|
||||||||
பெரும்பாணாற்றுப்படையில் நெல் சோறு – முனைவர் தி. சாமுண்டீஸ்வரி |
||||||||
![]() பண்டைத் தமிழர் பண்புகளுள் விருந்தோம்பல் தனிச் சிறப்புடையது; உணவும், விருந்தும் பற்றி தமிழ் இலக்கியங்கள் பலவாறு செப்புகின்றன. பண்டைத் தமிழர்கள் சுவைமிக்க உணவுப் பொருள்களைச் சமைப்பதில் தேர்ந்து இருந்தனர். அவரவர்கள் வாழ்ந்த நிலத்திற்க்கு ஏற்ப உணவு வகைகள் வேறு பட்டன. மரக்கறி உணவோடு புலாலுணவும் பெரிதும் விரும்பியுண்ணப்பட்டது.
மறைக்காப்பாளர்கள் இராச அன்னம் என்னும் உயர் வகை நெல்லரிசியினை உணவாக்கி உண்டனர்.சேதாவின் நறுமோர் அவர்களுக்கு மிகவும் பிடிக்குமாம். அக்காலத்தில் பன்றியிறைச்சியை விரும்பி உண்டனர்.வேடுவர்கள் பன்றி வேட்டயாடுவடு பற்றி இந்நூலே பேசுகிறது. ஈயலைக்கூட உணவாகக் கொண்டனர். மன்னர்கள் பாணர்க்கும் புலவருக்கும் அளித்த பெரு விருந்துகளில் ஊன் சோறே பரிமாறப்பட்டது.ஓரிடத்தேனும் புலாலுணவு பழிக்கப்படவில்லை. புலவர்கள் அதனைப் பெரிதும் பாராட்டியே பாடியுள்ளனர்.
தமிழர்களின் பிரதான உணவு நெல் சோறு அதாவது அரிசிச் சோறு. சோற்றுக்கான அரிசி முல்லைப் பூப் போல வெண்மையாகவும்,மென்மையாகவும் இருக்கும். ஓர் அரிசியிலேனும் இடைவரிகளோ முரிவோ காணப்படாது.சோறு ஒன்றோன்று இழையாமல் பதமாக வெந்திருக்கும் என்று இலக்கியங்கள் இயம்புகின்றன. அபிதான சிந்தாமணி என்னும் நூல் பின்வருமாறு அரிசி வகைளைப் பட்டியிலிடுகிறது.
ஈர்க்குச்சம்பா,புழுகுசம்பா,கைவரைச்சம்பா,செஞ்சம்பா,மல்லிகைச்சம்பா,குண்டு சம்பா, இலுப்பைப்பூச்சம்பா, மணிச்சம்பா, வளைதடிச்சம்பா, கோரைச்சம்பா, குறுஞ்சம்பா, மிளகுசம்பா, சீரகச்சம்பா, காளான்சம்பா, மைச்சம்பா, கோடைச்சம்பா, காடைச்சம்பா, குன்றுமணிச்சம்பா, அன்னமழகி அரிசி, கார்அரிசி, மணக்கத்தை அரிசிவாலான், கருங்குருவை, சவ்வரிசி மூங்கிலரிசி, கோதுமையரிசி, கம்பரிசி, தினையரிசி, சோள அரிசி, வரகரசி, கேழ்வரகரசி இவையின்றி கேடிலிச்சம்பா, கலிகஞ்சம்பா, கனகம்சம்பா, கலப்புச்சம்பா, கம்பஞ்சம்பா, காடைக்கழுத்தன் சம்பா, கோடன் சம்பா, பாசடைச்சம்பா, சன்னசம்பா, சின்னசம்பா, சிறுமணிச் சம்பா, சுரைக்காய்ச்சம்பா, சுகுதாச்சம்பா, செம்பாளைச் சம்பா, சொரியஞ்சம்பா, திருவரங்கச்சம்பா, துய்யமல்லிகைச்சம்பா, பாலாஞ்சம்பா, பெருஞ்சம்பா ,பேய்வள்ளைச்சம்பா, பைகோச்சம்பா, மங்கஞ்சம்பா, மணல்வாரிச்சம்பா, மலைகுலிக்கிச்சம்பா, மாவம்பைச்சம்பா, முனைவெள்ளைச்சம்பா, கார்த்திகைக்கார், முட்டைகார், சித்திரைகார், கருமோசனம், வெள்ளைமோசனம், வால்மோசனம், பொச்சாரி, அருஞ்சோதி, இரங்கமாட்டான், ஈசுரக்கோவை, பிச்சவாரி, செம்பாளை, கல்லுண்டையரிசி, புட்டரிசி, குளிப்பியரிசி, குச்சலாடியரிசி, கௌரிகுங்வரிசி முதலிய பலவாம். "(அபிதான சிந்தாமணி-ப-231)
இதிலிருந்து பண்டையக் காலத்தில் பல்வேறு அரிசி வகைள் வழக்கத்தில் இருந்ததை அறிந்து கொள்ள முடிகிறது.
பெரும்பாணாற்றுப்படையில் அரிசிச் சோறு பற்றிய விருந்தோம்பல் பாக்கள் சில காணக்கிடைக்கிறது. பத்துப்பாட்டினுள் நான்காவதாக இடம் பெற்று இருக்கும் இப்பெரும்பாணாற்றுப்படை தொண்டைமான் இளந்திரையனைச் சிறப்பித்துக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பாட்டு. பேரியாழ் வைத்துள்ள பெரும்பாணன் வழியில் வறுமையால் வாடும் மற்றொரு பாணனையும் , அவனுடயை சுற்றத்தாரையும் கண்டு அவர்களை திரையினிடம் ஆற்றுப்படுத்தும் முறையில் இப்பாட்டு அமைந்துள்ளது. திரையுனுடையை விருந்தோம்பல் பற்றியப் பாடல்களிலும்,ஆங்கு வாழும் எயினர்கள். வலைஞர்கள்,ஆயர்கள் ஆகியோரின் விருந்தோம்பல் பாடல்களிலும் நெல் சோறு பற்றிய செய்திகள் காணப்படுகிறது.
திரையனின் விருந்தோம்பலில் செந்நெல்;
ஆவி அன்ன அவிர் நூற் கலிங்கம்
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குஉடன் உடீஇ,
கொடுவாள் கதுவிய வடுஆழ் நோன்கை
வல்லோன் அட்ட பல்ஊன் கொழுங்குறை,
அரிசெத்து உணங்கிய பெருஞ்செந் நெல்லின்
தெரிகொள் அரிசித் திரள்நெடும் புழுக்கல்,
அருங்கடித் தீம்சுவை அமுதொடு பிறவும் (பெரும்-469-475)
பெரும்பாணன், இளந்திரையன் தொண்டைமான் எவ்வாறு விருந்து தருவான் என்பதை ,உன்னுடயை அரையில்கிடக்கும் பாசி படர்ந்த கந்தலாடையை நீக்கி துகில்களைக் கொடுத்து உடுக்கச் செய்வான்.பின்னர் அரிவாள் பிடித்து வடு ஆகிக் கிடந்த வலிய கையை உடைய மடையன் ஆக்கின பல இறைச்சியில் கொழுவிய தசைகளுடன் ,அரிக்குவை ஈரம் வற்றும்படி உலரவிட்ட பெரிய செந்நெல்லினுடைய பொறுக்கரிசியால் அக்கின திரண்ட நெடியசோறும் , பாதுகாத்து வைக்கப்பட்ட இன்சுவையில் அமிழ்த்தை ஒக்கும் உணவுகளும் பிறவும் விண்மீன்கள் போன்ற வெள்ளிக்கலங்களில் நிரப்பி , தாய் தன் பிள்ளையின் முகம் பார்த்து இனிமையாக உபசரிப்பான் என்று மேற்கண்டப் பாடலில் கூறுகிறான்.
இதனைப் போல் பொருநராற்றுப் படையிலும் ஒரு பாடல்,
மகிழ்ப்பதம் பல்நாள் கழிப்பி ,ஓருநாள்
'அவிழ்ப்பதம் கொள்க' என்று இரப்ப,முகிழ்த்தகை
முரவை போகிய முரியா அரிசி
விரல்என நிமிர்ந்த நிரல்அமை புழுக்கல்,
பரல்வறைக் கருணை,காடியின் மிதப்ப
அயின்ற காலை ,பயின்றுஇனிது இருந்து,(பொருநர்-110-1150)
இதிலிருந்தும் அக்கால அரசர்கள் விருந்தோம்பும்போது ,முல்லை முகைப் போன்ற வரியற்ற இடைமுரியாத அரிசியால்,விரல் போன்று நெடுகின அளவொத்த சோற்றைப் பரிமாறினர் என்பது தெரிய வருகிறது.
எயிற்றியர் அளித்த உணவு:
குடிசை வாழ் எயினர்கள் எறும்புப் புற்றைப் பாரையாற் குத்தி கிளறி ஆண்டு எறும்பு சேர்த்து வைத்த புல்லரிசியை வாரிக் கொண்டு வந்து உண்ணல் எயிற்றியர் வழக்கம்.புல்லரிசி கிடைத்தவுடன் அவர்கள் முகம் மகிழ்ச்சியால் மலர்வதை வெண்பல் எயிற்றியர் என்று கூறுவார் கடியலூர் உருத்திரகண்ணனார்.
விளா மரத்தடியில் மான்கள் கட்டப்பட்டிருக்கும் முற்றத்தில் நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழிந்த உரலில் ,எயிற்றியர் தாம் கொண்ர்ந்த புல்லரிசியைக் கொட்டி உலக்கையால் குற்றி எடுத்து ஆழ்ந்த கிணற்றில் அமைந்த ஊற்றைத் தோண்டி உவரி நீர் கொணர்ந்து பழைய விளிம்பு உடைந்து போன பானைகளில் வார்த்து ,உலையை முறிந்த அடுப்பில் ஏற்றி ,சோறு சமைக்கின்றனர் .சமைத்த புல்லரிசிச் சோற்றை கருவாட்டோடு சேர்த்து தேக்கிலையில் வைத்து தருவர் என்று பின்வரும் பாடல் சுட்டுகிறது..
பார்வை யாத்த பறைதாள் விளவின்
நீழல் முன்றில் ,நிலௌரல் பெய்து,
குறுங்காழ் உலக்கை ஓச்சி ,நெடுங்கிணறு
வல்ஊற்று உவரி தோண்டி,தொல்லை
முரவுவாய்க் குழிசி முரிஅடுப்பு ஏற்றி
வாராது அட்ட ,வாடூஉன்,புழுக்கல் (பெரும்;95-100)
அதுமட்டுமல்லாது களர் நிலத்தில் வளரும் ஈச்சம்பழம் போன்ற மேட்டு நிலத்தில் விளைந்த சோற்றினை நாய் வேட்டையாடிக் கொணர்ந்த உடும்புக் கறியோடு உண்டனர்.அரண்மனைகளில் வாழும் எயினர்கள் மேட்டு நிலத்தில் விளைந்த நெல்லையும் உடும்புக் கறியினையும் வைத்து விருந்திட்டதை,
சுவல்விளை நெல்லின் செவ்அவிழ்ச் சொன்றி
குமலி தந்த மனவுச்சூழ் உடும்பின்
வறைகால் யாத்தது ,வயன் தொறும் பெறுகுவீர் (பெரும்;131-133)
என்பதால் அறியாலாம்.
வலைஞர் குடியில் பெரும் உணவு:
குற்றாத கொழியல் அரிசி என்பது தவிடு நீக்கப் பெறாத சத்து நிறைந்த அரிசி. அதனைக் களியாகத் துழாவி அட்ட கூழைப் பெரிய பிழாவில் விட்டு ஆற்றி , அதனுடன் நெல்முளையை(இன்று முளைவிட்ட தானிய வகைகளைப் பயன்படுத்துவது போல)இடித்து அதனுடன் சேர்த்து,அப்படியே இரண்டு நாட்கள் இரவும் பகலும் ,சாடியில் ஊற்றி வைத்து, விரலாலே அலைத்துப் பிழியப்பட்ட கள்ளை, நெய்யரி எனப்படும் சல்லடையில் வடிகட்டிப் பயன்படுத்துவர் என்பதை,
வெந்நீர் ,அரியல் விரல்அலை, நறும்பிழி,
தண் மீன் குட்டொடு, தளிதலும் பெறுகுவீர்,(பெரும்;281-282)
இப்பாடலில் அறிந்து கொள்ள முடிகிறது.
இங்ஙனமே உழவர்கள் பூளைப்பூப் போன்ற வரகுச் சோற்றை அவரைப் புழுக்கோடு உண்டனர்.
நெடுங்குரல் பூளைப் பூவி னன்ன
குறுந்தாள் வரகின் குறளவிழ்ச் சொன்றிப்
புகறிணர் வேங்கை வீகண் டன்ன
அவரை வான்புழுக் கட்டிப் பயில்வுற்
றின்சுவை மூரல் பெறூகுவீர் -பெரும்-(192-196)
ஆயர்கள் குடியில் பெரும் உணவு;
ஆயர்கள் தன் சுற்றத்தார் யாவரையும் உள்ளம் மகிழுமாறு பேணுவர்.நண்டின் பார்ப்பை ஒத்த தினை அரிசிச் சோற்றினைப் பாலுடன் பரிமாறுவர் என்பதனை,
இருங்கிளை ஞெண்டின் சிறுபார்ப்பு அன்ன
பசுந்தினை மூறல் பாலொடும் பெறுகுவிர் (பெரும்;167-168)
இதனை சிலப்பதிகாரமும் ஆயர் வீட்டில் வேளைப் பூவினைத் தயிரில் இட்டுச் சமைத்த குழம்பும்,ஈசலைத் தயிரில் இட்டுச் சமைத்த குழம்பும் பால் சோறும் கிடைக்கும் என்று கூறுகிறது.
இவ்வாறு உணவில் நெல் சோறு அதிகமாக பயன்பாட்டில் உள்ளது என்பதை இவ்விலக்கியம் பதிவு செய்கின்றன. பழைமை கழிந்து புதியவை வந்தாலும் அன்று முதல் இன்று வரை தமிழரின் உணவில் நெல் சோறு முக்கிய இடத்தை பெறுகிறது என்பதில் மாற்றம் இல்லை. உண்டி கொடுத்தாரே உயிர் கொடுத்தார் என்கிறது புறம். சோழ நாடு சோறுடைத்து என்பதற்கிணங்க தமிழர் இலக்கியமும் இதனையே இயம்புகிறது. |
||||||||
by Dr chamundeswari on 20 Jun 2016 2 Comments | ||||||||
Tags: Perumpanatru Padai Perumpanatru Padai Tamil Book Nel Soru Soru Prof.dr.Chamundeswari | ||||||||
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|