மூலஸ்தானத்தில் பெருமாள், நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கிரக மற்றும் நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அந்தந்த கிரகத்திற்குரிய நாட்களில் இங்கு சுவாமி, தாயாருக்கு வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். இத்த லத்திலிருந்து மேற்கு திசையில் காஞ்சிபுரம் இருக்கிறது. எனவே மன்னன் இக்கோயிலைக் கட்டியபோது, காஞ்சி திருஊரகத்தை பார்க்கும் விதமாக, இத்தலத்தை மேற்கு நோக்கி கட்டினான்.
தாயார் திருவிருந்தவல்லி கிழக்கு நோக்கிய சன்னதியில் தனியே இருக்கிறாள். வைகுண்ட ஏகாதசி விழா ஒரு நாள் மட்டும் நடக்கிறது. அன்று சுவாமி சொர்க்கவாசல் செல் கிறார். புரட்டாசி 4வது சனிக்கிழமையில் பெருமாள், கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பது விசேஷம்.
பங்குனி ரோகிணி நட்சத்திரத்தில் சுவாமி, தாயார் திருக்கல்யாணம் நடக்கிறது.பிரகாரத்தில் சீதை, லட்சுமணருடன் கூடிய கல்யாணராமர் சன்னதியும், எதிரில் வணங்கிய நிலையில் ஆஞ்சநேயர் சன்னதியும் இருக்கிறது.இவருக்கு வெண்ணெய்க்காப்பு செய்து வேண்டிக்கொள்கிறார்கள். ஆண்டாள் தனிச்சன்னதியில் இருக்கிறாள். |