பொதுவாக சாஸ்தா இரண்டு கால்களையும் குத்திட்டு, யோகப்பட்டை அணிந்த நிலையில் காட்சி தருவார். ஆனால், இக்கோயிலில் சுவாமி பீடத்தில் அமர்ந்து, வலது காலை குத்திட்டு, இடது கால் பெருவிரலை தரையில் ஊன்றிய நிலையில் காட்சி தருகிறார். வலது கையில் கதாயுதம் இருக்கிறது. மார்பில் பதக்கமும், பூணூலும் அணிந்திருக்கிறார். சுருள்முடியை கொண்டையாக முடிந்திருக்கிறார். இத்தகைய அமைப்பில் இந்தியாவில் வேறு எங்கும் சாஸ்தா இல்லை. எதிரில் யானை, குதிரை வாகனங்கள் உள்ளன.
கண் தெரியாத பக்தர் ஒருவர் கோயில் வாசலில் படுத்திருந்தார். சாஸ்தாவை மனக்கண்ணால் வழிபட்ட அவர் அருகில் யாரோ ஒருவர் அமர்வதை உணர்ந்தார். வந்தவர் அவரது கண்ணில் மையைத் தடவ கண்பார்வை கிடைத்தது. வியந்தவர் சாஸ்தாவை வழிபட அவர் காட்சி கொடுத்தருளினார். கண்ணில் மையால் எழுதி பார்வை கொடுத்ததால் இவர் "அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தா' என்று பெயர் பெற்றார். |