தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!
(வரலாற்றுக் கவிதை நாடகம்)
காட்சி 14
காலம் : விடியற்காலை
இடம் : அந்தப்புரம்
வருவோர் : ராக்காத்தாள், பொன்னாத்தாள், துரைசாமி.
(தாரை தப்பட்டையுடன் வேட்டொலி கேட்கிறது) துரைசாமி விடிவதற்கு முன்னாலே என்னம்மா இன்று வெடியொலிக்க மேளதாளச் சத்தம் - முடியா இடிமுழுக்கம் போல இருக்கு. ராக்காத்தாள் மேளம் முழங்கிவர மேன்மை விளங்கிவர தாளமுடன் ஆட்டம் தடிவீச்சு-கோலமுடன் நாளும் விடியுதடா நன்று.
துரைசாமி நன்று விடிகின்ற நாளிது இன்றென்ன என்று மறந்ததம்மா எந்தனுக்கு- ஒன்று சொல்லேன் அன்றதுதான் நேற்றென்ன நாள்
ராக்காத்தாள் வெள்ளி விரதத்தை விந்தையாய் நீமறந்தாய் சொல்லிக் கொடுக்கணுமா நானுனக்கு- சொல்லாதே எள்ளி நகைத்திடுவார் இங்கு.
துரைசாமி
விட்டிடு இன்று சனிதானே! ஏனம்மா! கொட்டு முழக்கோடு கூட்டிவந்தோம்? -
எட்டவில்லை
மட்டிலா தென்ன மகிழ்வு.
ராக்காத்தாள் பாஞ்சாலச் சிங்கம் படையிழந்து போச்சுதடா
வாஞ்சையால் நாமும் வரவேற்றோம் -
நோஞ்சான்கள்
மேய்ந்திருக்கக் கூடுமோ மேலும். (பொன்னாத்தாள் வருவதைப்பார்த்து துரைசாமி
ராக்காத்தாள் பின் மறைதல்)
பொன்னாத்தாள்
ஆர்த்தி ஏற்பாடு அத்தனையும் செய்துவிட்டேன் சூரத் தனத்தானும் சொல்வதென்ன-பாரக்கா ஓரத் தொதுங்குகிறான் ஓடி.
துரைசாமி என்ன பெரியம்மா இங்கே பார் அம்மாதான் உன்னை அழைக்கவந்தார் ஓடோடி- முன்னாலே சொன்ன கதைமேலும் சொல்லு.
ராக்காத்தாள் சீமைச் சுதந்திரத்தைச் சேர்த்துவைக்கப் பாடுபடும்
ஊமைத் துரைவரவால் உற்சாகம் - நாமறிவோம் தூமைக் குணத்தைத் தொலைத்து.
துரைசாமி அப்பா இருவரும் அண்ணனுடன் தேவரும் எப்போதும் எனைவிட்டுப் போய் விடுவார் -
செப்பம்மா
தப்பாது சேர்ந்திருக்கத் தான்
பொன்னாத்தாள் நீயும் வளர்ந்துவிட்டால் நித்தமுந்தான் வீடு
தங்காய்
போயிப் புரிவதற்கு என்னயிப்போ-சேயுந்தான்
தாயிடம் தங்கிட்டா தங்கம். ராக்காத்தாள் எண்டிசையும் போற்ற இருந்தவர் ஊமையர் கண்ணீர் வடிப்பதற்குக் காலமாச்சே -
அண்ணனுடன்
மண்ணும் இழந்துவிட்டார் மாள.
துரைசாமி நல்லார் வடித்த கண்ணீர் நாளும் வீண் போகாது எல்லோரும் சொல்வாரே ஏற்றிடவே- சொல்லம்மா வெல்லாதோ கண்ணீர் விரைந்து.
பொன்னாத்தாள் வெல்லுமடா வெல்லுந்தான் வேறென்ன இத்தனையும்
வெள்ளையனைக் கொல்லும் விரைவினிலே - தள்ளிடவா
வல்லார் வடித்த கண்ணீர்
ராக்காத்தாள் காளையார் கோவிலப்பன் கையெடுத்து வேண்டிடுவோம்
நாளையே நாடும் நலம் பெறட்டும் - மாலையிட்ட பாளையத்தார் பார்த்திடலாம் வா.
[மூவரும் வெளியேறுகின்றனர்]
[திரை]
காட்சி 15
காலம் : நண்பகல்
இடம் : அரண்மனை
வருவோர் : வேல் நாச்சியார், சின்ன மருது, கறுத்தாள். (உணவுண்ண மறுத்து சோகமே உருவாய்
அமர்ந்திருக்கும் வேல் நாச்சியைப் பார்த்து)
சின்ன மருது
வாயே திறக்காமல் வாட்டமுற்றே எந்நாளும் தாயே தவித்திருந்தால் தாங்கிடவோ நாங்களிதை?
கறுத்தான் ஆச்சி அமுதுண்டால் ஆனந்தம் கொண்டிடுவோம் சீச்சி யெனவெறுத்தால் சேய்கள் மகிழ்வாரோ?
சின்ன மருது தாயின் அரவணைப்பில் தக்க பராமரிப்பில் நாங்கள் வாழ சேயின் நிலையுணர்ந்து செய்யும் வழியறிந்து நீங்கள் கூற பாயும் பகையோட்டிப் பாழும் வினையோட்டிப் பாரில் விடுதலைப் பயிர்செய்ய வேண்டும் பயன் கொள்ள வேண்டும் உயிர்கொள்ள வேண்டுமதற் குணவுண்ண வேண்டும்.
வேல் நாச்சியார்
சோதனைக்கு வந்தவள்நான் சோறும் யெனக் கெதற்கு? வாதனைக்கு வந்தவள்நாள் வாய்க்குணவும் தானெதற்கு? தீதனைத்தும் கண்டபின்னும் தீரவிலை வாழ்வெனக்கு சின்ன மருது வீரத் திலகமே விம்மி அழுவதா? கோரக்காட்சியாய்க் கூனி மெலிவதா?
கறுத்தான் மாதற் கணிகலன் மாதரசி வேல்நாச்சி தீதுற்றுப் புலம்ப தின்பதுவோ நாமுணவு?
வேல் நாச்சியார் அணிகலன் அழகுத் திலகம் அறுத்து அழித்ததே உலகம்
பிணியுளம் பிழைமனம் எங்கும் பெரிதும் பிடித்ததே இங்கும்
சின்ன மருது தாய்த்திலகம் அழித்தவனைத் தங்கநாணை அறுத்தவனைப் போய்த்தொலைக்க நினைத்திருந்தே பொழு தெல்லாம் உழைத்திருக்கும் சேய்த்திருவார் பெருக்குகின்றோம் சேனைவளம் கூட்டுகின்றோம் வாய்த்திருக்கும் பலத்தினாலே வதைத்தொழிக்க நாள்பார்ப்போம்.
கறுத்தான் ஐயன் நினைவூட்டி அன்னைமனம் வாட்டிவிட்டோம்
பைய அமைதிகொண்டு படைத்ததை உண்டிடுங்கள்.
வேல் நாச்சியார் ஐயன் நினைவகற்ற ஆண்டவனே வந்தாலும் ஆகா தென்பதனை அறியாது போனதெப்போ. பையன் நினைவூட்டப் பார்த்தாயோ உன் தாய்க்கு பாழும் மனம் நினைக்கப் பத்தாவை மறந்திடுமோ? குங்மப் பொட்டோடு கொண்டிருந்த பூவோடு
சங்கமமாய் என்துணைவர் சாவில் இணையாது பொங்குபுகழ் வீர சொர்க்கப் புண்ணியத்தை நானிழந்து இங்குயிரை வைத்திருப்பதேன்?
நாள்பார்த்துக் கொண்டிருந்தால் நாட்டின் பகைசாய்க்கும்
வாள்பார்க்க வாய்க்குமாயென் வாழ்வு.
சின்ன மருது தாயே பொறுத்திருங்கள் தக்கபடி நாம்விரைவில்
காயே! கனிந்து வரக் கண்டிடுவோம் காத்திருப்போம்.
வேல்நாச்சியார் வளைக்கரந்தான் என்றாலும் வாளேந்தும் எந்தனது வலக்கரத்தைப் பார்த்தாயா?
துளைத்தொழிக்கும் வேலேந்தும் தோள்வலியும் இந்நாளில்
துவண்டநிலை பார்த்தாயா?
இளைத்துவிட்டேன்; களைத்துவிட்டேன் ; சளைத்துவிட்டேன் இல்வாழ்வில்
என் துணையைத் தொலைத்துவிட்டேன். வளைத்துவிட்ட அந்நியனின் வாழ்வறுக்க வேண்டுமென்றே வாழுகின்றேன்; வாடுகின்றேன். நரைதிரை மூப்படைதல் நாளடைவில் நோய்க் கொள்ளுதல் இறைவழி என்றாலும் எல்லோர்க்கும் வந்தாலும் கரையிலா பேர்சேர்க்கும் கன்னித்தாய் நாட்டிற்கா?
சின்ன மருது
புற்றெடுக்குங் கரையானாய்ப் புகழ்மறவர் உழைத்திருக்கக்
கொற்றவத்துக் குடிபிறந்தார் கொடு நாக மெனப் புகுந்து மற்றெதற்கும் வழியுமின்றி மனத்தினிலே வலியுமின்றி உற்றவர்க்கு உலைவைத்தே உயிர்வாழத் துணிந்து விட்டார் நல்ல மரத்திலே புல்லுருவி பார்த்ததில்லை. வெல்மறவர்க் கூட்டத்தே வீணடிமை - கல்மனத்தால் தொல்பெருமை தோற்றார் தொலைத்து.
வேல் நாச்சியார்
சூது மலிந்தது மருதப்பா
சூழ்ச்சி மிகுந்ததும் பெரிதப்பா வாது நிலைத்திடல் சிறிதப்பா
வஞ்சம் வெல்வது அரிதப்பா ஏது நிலைத்திடும் கருதப்பா
என்றேர் விடுதலை வருதப்பா தோது அறிந்துநீ தொடரப்பா
தோல்வி நமக்கிலை பொருதப்பா
சின்ன மருது
சினந்தெழும் நம்வாளில் சிரமிழப்பார் சிந்தித்தால்
யார்தாயே?
கனன்றெழுங் கடுந்தீயில் கருகிடுவார்
கண்டறிந்தால் யார்தாயே?
மனந்தனில் கொதித்தெழுந்தால் மடிந்திடுவார்
மாநிலத்தில் யார் தாயே?
வேல் நாச்சியார்
சின்ன மருதன் சொன்ன தெல்லாம் தன்ன லத்து மன்னர் கூடி இழிநிலை சேர்க்க இங்கே இழுத்திடும் வழியிலே போகும் மக்கள்
குழியிலே விழும் நம் குலத்தவர் மறவரே!
சின்ன மருது நாலு கோட்டை ஆதரவு
நமக்கின்னும் கிட்ட வில்லை; வேலி போட்டாற் போலவரும்
விரும்பி நமைப் பிரித்துவிட்டார். உழக்கிலே கிழக்கும் மேற்கும்
உணர்த்திடும் உத்தி கொண்டே வழக்கிலே வாழும் சாதி
வம்பினைத் திரித்து விட்டார். படமாத்தூர் வல்லபர்க்குப் பட்டத்து உரிமையென
நடமாட்டங் காட்டிவிட்டார் நம்மில் பிள
வேற்றிவிட்டார்.
கறுத்தான் அண்டையிலே வாழுகின்ற தொண்டைமான்
வெள்ளையர்க்கு
சண்டையிலே பேருதவி சத்தியமாய் என்றானாம்.
வேல் நாச்சியார் உயில் எழுதித் தந்த பின்னும் ஒப்ப வில்லை அவர் மனது மயில் இறகு போடும் என்று மனம் கொண்டு கேட்பது வீண். மூத்தவன் என்பதால் முந்தியுன் அண்ணன் காத்திடும் அரசனெக் காட்டினேன் உயிலிலே எழுதிக் கொடுத்ததில் ஏற்பிலை யென்றால்
பழுதிலா முறையால் பட்டம் வேண்டும்ம்...... நாடும், நாட்டின் நலனும் காத்திட தேடும் உரிமைத் தேர்ந்திட போடும் நாடகம் புதிதொன் றுண்டே .
சின்ன மருது
நாடகம் என்ன வென்று
நாங்கள் அறிய வில்லை மூடக மாய்ச் சொன்னால்
முழுப் பொருள் புரியவில்லை .
வேல் நாச்சியார்
நெருப்பே யெனில் எரிந்தாவிடும் நிலைநீ ரெனில் குளிர்ந்தாவிடும். கருமா முகில் தடுத்தா விடும் கதிரோன் நிலை கெடுத்தா விடும் எனவே நான்' சாற்று மிதைக்கேள் சத்தியம் செய்திடு ! வேற்று வழியேன் விரைவில் வெற்றிகாண்!
சின்ன மருது வாக்கும் போக்கும் வளைந்ததா தாயே? தாக்கும் நோக்கும் தளிர்த்ததா தாயே? உறுதியா குலைந்தான் உன் மகன்? இறுதியாய் சத்தியம் எதற்கினி தாயே?
வேல் நாச்சியார் சொன்னதைச் செய்திடு சின்ன மருதா ! பின்னதைக் காத்திடு பேச்சேன் பெரிதாய் இல்லை நமக்கிழிவு எள்ளளவு என்றாலும் தொல்லைக் கொடுப்பாரைத் தூரவைத்து நீதடுக்க வெள்ளை மருதுக்கு வேல் நாச்சி; தாரமென்று சொல்லிப் பரப்பிவிடு சொத்துரிமை பெற்றிடு போ! சின்ன மருது (அதிர்ச்சியுற்று) வெள்ளை மருதுக்கு வேல் நாச்சி; தாரமென்ற சொல்லைப் பரப்புவதா சொத்துரிமை பெற்றிடவா? (உணர்ச்சியால் உந்தப்பட்டு)
மங்கையரில் சிறந்தவரில் மறங்காட்டித் திறங்காட்டி மற்றோர் மாதா எங்குனக்கு நிகரிருக்கும் என்றிருக்கும் நிலையிருக்க இன்னும் மேலே மங்கைகுல மறிந்திடாத மா தியாகம் புரிந்தாயே தாயே உன்னைக் கண்டுபா டப்புகழ்க் கொண்டுபா டப்பெருந் தொண்டுபா டத்தனிப் பெண்டுபா டப்பகி ரண்டமா டக்குலைந் தகிலமா டப்பகைத் துண்டமா டப்பழிக் கண்டமா டப்புவி கண்டுவாழ் வேன்சத் தியம்சத் தியமே!
(ஆனந்தப் பரவசத்தால் பூரித்துப் புளகாங்கித
மடைந்த வேல்நாச்சியாரின் இதயத் துடிப்பு
அதிர்ச்சியால் அடங்க சின்னமருது அதிர்ச்சியுற்று
அணைத்துப் பிடிக்க)
[திரை]
காட்சி 16
காலம்: அந்திப்பொழுது இடம் : ஊருணிக்கரை வருவோர் : சிவஞானம், மீனாட்சி.
(மீனாட்சி சோகமாய் கல்லாசனத்தில் அமர்ந்
திருக்க, சிவஞானம் அருகில் சென்று)
சிவஞானம்
ஆச்சி மறைவு அதிர்ச்சிதான் அதனால் வரும்புத் துணர்ச்சிதான் பேச்சில் மூச்சில் சுதந்திரம்
பெருகி வருவ திதந்தரும் மீனாட்சி
வேரோடு வெள்ளையன் வீழவேண்டும்
வேதனைகள் இந்நாட்டில் தீரவேண்டும் போரோடு வாழ்வெனக்குப் போவதெனில்
பூவோடு பொட்டோடுப் போகவேண்டும். சிவஞானம் யாரோடு பேசுகின்றாய் மீனாட்சி யானிருக்க உந்தனுக்கு என்னாச்சு சீரோடு வைத்திருக்க நானாச்சு சிந்தையிலே போர் நினைவு ஏனாச்சு.
மீனாட்சி ஊரறிய உலகறிய மணம் புரிய ஒப்பியேநம் இருவரையும் இணைத்து வைக்க நாமறிய இருந்ததாய் நடந்து விட்டார் நல்லபடி இனி நடக்கத் துதித் திருப்போம்.
சிவஞானம் ஓய்வில்லை ஒழிவில்லை ஒருவழியாய் உலுத்தரையும் ஒழிக்காது விடுவதில்லை ஊணில்லை உறக்கமில்லை உணர்வாயே
உரம்பெற்ற திறல்மறவர் குலத்தாளே பகைசாய்த்து மணம்முடிப்போம்- நாளும் பலங்காத்து வளங் கொழிக்க- நாமும் படைசேர்த்துத் தடை உடைப்போம்-நீயும்
விடைகொடுத்தால் விரைந்திடுவேன் மீனா.
மீனாட்சி
சென்று வினை முடிக்கும் சிங்கத் துணைநானே என்றும் மகிழ்ந்திருப்பேன் என்னுயிரே
(மீனாட்சி கையசைத்து வழியனுப்ப-சிவஞானம்
வெளியேறுதல்)
(திரை)
|