தந்தை பெயரில் விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனில் இருந்து தோன்றியதால் முருகனை சிவ அம்சம் என்றும், அம்பிகையால் தோற்றுவிக்கப்பட்டதால் விநாயகரை சக்தி அம்சம் என்றும் கூறுவர். சிவமின்றி சக்தியும், சக்தியின்றி சிவமும் இல்லை. எனவே, விநாயகரையும் சிவ அம்சமாக கருதலாம். இவர் தந்தையின் "ஈஸ்வர' பட்டத்தையும் பெற்றிருக்கிறார்.
இதனை உணர்த்தும்விதமாக இக்கோயிலில் விநாயகரே, சிவனாக கருதி வழிபடப்படுகிறார். சிவனின் பெயரால் இவர், "ஆதிகும்பேஸ்வரர்' என்று அழைக்கப்படுவது சிறப்பு. ஆனி மாதம் வளர்பிறை பூச நட்சத்திரத்தன்று, இக்கோயிலில் விநாயகருக்கு, சிவனுக்குரிய "ஏகாதச ருத்ரஜப பாராயணம்' நடக்கிறது. இந்த பாராயணத்தின் போது 11 வேத விற்பன்னர்கள், சிவனுக்குரிய மந்திரங்களை 11 முறை சொல்லி பூஜை செய்கின்றனர்.
இந்த பாராயணம் கேட்பவர்களது பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். தவம் செய்வதற்காக வந்தவர் என்பதால், இக்கோயிலில் விநாயகர் மட்டும் தனிக்கோயில் மூர்த்தியாக இருக்கிறார். பிரகார தெய்வங்கள் ஏதுமில்லை. கோயில் வளாகத்தில் ஒரு அரச மரம் உள்ளது. இம்மரத்திற்குள் ஒரு நாகர் சிலை இருக்கிறது. |