|
||||||||
உலகத் தமிழ்ப் பெயர்கள் பேரியக்கத்தை மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார் |
||||||||
கடந்த 10-20 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு தூய தமிழில் பெயர்வைப்பது பெருமளவு குறைந்துள்ளது. இதற்கு தொய்வில்லாத ஒரு இயக்கமும் , செயல்பாடும் அடுத்த பல ஆண்டுகளுக்கு இயங்கி ஆராய்ந்து சரிசெய்யவேண்டும் என்ற நோக்கில் நாமக்கல் இராசிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்க மாநாட்டில் "உலகத் தமிழ்ப்பெயர்கள் பேரியக்கம்" தொடங்கப்பட்டது. வலைத்தமிழில் இதுவரை தொகுத்துள்ள பெயர்களை மேலும் விரிவுபடுத்தி ஒருங்கிணைந்த பயன்பாடாக இயக்கத்திற்கு வழங்கப்பட்டது. இவ்வியக்கத்தை மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தொடங்கிவைத்தார். மேனாள் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர். சி.சுப்பிரமணியம் அவர்கள் இவ்வியக்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். வரையறுக்கப்பட்ட 10 செயல்பாடுகளுடன் இவ்வியக்கம் செயல்படும். தமிழர்கள் தாங்கள் வைத்துள்ள தூய தமிழ்ப்பெயர்களை www.babyname.ValaiTamil.com பட்டியலில் சரிபார்த்து, இல்லாவிடில் அவரவர்களே பட்டியலில் சேர்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.தமிழ்ப்பெயர் தேவையானவர்கள் இணையம், பயன்பாட்டு மைய தொலைபேசி எண் , மின்னஞ்சல் என்று பல வழிகளில் இனி எளிதாகப் பெறலாம். உங்கள் அனைவரது வாழ்த்துகளுடன் நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது. நேரில் கலந்துகொண்டவர்களுக்கு நன்றி. யாதும் ஊரே என்பதும் பல்லுயிர் ஓம்புதலும் தமிழில் மிக உயர்ந்த சிந்தனை. எனவே தமிழ் தமிழர்களுக்கான மொழி மட்டுமல்ல, அனைத்து மக்களுக்குமான கருத்துகளை உள்ளடக்கிய மொழி என்று உரையாற்றினேன். அதன் மேன்மையை, அதில் உள்ள கருத்துகளை முறையாக அவர்களுக்கு புரிந்த வழியில் உலகத்திற்கு கொண்டுசேர்க்கவேண்டும். உலகத் திருக்குறள் மொழிபெயர்புத் தொகுப்புத் திட்டத்தை முன்னெடுத்து உலக மொழிகளில் திருக்குறளை தொகுக்கிறோம். அடுத்தகட்டமாக அதை அந்தந்த நாட்டு மக்களுக்கு சந்திக்கும்போது பரிசாக வழங்க முயற்சிக்கவேண்டும் என்று குறிப்பிட்டேன். பாவலர் அறிவுமதி அவர்கள் பேசும்போது , தமிழ் என்பது அது உயிர்களுக்கான மொழி என்று குறிப்பிட்டார். சங்க இலக்கியத்தில் ஒரு நண்டைக்கூட மனிதனுக்கு இணையாகப் பார்க்கும் பண்பைக் குறிப்பிட்டு உயிர்மொழி என்ற தலைப்பில் நெகிழ்ச்சியாகப் பேசினார். விஞ்ஞானி முனைவர்.மயில்சாமி அண்ணாதுரை பேசும்போது அறிவியல் தமிழை வளர்க்கவேண்டும் என்று குறிப்பிட்டார். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், தவத்திரு ஆதீனங்கள் தமிழின் இன்றைய நிலைகுறித்து உரையாற்றினர். கல்வியாளர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் , பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் என பல ஆளுமைகள் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற விழாவாக இது அமைந்தது. இனி தமிழ்ப் பெயர்களுக்காக எங்கும் தேடி அலைய வேண்டியதில்லை. அனைத்து கோணத்திலும் சிந்தித்து இவ்வியக்கம் ஒரே இடத்தில் கிடைக்க தீர்வுகாணப்படும். குடியாத்தம் புலவர் வே.பதுமனார் , பேராசிரியர் முனைவர்.தஞ்சை பா.இறையரசன் , பேராசிரியர் முனைவர் கதிர்.முத்தையன் , பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் , பேராசிரியர் முனைவர். ப.கிருஷ்ணன் , தமிழ் சோதிடர் திரு.சீத்தாபதி பலராமன் ஆகியோர் அடங்கிய அறிவுரைஞர்கள் குழு தொடர்ந்து சந்தித்து மக்கள் தேவைகளை உள்வாங்கி , புதிய பெயர்கள் உருவாக்குதல், இயக்கத்திற்கு வரும் பெயர்கள் தூய தமிழ்ப்பெயரா என்று அறிந்து பட்டியலில் சேர்த்தல் என்று தொடர்ந்து பயணிக்கும். உலகெங்கும் தூய தமிழ்ப்பெயரை தொகுத்து வைத்துள்ளவர்கள் , நூல்களாக வெளியிட்டுள்ளவர்கள், தமிழ்ப்பெயரை உங்கள் வீட்டில் தேர்ந்தெடுத்து வைத்துள்ளவர்கள் கீழ்காணும் வழிகளில் உலகத் தமிழ்ப்பெயர்கள் பேரியக்கத்தின் தன்னார்வலர்களுக்கு அளிக்கலாம். புதிய பெயர்கள் வழங்கியவரின் விவரங்களுடன் இணையத்தில் சேர்க்கப்படும்.
+91 868-100-BABY (2229) என்ற கைபேசி, புலன எண்ணிலோ ,
babyname.valaitamil@gmail.com மின்னஞ்சலிலோ ,
www.babyname.ValaiTamil.com இணையத்திலோ
அனுப்பலாம்.
பேரன்புடன் வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி, ஒருங்கிணைப்பாளர். |
||||||||
by Swathi on 14 Jun 2023 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|