும் குருதி பார்த்து வானதிரச் சிரிக்கிறாள் வேல் நாச்சியார். திகைத்துப் பதறி மீனாட்சி தன் ஆடையை கிழித்து அந்தக் காயம்
கட்டுகிறாள்.)
[திரை]
காட்சி 13
காலம் : பின் இரவு. இடம் : அரண்மனை. வருவோர் : பெரிய மருது, சின்ன மருது,கறுத்தான்,
ஊமைத்துரை.
[ பெரிய மருது - சின்ன மருது நின்றிருக்க,
உள்ளே நுழைந்து ]
கறுத்தான் மன்னியுங்கள் மன்னவரே! மன்னியுங்கள் சின்னவரும் பெரியவரும் சேர்ந்தென்னை மன்னி
யுங்கள்
பெரிய மருது வாருங்கள் கறுத்தான்! வாருங்கள்! கூறுங்கள் நீங்கள் கொண்டுவந்த செய்தியினை!
கறுத்தான் பின்னிரவு நேரம் பிழை பொறுப்பீர்! என்வரவின் சாரம் எடுத் துரைப்பேன்
சின்ன மருது சுற்றி வளைப்பானேன் சொல்லவந்த செய்தி
யென்ன?
கறுத்தான் பற்றற்ற ஞானிபோல் பார்வைக் கிருந்தாலும் உற்றதுயர் காட்டு முருவத்தா ராயொருவர் சொந்தமெனச் சொல்லிச் சோதரரைக் காணவந்தார் வந்தவரை வாயிலிலே வைத்திங்கு நான்வந்தேன்.
பெரிய மருது வந்தவரை நீரழைத்து வாரும்!
(கறுத்தான் வெளியேறுதல்)
பெரிய மருது என்னதுய ரோபாவம்! இந்நேர மிங்குவந்தார்.
(முக்காடிட்டவரை அழைத்துக்கொண்டு கறுத்
தான் உள்ளே வர, அவர்களைப் பார்த்து)
சொன்னால் துயர் துடைப்போம் சோதரரே
கூனுங்கள்.
சின்ன மருது முக்காடு இட்டு முகம் றைத்து நிற்பானேன். எக்கே டெனினும் எடுத்துரைக்க லாமே!
பெரிய மருது சிரந்தாழ்த்தி நின்றால் செவிசாய்க்க லாகாதோ? கரங்கூப்பிக் கேட்கின்றோம் கண்ட துயரென்ன?
சின்ன மருது கூசாது இங்குவந்தீர் கூறாது கூறுகின்றீர் பேசாது நிற்பதுமேன் பேசும்! ஏமையா நாங்களும் எத்தனை முறைகேட்போம் ஊமையா நீவிரும்!... ம்?
ஊமைத்துரை ...ஆம். சின்ன மருது ஆமென் றுரைப்பவர் ஆவரோ ஊமையாய். ஊம்ம்...முகங்காட்டும்..ஊம்....
ஊமைத் துரை அகத்தைக் காட்ட வந்த என்னால் முகத்தைக் காட்ட முடிய வில்லை.
பெரிய மருது அகத்தைக் காட்ட வந்த உம்மால் முகத்தைக் காட்ட முடியா தாஏன்?
ஊமைத் துரை என்செய்வேன்... என் செய்வேன்........ எப்படி மன்னா எடுத்து உரைத்திடுவேன்! விண்ணோக்கும் எந்தன் விழியிரண்டும் ஐயையோ மண்ணோக்கிப் போச்சே மடிந்து.
பெரிய மருது புண்பட்ட மனத்தீர் புகலும் யாரென்று? உம்பட்ட துயரம் கேட்டால் உரைத்தீரே
ஊமையென்று?
ஊமைத்துரை ஊரிழந்து பேரிழந்து உற்றார்பெற் றாரிழந்து மார்குவிந்து மனமொடிந்து மன்னவரின்
மாண்பறிந்து
நாணமுற்று முகமூடி வந்தேனே... உள்ளம் ஊனமுற்று வந்தயிந்த (முக்காட்டை நீக்கி)
ஊமையனைப் பாருங்கள்
சின்ன மருது ஆ... ஊமைத்துரை....... பெரிய மருது
சிவத்தையாவா?
ஊமைத்துரை
ஆம்! ஊமைத்துரை சிவத்தை யாதான் ஆமிரண்டும் என்பேரே ஆனா லின்றோ நினைத்திடின் நானுமோர் அனாதை தானே?
சின்ன மருது பாஞ்சை கண்ட இளையவரே! பாருமிங்கே! வாஞ்சை கொண்ட நாமுள்ளோம் வருந்தற்க!
ஊமைத்துரை நல்லவரும் வல்லவரும் நாடிழந்து நலமிழக்க புல்லருக்கு வாழ்விங்கு வருதையா மருதையா
சின்ன மருது
புல்லருக்கு வாழ்வுண்டு
புகழவர்க்கு ஏதுண்டு வெள்ளெருக்கும் பூத்திருக்கும்
வேறெதற்குக் காத்திருக்கும்
வல்லரக்கர் வாழ்ந்த தில்லை
வாய்மையென்றும் வீழ்ந்த தில்லை, எல்லோரும் சாவ துண்மை,
ஏற்ற புகழ்தான் மேன்மை.
பெரிய மருது
அண்ணனையே இழந்ததனால் அனைத்தையும்
இழந்தாலும்
மன்னருமை வரவேற்கும் மரபினையாம்
விடுத்திடவா
என்னருமை சிறுவயலில் இரவில்நீர் நுழைந்திடவா
கன்னமிடும் கள்வரா நீர்? கதிரோனாய் விடியவாரும்.
சின்ன மருது
கறுத்தான் இதுகேளும் காலையிலே இங்கே பெருத்த அலங்காரம் பெற்றே-பொறுத்தமுற எட்டுதிக்கும் கேட்குமாறு கொட்டுமுழக் கோடிவரை இட்டு வரவேண்டும் இங்கு.
(திரை)
|